Published:Updated:

கொரோனா: ரமலான் மாதத்தில் களையிழக்கும் மெக்கா, மதீனா! பாகிஸ்தான் எப்படி சமாளிக்கிறது?

Mecca, Saudi Arabia, March 6, 2020
Mecca, Saudi Arabia, March 6, 2020 ( (AP Photo/Amr Nabil) )

உலகம் முழுக்க பல இஸ்லாமிய நாடுகளில் ரமலான் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமெடுத்துள்ளது. பாகிஸ்தானில் 7,000 பேரை கொரோனா தாக்கியுள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி நிலவரப்படி 7,993 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.159 பேர் பாகிஸ்தானில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கின்றனர். இந்தியா போலவே பாகிஸ்தானிலும் ஏப்ரல் 30-ம் தேதி வரை லாக்டௌன் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சில சலுகைகளையும் விதிவிலக்குகளையும் இம்ரான்கான் அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கார்பென்டர்கள், பிளம்பர்கள் வேலைகளைத் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிய நிறுவனங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விதிவிலக்கு காரணமாக பாகிஸ்தானில், ஏராளமானோர் பணிக்குச் செல்ல வீட்டை விட்டு வெளியே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அங்கு கொரோனா வைரஸ் மேலும் பரவ வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Corona Virus
Corona Virus

இதற்கிடையே, பாகிஸ்தானில் மற்றோரு பிரச்னையும் தலையெடுத்துள்ளது. வரும் 23-ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது. ஏற்கெனவே, பாகிஸ்தானில் ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மசூதிகளில் தொழுகை நடத்தவும் தடை உள்ளது. ஆனால், `பாகிஸ்தான் அரசு விதித்துள்ள தடையை கடைப்பிடிக்கப்போவதில்லை' என்று அந்த நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மத அமைப்புகள் தெரிவித்துள்ளன. கொரோனா பரவல் மற்றும் மசூதிகளில் தொழுகை நடத்துவது குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமியாத் இ உலமா இஸ்லாம், ஜமியாத் இ உலமா பாகிஸ்தான், ஜமியாத் இ இஸ்லாமி, டான்ஸிம் இ இஸ்லாமி அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் கராச்சியில் நடைபெற்றது. பின்பு, கராச்சி பிரஸ் கிளப்பில் இந்த அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் முஃப்தி தாகி உஸ்மானி பேசுகையில், ``மசூதிகளில் தொழுகை நடத்த அரசு தடை விதித்தாலும், தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மசூதிகளில் ரமலான் மாதத்தில் ஐந்து வேளை தொழுகையும், வெள்ளிக்கிழமைகளில் தொழுகையும் நடத்தப்படும்'' என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கராச்சி நகரம் அமைந்துள்ள சிந்து மகாணத்தின் முதல்வர் முராத் அலி ஷா, இஸ்லாமிய மதகுருக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று சில உலமாக்கள் மசூதிகளில் தொழுகை நடத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். மேலும், பல அமைப்புகளுடன் இதுகுறித்து சுமூக முடிவெடுக்க பாகிஸ்தான் அரசு பேசிவருகிறது.

அதேபோல , இஸ்லாமாபாத்திலும் ராவல்பின்டியிலும் இஸ்லாமிய மதகுருக்களின் கூட்டத்தில், மசூதிகளில் தொழுகை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த ஜாமியா தாருல் உலும் ஜகாரியா அமைப்பின் தலைவர் ஆஷிசூர் ரஹ்மான் கூறுகையில், ``ரமலான் மாதத்தில் ஐந்து வேளை தொழுகை நடத்துவதை தடுப்பதும் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறுத்துவதையும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. மசூதிகளில் தொழுகை நடத்தி அல்லாவிடத்தில் மன்னிப்பு கேட்டால், கொரோனாவின் பிடியிலிருந்து நாம் விடுபட முடியும்'' என்று தெரிவித்தார். பாகிஸ்தானில் ரமலான் மாதத்தில் சாலையோரங்களில் கூட்டமாகத் தொழுகை நடத்துவதும், குழுவாக இணைந்து ரமலான் நோன்பை முடிப்பதும் வழக்கமானது.

