நடப்பு
Published:Updated:

கடன் சலுகை... வட்டிக்கு வட்டி ரத்து..! - யாருக்கு எவ்வளவு லாபம்?

கடன் சலுகை
பிரீமியம் ஸ்டோரி
News
கடன் சலுகை

வட்டிக்கு வட்டி ரத்து செய்யப்பட்டதால், ரூ.6,000 கோடிக்கும் மேலான தொகை அரசாங்கத்துக்கு செலவாகும்!

சென்ற மார்ச் முதல் இன்றுவரை நாம் அனைவரும் பலவிதமான இக்கட்டான சூழ்நிலைகளுக்கு ஆளாகியுள்ளோம். கொரோனா பயம் ஒருபக்கம், வருமானம் குறைந்துவிட்டதே என்ற கவலை இன்னொரு பக்கம். இவையெல்லாம் போதாது என்று கடன் தொல்லை வேறொரு பக்கம். ஏற்கெனவே வாங்கிய கடனுக்கான இ.எம்.ஐ-யைக் கட்ட முடியாமல் பலர் சிரமப்பட்டனர்.
கடன் சலுகை... வட்டிக்கு வட்டி ரத்து..! - யாருக்கு எவ்வளவு லாபம்?

இந்தத் தொல்லையிலிருந்து விடுபட நமது மத்திய ரிசர்வ் வங்கியானது கடன் சலுகைக் காலத்தை (Moratorium) அறிமுகப்படுத்தியது. இதனால் பலருக்கும் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கடன் தவணைத் தொகையைச் செலுத்துவதில் சலுகை (EMI Holiday) கிடைத்தது.

ஆனால், இந்த சலுகையைப் பயன்படுத்தியவர்களுக்கு கடன் சுமை அதிகமாகவே செய்தது. அதனால் பலர் நீதிமன்றத்துக்குச் சென்றனர். மக்கள் துயரைத் தீர்க்க ஏதாவது வழிசெய்யும்படி மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது உச்ச நீதிமன்றம். கடைசியாக, மத்திய அரசாங்கம், இந்தக் கடன் சலுகை காலமான ஆறு மாதத்துக்கு வட்டிக்கு வட்டியைத் தள்ளுபடி செய்வதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. அதன்படி நமது நிதி அமைச்சகம் அக்டோபர் 23, 2020 அன்று அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இதன்படி சுமார் ரூ.6,000 கோடிக்கும் மேலான தொகையை அரசாங்கம் கஜானாவிலிருந்து கொடுக்கிறது. இனி இந்த வட்டிக்கு வட்டி தள்ளுபடி குறித்த சில கேள்விகளும் அதற்கான பதில்களையும் பார்ப்போம்.

வட்டிக்கு வட்டி தள்ளுபடி எவ்வளவு?

நாடு முழுவதும் ரூ.2 கோடிக்கும் குறைவாக கடன் வாங்கியவர்கள் அனைவருக்கும் வட்டிக்கு வட்டியைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது நமது மத்திய அரசாங்கம். இதன்படி, அனைத்து நிதி நிறுவனங்களையும் சேர்த்து ஒருவரின் கடன் ரூ.2 கோடிக்கு மிகாமல் இருக்குமானால், அவருக்கு இந்த வட்டிக்கு வட்டி ரத்து கிடைக்கும். மொத்தக் கடன் ரூ.2 கோடிக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில், இந்தத் தள்ளுபடி ஒருவருக்குக் கிடைக்காது.

கடன் சலுகை... வட்டிக்கு வட்டி ரத்து..! - யாருக்கு எவ்வளவு லாபம்?

வட்டிக்கு வட்டி ரத்து எப்படிச் செயல்படுகிறது?

பிப்ரவரி 29, 2020 அன்று இருந்த ஒருவரின் கடன் தொகைக்குக் கூட்டுவட்டி மற்றும் தனிவட்டி அடிப்படையில் வட்டி கணக்கிடப்பட்டு, இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தள்ளுபடியாக அரசாங்கம் வழங்கும். மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31, 2020 உள்ள காலகட்டத்துக்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடியாகக் கிடைக்கும்.

எங்கு கடன் வாங்கியிருந்தால், இந்தத் தள்ளுபடி கிடைக்கும்?

