
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!


ஓசூரை அதிநவீன தொழில்நுட்ப கேந்திரமாக்குவோம்!
ஓசூரை அதிநவீன தொழில்நுட்ப கேந்திரமாக (Hi-Tech Hub) உருவாக்க, மூன்று நடவடிக்கைகள் தேவை. ஒன்று, IT நிறுவனங்கள் இயல்பாகப் பெருகுவதற்கு ஏற்றபடி ஒரு நார்மல் IT Park. இரண்டு, எலெக்ட்ரானிக் வாகனத்துறையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல ஒரு டீலக்ஸ் EV Park. மூன்று, AI & Robotics தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க ஒரு சூப்பர் டீலக்ஸ் AI Park!
IT Park-க்கு நம்மிடம் ஏற்கெனவே உதாரணங்கள் இருக்கின்றன. சென்னை சிறுசேரியிலுள்ள ஐடி பார்க்கே நல்ல உதாரணம். சிறுசேரி ஐடி பார்க், 4 சதுர கிலோமீட்டர் தூரத்துக்கு நீளும் ஆசியாவின் மிகப்பெரிய ஐடி பார்க். ஏக்கரில் சொன்னால், 800 ஏக்கர். இந்த சிப்காட் சார்பாக இது அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஓசூரில் ஒரு சிறிய ஐடி பார்க்கைத் தொடங்கலாம். பெங்களூரிலிருந்து கிளைகளை விரிக்கும் ஐடி நிறுவனங்கள், ஓசூர் ஐடி பார்க்கைப் பெருமளவில் பயன்படுத்துவார்கள். வேண்டுமானால், பெங்களூரிலிருந்து ஓசூரில் ஐடி பார்க்குக்கு வரும் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு, மானியம் போன்ற சலுகைகளையும் அளிக்கலாம். பாகலூர் சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, தளி சாலை, சூளகிரி சாலை என ஓசூரில் ஐடி பார்க் அமைப்பதற்கான இடங்கள் ஏராளம் உள்ளன. SIPCOT கூடிய விரைவில் பணிகளைத் தொடங்கக் கேட்டுக்கொள்கிறேன்.
EV பார்க்கைப் பொறுத்தவரை, ஏற்கெனவே ஓலா நிறுவனம் 500 ஏக்கரில் மிகப்பெரிய தொழிற்சாலையை ஓசூரில் அமைத்துள்ளது. இதற்கான நிலத்தையும்கூட சிப்காட்டே கொடுத்துள்ளது. அடுத்து ஏதர் நிறுவனமும் 3 ஏக்கரில் எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர் தயாரிப்பு தொழிற்சாலையை மதனகொண்டபள்ளி பகுதியில் அமைத்துள்ளது. இத்தனை இருக்க புதிதாகக் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் EV பார்க் அவசியமா என்று கேட்கலாம். என்னைப் பொறுத்தவரை, காட்டுக்கு சிங்கமும் புலியும் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நரிகளும் ஓநாய்களும் முக்கியம். அதுவே நல்ல Eco System. அதன்படி, ஓசூரில் ஓலா, ஏதர் போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டும் EV தொழிற்சாலை அமைக்க வழிவகுக்காமல், Simple Energy போன்ற சிறிய நிறுவனங்களும் தொழிற்சாலை அமைக்க நாம் வழிவகுக்க வேண்டும். இந்தப் பெரிய நிறுவனங்களும் சிறிய நிறுவனங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து முன்னேறி நாளடைவில் ஓசூர் இந்தியாவின் தவிர்க்கவியலா EV கேந்திரமாக மாறும். எனவே, ஓசூருக்கு ஒதுக்குக ஒரு EV Park-ஐ!

