ரூ.200 கோடி மிரட்டிப் பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். திகார் சிறையில் சுகேஷ் இருந்தபோது அவரை பாலிவுட் நடிகைகள் பலர் நேரில் வந்து சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றுள்ளனர். சுகேஷ், திகார் சிறையில் தனக்கென தனியாக அலுவலகம் ஒன்றை வைத்திருந்தார். சிறைக்கு அவரைப் பார்க்க வருபவர்கள் அந்த அலுவலகத்தில்தான் சுகேஷைச் சந்தித்துப் பேசுவது வழக்கம். தற்போது திகார் சிறையிலிருந்து வேறு சிறைக்கு சுகேஷ் மாற்றப்பட்டிருக்கிறார். சுகேஷ் மீதான வழக்கை அமலாக்கப் பிரிவும், டெல்லி போலீஸாரும் சேர்ந்து விசாரித்துவருகின்றனர்.

சுகேஷிடம் அதிக அளவில் பரிசுப்பொருள்கள் பெற்ற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா மற்றும் சிறிய நடிகைகள் பலரிடம் டெல்லி போலீஸாரும், அமலாக்கப் பிரிவும் விசாரித்து வாக்குமூலம் வாங்கியிருக்கின்றனர். நடிகை சோபியா சிங், நிக்கி தம்போலி ஆகியோரும் சிறையில் சுகேஷைச் சந்தித்து பேசி பரிசும் பணமும் பெற்றுள்ளனர். அவர்கள் இரண்டு பேரையும் டெல்லி போலீஸார் சிறைக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். சிறையில் எப்படிச் சந்திப்பு நடந்தது என்பது குறித்து இரு நடிகைகளும் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

நடிகைகள் இருவரும் எப்படிச் சுகேஷை சந்தித்து பேசினர் என்ற விவரத்தை நடித்துக் காட்டியபோது அதை போலீஸார் வீடியோ எடுத்துக்கொண்டனர். இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், ``சிறையில் பல நடிகைகள் சுகேஷைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அதில் எங்களது விசாரணைக்கு ஒத்துழைக்கும் நபர்களை மட்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரித்துவருகிறோம். நேரடியாக நடிகைகள் வந்து நடித்துக்காட்டும்போது குற்றத்தின் தன்மையை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. சுகேஷ் சிறைக்குள் தனியாக ஏற்பாடு செய்திருந்த அறையில் சோபா, டி.வி போன்ற அலுவலகத்துக்குத் தேவையான அனைத்தும் இடம்பெற்றிருந்தன. சிறை அதிகாரிகள் விதிகளை மீறி ஆடம்பர கார்களை சிறைக்குள் அனுமதித்துள்ளனர். சுகேஷைச் சந்திக்க வருபவர்களிடம் எந்தவிதச் சோதனையும் நடத்தப்படவில்லை. இதற்காக சுகேஷ் சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
தன்னைச் சந்திக்க வரும் விஐபி-க்களிடம் தன்னை தென்னிந்திய தொழிலதிபர் என்றும், திரைப்படத் தயாரிப்பாளர், டி.வி சேனல் உரிமையாளர் என்றும் சொல்லி அறிமுகம் செய்துகொள்வார் சுகேஷ் என்று டெல்லி சிறப்பு கமிஷனர் ரவீந்திர யாதவ் தெரிவித்தார்.