
இந்த விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவர் உள்ளிட்ட யாரும் இதுவரை புகார் கொடுக்கவில்லை. ஆடியோ ஆதாரத்தைக் கொண்டு நாங்களேதான் விசாரணை நடத்திவருகிறோம்
புதுக்கோட்டையில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவரை ஓரினச் சேர்க்கைக்கு அழைக்கும் ஆபாச ஆடியோ வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அரசுப் பள்ளியின் 12-ம் வகுப்பு ஆசிரியரான சகாபுதீன்தான் அந்த வில்லங்க ஆசிரியர் என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். அவர், தன் வகுப்பில் படிக்கும் மாணவரிடம் பேசுவதாக வெளியாகியிருக்கும் அந்த ஆடியோவில், “அன்னிக்குத்தான் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். வந்துருந்தா நல்லா... நாளைக்கு போன் அடிக்கிறேன் வந்துடு’’ என அச்சில் ஏற்ற முடியாத அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன.
“இந்த ஆடியோவை பாதிக்கப்பட்ட மாணவரே ரெக்கார்ட் செய்திருக்கிறார். ஆனால், ஆசிரியரும் மாணவரும் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், லோக்கல் செல்வாக்கைப் பயன்படுத்தி, பிரச்னையை ஆஃப் செய்துவிட்டார் சகாபுதீன். மாவட்ட கல்வித்துறையும் அவரைக் காப்பாற்ற முயல்கிறது” என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

இது குறித்து சில மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரித்தோம். ‘‘சகாபுதீன், சில நாள்களில் பள்ளியிலேயே தங்கிவிடுவார். பள்ளிச் சாவியையும் அவர்தான் வைத்திருப்பார். படிக்காத சில மாணவர்களைக் குறிவைத்து, அவர்களைத் தனிமையில் கண்டிப்பது போன்று மெல்ல தன் வழிக்குக் கொண்டுவந்துவிடுவார். பாதிக்கப்பட்டிருக்கும் மாணவனையும் இப்படித்தான் தன் வலையில் சிக்கவைத்திருக்கிறார். மாணவிகளுக்குக் காதல் கடிதம் கொடுத்த சர்ச்சையிலும் சிக்கியவர்தான் சகாபுதீன்’’ என்றார்கள் அவர்கள்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர் சகாபுதீனிடமே குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டுப் பேசினோம். “அந்த ஆடியோவில் பேசுவது நான் இல்லை. திட்டமிட்டு, சிலர் வாய்ஸ் எடிட்டிங் செய்து பரப்பியிருக்கின்றனர். பள்ளிச் சாவி என்னிடம் இருந்தாலும், சிறப்பு வகுப்பு முடிந்த பிறகு பள்ளியைப் பூட்டிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிடுவேன். பள்ளியில் தங்குவதெல்லாம் இல்லை. மாணவிக்கு நான் காதல் கடிதம் கொடுத்ததாகக் கூறுவதும் பொய்யான குற்றச்சாட்டு” என்று அனைத்துப் புகாரையும் மறுத்தார்.
இறுதியாக அறந்தாங்கி கல்வி மாவட்ட அதிகாரி ராஜாராமனிடம் விளக்கம் கேட்டோம். “இந்த விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவர் உள்ளிட்ட யாரும் இதுவரை புகார் கொடுக்கவில்லை. ஆடியோ ஆதாரத்தைக் கொண்டு நாங்களேதான் விசாரணை நடத்திவருகிறோம். இந்தப் பிரச்னையில், சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தவறு செய்தது யாராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் சகாபுதீனிடமிருந்து பள்ளிச் சாவியையும் வாங்கிவிட்டோம்” என்றார்.
சாவியை வாங்கினால் மட்டும் போதுமா?!