பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“சசிகலாவை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது பைத்தியக்காரத்தனம்!”

Thirunavukkarasar
பிரீமியம் ஸ்டோரி
News
Thirunavukkarasar

தமிழக அரசியலில் 43 வருடங்களாக வலம்வரும் மூத்த தலைவர் திருநாவுக்கரசரை சந்தித்துப் பேசினேன்...

‘‘உள்ளாட்சித் தேர்தலையொட்டி தி.மு.க-வுக்கும் தமிழக காங்கிரஸுக்கும் இடையில் மோதல் ஆரம்பமாகிவிட்டதே?’’

‘‘இப்படி ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை சொல்றதை நிறுத்திக்கொள்வது நல்லது. மதச்சார்பற்றவர்கள் ஒரே அணியில் நின்றதால்தான், தமிழகத்தில் நாடாளுமன்றத்தேர்தலில் பெரும்வெற்றி கிடைத்தது. அடுத்துவந்த உள்ளாட்சித்தேர்தலில் 35 சதவிகிதப் பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்திருக்கிறது. இன்னும் 65 சதவிகிதப் பதவிகளுக்குத் தேர்தல் நடக்கவேண்டியிருக்கிறது. இன்னும் ஓராண்டில் சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. இந்தச் சூழ்நிலையில், மாறிமாறி பேசிக்கொண்டே இருந்தால், தலைவர்கள் மட்டத்தில் நாளைக்கு சரியாகப் போய்விடலாம். தொண்டர்கள் மத்தியில் ஏற்படுகிற பாதிப்பு, மனக்கசப்பு தொடரக்கூடாது என்பதே என் விருப்பம்.’’

‘‘கே.எஸ்.அழகிரி அறிக்கையில்தானே இந்தப் பிரச்னை ஆரம்பமானது... அறிக்கைக்குக் காரணமென்ன?’’

‘‘அதற்குக் காரணம் ஒரு லட்சம் பதவிகள். நாடாளுமன்றம், சட்டமன்றம் என்றால் 39 - 234 பதவிகள்தான்... உள்ளாட்சியில் எண்ணிக்கை அதிகமிருப்பதால் இடப்பங்கீடு தொடர்பான விஷயங்களை சென்னையில் இருந்து பேசமுடியவில்லை. மாவட்ட அளவில் பேசியதால் இடப்பங்கீட்டில் முரண்பாடு ஏற்பட்டு, சில இடங்களில் தி.மு.க-வும், காங்கிரஸும் தனித்துப்போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

“சசிகலாவை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது பைத்தியக்காரத்தனம்!”
“சசிகலாவை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது பைத்தியக்காரத்தனம்!”

இது அடுத்தகட்டமாக நடந்த மறைமுகத் தேர்தல்களிலும் எதிரொலித்தது. மாற்றி மாற்றி ஓட்டுபோட்ட சம்பவங்கள் நடந்தன. எதிர்காலத்தில் இதுமாதிரி நடந்துவிடக்கூடாது. மாவட்ட அளவில் சீட் பங்கீடு என்று வரும்போது நெருடல் இல்லாமல் சுமுக உடன்பாடு ஏற்பட தலைவர்கள் வழிவகை செய்யவேண்டும். இதன் அடிப்படையில் சட்டமன்றத் தேர்தலைப் பார்க்கக்கூடாது. இதே கூட்டணி ஒற்றுமையாகத் தேர்தலைச் சந்திப்பதுதான் மக்களுக்கும் நல்லது. அந்தந்தக் கட்சிகளுக்கும் நல்லது.’’

‘‘அதற்காக, கூட்டணி தர்மத்தை தி.மு.க மீறிவிட்டதாக அறிக்கை விட்டது சரியா?’’

‘‘நல்ல நோக்கத்திற்காக அவர் அப்படிச் சொன்னதாகவே வைத்துக்கொண்டாலும், சொன்ன நேரம் சரியில்லை. கட்சியின் கீழ்மட்டத்தில் இருக்கும் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் சிலருக்கு உள்ளாட்சித் தேர்தல்களில் நிற்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்கள் சென்னைக்கு வந்து அழகிரியைப் பார்த்து முறையிட்டுள்ளனர். அவர்களை சமாதானம் செய்யும் நோக்கில் தி.மு.க-வை விமர்சித்து அவர் அறிக்கை கொடுத்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில், அந்த அறிக்கை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியதுதான். கட்சியின் மாநிலத்தலைவரே, கூட்டணி தர்மத்தை தி.மு.க மீறிவிட்டதாக அறிக்கை விட்டதால், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று வந்த எங்கள் கூட்டணிக்கட்சியினர் ‘தி.மு.கவே கூட்டணி தர்மத்தை மீறிவிட்ட போது ஏன் நாம் மீறக்கூடாது?’ என்கிற யோசனைக்குத் தள்ளப்பட்டார்கள். இதனால், மறைமுகத் தேர்தல்களில் குழப்பமான சூழ்நிலை உருவானது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.’’

