மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 25 - ஓசூர் - வளமும் வாய்ப்பும்

ஓசூர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓசூர்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

கனவு - 25 - ஓசூர் - வளமும் வாய்ப்பும்
சுரேஷ் சம்பந்தம்
ஒருங்கிணைப்பாளர் ,
கனவு தமிழ்நாடு
சுரேஷ் சம்பந்தம் ஒருங்கிணைப்பாளர் , கனவு தமிழ்நாடு

இரவு வாழ்க்கை, ரோஜா பூங்கா - ஓசூரைப் பொழுதுபோக்குச் சொர்க்கமாக்குவோம்!

Extraordinary place needs Extraordinary things! ஆனால், ஓசூரில் சில சினிமா திரையரங்குகளைத் தவிர்த்து பெரிதாக எந்தப் பொழுதுபோக்கு அம்சங்களுமே இல்லை. பெங்களூரை நோக்கிய சாலையில் சில Resort-களும், Restaurants-களும் இருக்கின்றன. ஆனால், அது ஓசூர் போன்ற வேகமாக வளரும் பகுதிக்குப் போதாது. யானைப்பசிக்குச் சோளப்பொரிதான். எனவே, ஓசூரிலும் அதைச் சுற்றியும் பரவலாக இரவு வாழ்க்கை, ரோஜா பூங்கா, Amusement Mall, Cycle trip, Golf, Dravidian Language Museum எனப் பல பொழுதுபோக்கு அம்சங்களை அறிமுகப்படுத்தவேண்டியது கட்டாயமாகிறது!

இரவு வாழ்க்கை!

இரவு வாழ்க்கை என்றதும், நைட் கிளப்ஸ், பப், பார்ட்டி, கான்செர்ட் என்று உங்கள் நினைவு செல்லும். அதில் தவறில்லை. ஏனென்றால், இரவு வாழ்க்கை என்றாலே அவை நான்கு மட்டும்தான் உலகின் பல நகரங்களில் புழக்கத்தில் இருக்கின்றன. தமிழ்நாட்டின் வளர்ந்த நகரங்களான சென்னை, கோயம்புத்தூரிலும்கூட அதுதான் நிலை. ஆனால், நான் இரவு வாழ்க்கைக்கு வேறொரு வண்ணம் கொடுக்க விழைகிறேன். அதற்காக பப், பார்ட்டியெல்லாம் வேண்டாம் என்று தீவிர வலதுசாரி ஆட்கள்போல நான் சொல்லப் போவதில்லை. அவையெல்லாம் இருக்கட்டும். சுதந்திரம் என்பது அனுபவிப்பதற்காகத்தான். ஆனால், கூடவே இரவு நேர நூலகம் (Night Library), இரவு நேர நகர் உலா (Night City Tour), இரவு நேர விளையாட்டுத்திடல் (Night Sports Centre), இரவு நேரத் திரையரங்கம் (Night Theatre) ஆகிய சேவைகளை நாம் ஓசூரில் தொடங்கலாம். இரவு நேரத் திரையரங்கத்தை மட்டும் Floating Theatre-ஆக ஓசூர் தர்கா ஏரியில் அமைக்கலாம். அந்த ஏரி மிகச்சரியாக ஓசூர் நகரத்தின் நடுவிலேயே உள்ளது. நன்றாகத் தூய்மைப்படுத்தி நன்னீரை நிரப்பினால், Floating Theatre ஓசூர் வாழ் மக்களுக்கு நல்லதொரு Cinematic மற்றும் Refreshing அனுபவத்தை வழங்கும்.

கனவு - 25 - ஓசூர் - வளமும் வாய்ப்பும்

ரோஜா பூங்கா!

காஷ்மீரில் சில வாரங்களுக்கு முன்னதாக, 74 ஏக்கரில் கண்களைக் கொள்ளைகொள்ளும் Tulip மலர்ப்பூங்காவைத் திறந்திருக்கிறார்கள். அதைப் பார்த்ததுமே எனக்கு ஓசூர்தான் நினைவுக்கு வந்தது. ஓசூரும் கிட்டத்தட்ட மினி காஷ்மீர் போன்றதுதான். இங்கும் காஷ்மீருக்கு நிகராக ரோஜாப்பூக்கள் விளைகின்றன. எனவே, ஓசூரில் பிரமாண்ட மலர்ப்பூங்கா ஒன்றைப் பொழுதுபோக்குக்கு மக்களை ஈர்க்கும் நோக்கில் அமைக்கலாம். அண்மையில், தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் சென்னையில் 300 கோடி ரூபாயில் மலர்ப்பூங்கா அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்திருக்கிறார். என் யோசனை என்னவென்றால், அந்த 300 கோடி ரூபாய் மலர்ப்பூங்காவை அப்படியே ஓசூருக்குத் திருப்பலாம். சென்னை எந்தவிதத்திலும் மலர்ப்பூங்காவுக்கு ஏற்ற சூழல் கொண்ட பகுதி அல்ல. எனவே, ஓசூரை மலர்ப்பூங்கா Destination-ஆக மாற்றுவோம்.

Amusement Mall!