ரமலான் நோன்பு முடிப்பு
ரமலான் நோன்பு முடிப்பு

இந்த காலக்கட்டங்களில் கொரோனா பரவும் வேகம் அதிகமாகி விடக்கூடாது என்பதால், அரசு முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது. எனினும், சோப் வைத்து கை, கால்களைக் கழுவச் செய்வது, கார்ப்பெட் உள்ளிட்டவற்றை அடிக்கடி மாற்றுவது, சானிடைஸர் பயன்படுத்துவது போன்ற விஷயங்களை உறுதியாகக் கடைபிடிக்க மசூதிகள் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், லாக்டௌன் காலத்தில் மசூதிகளில் தொழுகை நடத்த மதகுருக்கள் முடிவுசெய்திருப்பது அந்த நாட்டு அரசுக்கு தலைவலியாகவே அமைந்துள்ளது.

பாகிஸ்தானில் மட்டுமல்ல, உலகம் முழுக்க பல இஸ்லாமிய நாடுகளில் ரமலான் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் கொரோனாவால் 2,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 91 பேர் பலியாகியிருக்கின்றனர். இஸ்லாமிய நாடான வங்கதேசத்திலும் ரமலான் மாதத்தில் கொரோனா பரவிவிடக் கூடாது என்பதில் அரசு எச்சரிக்கையுடன் உள்ளது. ரமலான் மாதத்தில் இந்த நாட்டிலும் மசூதிகளில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், பாகிஸ்தான்போல வங்கதேசத்தில் மசூதிகளில் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடைக்கு எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. எனினும், கொரோனா ஊரடங்கு காரணமாக வெகுவேகமாக வளர்ச்சியடைந்துவந்த வங்கதேச பொருளாதாரம் மட்டுப்பட்டுள்ளது. ஜவுளி உற்பத்தித்துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது, அந்த நாட்டு அரசைக் கவலையடையச் செய்துள்ளது.

சவுதி அரேபியாவில் மக்கள் வீடுகளிலிருந்தே தொழுகை மற்றும் ரமலான் நோன்பை முடித்துக்கொள்ள வேண்டுமென்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்தே சவுதி அரேபியாவில் ஐந்து வேளை தொழுகை மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகைகளை மசூதிகளில் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மதீனாவில் வழக்கமாக ரமலான் மாதத்தில் மாலை வேளைகளில் நோன்பை முடிப்பவர்களுக்கு உணவு வழங்கப்படும். தற்போது, மதீனாவில் நோன்பு முடிக்கும் நிகழ்ச்சியும் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து திரும்பிய 29வது நாளில் இளைஞருக்குக் கொரோனா பாசிட்டிவ்! - அதிர்ச்சியில் கேரளா

மெக்காவிலும் தொழுகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா மசூதி இஸ்லாமியர்களின் மூன்றவாது முக்கிய புனிதத் தலம் ஆகும். இந்த மசூதியிலிருந்துதான் இறைத்தூதர் நபிகள் நாயகம் சொர்க்கத்தை எட்டினார் என்பது இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை.

தொழுகை
தொழுகை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ரமலான் தொழுகைக்கு இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜெருசலேம் வக்பூ அறிவித்துள்ளது. பாதுகாப்பு கருதி மக்கள் வீட்டிலியே தொழுகை நடத்தவும் ஜெருசலேம் வக்பூ கோரிக்கை விடுத்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய இஸ்லாமிய நாடாகக் கருதப்படும் இந்தோனேசியாவிலும் ரமலான் மாதத்தையொட்டி மசூதிகளில் தொழுகைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியா, அமீரகம், ஜோர்டான் போன்ற இஸ்லாமிய நாடுளிலும் மசூதிகளில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு ரமலான் மாதம் களை இழந்து காணப்படும் என்று இஸ்லாமிய மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு