
தனி விமானத்தில் செல்பவர்கள் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருக்க வேண்டும்? பார்க்கலாமா?
தனி விமானத்தில் கொச்சி பறந்த நயன்-விக்கி’, ‘பிரைவேட் ஜெட்டில் சென்னை வந்திறங்கிய குஜராத் பிசினஸ்மேன்’. ‘தனி விமானத்தில் சுற்றுலா போன ஸ்டாலின் குடும்பம்’ - சமீபகாலத்தில் இப்படிப் பல செய்திகள் பார்க்கிறோம். கொரோனா காலத்தில் விமான சேவைகளில் தேக்கமும், பொது விமானப் பயணங்களில் பாதுகாப்பின்மையும் நிலவும் வேளையில் இந்தத் தனி விமானம் பற்றிய செய்திகள் சற்று அதிகமாகவே தென்படுகின்றன.
ஒரு இந்தித் திரைப்படத்தில் வரும் வசனம் அது. நாயகனைப் பார்த்து நாயகி கேட்பார், “எவ்வளவு பணக்காரன் நீ? பிசினஸ் கிளாஸ் பணமா, பிரைவேட் ஜெட் பணமா?” என்று. விமானத்தில் எகானமி கிளாஸ் தாண்டி, பிசினஸ் கிளாஸில் பயணம் செல்வது மிகவும் வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது. அப்படியெனில், தனி விமானத்தில் செல்பவர்கள் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருக்க வேண்டும்? பார்க்கலாமா?


அனைத்து மக்களும் பயன்படுத்தும் பொது விமான சேவைகள் பப்ளிக் டிரான்ஸ்போர்ட் போன்றது. அவரவர் வசதிக்கேற்ப சொகுசான பயணங்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் நட்சத்திரங்களும், பெருந்தொழிலதிபர்களும் பயன்படுத்தும் தனி விமான சேவை என்பது கார் போன்றது. ஓலா, உபேர் என வாடகைக்கு எடுத்தும் பயன்படுத்தலாம்; அல்லது சொந்தமாக வாங்கியும் பயன்படுத்தலாம்.
இந்தியாவில் அப்படித் தனி விமானங்களை வாடகைக்குத் தரும் பல நிறுவனங்கள் இருக்கின்றன. கார் புக் செய்வதுபோல, அதற்கென பிரத்யேகமாக இருக்கும் இணையதளங்களுக்குச் சென்று, எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும், எப்போது செல்ல வேண்டும், எத்தனை பேர் என எல்லா விவரங்களையும் பதிவேற்றினால், விலைப்பட்டியல்கள் வரும். நீங்கள் விரும்பிய விமானத்தை இன்ஸ்டன்ட் புக்கிங் செய்ய முடியும்.


பொதுவாக 4 முதல் 18 பேர் வரை அமர்ந்து செல்லக் கூடிய அளவுகளில் இருக்கும் பிரைவேட் ஜெட்கள் தனிநபர்களால் அல்லது நிறுவனங்களால் வாடகைக்கு எடுக்கப்படுகின்றன. லைட் ஜெட்ஸ் , மிட்-சைஸ் ஜெட்ஸ், ஹெவி ஜெட்ஸ் மற்றும் 180 பேர் வரை செல்லக்கூடிய ஏர்லைனர்ஸ் எனப் பல ரக விமானங்களைத் தேவைக்கேற்ப ஒருவரால் தேர்ந்தெடுக்க முடியும். உதாரணத்திற்கு 5 பேர் சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்கு மட்டும் ஒரு சிறு விமானத்தை வாடகைக்கு எடுக்க முடியும். இதன்வழி உள்நாட்டில் வேறு மாநிலத்திற்கோ, அல்லது வேறு நாட்டிற்கோ பயணிக்க முடியும். இந்த நிறுவனங்கள் தங்கள் விமான சேவைகளுக்குத் தேவையான அனைத்து உரிமங்களையும் பெற்றிருக்கும். நீங்கள் வழக்கம் போல பாஸ்போர்ட், விசா ஆகியவை கொண்டு வெளிநாட்டிற்குப் பயணிக்கலாம். ஒரே வித்தியாசம், நீங்கள் விமானத்தில் ஒரு டிக்கெட் எடுப்பதற்குப் பதிலாக, அந்த விமானத்தையே வாடகைக்கு எடுத்திருப்பீர்கள், அவ்வளவே. இந்தியாவின் எல்லா முக்கிய விமான நிலையங்களிலிருந்தும் இந்தத் தனி விமான சேவைகள் பல்வேறு நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. மும்பை, பெங்களூரு போன்ற சில நகரங்களில் மட்டும், தனி விமானங்களுக்கு, தனியாகச் சிறு விமான நிலையங்கள் செயல்படுகின்றன.
எல்லாம் சரி, கட்டணம் எவ்வளவு என்கிறீர்களா? பொதுவாக மும்பையிலிருந்து டெல்லி செல்ல பிசினஸ் கிளாஸ் டிக்கெட் கட்டணம் ஒரு லட்ச ரூபாய். அதே நீங்கள் தனிவிமானத்தில் செல்வதற்கு சுமார் பத்து லட்சம் வரை செலவாகும். இது இருப்பதிலேயே வசதி குறைவான சிறிய விமானத்தில் செல்வதற்காகும் செலவு. தேவை, எரிபொருள் விலை இவற்றையெல்லாம் பொறுத்து இந்தக் கட்டணம் மாறும்.