ஓசூரை தொழில்நுட்பத்தில் உச்சம் தொடும் நகரமாக மாற்ற, AI & Robotics Park-ம் அவசியம். இன்றைய தேதியில் AI-ஐ தவிர்த்துவிட்டு தொழில்நுட்ப வளர்ச்சியின் எதிர்காலத்தை எவருமே சிந்திக்க முடியாது. தமிழ்நாடு அரசும் AI தொடர்பாக 2020-ம் ஆண்டு விரிவான 48 பக்கக் கொள்கைப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில், AI தொழில்நுட்பம் சார்ந்து தமிழ்நாட்டில் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றும், AI தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்க Sandbox Environment உருவாக்கித் தரப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ஓசூர் நகரம்தான் Great Choice. ஏனென்றால், ஓசூர் IT பொறியாளர்களையும், மெக்கானிக்கல் பொறியாளர்களையும் சரிசமமாகக்கொண்ட பகுதி. தமிழ்நாட்டில் மெக்கட்ரானிக்ஸ்
(Mechatronics) படிப்பு அமலில் இருக்கும் பகுதிகளில் ஓசூரும் ஒன்று!
விமானம், ரயில், மெட்ரோ... ஓசூரை உலகத்தோடு இணைப்போம்!
நான் மேலே சொன்ன அத்தனையும் நடக்க வேண்டுமென்றால், ஓசூருக்குத் தேவைப்படுவது உலகத்தோடும் உள்ளூரோடும் தொடர்ச்சியான Connectivity. ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விக்கிரமாதித்தன் - வேதாளம் கதையாகப் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன. தமிழ்நாடு அரசு கோரிக்கைவைக்கிறது. ஒன்றிய அரசும் தலையசைக்கிறது. ஆனால், கர்நாடக அரசு குறுக்கே புகுந்து தடுக்கிறது. 160 கிலோமீட்டர் தொலைவுக்குள் இரண்டு சர்வதேச விமான நிலையங்களை அமைக்க விதி ஒப்பாதுதான். ஆனால், உள்நாட்டு விமான நிலையம் அமைக்கலாமே... அதற்கு எந்தத் தடையும் இல்லையே! இங்கேதான் எனக்குத் தேசியக்கட்சிகளின் மீது கோபம் எழுகிறது. அவர்கள் மாநிலங்களைச் சமமான பார்வையில் அணுகாமல், ஆளும் மாநிலங்கள், ஆளாத மாநிலங்கள் எனப் பிரித்து அணுகுகிறார்கள். காவிரி நடுவர் மன்ற உத்தரவை மீறி கர்நாடகா மேக்கேதாட்டூ அணையைக் கட்டுகிறது. ஆனால், இந்திய ஒன்றியத்தின் அரசு அமைப்பான AAI அறிவித்த ஒரு திட்டத்தைத் தமிழ்நாட்டால் பெற முடியவில்லை. ஏன் கண்ணைத் திறந்துவைத்துக்கொண்டே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறார்கள் என்று தெரியவில்லை.

அரசியல் இப்போதைக்கு என் களம் அல்ல. ஓசூருக்குக் கண்டிப்பாக ஓர் உள்நாட்டு விமான நிலையத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். இன்றைய நிலையில், ஓசூரை நோக்கி வரும் தொழில்துறை பிரமுகர்கள் எல்லோரும் பெங்களூரு விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 75 கிலோமீட்டர் காரிலோ அல்லது பேருந்திலோதான் வருகிறார்கள். பெங்களூரு - ஓசூர் டிராஃபிக் உலகப் பிரசித்தமானது. அதோடு ஒப்பிடும்போது சென்னை டிராஃபிக்கெல்லாம் சொப்பு விளையாட்டு. இப்படியிருக்க, எப்படி தொழில்துறையினருக்கு ஓசூர் முதன்மையான தேர்வாக இருக்கும்? மேலும், ஓசூரில் உற்பத்தியாகும் அத்தனைப் பொருள்களுமே பெங்களூரு அல்லது சென்னைக்கு அனுப்பப்பட்டுதான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதுவும் வீணான நேர விரயம் மற்றும் பணச்செலவு. எனவே, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஓசூருக்கு விமான நிலையம் கொண்டுவர வேண்டும். அப்படி இயலாத பட்சத்தில், Air Taxi (Mini Planes and Helicopters) சேவையையேனும் பெங்களூரு விமான நிலையத்தில் தற்காலிகமாகத் தொடங்கலாம். Air Taxi அறிமுகமானால் ஒரு காபியைக் குடித்து முடிக்கும் நேரத்தில், அனைவராலும் ஓசூர் வந்தடைந்துவிட முடியும்.