Thirunavukkarasar
Thirunavukkarasar

‘‘டெல்லி தலைமை சொல்லி கே.எஸ்.அழகிரி அறிக்கை விட்டாரா... அல்லது, ப.சிதம்பரம் சொல்லித்தான் அறிக்கை விட்டாரா... கே.எஸ். அழகிரியை சிதம்பரம்தான் ரிமோட்டில் இயக்குகிறார் என்று பேசிக்கொள்கிறார்களே?’’

‘‘சோனியா, ராகுல் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளருக்குத் தெரிந்து விடப்பட்ட அறிக்கையாக நான் நினைக்கவில்லை. சிதம்பரத்துக்குத் தெரியுமா இல்லையாங்கிறது எனக்குத் தெரியாது. அதை ப.சிதம்பரம்கிட்ட கேட்கணும். இல்லைன்னா... அழகிரிகிட்டதான் நீங்கள் கேட்க வேண்டும்.’’

‘‘இந்த அறிக்கைக்காக டெல்லியில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக்கூட்டத்தில் தி.மு.க கலந்துகொள்ளாதது சரியா?’’

‘‘எங்களுடைய அகில இந்தியத் தலைமை, தி.மு.க தலைமையுடன் சுமுகமான நட்பில் இருக்கிறது. அதேபோன்று, நான், அழகிரி போன்றவர்களுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் இடையில் எந்தக் கருத்துவேறுபாடும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலால் ஏற்பட்ட சிறு வருத்தத்தை வைத்து, டெல்லி கூட்டத்தை தி.மு.க புறக்கணித்திருக்கக் கூடாது. மதவாத பி.ஜே.பி-யையும், அவர்கள் கொண்டு வந்திருக்கிற சட்டங்களையும் எதிர்ப்பதற்காக தேசிய அளவில் நடந்த கலந்துரையாடல் கூட்டம் அது. அதில் கலந்துகொண்டு தி.மு.க தன் கருத்துகளைச் சொல்லியிருக்கலாம். தமிழக காங்கிரஸ் தலைமைமீதான அதிருப்தியை சோனியா, ராகுலிடம் தனியாகத் தெரிவித்துவிட்டு வந்திருக்கலாம். அவர்கள் கூப்பிட்டுப் பேசியிருப்பார்கள்.’’

‘‘பெரியண்ணன் போக்கை தி.மு.க கையாளுகிறது என்று காங்கிரஸார் பேசுகிறார்களே?’’

‘‘எங்கள் கூட்டணியில் தமிழக அளவில் தி.மு.க-தான் பெரியகட்சி. அகில இந்திய அளவில் காங்கிரஸ்தான் பெரிய கட்சி. எனவே, ஒருவரை ஒருவர் மதித்துச் செயல்பட வேண்டியது அவசியம். இதில் பெரியண்ணன் மனோபாவமோ, அடிமை என்கிற மனோபாவமோ யாருக்கும் தேவையில்லை. ஒருவரை ஒருவர் அனுசரித்துதான் போகவேண்டும். அப்படித்தான் இரு தரப்பிலும் இருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதும் அதனால்தான். அதேபோல இருந்தால்தான் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறமுடியும்.’’

‘‘தி.மு.க கூட்டணியைப்போலவே அ.தி.மு.க கூட்டணியிலும் பி.ஜே.பி-யுடன் உரசல் அதிகமாகியிருக்கிறதே...இதனால் தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டா?’’

‘‘இன்றைய நிலவரப்படி... நத்திங். தினகரன், சீமான் போன்றவர்களின் சிறிய கட்சிகளைத் தவிர்த்து, இரண்டு கூட்டணிகளில்தான் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் அணிவகுக்கின்றன. கட்சிகள் மாறிக் கூட்டணி போடுவதற்கான அறிகுறிகளோ சூழலோ இப்போது இல்லை.’’

‘‘ரஜினியும் நீங்களும் நண்பர்கள். தமிழக அரசியலில் அவர் சொல்லும் அதிசயம் அவரை மையமாக வைத்து நடக்குமா?’’

‘‘ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. சினிமாவில் அவர் எனக்கு நண்பர். முக்கிய நாள்களில் இருவரும் சந்தித்துப் பேசுகிறோம். அவர் என்ன பெயரில் கட்சி ஆரம்பிக்கப்போகிறார், அவருடைய கொள்கை என்ன, யாரோடு கூட்டணி என ஆயிரத்து எட்டு விஷயங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் அவர்தான் முடிவு செய்து தெளிவாகச் சொல்ல வேண்டும்.’’

