நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஆட்குறைப்பு பதற்றம்... வேலை இழப்பைத் தவிர்க்கும் வழிகள்!

ஆலோசனை
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலோசனை

ஆலோசனை

பார்லேஜி பிஸ்கட் நிறுவனம் பொருளாதார மந்தநிலையைக் காரணம் காட்டி தங்கள் நிறுவனத்திலிருந்து பத்தாயிரம் ஊழியர்களை வெளியேற்றத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. பிற்பாடு இந்தத் தகவலை அந்த நிறுவனமே மறுத்து விட்டாலும் அங்கும் இங்கும் சில நிறுவனங்கள் ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்பும் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. பொருளாதார சுணக்கம்தான் இந்த வேலை இழப்புக்குக் காரணம் என்கிறார்கள். தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இந்த வேலையிழப்புக்குக் காரணம் என்று வேறு சிலர் சொல்கிறார்கள்.

காரணம் என்னவாக இருந்தாலும் வேலையிழப்பு என்கிற சிக்கலில் சிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும், வேலை குறித்த நம் அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொண்டால், நாம் எந்தப் பிரச்னையும் இல்லாமல், நம்முடைய2 பணி வாழ்க்கையில் நாம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து யுனோனா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் மனிதவள நிபுணருமான ஜாஃபர் அலியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச்சொன்னார் அவர்.

ஆட்குறைப்பு பதற்றம்... வேலை இழப்பைத் தவிர்க்கும் வழிகள்!

தேவையில்லாத பயம் வேண்டாம்

‘‘இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலையால் சில நிறுவனங்கள் வேறு வழியில்லாமல் சில ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கும் நடவடிக்கையை எடுக்கின்றன. இப்படி வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் நிறுவனத்துக்குச் செய்யும் பங்களிப்பு மிகக் குறைவாக இருக்கும். நிறுவனத்துக்கு வருமானத்தைக் கொண்டுவருகிறவர்களை எந்த நிறுவனமும் எப்போதும் வேலையை விட்டு அனுப்பாது. நிறுவனத்துக்கு நீங்கள் ஒரு முக்கியமான நபராக இருக்கும் நிலையில், நம்மையும் வேலையிலிருந்து அனுப்பிவிடுவார்கள் என்கிற தேவையில்லாத பயம் உங்களுக்கு வேண்டாம். பொருளாதார மந்தநிலை என்பது தற்காலிகமான விஷயம்தான். பொருளாதார வளர்ச்சி மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கி விட்டால், வேலைநீக்கம் என்கிற பேச்சை எங்கும் கேட்க முடியாது.

வாய்ப்புகளை உருவாக்குங்கள்

ஆனாலும் ஒரு வேலையில் நீங்கள் தொடர்ந்து இருப்பதற்கான திறமைகளை நீங்கள் அவசியம் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வேலையில் சிபாரிசின் பெயரில் நீங்கள் சேர்ந்திருந்தால், அந்த சிபாரிசு உங்களின் பணிக்கான ஒரு தொடக்கமாக மட்டுமே இருக்கும். உங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான திறமையைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டால் மட்டுமே எல்லாக் காலத்திலும் நீங்கள் வேலையில் நீடித்திருக்க முடியும் என்பதை மறக்காதீர்கள்.

ஆட்குறைப்பு பதற்றம்... வேலை இழப்பைத் தவிர்க்கும் வழிகள்!

நிறுவனம் உங்களுக்குக் கொடுக்கும் வேலையைத் தட்டிக் கழிக்காமல் செய்யும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். சில நேரங்களில் நிறுவனத்தின் தேவைக்கேற்ப நீங்கள் வேறொரு துறைக்குக்கூட மாற்றப்படலாம். அப்படியொரு சூழல் வரும் பட்சத்தில் ‘நான் இந்த வேலைக்காக வரவில்லை’ என்று சொல்லாமல், ‘எந்தத் துறையில் வேண்டுமானாலும் எனக்கு வேலை கொடுங்கள். அந்த வேலையில் என் திறமையை எந்த அளவுக்குக் காட்ட முடியுமோ, நான் காட்டுகிறேன்’ என்று துணிச்சலாக அந்த வேலையை ஏற்றுச்செய்யுங்கள். அனுபவமே இல்லாத துறையாக இருந்தாலும்கூட, உங்கள் சீனியர்களிடம் கேட்டு உங்களை அப்டேட் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் இடத்தை நிறுவனத்தில் வேறு யாராலும் பூர்த்தி செய்ய இயலாது என்கிற எண்ணத்தை உங்கள் உயரதிகாரிகள் மனதில் பதியவைத்துவிட்டால் எந்தக் காலத்திலும் உங்களை வீட்டுக்கு அனுப்ப எந்த நிறுவனமும் நினைக்காது.

