மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 23 - ஓசூர் - வளமும் வாய்ப்பும்

ஓசூர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓசூர்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 23 - ஓசூர் - வளமும் வாய்ப்பும்
சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர் , கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் , கனவு தமிழ்நாடு

Visual Capitalist என்றொரு சர்வதேச இணைய இதழ் இருக்கிறது. அவர்கள் Markets, Technology, Energy, Global Economy எனப் பல தளங்களில் விரிவான கட்டுரைகளையும் ஆய்வுகளையும் வெளியிடுகிறார்கள். அந்த இதழின் தரவுகளின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் நகரம் உலகின் வளர்ந்து வரும் 20 நகரங்களில் 13-வது இடத்தில் இருக்கிறது. 2025-ம் ஆண்டுக்குள் ஓசூரின் ஆண்டு வளர்ச்சி 5.38%-ஆக இருக்கும் என்று அவர்கள் கணிக்கிறார்கள். இப்படியொரு தனித்துவமான நகரத்தைச் சரியான முக்கியத்துவம் அளிக்காமல் சொல்வது ஏற்புடையதாக இருக்காது என்று எனக்குத் தோன்றியது. எனவே, மாவட்டம் என்ற அங்கீகாரம் இல்லாவிட்டாலும், ஓசூர் நகரத்துக்கென்று தனியாக ஒரு கனவை உருவாக்கியிருக்கிறேன்…

ஓசூரைச் சிறப்பு நகரமாக்குவோம்!

‘சிறப்பு நகரம்’ (Special City) என்றால் ஒரு மாகாணம் அல்லது மாநிலம் அல்லது நாட்டுக்குள் தன்னாட்சி பெற்று விளங்கும் பகுதி. Special City with Self Governance என்று Technical-ஆகச் சொல்வார்கள். எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் வளரும் வாய்ப்புள்ள நகரங்கள் சிறப்பு நகர வகைக்குள் வரும். இதற்கான நடைமுறை உதாரணமாக, தென் கொரியாவின் Sejong நகரத்தைச் சொல்லலாம். தென் கொரியாவின் தலைநகரமான Seoul, மில்லினியத்தின் ஆரம்ப ஆண்டுகளில் அதிக இட நெருக்கடியைச் சந்தித்தது. எனவே, தென் கொரிய அரசாங்கத்தினர் Seoul-க்கு மாற்றாக இன்னொரு நகரத்தை உருவாக்க விழைந்தார்கள். அவர்களுக்கு சியோலைப்போல உருவாகும் சாத்தியம் கொண்டதாக சேஜோங் மிக அருகிலேயே கிடைத்தது. உடனே, சேஜோங் நகரத்துக்குத் தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் வகையில், சிறப்பு நகரச் சட்டத்தை நிறைவேற்றினர். தென் கொரியாவின் ஒரே சிறப்பு நகரம் அதுதான். 2007-ம் ஆண்டு சேஜோங்கைச் சிறப்பு நகரமாக மாற்றினார்கள். இன்று பல தளங்களிலும் சேஜோங், சியோலுக்கு மாற்றாக வளர்ந்து நிற்கிறது.

கனவு - 23 - ஓசூர் - வளமும் வாய்ப்பும்
சேஜோங்
சேஜோங்
சியோல்
சியோல்

சேஜோங்போல ஓசூரையும் நாம் தன்னாட்சி அதிகாரம்கொண்ட சிறப்பு நகரமாக மாற்ற வேண்டும். அதாவது, ஒரு தனித்துவமான நகரம் அதன் எல்லாச் சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்தி வளர, கண்டிப்பாகச் சுதந்திரமான நிர்வாக அமைப்பு தேவை. அதற்கென்று ஒரு முடிவெடுக்கும் மக்கள் பிரதிநிதித் தலைவர், அவர் சொல்வதைச் செயல்படுத்துவதற்கென்று அரசாங்கப் பிரதிநிதித் தலைவர் ஆகியோர் அவசியம். ஆனால், ஓசூரில் இது இரண்டுமே இல்லை. 2019-ம் ஆண்டு ஓசூர் மாநகராட்சி ஆக்கப்பட்ட பிறகு, இப்போதுதான் முதல் மேயர் வந்திருக்கிறார். அவருக்கான அதிகாரம் என்பது அடிப்படை வசதிகளைச் செய்து தருவதோடு நின்றுவிடுகிறது. அடுத்ததாக அரசாங்கப் பிரதிநிதியாக சப்-கலெக்டரும் தாசில்தாரும் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு நிறுவனத்துக்கு நிலப்பட்டா கொடுக்க வேண்டும் என்றாலும், கிருஷ்ணகிரி கலெக்டரைச் சார்ந்திருக்கிறார்கள். ஆகவேதான், ஓசூரைத் தன்னாட்சி அதிகாரம் கொண்ட சிறப்பு நகரமாக மாற்றுவது நல்லது என்று கூறுகிறேன்.