‘‘அ.தி.மு.க-வில் இருந்து காங்கிரஸுக்கு வந்தவர் நீங்கள்...அதனால், அ.தி.மு.க-வை நோக்கி நீங்கள் காங்கிரஸைக் கொண்டு போக முயற்சி செய்வதாக ஒரு பேச்சு கிளம்பியுள்ளதே?’’

‘‘தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியில் பி.ஜே.பி இருக்கிறது. அப்படியிருக்க, காங்கிரஸை எப்படி அ.தி.மு.க பக்கம் நான் கொண்டுபோக முடியும். அ.தி.மு.க என்னை வளர்த்த கட்சிதான்; நான் வளர்த்த கட்சி. அமைச்சர் பதவி உட்பட எத்தனையோ கட்சிப் பதவிகளில் இருந்திருக்கிறேன். ஜெயலலிதா என்னைக் கட்சியை விட்டு வெளியேற்றி 23 வருடங்கள் ஆகிவிட்டன. நான் இப்போது இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறேன். பத்தாண்டுகளாக காங்கிரஸின் வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறேன். என்னை ராகுல் நம்புகிறார். அவரை நான் நம்புகிறேன். காங்கிரஸின் தமிழகத் தலைவராக இரண்டரை ஆண்டுகள் இருந்துவிட்டேன். இதற்கு அப்புறமும் என்னை அ.தி.மு.க-வுடன் இணைத்துப் பேசுவது பைத்தியக்காரத்தனம்!’’

‘‘சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தால், தமிழக அரசியலில் குறிப்பாக அ.தி.மு.க-வில் திடீர் திருப்பங்கள் நடக்குமா?’’

‘‘ஒன்றுமே நடக்காது... அவர் எதற்காக உள்ளே போனார்... சொத்துக் குவிப்பில்தானே? அவரின் வயது, ஜெயலலிதா இறப்பில் நீடிக்கும் மர்மம், நீதி விசாரணையிலும் வெளிவராத உண்மைகள்... இத்தகைய சூழ்நிலையில சசிகலா வெளியே வந்து என்ன பண்ணமுடியும்? எதுவும் செய்ய முடியாது.

பன்னீர்செல்வம், எடப்பாடி இருவரின் தலைமையை ஏற்றுக்கொண்டு மக்கள் வாக்களிக்கவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், எம்.எல்.ஏ-க்களைச் சரிக்கட்டி ஆட்சியின் மிச்ச காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

சசிகலா ஜெயலலிதாவின் உதவியாளர், அவ்வளவுதான். அவரை அரசியல் தலைவராக மக்கள் அங்கீகரித்து மக்கள் அவர் பின்னால் நின்று வாக்களிப்பார்கள் என்று யாராவது நினைத்தால் அதைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. சொத்து, பணம், வசதி வாய்ப்பு இருக்கலாம். அதைவைத்து நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டியதுதானே தவிர, அரசியலில் புகுந்து இனிமேல் கட்சித் தலைவராவது, முதல்வர் ஆவது இதெல்லாம் கனவு. நிறைவேற வாய்ப்பேயில்லை. மக்களும் ஏற்கவே மாட்டார்கள்!’’

‘‘அ.தி.மு.க-வில் இரட்டைத்தலைமை இருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘இரட்டைக் குதிரையிலோ, இரட்டைப் படகிலோ யாரும் சவாரி பண்ணமுடியாது. ஜெயலலிதாவால்தான் இப்போதுள்ள அரசு ஆட்சியைப் பிடித்தது. பன்னீர்செல்வம், எடப்பாடி இருவரின் தலைமையை ஏற்றுக்கொண்டு மக்கள் வாக்களிக்கவில்லை.

Thirunavukkarasar
Thirunavukkarasar

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், எம்.எல்.ஏ-க்களைச் சரிக்கட்டி ஆட்சியின் மிச்ச காலத்தை ஓட்டிக்கொண்டிருக் கின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே எடப்பாடி, ஓ.பி.எஸ் இருவரின் செல்வாக்கும் தெரிந்துவிட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர்களுடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். தேர்தலுக்காகவே இருவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகக் காண்பித்துக்கொள்கிறார்கள். இரண்டு பேரும் சேர்ந்து பிரமாணப்பத்திரத்தில் கையெழுத்துப் போடுவது, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது... இதெல்லாம் நீண்டகாலத்துக்குச் சரிப்பட்டு வராது. இரட்டைத் தலைமை என்பது தற்காலிக ஏற்பாடுதான். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சிக்கு வரப்போவது கிடையாது. அதற்குப்பிறகு யாராவது ஒருவருடைய தலைமையில் அந்தக் கட்சி செல்ல வேண்டிய சூழல் எதிர்காலத்தில் உருவாகும். என்னுடைய கணிப்பு இதுதான்!’’