விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "மருத்துவத் தேவை, இறப்பு உள்ளிட்ட காரணங்களால் வெளியூருக்குச் செல்வதற்கான நடைமுறை என்ன?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் விகடன் வாசகர் சந்திரமோகன். அதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை இது.

கொரோனா என்கிற ஒற்றைச்சொல் ஒட்டுமொத்த உலகத்தாலும் கடந்த சில மாதங்களாக உச்சரிக்கப்படுகிறது. உலகத்தின் அன்றாட செயல்திட்டங்களைப் புரட்டிப் போட்டுள்ளது கொரோனா. கொரோனாவுக்கென சில சட்ட திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நமது தமிழ்நாட்டிலும் 'Lock Down' காலத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு மக்களின் அன்றாடம் பாதித்துவிடாமலிருக்க, பால், மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள் குறிப்பிட்ட நேரம் மட்டும் இயங்குமாறு வகைசெய்துள்ளது. சில மாவட்டங்களில் நேர அளவுகளில் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்திருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் அவசர தேவைக்காகப் பயணம் மேற்கொள்ள யாருக்கெல்லாம் அனுமதி உண்டு. அதற்கு அரசு தரப்பில் எப்படி அனுமதி வாங்குவது என்பது குறித்துப் பார்ப்போம்.

அத்தியாவசிய பொருள்கள் வாங்க அரசு அனுமதித்துள்ள நேரத்தில் (காலை 6 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை) சென்று வாங்கலாம். அப்போது சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். பால் போன்ற பொருள்களைத் தினமும் வாங்க வேண்டிய சூழல் இருக்கலாம். ஆனால், மளிகைப் பொருள்களை சற்று அதிகமாக வாங்கி வைத்துக்கொண்டு அடிக்கடி வெளியே வராமல் இருக்குமாறு அறிவுறுத்துகின்றது அரசு.

ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்தில் அனைவரும் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். பலரும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். அரசின் அறிவுறுத்தலின்படி அத்தியாவசிய சேவைகள் வழங்குபவர்கள் மட்டுமே வெளியில் வர முடியும்.
தடையை மீறி வெளியில் நடமாடினால், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 270 (நோய் பரவும் என்று தெரிந்தே செயல்படுதல்) மற்றும் பேரழிவு மேலாண்மை சட்டப்பிரிவுகள் 50 மற்றும் 60-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மருத்துவமனை செல்ல வேண்டிய கட்டாயம் அல்லது எமர்ஜென்ஸி என்றால் அரசிடம் அனுமதி பெற்று இ-பாஸ் (Travelling pass) பெற வேண்டும். இந்த அவசர பயணத்துக்கான 'இ-பாஸ்' பெற்றால் மட்டுமே நம்மால் வெளியே செல்ல இயலும்.
'இ-பாஸ்' எப்படிப் பெறுவது ?
பயண பாஸ் தற்போது சென்னையில் மாநகராட்சி கமிஷனர் மூலமாக மட்டுமே வழங்கப்படுகிறது. பிற மாவட்டங்களில் இருப்போர் அந்த அந்த மாவட்டத்தின் ஆட்சியர் மூலமாகவும் இதைப் பெற்றுக் கொள்ளலாம்.

யாரெல்லாம் இ-பாஸ் வாங்கலாம்?
பயண பாஸ் என்பது அவசர மருத்துவ தேவை, பிரசவம், உறவினர்களின் இறப்பு மற்றும் அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது .
இ-பாஸ் கோரி எப்படி விண்ணப்பிப்பது?
பாஸ் கோரி இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டங்களின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இதற்கான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இ-பாஸ்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பயண பாஸை பெற முடியும். ஆன்லைன் மூலம் அவசரத் தேவைகளுக்கு நீங்கள் வெளியே செல்ல Vehicle e- pass பெறலாம்.
அதற்கான லிங்க் இதோ... ehttps://serviceonline.gov.in/tamilnadu/directApply.do?serviceId=721
அவசரத் தேவைகளுக்கு நீங்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால், மேலே உள்ள லிங்க் மூலமாக இணையத்தில் உள்ளே சென்று, கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான காரணங்களைப் பதிவு செய்து வாகன அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.
உங்களது பயணத்திற்கான நோக்கமும் கேட்கப்படும் ஆவணங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் இணையம் மூலம் உடனடியாக உங்களால் பயண பாஸை பெற முடியும்.
ஊரில் வசிக்கும் பெற்றோர்களைச் சந்திக்கச் செல்ல வேண்டுமென்றால் 'இ-பாஸ்' கிடைக்குமா?
இந்த ஊரடங்கின் நோக்கமே தனித்திருக்க வேண்டும் என்பதால் வேறு மாவட்டத்தில் உள்ள பெற்றோரைப் பார்ப்பதற்குச் செல்ல முடியாது. அதற்கான பாஸ்களும் வழங்கப்படுவதில்லை.
தனியார் மருத்துவர், க்ளினிக் வைத்திருப்பவர்கள் தங்கள் பணிக்குச் செல்ல 'இ-பாஸ்' வேண்டுமா?
மருத்துவத்துறை சேர்ந்தவர்கள் உயிர் காக்கும் சேவையில் இருப்பதால் எப்போதும் போலத் தடையின்றி தங்களது மருத்துவ பணிகளைத் தொடரலாம். இதற்கு மருத்துவருக்கான அடையாள அட்டை இருந்தால் போதும்.

ஊரடங்கு அறவிக்கப்பட்ட நிலையில் உடல்நலம் சார்ந்த பிரச்னைக்கு மருத்துவரைச் சந்திக்க 'இ-பாஸ்' வேண்டுமா?
சொந்த மாவட்டத்திலுள்ள மருத்துவரைச் சந்திக்கலாம். பிற மாவட்டத்தில் உள்ள மருத்துவரைப் பார்க்க நிச்சயம் இ-பாஸ் தேவைப்படும். ஒருவேளை மருத்துவர் உங்களது மாவட்டத்திலேயே இருந்தால் பாஸ் தேவையில்லை.
வேறு மாவட்டத்தில் உள்ள குடும்ப உறுப்பினர் இறக்க நேரிட்டால், செல்ல முடியுமா. அதற்காக எப்படி விண்ணப்பிப்பது?
குடும்ப உறுப்பினர்களின் இழப்பிற்கு 'இ-பாஸ்' வாங்கிச் செல்ல முடியும். இதற்கு உங்கள் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் 'இ-பாஸ்' வேண்டி விண்ணப்பிக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருள்களை வினியோகம் செய்பவர்கள் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்குப் பொருள்கள் எடுத்து வரச் செல்லலாமா?
அத்தியாவசிய பொருள்களின் விநியோகத்திற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. இதனால் அத்தியாவசிய பொருள்களை எடுத்த வர மற்றொரு மாவட்டத்திற்குச் செல்ல உங்களது மாவட்ட ஆட்சியரிடமிருந்து அனுமதி பெற வேண்டியது கட்டாயம்
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!
