
திருமணத்தில் இணையரைத் தேர்வு செய்யும் போது கவனமாக இருக்கிற மாதிரி, பார்ட்னரைத் தேர்வு செய்யும் போதும் இருக்க வவேண்டும்!
தொழில் தொடங்கும்போது மூலதனத்தைவிட மிகவும் முக்கியமானது யாருடன் சேர்ந்து தொழிலில் ஈடுபடப் போகிறீர்கள் என்பது. மணவாழ்க்கையில் நமது இணையரைத் தேர்ந்தெடுக்கும்போது எப்படியெல்லாம் ஜாக்கிரதையாக இருப்போமோ, அதே விதத்தில்தான் நம் தொழிலில் பார்ட்னரையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தொழில் பார்ட்னரை எந்தெந்தக் காரணங்களின் அடிப்படையில் தேர்வு செய்யலாம், இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து மாருதி பவர் கன்ட்ரோல்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் பிசினஸ் ஆலோசகர் ஆனந்தம் செல்வகுமாரிடம் பேசினோம்.

“நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் தொழிலில் பார்ட்னர் என்று ஒருவர் தேவைதானா என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டியது உங்களின் கடமை ஆகும். பார்ட்னர் தேவைப்படும் பட்சத்தில் அவரைத் தொலைநோக்குப் பார்வையுடன் தேர்வு செய்வது முக்கியம். இன்றைய நிலையில், பெரும்பாலானவர்கள் நண்பர்களைத்தான் பார்ட்னராக ஆக்கிக் கொள்கிறார்கள். அது தவறு. தொழில் விஷயத்தில் நண்பன் என்பதற்காக மட்டுமே ஒருவரை பார்ட்னராக சேர்த்துக்கொள்ளக் கூடாது. அந்த நண்பரிடம் உண்மையிலேயே தொழில் செய்வதற்கான திறன் இருந்தால் மட்டுமே அவரை பார்ட்னராக ஆக்கிக் கொள்ளலாம்.
நீங்கள் தேர்வு செய்யும் பார்ட்னர் எப்படிப் பட்டவர், அவரது கடந்த காலம் என்ன, தொழில் வளர்ச்சி பெற எந்த அளவுக்கு உங்களுடன் இணக்கமாக இருப்பார் என்பதை அவசியம் பார்க்க வேண்டும்.
பார்ட்னரைத் தேர்வு செய்யும்போதே தொழிலை நடத்தும்போது உங்களுக்கும் உங்கள் பார்ட்னருக்குமான வேலைகளைப் பிரித்துக் கொள்வது பற்றி தெளிவான வரைமுறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். அவர் சில வேலைகளைச் செய்வார்; நீங்கள் சில வேலைகளை செய்வீர்கள் என்று பொத்தாம்பொதுவாக வரையறுத்துக் கொள்வதால் பிரச்னைதான் ஏற்படும்.
பார்ட்னர்ஷிப் தொழிலில் சிக்கலான நிலைமை உருவாகும்போது அதற்கான சரியான தீர்வை யார் சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் பார்ட்னராக இருக்கும் அனைவருக்குமே வேண்டும். அந்த சமயத்தில் நீயா, நானா என்று ‘ஈகோ’ பார்த்தால், அந்த பார்ட்னர்ஷிப் நிலைக்காது.
இறுதியாக, பார்ட்னர் சரியில்லை என்று சொல்வதைவிட, நீங்கள் உங்கள் பார்ட்னருக்கு ஏற்றவராக இருந்தீர்களா என்கிற கோணத்திலும் பாருங்கள். அப்போது தவறு உங்களிடம் இருக்கிறதா, இல்லை அவரிடம் இருக்கிறதா என்பது தெரியும்’’ என்றவர், பார்ட்னரைத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்களை எடுத்துச் சொன்னார்.
1. பரஸ்பரம் நம்பிக்கை வைக்க வேண்டும்...
