
தி.மு.க வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அவரின் மனைவி கவுன்சிலர் விமலா, மனோகரன், செந்தமிழ் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர்மீது புகார் கொடுக்கப்பட்டது.
நிலத்தை எழுதி வாங்குவதற்காக, சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த வடமாநிலத்தவர் ஒருவரை தி.மு.க வட்டச் செயலாளர் கடத்தியதாகக் காவல்துறையினரிடம் புகார் அளித்தும், ஒரு மாத காலமாக எஃப்.ஐ.ஆர் போடப்படவில்லை என்ற தகவல் கிடைக்கவே விசாரணையில் இறங்கினோம்.
சென்னை சோழிங்கநல்லூர், காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அமரராம், அடகுக்கடை நடத்திவருகிறார். தி.மு.க-வில் 124-அ வட்டச் செயலாளராக இருக்கும் கிருஷ்ணமூர்த்தியும், 124-வது வார்டின் கவுன்சிலராக இருக்கும் அவரின் மனைவி விமலாவும் தன்னைக் கடத்திச் சென்றதாக மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் இதுவரை போலீஸார் எஃப்.ஐ.ஆர்கூடப் பதிவு செய்யாதது சர்ச்சையாகியிருக்கிறது.

இது குறித்து மேலும் அறிய அமரராம் எண்ணில் தொடர்புகொண்டோம். அவரின் அண்ணன் மகன் பூண்டராம் நம்மிடம் பேசினார். “தி.மு.க-வில் 124அ வட்டச் செயலாளராக இருக்கும் கிருஷ்ணமூர்த்திக்கு அவரின் தாத்தாவழிச் சொத்தாக 58 சென்ட் அளவுள்ள நிலம் நாவலூரில் இருக்கிறது. அதை 2017-ம் ஆண்டு 60 லட்ச ரூபாய் முன்பணம் கொடுத்து என் சித்தப்பா அமரராம் வாங்கினார். பின்னர் மொத்தத் தொகையான 2 கோடியே 19 லட்ச ரூபாயும் செட்டில் செய்யப்பட்டுவிட்டது.
ஒரு கட்டுமான நிறுவனம் அதே நிலத்தைக் கூடுதல் விலைக்குக் கேட்டிருக்கிறது. அதனால், மீண்டும் நிலத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி சித்தப்பாவுக்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்துவந்தார் கிருஷ்ணமூர்த்தி. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 16-ம் தேதி அது பற்றிப் பேச வேண்டும் என்று சொல்லி சித்தப்பாவை மெரினா கடற்கரை லைட் ஹவுஸ் அருகே வரச் சொன்னார்கள். இரவு உடையுடன் பைக்கில் சென்றவரை நான்கைந்து நபர்கள் அடித்து உதைத்து, கண்ணைக் கட்டி, கையைப் பின்பக்கமாகக் கட்டி, காரில் கடத்தியிருக்கிறார்கள். காரில் வைத்தும் அடித்திருக்கிறார்கள். பிறகு, போகும் வழியில் புதுத்துணி வாங்கிக்கொடுத்து, அதை உடுத்தச் சொல்லியிருக்கிறார்கள்.

நேராக திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து, வீடியோ கால் மூலம் அவரது காரப்பாக்கம் வீட்டைக் காட்டியிருக்கிறார்கள். அந்த வீட்டு வாசலில் நின்ற சிலர், ‘ஒழுங்காகக் கேட்கும் இடத்தில் கையெழுத்துப் போட வேண்டும், சத்தம் போட்டால் வீட்டில் இருப்பவர்களைத் தூக்கிவிடுவோம். நாங்கள் ஆளுங்கட்சி... ஒன்றும் செய்ய முடியாது’ என்று வீடியோ கால் மூலமாகவே மிரட்டியிருக்கிறார்கள். வேறு வழியின்றி அவர் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டார். அடிவாங்கியதில் உள்காயம் ஏற்பட்டு சிகிச்சையில் இருந்துகொண்டே, ஆன்லைனில் புகாரளித்திருக்கிறார் சித்தப்பா.