நீங்கள் செய்துவந்த வேலைகளுடன் கூடுதலாக வேறு சில பொறுப்புகளை நிறுவனம் உங்களுக்குக் கொடுத்தால், அதைச் சுமையாக நினைக்காமல், நல்லதொரு வாய்ப்பாக நினைத்து, மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் திறமைக்கேற்ற வாய்ப்புகள் நிறுவனத்தில் கிடைக்காதபட்சத்தில், அடுத்தவர்களின்மீது வீணாகக் குறைகூறி நேரத்தை வீணடிக்காமல், உங்கள் பணியில் முழுத்திறனையும் வெளிப்படுத்தி வாய்ப்புகளை நீங்களே உருவாக்குங்கள். பணிசார்ந்த உங்களின் ஆர்வமும் செயல்பாடுகளும் மட்டுமே உங்களை எப்போதும் பணியில் தக்கவைக்கும் ஆயுதமாக இருக்கும்.

அனுபவத்தையும் திறமையும் வளர்த்துக்கொள்ளுங்கள்

நீங்கள் வேலைக்குச் சேர்ந்த உங்களுடைய முதல் நிறுவனத்தில் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது இருந்து அனுபவங்களைச் சேகரித்துக்கொள்ளுங்கள். இதன்மூலம் உங்கள் துறை குறித்த அனுபவ அறிவை உங்களால் பெற முடியும். அந்த அனுபவத்தின் மூலம் அடுத்தடுத்த வளர்ச்சியை எட்ட முடியும்.

ஆட்குறைப்பு பதற்றம்... வேலை இழப்பைத் தவிர்க்கும் வழிகள்!

ஒரு நிறுவனம் ஊழியர்களுக்காக வருடத்திற்கு எவ்வளவு செலவு செய்கிறது, வருமானம் எவ்வளவு வருகிறது என்பதை ஒவ்வொரு நிறுவனமும் ஆராயும். அதிக திறமை இருந்து நிறுவனத்துக்கு அதிகமான வருமானத்தைச் சம்பாதித்துத் தருபவர்களுக்கு எப்போதும் பிரச்னை இல்லை. ஆனால், தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள எந்த முயற்சியும் செய்யாமல், நிறுவனத்தின் வருமானத்துக்கு எந்த உருப்படியான பங்களிப்பும் செய்யாதவர்கள் ஆள்குறைப்புப் பட்டியலில் இடம்பெறவேண்டியிருக்கும். இதனைத் தவிர்க்க, சூழலுக்கேற்பவும் தொழில்நுட்பத்திற்கேற்பவும் உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ளுங்கள்.

அப்டேட் அவசியம்

நிறுவனங்களில் சில நபர்கள் அதிக ஊதியம் வாங்குவார்கள். ஆனால், அவர்கள் பெறும் ஊதியத்திற்குத் தேவையான அளவு தங்கள் திறமைகளை அப்டேட் செய்துகொள்ளாமல் இருப்பார்கள். அவர்களை வேலையைவிட்டு அனுப்பிவிட்டால், அதைவிடக் குறைவான ஊதியம் வாங்கும் நபர்களைப் பணியில் அமர்த்தி செலவை மிச்சப்படுத்தலாம் என சில நேரத்தில் நிறுவனங்கள் நினைக்கலாம். இதுமாதிரியான ஒரு எண்ணம் நம்மீது நிறுவனத்துக்கு வந்துவிடவே கூடாது. இந்தச் சிக்கலில் சிக்காமல் இருக்கவேண்டு மெனில், உங்கள் வேலை தொடர் பான விஷயங்களில் நீங்கள் எப்போதும் அப்டேட்டாக இருக்க வேண்டும்.

ஆட்குறைப்பு பதற்றம்... வேலை இழப்பைத் தவிர்க்கும் வழிகள்!