பார்ட்னர்கள் இருவரும் சேர்ந்து வணிகத்தில் ஈடுபடும்போது ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். ஏனெனில், பின்னாளில் கணக்குவழக்கின்போது நம்பிக்கையே முக்கியமான அம்சமாக விளங்கும். இத்துடன் பார்ட்னர்களுக்குள் நல்ல தொடர்பு இருக்க வேண்டியது கட்டாயம். அது தொழில் முறையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நீடிக்க வேண்டும். இருவரும் மனம்விட்டு பேசா விட்டால் தொழிலில் நீங்கள் நினைத்த இலக்கை எளிதாக அடைய முடியாது.

2. ஒரே மாதிரியான புரிந்துகொள்ளல்...
நீண்ட காலத் தொழிலுக்கு அவசியமான ஒன்று, வாடிக்கையாளர் பற்றிய ஒரே மாதிரி யான புரிந்துகொள்ளல். அந்த நம்பிக்கைக்குத் தகுந்தார்போல தொழில் செய்தால்தான் பிசினஸில் ஜெயிக்க முடியும். மேலும், நல்ல தொழில்முனைவோர் தனது தொழிலின் மீது நன்மதிப்புகளைக் கொண்டவராக இருக்க வேண்டும். இருவரும் தொழிலில் நீண்ட காலம் பயணிப்பதற்குத் தொழிலை பற்றிய மதிப்பீடுகள் சரியாக இருக்க வேண்டும்.
3. வெவ்வேறு துறையில் திறமை...
ஒரே துறையைச் சேர்ந்த இருவர் பார்ட்னர் ஆவதைவிட, வெவ்வேறு துறையைச் சேர்ந்த இருவர் ஒரு தொழிலை ஆரம்பிப்பது வெற்றிக்கனியை எளிதில் பறிக்க உதவும். உதாராணமாக, தொழில்நுட்ப அறிவு கொண்ட இருவர் இணைவதைவிட, ஒருவருக்குத் தொழில்நுட்ப அறிவும், மற்றொருவருக்கு மார்க்கெட்டிங் அறிவும் இருந்தால் தொழிலில் சிறப்பாக செயல்படலாம்.
4. பித்தலாட்டம் கூடாது...
ஒரு தொழிலை மேற்கொள்ளும் சமயத்தில் பணப்புழக்கம் அதிகமாகும். அப்போது ஒருவர் இன்னொருவரைவிட அதிக லாபத்தை எடுத்துக் கொள்வது அல்லது லாபப் பங்கீட்டில் பித்தலாட்டம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது. வருகிற லாபத்தில் இருவரும் சரிசமமாக மட்டுமே பிரித்துக் கொள்ள வேண்டும். லாபப் பங்கீடு எவ்வளவு என்பதை தொழில் தொடங்கும்முன்பே ஒப்பந்தமாக போட்டுக்கொள்வது மிக மிக அவசியம்.
5. நல்ல முறையில் தொழிலை விட்டு வெளியேறுதல்...
இன்றைய தொழில் சூழலில், ஒரு நபர் சிறிது காலம் இணைந்து தொழில் செய்துவிட்டு பின்னர் பிரிந்து செல்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால், பிரிந்து செல்லும் நபர் உங்களுடைய எதிர்காலத் தொழிலுக்கு பாதகம் விளைவிக்காத வகையில் நடந்துகொள்ள வேண்டும். பிரியும்போது இருவரும் சேர்ந்து முடிவெடுத்துதான் பிரிய வேண்டும். மனம் விட்டுப் பேசுவதன்மூலம் அந்தப் பிரிவைத் தடுக்க முடியும் எனில், அதைச் செய்வதே நல்லது.
பார்ட்னரைத் தேர்வு செய்யும்போது இந்த விஷயங்களை மனதில் கொண்டு செயல் பட்டால், என்றும் பிரிவு என்பது இருக்காது!