தி.மு.க வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அவரின் மனைவி கவுன்சிலர் விமலா, மனோகரன், செந்தமிழ் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர்மீது புகார் கொடுக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடம் லைட் ஹவுஸ் என்பதால், மெரினா காவல் நிலையத்துக்குப் புகார் மாற்றப்பட்டது. அவர்கள் சி.எஸ்.ஆர் கொடுப்பதற்கே மூன்று நாள்கள் ஆக்கினார்கள். சம்பவம் நடந்து ஒரு மாதமாகப் போகிறது. இன்னமும் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்படவில்லை. எனவே, கோர்ட் டைரக்ஷன் வாங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்” என்றார் விரிவாக.
இது தொடர்பாக வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்புகொண்டோம். “அந்தச் சொத்தே தாவா (Litigation) சொத்து. எனக்கும், மனோகர் என்பவருக்கும் அது தொடர்பாக ஐந்து ஆண்டுகளாக வழக்கு நடைபெற்றுவருகிறது. 2017-ல் நிலத்தின் மொத்த மதிப்பு 2 கோடியே 19 லட்ச ரூபாய். அதில், 60 லட்ச ரூபாய் முன்பணமாகப் பெற்றுக் கொண்டு அமரராமுக்கு அக்ரிமென்ட் போட்டுக் கொடுத்தேன். முழுத் தொகையான ரூ.2.19 கோடியை அவர் கொடுத்து விட்டார். கிரயம் செய்யும்போது, மனோகர் அவரிடமுள்ள பட்டாவையும் எடுத்து வந்து பிரச்னை செய்ததால், டபுள் பட்டா பிரச்னையில் கிரயம் ரத்துசெய்யப்பட்டுவிட்டது.

பலகாலமாக அக்ரிமென்ட்டை வைத்துக்கொண்டே அமரராமும், அவரின் உறவினர்களும் அந்த நிலத்தைக் காட்டி, பல பேரிடம் பல கோடி கடன் பெற்றிருக்கிறார்கள். மனோகர் என்னை அழைத்து, `இருவரும் சேர்ந்து நிலத்தை விற்றுவிடலாம். அமரராமிடம் இருக்கும் அக்ரிமென்ட்டை கேன்சல் செய்து அவருடைய தொகையைக் கொடுத்துவிடலாம்’ என்றார். அதன்படி, செப்டம்பர் 16-ம் தேதி, அமரராமை அழைத்தபோது, அவரே நேரடியாக சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து, சேல் டீடில் கையெழுத்து போட்டார். 60 லட்ச ரூபாய் பணத்தையும் அவரது அக்கவுன்ட்டுக்கு அனுப்பிவிட்டோம். இப்போது அந்த நிலத்தைக் கட்டுமான நிறுவனத்தினர் முறையாக வாங்கிக்கொண்டனர், அமரராமும் அதற்கு ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டிருக்கிறார். மீதமிருக்கும் ஒரு கோடியே 59 லட்சத்தைக் கொடுத்துவிடுகிறேன் என்றுதான் சொல்லியிருந்தேன். ஆனால், பா.ஜ.க-வில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ வாசுதேவன் என்பவருடன் சேர்ந்துகொண்டு, எனக்கு மிரட்டல் விடுப்பது மட்டுமின்றி, கடத்தல் நாடகம் ஆடுகிறார்” என்றார். “கடத்தலுக்கான சிசிடிவி ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?” என்று கேட்டதற்கு, “அது பற்றி எனக்குத் தெரியவில்லை. கடத்தல் நடந்தும்கூட இருக்கலாம். ஆனால், அதற்கும் எங்களுக்கும் துளியும் தொடர்பில்லை” என்றார்.
போலீஸ் விசாரணைக்கு மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வும், சென்னை தென்மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான மயிலை வேலு தடையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மயிலை வேலுவிடம் இது பற்றிக் கேட்டதற்கு, “அப்படி நான் எந்தவிதமான தடையையும் ஏற்படுத்தவில்லை. இதில் கிருஷ்ணமூர்த்தி மட்டுமின்றி, அவரின் மனைவி கவுன்சிலர் விமலா பெயரும் சேர்க்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஹவுஸ் வொய்ஃபாக இருக்கும் விமலா ஆள் கடத்தலில் ஈடுபட்டார் என்று புகாரளித்திருப்பது நம்பும்படியாக இல்லை. அதனால்தான், இதிலுள்ள உண்மைத்தன்மையைக் கண்டறியச் சொன்னேன். நடந்தது உண்மையாக இருக்கும்பட்சத்தில் எஃப்.ஐ.ஆர் போடும்படி சொல்லிவிட்டேன். குற்றவாளிகளைக் காப்பாற்றுவதால் எனக்கு என்ன கிடைக்கப்போகிறது... எனக்கெதிராகப் பேசுபவர்கள் குறை சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள்” என்றார்.

புகாரை விசாரித்துவரும் மெரினா காவல் நிலைய ஆய்வாளர் பாலசுப்ரமணியனிடம் பேசினோம். “ரெகார்ட்ஸ், எவிடென்ஸ் எல்லாவற்றையும் சேகரித்துவருகிறோம், சிசிடிவி பதிவையும் எடுத்திருக்கிறோம். குற்றத்துக்கான அடிப்படை ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. மேற்கொண்டு விசாரணை நடந்துவருகிறது” என்பதோடு முடித்துக்கொண்டார்.
கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்!