சிறப்பு நகரக் கட்டமைப்பில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன. முதலாவது, அது Conglomerate நிறுவனங்கள் முதல் SME நிறுவனங்கள் வரை அளிக்கும் முதலீட்டு மானியங்கள். சேஜோங் சிறப்பு நகரம் Conglomerate நிறுவனங்களுக்கு Land Investment-ல் மானியம் அளிப்பதில்லை. ஆனால், Facility Investment-ல் 11% அளவுக்கு மானியம் அளிக்கிறது. SME நிறுவனங்களுக்கு Land Investment மற்றும் Facility Investment என இரண்டுக்குமே 40% மற்றும் 24% அளவுக்கு மானியங்கள் அளிக்கிறது. இரண்டாவதாக, Corporate Tax, Property Tax, Acquisition Tax ஆகியவற்றிலும், சேஜோங் நகரம் நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட ஆண்டு விலக்கு அளிக்கிறது. இவையெல்லாமே அந்த நிறுவனங்கள் தொடர்ச்சியாக நல்ல முன்னேற்றத்துடன் தொழில்புரிய உதவியாக இருக்கின்றன. இதே சூழலை நாம் ஓசூரிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம். ஓசூர் இப்போது TVS, Titan, Ashok Leyland ஆகிய பாரம்பர்ய நிறுவனங்களை மட்டும்கொண்ட பகுதியல்ல. Ather, Ola, Simple Energy, Embassy Warehouses, Apple எனப் புதிய நிறுவனங்களும் களமிறங்கவிருக்கும் புதிய பகுதி. இந்த High Demand-ஐ புரிந்துகொண்டு, ஓசூரைச் சிறப்பு நகரமாக்க எல்லா முயற்சிகளையும் எடுப்போம். எப்படியும் ஓசூர் உருவாக்கும் வருமானம் அனைத்தும் தமிழ்நாட்டு கருவூலத்துக்குத்தான். எனவே, துணிவோம்!

கனவு - 23 - ஓசூர் - வளமும் வாய்ப்பும்

ஓசூரை பெங்களூரின் துணை நகரமாக்குவோம்!

சிறப்பு நகரத்தைத் தொடர்ந்து, நாம் கையிலெடுக்கவேண்டியது, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ - சான் ஓஸே போன்று ஓசூரையும் பெங்களூரையும் இரட்டை நகரமாக்கும் முயற்சியை!

நான் குறிப்பிட்ட இரண்டு பகுதிகளும், அமெரிக்காவில் சிலிக்கான் வேலி சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பிரமாண்ட நகரங்கள். உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களான Apple, Google, Facebook ஆகிய நிறுவனங்கள் இங்குதான் அமைந்துள்ளன. சான் பிரான்சிஸ்கோ பெரிய நகரம். இதை பெங்களூர் என வைத்துக்கொள்வோம். சான் ஓஸே சற்றே சிறிய நகரம். இதுதான் நம் ஓசூர். சான் பிரான்சிஸ்கோவுக்கும் சான் ஓஸேவுக்கும் இடையே இருக்கும் தொலைவுகூட பெங்களூர் - ஓசூர் தொலைவுக்கு நெருக்கமாகவே வரும்.

பெங்களூர் இன்று, முன்புபோல் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக மத நல்லிணக்கச் சீர்குலைவால், அங்கிருக்கும் நிறுவனங்கள் நிறைய பதற்றத்தைச் சந்தித்துள்ளன. வன்முறை அபாயத்தால் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்து பணிபுரியும் ஊழியர்களும் அச்சத்தில் வாழ்கிறார்கள். இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஓசூரை பெங்களூருக்கான துணை நகரமாக (Sub City) நாம் எளிதில் வளர்த்தெடுக்கலாம். உண்மையில், பெங்களூரைவிட ஓசூரில் நல்ல குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும். நிலங்களும் நியாயமான விலையில் கிடைக்கும். Cost of Living-ம் கட்டுப்படியாகும் நிலையிலேயே உள்ளது. நல்ல சர்வதேசப் பள்ளிகள், தரமான அரசு-தனியார் மருத்துவமனைகள் என அடிப்படை வசதிகளும் ஓசூரில் உள்ளன. அமைதியான அரசாங்கமும் நமக்கு இப்போது கிடைத்திருக்கிறது. ஆகவே, ஓசூரை தைரியமாக பெங்களூருக்கான துணை நகரமாக நாம் முன்னிறுத்தலாம். பெங்களூர் Feel-ஐ இழக்காமல், அருகில் எங்கேனும் தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்கள், ஓசூரைக் கட்டாயம் தேர்ந்தெடுப்பார்கள்.

கனவு - 23 - ஓசூர் - வளமும் வாய்ப்பும்

ஓசூரை பெங்களூருக்கான துணை நகரமாக உருவாக்குவதில், நமக்குக் கொஞ்சம் தொலைநோக்கும் புரிதலும் தேவை. பெங்களூர், ஐடி-யை Core-ஆகக்கொண்டு வளர்ந்த பகுதி. ஆனால் ஓசூர், தொழிற்சாலைகளை Core-ஆகக்கொண்டு வளர்ந்த பகுதி. எனவே, ஓசூரை வலுக்கட்டாயமாக பெங்களூரைப் போன்ற IT கேந்திரமாக நாம் உருவாக்கவேண்டியதில்லை. அப்படி உருவாக்க முனைவது புலியைப் பார்த்து பூனை சூடுபோட்ட கதையாக முடியும். நாம் ஓசூரில் ஐடி நிறுவனங்கள் பெருகுவதற்கான சூழலையும் உருவாக்குவோம். ஆனால், அதைவிட முக்கியமாக E Vehicles, AI (Artificial Intelligence), Robotics போன்ற தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் பெருகும் சூழலையும் உருவாக்குவோம். என்னைக் கேட்டால், ஓசூரை Hi-Tech Hub-ஆக Convert செய்வதே புத்திசாலித்தனமான நடவடிக்கை என்பேன்!

(இன்னும் காண்போம்)