பெங்களூரு - ஓசூர் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவேண்டியதும் முக்கியமான ஒன்று. பெங்களூரிலிருந்து ஓசூருக்கும், ஓசூரிலிருந்து பெங்களூருக்கும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கிறார்கள். இவர்களில் பலருக்குப் பேருந்து மட்டுமே ஒரே வாய்ப்பாக இருக்கிறது. அவசர நேரங்களில் கடுமையான டிராஃபிக்கில் சிக்கி, மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியே அவர்கள் அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் செல்கிறார்கள். இந்தச் சூழலில், பலரால் வேலையில்கூட சரியாக கவனம் செலுத்த முடிவதில்லை என்பதை நான் அறிந்திருக்கிறேன். எனவே, தற்போது பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி வரை வரும் மெட்ரோ ரயில் சேவையை ஓசூர் வரை நீட்டிக்க இரண்டு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எலெக்ட்ரானிக் சிட்டி டு ஓசூர் 19 கிலோமீட்டர்தான். கடந்த சில வாரங்களாக, கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செல்லக்குமார் அவர்கள், பெங்களூரு - மெட்ரோ ரயில் சேவைக்காகத் தீவிர முயற்சியெடுப்பதைக் காண்கிறேன். அவர் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து, சாதகமான பதிலையும் பெற்றிருக்கிறார். அவருக்குத் துணையாகத் தமிழ்நாட்டின் மற்ற அரசியல்வாதிகளும் குரல் கொடுத்தால், விரைவில் ஓசூர் மக்களின் கண்களுக்கு மெட்ரோ ரயிலைக் காட்டிவிடலாம்.

சென்னையிலிருந்து ஓசூர் வரை Point to Point சதாப்தி விரைவு ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்பதும் என் கோரிக்கை. இப்போது சென்னையிலிருந்து ஓசூர் செல்லும் சிறு, குறு தொழில்துறையினர் மற்றும் வேலைவாய்ப்புக்காகச் செல்வோர், பெரும்பாலும் பேருந்தையே தேர்ந்தெடுக்கவேண்டிய நிலையில் இருக்கின்றனர். சென்னையிலிருந்து ஓசூருக்குக் குறைந்தது ஏழு மணி நேரப் பேருந்துப் பயணம். ஒரு நாள் Appointment-க்குக்கூட அவர்கள் இரண்டு நாள் பிழைப்பு கெடவேண்டியிருக்கிறது. ரயில் பயணம் என்றாலும் ஜோலார்பேட்டை வரை மட்டுமே அவர்களால் பயணிக்க முடிகிறது. அங்கிருந்து பேருந்து பிடித்துத்தான் ஓசூருக்குச் செல்ல வேண்டும். எனவே, சென்னை - ஓசூர் சதாப்தி விரைவு ரயில் சேவையைத் தொடங்குவது குறித்து தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் சிந்திக்க வேண்டும். ஒற்றை ரயில்கூட போதும். காலையில் சென்று மாலையில் வீடுகளுக்குத் திரும்ப, அது உதவிகரமாக இருக்கும். சில நேரங்களில் பெரிய நடவடிக்கைகளைவிட சிறிய நடவடிக்கைகள் அதிக பலனை அளிக்கும். அந்த வகை இது!
(இன்னும் காண்போம்)