நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கவுன்சிலராக இருப்பவர் உஸ்மான். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி கேரள மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு நாடுகாணி வழியாக கூடலூர் திரும்பியுள்ளார். அப்போது, நாடுகாணி பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ், காவலர் செல்லபாண்டி ஆகியோர் உஸ்மானின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். சோதனை என்ற பெயரில் உஸ்மானை வெகு நேரமாக சாலையில் நிறுத்தி வைத்தனர் எனச் சொல்லப்படுகிறது. இது குறித்து உஸ்மான் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ், உஸ்மானை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், உஸ்மான் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். கோவை மத்திய சிறைக்கு உஸ்மானை கொண்டுச் சென்று சிறையில் அடைத்துள்ளனர்.

சிறையில் இருந்து வெளியில் வந்த உஸ்மான் இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணைத்திடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடைப்படையில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் உஸ்மான் மீது எந்த தவறும் இல்லை என்பதும் அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. கவுன்சிலர் உஸ்மான் மீது பொய் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் செல்லப்பாண்டி இருவரும் ரூ.3 லட்சம் இப்பீடு தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து உஸ்மானிடம் பேசினோம், ``கூடலூர் நகராட்சியில் தொடர்ந்து 5 முறையாக காங்கிரஸ் கவுன்சிலராக இருந்து வருகிறேன். என் மீது பழி வாங்கும் நடவடிக்கையாக கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் பொய் வழக்கு பதிவு செய்தனர். இதை எதிர்த்து மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்தேன். எனக்கான நியாயம் கிடைத்திருக்கிறது" என்றார்.