நான் ஆரம்பத்திலேயே சொன்னபடி, உலகில் வளர்ந்துவரும் நகரங்களில் 13-வது இடத்தில் இருக்கிறது, ஓசூர். ஆனால், இதுவரை ஒரே ஒரு நல்ல மால்கூட ஓசூரில் திறக்கப்படவில்லை. மால் ஒன்றும் அத்தியாவசியத் தேவை இல்லைதான். ஆனாலும், ஒரு நகரத்தின் Capacity-ஐ அளவிட, ஆய்வாளர்கள் அதையும் ஓர் அலகாக எடுத்துக்கொள்கிறார்கள். மேலும், இளம் தலைமுறையினரை ஈர்ப்பதிலும் மாலுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. எனவே, ஓசூரில் ஒரு மால் திறக்க ஏற்பாடு செய்யலாம். ஆனால், அந்த மாலை Amusement Mall-ஆகத் திறக்கலாம். Amusement Mall என்பது Amusement Theme Park-ஐ அப்படியே மாலுக்குள் வைத்ததுபோல இருக்கும். இதற்கு பெங்களூரின் லூலூ மால் சிறந்த உதாரணம்.

கனவு - 25 - ஓசூர் - வளமும் வாய்ப்பும்

Cycling!

நகர்ப்புற இளைஞர்களிடம் Cycling Craze நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உடல்நலத்துக்கு நல்லது என்பதைக் கடந்து, ஒரு சாகச விளையாட்டாகவும் Cycling-ஐ தொடர்கிறார்கள் இளைஞர்கள். அதற்கேற்றபடி, ஓசூர் - அஞ்செட்டி சாலை Cycling-க்கு ஏற்ற தகவமைப்பைக் கொண்டுள்ளது. இந்தச் சாலையை ஓசூரின் ECR சாலை என்றுகூடச் சொல்லலாம். மரங்களும் மலைக்காட்சிகளும் அடர்ந்த அந்தச் சாலை, ஒவ்வொரு முறை பயணிக்கும்போதும் மனதை அமைதிப்படுத்தித் திருப்பியனுப்பும். இத்தகைய இதமான பகுதியில் இனி Cycling-குக்கான கட்டமைப்பை ஏற்படுத்தலாம். கூடவே, Cycling சார்ந்த Coffee Shops, Juice Shops, Merchandise Shops-ம் அந்தப் பகுதியில் பெருகும்.

Golf!

Golf ஒரு Luxury Sport-தான். மறுக்கவில்லை. ஆனால், Golf விளையாட்டைப் பெரிதாக விரும்பும் ஒரு Elite Community ஓசூரில் பெருவாரியாக இருக்கிறது. இப்போது அவர்கள் எல்லோரும் Golf விளையாடுவதற்கு பெங்களூருக்குத்தான் செல்கிறார்கள். இதன் அர்த்தம் அவர்கள் வெறுமனே அதிகாலையில் சென்று Golf ஆடிவிட்டு மதியம் வந்துவிடுவார்கள் என்பதில்லை. ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் இரண்டு நாள்கள் Golf Course-ல் இருக்கும் Resort-களில் தங்குவார்கள். அதன் மூலம் மிகப்பெரிய வருமானம் Karnataka Golf Association-க்குச் செல்கிறது. இதை அப்படியே ஓசூருக்குத் திருப்ப Golf Course அமைப்பது அத்தியாவசியமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது.

கனவு - 25 - ஓசூர் - வளமும் வாய்ப்பும்

Dravidian Language Museum!

திராவிட மொழிகள் செழித்து விளங்கும் பகுதி, ஓசூர். இங்கே தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் ஆகிய மொழி பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துவருகிறார்கள். இந்த ஒற்றுமைக்கான அடையாளமாகத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களின் பங்களிப்புடன் திராவிட அருங்காட்சியகம் ஒன்றை ஓசூரில் திறக்கலாம். இதற்கு, ஏற்கெனவே ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கும் திராவிடப் பல்கலைக்கழகம் முன்னுதாரணமாக இருக்கிறது. அந்தப் பல்கலைக்கழகமும் நான்கு திராவிட மாநிலங்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டதுதான். இப்போது தெலங்கானா உருவாகிவிட்டதால், ஐந்து மாநிலங்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். இதே வகையான கூட்டு முயற்சியுடன் ஓசூர் திராவிட அருங்காட்சியகத்தை மிக நவீனமாக நாம் உருவாக்கலாம். பல்லாயிரம் ஆண்டு வரலாறுகொண்ட திராவிடப் பண்பாட்டை அடுத்து வரும் பல நூற்றாண்டுகளுக்கு உயர்த்திப்பிடிக்கும் அம்சமாக, ஓசூர் திராவிட மொழி அருங்காட்சியகம் கட்டாயம் விளங்கும்!

‘கனவு ஓசூர்’ நிறைவடைந்தது, நண்பர்களே! இதில் நான் முன்வைத்திருக்கும் திட்டங்களில் பெரும்பாலானவை, நிறைய முன்னோடிகளால் ஏற்கெனவே பேசப்பட்டவைதான். அவற்றையெல்லாம் கோர்வையாகத் தொகுத்து நான் சொல்லியிருக்கிறேன் என்று மட்டுமே சொல்ல வேண்டும். இந்தத் திட்டங்களில் பாதியை நிறைவேற்றினாலே ஓசூர் உலகின் முன்னணி நகரமாக ஒருநாள் மாறும்.

அந்த நாளை நோக்கிக் காத்திருப்போம்!

(இன்னும் காண்போம்)

நம் அடுத்த கனவு கிருஷ்ணகிரி