தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வினு விமல் வித்யா: மந்திரப் புன்னகை!

மந்திரப் புன்னகை
பிரீமியம் ஸ்டோரி
News
மந்திரப் புன்னகை

சஹானா

லாக் டெளன் என்பதால் வீடியோ சாட்டுக்கு விமலையும் வித்யாவையும் அழைத்தாள் வினு.

“என்ன ரெண்டு பேரும் ஒரு போன்கூடப் பண்ண மாட்டேங்கிறீங்க... உங்களை எல்லாம் நான் எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா...” என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டாள்.

“உனக்கு வீட்டு வேலைன்னு பெரிசா ஒண்ணும் இல்லை. எங்களுக்கு அப்படியா... `வொர்க் ஃப்ரம் ஹோம்'னு சொன்னால் வீட்டு வேலைகளே டபுளாயிருது. உதவிக்கும் ஆள் இல்லை என்பதால் வீட்டு வேலைகளை முடிச்சுட்டு, ஆபீஸ் வேலை செய்ய ஓடிடறேன்” என்று அலுத்துக்கொண்டாள் விமல்.

``என்ன, உன் ஹஸ்பண்டு ஹெல்ப் பண்ற தில்லையா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் வித்யா.

``அவர் ஆபீஸ் வேலைன்னு ரூமுக்குள்ளே போய் கதவை அடைச்சுடறார். காபி, டிபனுக்கு மட்டும்தான் வெளியே வர்றார். நான்தான் குழந்தைகளையும் சமாளிச்சுட்டு, வீட்டு வேலைகளையும் செஞ்சுட்டு, ஆபீஸ் வேலையையும் முடிக்கிறேன்.”

``நீங்க மட்டும் இல்லை விமல், பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான். அசோகா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடக்குது. இலக்கியம், தத்துவம், பொருளாதாரம் என்று பல துறைகளிலும் நேர்த்தியான உரைகளைக் கேட்க முடியுது. அதில் எனக்கு ரொம்பப் பிடித்த உரை பொருளாதாரப் பேராசிரியர் அஷ்வினி தேஷ்பாண்டே யுடையது. `கணவரது தொழிலில் மனைவியும் சேர்ந்து உழைக்கும்போது அதை அந்தக் கணவன் உதவியாகவே எடுத்துக்கொள்கிறான். தன்னைப் போலவே அவளும் உழைப்பதாகக் கருதுவதில்லை. இங்கே உழைப்புக்கான ஊதியம் இல்லாததோடு, அது மதிப்பற்றதாகவும் போய்விடுகிறது' என்கிறார் அஷ்வினி. இந்த வீட்டடங்கு காலத்திலும் பெண்களின் உழைப்புதான் அதிகமாகியிருக்கிறது” என்று ஒரு லெக்சர் கொடுத்து முடித்தாள் வினு.

வேறு வழியின்றி, இருக்கும் ஒரே ஒரு துண்டு ரொட்டியை அந்த மனிதருக்குக் கொடுப்பார். அவர் பசியாறும்போது கண்ணீர் பெருகும்.

``ஓ... அஷ்வினி சொல்வது உண்மைதான். இந்த உரைகளை நாங்களும் கேட்க முடியுமா?” என்றாள் விமல்.

``அசோகா பல்கலைக்கழகத்தின் ட்விட்டர் பக்கத்தைப் பின்தொடர்ந்து, ஜூம் வழியே யார் வேண்டுமானாலும் உரைகளைக் கேட்கலாம். வித்யாக்கா... உங்களுக்கு எப்படிப் பொழுது போகுது?”

``எனக்குப் பொழுது போதவில்லை. நிறைய சினிமா, வெப் சீரிஸ்னு பார்த்துட்டிருக்கேன். `த கிரெளன்' வெப் சீரிஸ் பற்றிச் சொல்லணும். இங்கிலாந்து அரசி எலிசபெத் வாழ்க்கையை உண்மையான தகவல்களுடன் அழகாகச் சொல்கிறது. ஆறாவது ஜார்ஜ் மன்னர் இறந்தவுடனே, 27 வயதில் பட்டத்துக்கு வருகிறார் எலிசபெத். அரசக் குடும்பத்துக்கு என்று ஏகப்பட்ட சட்டத்திட்டங்கள் இருக் கின்றன. அவற்றின்படிதான் ஒவ்வொன்றையும் அவர்கள் செய்ய வேண்டும். காலத்துக்கு ஏற்றவாறு முடிவு எடுப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. ராணியாக இருந்தாலும்கூட, சட்டச் சிக்கல்கள் காரணமாக, தன் தங்கை யின் காதலை அங்கீகரிக்க இயலாமல் போகிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கும் அரசக் குடும்பத்துக்குமான பிரச்னைகள், அவற்றை எதிர்கொள்ளும்விதம் என்று மிக நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் இந்தத் தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது” என்று சற்று நிறுத்தினார் வித்யா.

``ஓ... அப்படியா! எலிசபெத் ராணி பதவிக்கு வந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை 15 பிரிட்டிஷ் பிரதமர்களை அவர் பார்த்துவிட்டார். 94 வயதிலும் கார் ஓட்டுகிறார், குதிரைச் சவாரி செய்கிறார். அது சரி, ஒரு ராணியின் கணவராக பிலிப் எப்படி இருக்கார், இந்தத் தொடரில்?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் விமல்.