தற்போதைய நிலவரப்படி சென்னையிலிருந்து டெல்லி பயணிக்க ஒருவர் தனி விமானம் புக் செய்தால் அதன் குறைந்தபட்சக் கட்டணம் 23,88,617.08 ரூபாய். அதிகபட்சக் கட்டணம் 1,12,68,511.43 ரூபாய். இதுவும் ஒரு முன்னணி நிறுவனத்தின் விலைப் பட்டியல் மட்டுமே, வேறு நிறுவனத்தில் மாறுபடக்கூடும்.
சொந்தமாகத் தனி விமானம் வாங்குவதிலும் இதேபோலத்தான். பிராண்ட் பெயர், மாடல், வசதிகள் எனப் பல்வேறு ரகங்களில் விமானங்களைச் சொந்தமாக வாங்கலாம். விமானம் வாங்குவதில் உதவ, தயாரிப்பு நிறுவனத்திற்கும் உங்களுக்கும் இடையே இடைத்தரகர்கள் உண்டு. ஒருவர் ஆண்டுக்குச் சராசரியாக 350லிருந்து 400 மணிநேரமாவது விண்ணில் பறப்பவர் எனில் மட்டுமே அவர்களுக்குத் தனியாக விமானம் வைத்திருப்பது பயனளிக்கும். இந்திய மதிப்பில் ஒரு விமானம் வாங்கக் குறைந்தபட்சம் 14 கோடி ரூபாயிலிருந்து அதிகபட்சம் 628 கோடி ரூபாய் வரை தற்போதைய சந்தை நிலவரப்படி செலவழிக்க வேண்டியிருக்கும்.

பிரைவசி, பேக்கேஜ் லிமிட் இல்லாதது, உங்களுக்கு ஏற்ற நேரம், உங்களுக்கு ஏற்ற தேதி, செல்ல வேண்டிய இடம், உங்களுக்குப் பிடித்த உணவு, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு எனத் தனி விமானங்களில் பயணிப்பதில் நிறைய வசதிகள் இருக்கின்றன. சொந்த விமானம் என்றால் உங்கள் வீட்டில் பணிக்கு ஆள் அமர்த்துவதுபோல தேவையானவற்றை நீங்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் அமைத்துக் கொள்ளலாம். வாடகைக்குத் தனிவிமானம் எடுப்பவர்களுக்கு, அந்த சேவை நிறுவனங்களும் எல்லா விதமான வசதிகளையும் செய்து கொடுக்கின்றன. உதாரணத்திற்கு, வழக்கமாக தங்கள் விமானத்தில் பயணிக்கும் பயணியின் ரீடிங் கிளாஸ், அதாவது படிக்கும் கண்ணாடிக்கு மாற்றுக் கண்ணாடி தயாராக வைத்திருப்பது வரை பார்த்துப் பார்த்துச் செய்கிறார்கள். பயனாளர்களின் தகவல்களை ரகசியமாகப் பாதுகாப்பதையும் முக்கியக் கடமையாகச் செய்கிறார்கள்.
பொது விமான சேவைகளுக்கு அரசு விதிக்கும் எல்லாப் பாதுகாப்பு விதிமுறைகளும் தனி விமான சேவைகளுக்கும் பொருந்தும். ஒரு நாட்டிற்கு விமான சேவையை அரசு தடை செய்திருந்தால், அங்கு தனி விமானத்தில்கூடப் பயணம் செய்ய முடியாது. சமீபத்தில் பிரிட்டிஷ் அரசு இந்தியப் பயணிகளுக்குத் தடை விதித்து அறிவித்தது. அந்தத் தடை செயல்பாட்டிற்கு வரக் குறுகிய கால அவகாசம் இருந்த நிலையில், பல இந்தியச் செல்வந்தர்கள் பொது விமான சேவைக்காகக் காத்திராமல், அவசர அவசரமாகத் தனிவிமானங்கள் மூலமாக லண்டன் சென்றடைந்தார்கள் என்பது செய்தி.
நடுத்தர மக்கள் கார், பணக்காரர்களின் கார், அதி பணக்காரர்களின் கார் என இருப்பது போல விமானத்திலும் உண்டு. சவூதி இளவரசர் அல்வாலீட் பின் தலாலின் விமானம் 6,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. விலை, இந்திய மதிப்பில் சுமார் 3,700 கோடி ரூபாய். ஸ்விம்மிங் பூல், ஜிம் என அனைத்து வசதிகளும் இதில் உண்டு. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியர்கள் அவ்வளவாகச் சொந்த விமானம் வாங்க முற்படுவதில்லை என்கின்றன தரவுகள். இருந்தபோதும், முகேஷ் அம்பானி, அடர் பூனாவாலா, குமார்மங்கலம் பிர்லா, ரத்தன் டாடா, சுனில் வாஸ்வானி என முக்கிய இந்தியத் தொழிலதிபர்கள் அனைவரும் விமான ஓனர்கள்தாம். கல்யாண் ஜுவல்லர்ஸ், சன் டிவி, ஜாய் ஜெட்ஸ் (ஜாய் ஆலுக்காஸ்) எனப் பல நிறுவனங்களும் தனியாக விமானங்கள் வைத்திருக்கின்றன.