தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

மின் கட்டணத்தைக் குறைக்க இதோ ஒரு வழி!

மின் கட்டணம்
பிரீமியம் ஸ்டோரி
News
மின் கட்டணம்

அறிவோம்

`மின்சாரத்தை சேமிக்க உதவும் சாதனங்கள்' (Power Saver Device) என்ற பெயரில் பல விளம்பரங்களைப் பார்த்திருப்போம். `உங்கள் வீட்டின் மின்கட்டணத்தை வெகுவாக இவை குறைக்கும்' என்ற வரியுடன் அவை விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும். உண்மையிலேயே அந்த உபகரணம் மின்கட்டணத்தைக் குறைக்குமா?

பவர் சேவர் டிவைஸ் என்றால் என்ன?

நம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின் உபகரணங்களை இரண்டாகப் பிரிக்க இயலும். மின்தடைப் பொருள்கள் (Resistive elements) மற்றும் மின்தூண்டிப் பொருள்கள் (Inductive elements). மின்விளக்குகள், நீர் சூடேற்றிகள் ஆகியவை மின்தடைப் பொருள்கள். இவை பயன்படுத்தும் மின்சாரத்தை பவர் சேவர் டிவைஸ் உதவியுடன் குறைக்க இயலாது. மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம், மோட்டார் பம்புகள் ஆகியவை மின்தூண்டிப் பொருள்கள். இவை, மின்சாரத்தின் உதவியால் காந்தப்புலத்தை உருவாக்கி, அதன் வழியாகச் செயல்படக்கூடியவை. இந்தப் பொருள்கள் பயன்படுத்தும் மின்சாரத்தை நம்மால் பவர் சேவர் டிவைஸ் உதவியுடன் குறைக்க இயலும்.

பவர் சேவர் டிவைஸ் என்பது மின்தேக்கிகள். இவை, மின்தூண்டிப் பொருள்களில் மட்டும் குறைவான ஆற்றலைப் பெற்றுக்கொண்டு, அதைவிட அதிகமான ஆற்றலைப் பயன்படுத்தச் செய்யும் உபகரணங்கள். மின்தூண்டிப் பொருள்கள் காந்தப்புலத்தை உருவாக்குவதற்குப் பயன்படுத்தும் ஆற்றலை நம்மால் பவர் சேவர் டிவைஸ் உதவியுடன் சேமிக்க இயலும். அதோடு, அதிக மின் அழுத்தப் பாதிப்பிலிருந்து மின் உபகரணங்களைப் பாதுகாக்கவும் இயலும்.

மின் கட்டணத்தைக் குறைக்க
இதோ ஒரு வழி!

பவர் சேவர் டிவைஸ் எந்தெந்த வீடுகளுக்குப் பொருத்தமானவை?

அதிகமான மின்தூண்டிப் பொருள்கள் - அதாவது மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டி, மோட்டார் பம்புகள், கிரைண்டர், மிக்ஸி இருக்கக்கூடிய வீடுகளில், பவர் சேவர் டிவைஸ் நிச்சயமாக மின்சார கட்டணத்தைக் குறைக்க உதவும்.

மின் இணைப்புகள் ஒழுங்காகக் கொடுக்கப்படாத வீடுகளில், வெப்பத்தின் காரணமாக மின்சாரம் அதிகமாக வீணாகக்கூடும். அம்மாதிரியான வீடுகளில், பவர் சேவர் டிவைஸ் வெப்ப இழப்பை ஈடுகட்ட உதவும்.

அலுவலகங்களில் பவர் சேவர் டிவைஸை உபயோகிக்கலாமா?

வீடுகளுக்குச் சொன்ன அதே விதிதான் அலுவலகங்களுக்கும் பொருந்தும். மின்தூண்டிப் பொருள்கள் அதிகமாக இருக்கக்கூடிய அலுவலகங்களில் தாராளமாக பவர் சேவர் டிவைஸைப் பயன்படுத்தலாம்.

எவ்வாறு தேர்வு செய்வது?

குறைவான மின்சாதனங்கள் குறிப்பாக மின்தூண்டிப் பொருள்கள் இருக்கக்கூடிய வீடுகளுக்கு பவர் சேவர் டிவைஸ் பெரும்பாலும் தேவைப்படாது. அதுபோன்ற வீடுகளைச் சேர்ந்தவர்கள் பவர் சேவர் டிவைஸை வாங்க நினைத்தால்,

`30 நாள்களுக்குள் திருப்பி வாங்கிக்கொள்ளும் வசதி' இருக்கக்கூடிய திட்டத்தில் வாங்கலாம். சந்தையில் இதுபோன்ற திட்டங்கள் நிறையவே இருப்பதால் அப்படி வாங்கி பரீட்சித்துப் பார்ப்பதே நல்லது.

மின் வல்லுநர் (Electrician) ஒருவரை வீட்டுக்கு அழைத்து, பவர் சேவர் டிவைஸ் வேலை செய்யத் தொடங்குவதற்கு முன்னும் பின்னும் எவ்வளவு மின்சாரம் உபயோகப்படுத்தப்படுகிறது என்பதை வாட் மீட்டர் உதவியுடன் கண்காணிக்க வேண்டும். மிகவும் அதிகமான அளவு மின்சாரத்தை அது சேமிக்க உதவுகிறது என்றால் நீங்கள் தாராளமாக பவர் சேவர் டிவைசஸை உங்கள் வீடுகளில் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

எவ்வளவு விலையில் பவர் சேவர் டிவைஸ் வாங்கலாம்?

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இணையச் சந்தைகளிலும் பவர் சேவர் டிவைஸ் கிடைக்கின்றன. அவை 600 முதல் 1,500 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கின்றன. ஏற்கெனவே அந்த உபகரணத்தை வாங்கிய வாடிக்கையாளரின் கருத்தையும் அறிந்து, பல நிறுவனங்களின் பொருள்களோடு ஒப்பிட்டு அதன்பின்னர் உங்கள் வீட்டுக்கு ஏற்ற பவர் சேவர் டிவைஸை நீங்கள் வாங்கலாம். Wellberg, MD Proelectra ஆகிய மாடல்கள் இணையத்தில் பிரபலமாகக் கிடைக்கின்றன. பவர் சேவர் டிவைஸை இணைப்பது, அகற்றுவது உள்ளிட்ட செயல்களை மின்வல்லுநர் துணையுடன் செய்வதே சிறந்தது.