மந்திரப் புன்னகை
மந்திரப் புன்னகை

``கணவன் பெரிய பொறுப்பில் இருந்தால் மனைவி இயல்பாக மகிழ்கிறாள். ஆனால், மனைவி பெரிய பொறுப்பில் இருக்கும்போது பெரும்பாலான கணவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அவர்களில் பிலிப்பும் ஒருவர். ராணியாகவும் மனைவியாகவும் எலிசபெத் பல இடங்களில் தர்மசங்கடத்துக்கு உள்ளாகிறார். அப்படியும் இருவரும் 73 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்துகொண்டிருக் கிறார்கள் என்பது பெரிய விஷயம்தான்!” என்றார் வித்யா.

``இவ்வளவு சட்டச்சிக்கல்கள் கொண்ட அரசக் குடும்பத்தில் மேகன் மெர்கல் பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கிறார். மேகனும் ஹாரியும் அரசப் பட்டங்களைத் துறந்து வெளியேறிவிட்டதால், மேகனின் மரியாதைக்குரிய பணிகளை, தன்னுடைய கடைசி மகன் எட்வர்டின் மனைவி சோஃபிக்குக் கொடுக்கவிருக்கிறார் எலிசபெத் ராணி. அதை விடுங்க... கொரோனாவைக் கட்டுப்படுத்த வல்லரசே திக்கித் திணறும்போது, ஏழு நாடுகளில் உள்ள பெண் தலைவர்கள் எப்படிக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்காங்கன்னு படிக்கும்போது ஆச்சர்யமா இருக்கே” என்றாள் வினு (பக்கம் 32-ல் படிக்கலாம்).

``ஆமாம். இங்கே கேரளாவிலும் செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் என்று பெண்களின் பங்கு பெரிய அளவில் கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருது. `மனிதநேயம், அறிவியல் அறிவு, கூட்டுச் செயல்பாடு இருந்தால் போதும்... எதையும் எதிர்கொள்ளலாம்' என்கிறார் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா. எவ்வளவு சரியாகச் சொல்லியிருக்கார்! சரி, புதுசா புத்தகம் ஏதாவது படிச்சீங்களா?” என்று கேட்டார் வித்யா.

வினு இல்லையே என்பது போலத் தலையாட்டினாள்.

“இவ்வளவு வேலைகளுக்கு இடையிலும் ஒரு புத்தகத்தைப் படிச்சு முடிச்சிருக்கேன். படிக்க ஆரம்பித்தால் வைக்கவே மனமில்லை. நம்மைக் கைப்பிடிச்சு ரொம்ப வேகமா அழைச்சிட்டுப் போகுது அந்த எழுத்து. பகலில் வேலை அதிகம் என்பதால் ராத்திரி தூக்கத்தைக் குறைச்சுப் படிச்சு முடிச்சேன். ஒவ்வொரு கட்டுரையும் ரொம்பவே யோசிக்க வைக்கிறது. காகிதப்பை இளவரசி, மீராவின் காதல், கறுப்பு என்பது நிறமல்ல, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் போன்ற கட்டுரைகள் என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன...”

“புத்தகம் பேரு, எழுதினது யாருன்னு சொல்லாமல் என்னென்னவோ பேசிக் கிட்டிருக்கியே விமல்” என்று இடைமறித்தார் வித்யா.

``வித்யாக்கா... இன்னுமா உங்களுக்குத் தெரியலை? நம்ம அவள் விகடனில் ‘எதிர்க் குரல்’ பகுதியில் எழுத்தாளர் மருதன் எழுதிய தொடர் கட்டுரைகள்தான், ‘ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்’ என்ற தலைப்பில், கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கு. புக்ஃபேரில் வாங்கினேன். மறுபடியும் படிக்கணும்” என்றாள் விமல்.

“இப்போ நினைவுக்கு வந்துருச்சு. நிறையப் பேர் இந்தப் புத்தகத்தைப் பற்றி இப்போ பேசிட்டிருக்காங்க. நானும் படிக்கிறேன். இந்த லாக் டெளனில் வெளியான ஒரு வீடியோ எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வெயிலில் வேலை செய்துகொண்டிருந்த காவலர்களுக்கு இரண்டு பெரிய கூல்டிரிங் பாட்டில்களை வாங்கிக் கொடுத்திருக்கார் லோகமணி. அவரது மாத வருமானமே 3,500 ரூபாய்தான். இந்த லாக் டெளனில் அதுவும் கிடைத்ததோ இல்லையோ... ஆனா, எவ்வளவு மகிழ்ச்சியோடு கொடுத்தார் தெரியுமா... டிஜிபியே வீடியோ அழைப்பில் லோகமணியைப் பாராட்டியிருக்கார். அதுக்கும் அதே சிரிப்புதான்!”

“நானும் பார்த்தேன் வித்யாக்கா. ரொம்ப அழகான சிரிப்பு அது! What men live by என்ற டால்ஸ்டாய் கதையில் ஏழை மத்ரியோனாவின் கணவர் சைமன், தன் வீட்டுக்கு இன்னொரு பரம ஏழையுடன் உணவருந்த வருவார். அதைப் பார்த்து மத்ரியோனாவுக்குக் கோபம் வரும். வேறு வழியின்றி, இருக்கும் ஒரே ஒரு துண்டு ரொட்டியை அந்த மனிதருக்குக் கொடுப்பார். அவர் பசியாறும்போது கண்ணீர் பெருகும். அதைப் பார்த்த மத்ரியோனாவுக்குப் புன்னகை உண்டாகும். லோகமணியின் சிரிப்பு எனக்கு மத்ரியோனாவை நினைவூட்டிவிட்டது” என்றாள் விமல்.

“டால்ஸ்டாய்கிட்ட போயிட்டாங்க விமல். அவங்க வெளியில் வர கொஞ்ச நேரமாகும். நாம் இன்னொரு நாள் சந்திப்போம் வித்யாக்கா” என்று இணைப்பைத் துண்டித்தாள் வினு.

(அரட்டை அடிப்போம்!)