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை உங்களுக்கான வேலையாக மாற்றிக் கொள்ள வேண்டும். உங்கள் இடத்தை நிறுவனத்தில் வேறு யாராலும் பூர்த்தி செய்ய இயலாது என்கிற எண்ணத்தை உங்கள் உயரதிகாரிகள் மனதில் பதியவைத்துவிட்டால் எந்தக் காலத்திலும் உங்களை வீட்டுக்கு அனுப்ப எந்த நிறுவனமும் நினைக்காது.

தலைமையுடன் நல்லுறவு வேண்டும்

நீங்கள் அன்றாடம் செய்யும் வேலையை உங்கள் தலைமைக்கு அவ்வப்போது தெரியப் படுத்திக்கொண்டே இருங்கள். உங்களுடைய பணியில் புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முயன்று, அதில் வெற்றிபெற்றிருக்கிறீர்கள் எனில், அதை அவசியம் உங்கள் உயரதிகாரிக்குத் தெரியப்படுத்துங்கள். அதேசமயம், உங்களுக்கு இருக்கும் நியாயமான பிரச்னைகளையும் நாசூக்காக எடுத்துச் சொல்லுங்கள். கூடுமானவரை உங்களின் தலைமையிடம் சுமுகமான உறவை வளர்த்துக்கொள்வது ஆரோக்கியமானது. உயரதி காரிகளுடன் நெருங்கிய உறவினை வைத்திருந்தால், தேவையில்லாத பல வேலைகள் வந்துசேரும் என்று பலரும் நினைக்கிறார்கள். இதனால் உயரதிகாரிகளிடமிருந்து சற்று தள்ளியே இருக்க நினைக்கிறார்கள். இது தவறான எண்ணம். அலுவலகம் தொடர்பாக உயரதிகாரிகள் சொல்லும் வேலையைச் சரியாகச் செய்துதருவதன்மூலம் உங்கள் பன்முகத்திறமையை எளிதாக வெளிக்காட்ட முடியும்.

கவனம் கைகொடுக்கும்

நிறுவனம் உங்களுக்குக் கொடுக்கும் பணியைச் சிறு தவறுகூட ஏற்படாமல், மற்றவர்கள் உங்களைப் பாராட்டும் அளவிற்கு, குறிப்பிட்ட நேரத்திற்குமுன்பே செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள். ஏதேனும் தவறுகள் ஏற்பட்டு இருந்தாலும்கூட உங்களின் தவற்றுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள், இந்த நேர்மை உங்களுக்கான தொடர் வாய்ப்பையும், பணியையும் உருவாக்கி நிறுவனத்தில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுத்தரும். இவை தவிர்த்து, சரியான நேரத்திற்கு வேலைக்கு வருதல், விடுமுறைகளை முறையாகத் தெரியப்படுத்துதல், உங்களின் பணியில் கவனமாக இருத்தல், நேர்த்தியான உடை, நிறுவனத்தின் கட்டுப்பாடு களை மதித்தல் போன்றவையும் இருக்கும் பட்சத்தில் நிறுவனத்தில் தவிர்க்க முடியாத பணியாளராக நீங்கள் நிச்சயம் இருப்பீர்கள்.”

நிறுவனத்தின் தேவையறிந்து செயல்படுங்கள்!

“உங்களுடைய நிறுவனத்தில் இருக்கும் பல துறைப்பட்ட வேலைகளையும் சிரமம் பார்க்காமல் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அவ்வப்போது கற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய நிறுவனத்தில் ஒரு துறை சார்ந்த பிரிவில் ஆள்குறைப்பு நடக்கும்பட்சத்தில் பல்துறை சார்ந்த அறிவும் திறமையும் இருந்தால், உங்களுடைய நிறுவனத்திலேயே வேறு துறையில் வேலைசெய்யும் வாய்ப்பை நிறுவனமே உங்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும். இதற்கு உங்கள் பணிசார்ந்த நிபுணர்களுடனும் நண்பர்களுடனுமான உங்களுடைய தொடர்பை வளப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் தொடர்புக்காகவும் அதன்மூலம் கிடைக்கும் வாய்ப்புக்காகவும் நிறுவனம் தொடர்ந்து உங்களைப் பணியில் வைத்திருக்கும். அதனால் நிறுவனத்திற்கான உங்களின் தேவையை உணர்த்தும் வகையில் செயல்படுங்கள்.”