அனைத்திந்திய நிதி நிறுவனங்கள், அனைத்துப் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்கள், எம்.எஃப்.ஐ நிறுவனங்கள் போன்ற அனைத்து நிறுவனங்களில் கடன் வாங்கியவர்களுக்கும் இந்தத் தள்ளுபடி கிடைக்கும். தனிநபர்கள்/ பார்ட்னர்ஷிப் ஃபர்ம்களிடம் கடன் வாங்கியவர்களுக்குக் கிடைக்காது. கடன் சலுகையைப் பயன்படுத்தி யவர்கள் மற்றும் தவறாமல் இ.எம்.ஐ-யைச் செலுத்தியவர்கள் ஆகிய இரு வகையினருக்கும் இந்தத் தள்ளுபடி கிடைக்கும்.

கடன் சலுகை... வட்டிக்கு வட்டி ரத்து..! - யாருக்கு எவ்வளவு லாபம்?

எந்தெந்தக் கடன்களுக்கு இந்தத் தள்ளுபடி கிடைக்கும்?

கிட்டத்தட்ட எல்லா வகைக் கடன்களுக்கும் கிடைக்கும். உதாரணத்துக்கு சில வகைக் கடன்கள்... 1. வீட்டுக் கடன். 2. ஆட்டோமொபைல் கடன். 3. தனிநபர் கடன். 4. கிரெடிட் கார்டு கடன். 5. தொழில் கடன். 6. நுகர்வோர் கடன். 7. கல்விக் கடன்.

வாராக்கடனாக இருந்தால் தள்ளுபடி கிடைக்குமா?

பிப்ரவரி 29, 2020-ம் தேதியன்று நீங்கள் வாங்கியுள்ள கடன், வாராக்கடனாக (NPA – Non Performing Asset - அதாவது, நீங்கள் மூன்று மாதங்களுக்குமேல் இ.எம்.ஐ கட்டாமல்) இருந்திருந்தால், இந்தத் தள்ளுபடி கிடைக்காது. ரெகுலர் அக்கவுன்டுகளுக்கு மட்டும்தான் இந்தத் தள்ளுபடி செல்லுபடியாகும்.

கடன் சலுகை... வட்டிக்கு வட்டி ரத்து..! - யாருக்கு எவ்வளவு லாபம்?

இந்தத் தள்ளுபடி எப்போது கிடைக்கும்?

நவம்பர் 5-ம் தேதிக்குமேல் இந்தத் தள்ளுபடித் தொகை உங்களது கடன் அக்கவுன்டில் வரவு வைக்கப்படும். கடனை முடித்தவர்களுக்கும் இந்தத் தள்ளுபடி உண்டு.

சுமாராக எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்?

தள்ளுபடி எவ்வளவு என்பது உங்கள் நிலுவையில் உள்ள கடன் தொகை மற்றும் வட்டி விகிதத்தைப் பொறுத்து அமையும். (பார்க்க, மேலே உள்ள அட்டவணை). குறைவான கடனை குறைவான வட்டியில் வாங்கியவர்களுக்கு இதன்மூலம் சில நூறு ரூபாய்களே (மொத்தமாக ரூ.673) கிடைக்கும் என்றாலும், அதிக வட்டியில் கடன் வாங்கியவர் களுக்கு இது பெரும் நன்மைதான்.

லோன் கணக்கை முடித்தவர்களுக்குக் கிடைக்குமா?

கிடைக்கும். அவர்களது வங்கிக் கணக்கில் இந்தத் தள்ளுபடி கொடுக்கப்படும். பாதி லோன் வாங்கியவர்களுக்கும் இந்தத் தள்ளுபடி கிடைக்கும். இந்தத் தள்ளுபடி கிடைக்க நீங்கள் உங்கள் தரப்பிலிருந்து எதுவுமே செய்ய வேண்டாம். நவம்பர் 5-ம் தேதிக்கு மேல் உங்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து ஒரு ஸ்டேட்மென்டை வாங்கி, தள்ளுபடி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்று பாருங்கள். உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகைக்கு ஈடான தொகையை, அரசாங்கம் அந்த வங்கிக்கு / நிதி நிறுவனத்துக்குத் தரும்.