அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

பறந்து வரும் ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’... - தள்ளாடும் மும்பை போலீஸ்!

பெல்லார்டு பியர் தபால் நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
News
பெல்லார்டு பியர் தபால் நிலையம்

‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ என்பது, வெளிநாடுகளில் குறிப்பிட்ட வெப்பநிலையில் வீட்டுக்குள்ளேயே வளர்க்கப்படும் கஞ்சா செடி.

‘அஞ்சல் வழி கஞ்சா’வால் அதிர்ந்துபோயிருக்கிறது மும்பை போலீஸ்!

மும்பைக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் தபால்கள் அனைத்தும் தெற்கு மும்பையிலுள்ள பெல்லார்டு பியர் தபால் நிலையத்துக்கே முதலில் வரும். சமீபகாலமாக அமெரிக்கா, கனடாவிலிருந்து தலையணை, ஸ்பீக்கர், சாக்லேட், பொம்மைகள் உள்ளிட்ட பொருள்கள் வருவது அதிகரித்திருக்கிறது. விலை மலிவான பொருள்களை அதைவிடக் கூடுதல் அஞ்சல் செலவுசெய்து அனுப்பியதால் சந்தேகமடைந்த சுங்கத்துறையினர் அவற்றைப் பிரித்துப் பார்த்துள்ளனர். அப்போது அந்தப் பொருள்களுக்குள் கஞ்சா மறைத்துவைக்கப்பட்டிருந்தது. “கடந்த சில மாதங்களில் மட்டும் வெளிநாடுகளிலிருந்து வந்த 200-க்கும் மேற்பட்ட பார்சல்களில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து பெல்லார்டு பியர் தபால் நிலையத்தில் மோப்ப நாய்கள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றன’ என்கிறார் சுங்கத்துறை அதிகாரி ஒருவர்.

பறந்து வரும் ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’... - தள்ளாடும் மும்பை போலீஸ்!

இது பற்றி மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் விசாரித்தபோது, ‘‘கடந்த சில மாதங்களாக மும்பையில் போதைப்பொருள்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதால், போதைக் கும்பல்கள் போதைப்பொருள் கிடைக்காமல் திண்டாடிவருகின்றன. எனவே, பிட்காய்ன், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ‘டார்க் வெப் கிளியரிங் பேமன்ட்’ மூலம் தாங்களே நேரடியாக வெளிநாடுகளிலிருந்து ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’வை தபால் நிலையங்கள் மூலம் இறக்குமதி செய்யும் வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பறந்து வரும் ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’... - தள்ளாடும் மும்பை போலீஸ்!

‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ என்பது, வெளிநாடுகளில் குறிப்பிட்ட வெப்பநிலையில் வீட்டுக்குள்ளேயே வளர்க்கப்படும் கஞ்சா செடி. அதாவது, தண்ணீரிலேயே செடிகளை வளர்க்கும் இந்த முறையை ஹைட்ரோபோனிக் என்கிறார்கள். வீடு அல்லது கட்டடத்துக்குள் செடிக்குத் தேவையான சத்துகளைத் தண்ணீரில் கலந்து கொடுத்து, குறிப்பிட்ட வெப்பநிலையில் வளர்த்தெடுக்கின்றனர். இவ்வாறு ஹைட்ரோபோனிக் முறையில் வளர்க்கப்படும் கஞ்சா அதிக காட்டம் கொண்டதாக இருக்கும். இந்த ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’வை இந்தியாவில் கிடைக்கும் கஞ்சாவுடன் கலந்து உள்ளூர் மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர் கடத்தல்காரர்கள். வழக்கமான கஞ்சா பொட்டலம் 100 ரூபாய் என்றால், ஹைட்ரோபோனிக் கஞ்சா 2,000 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து மும்பை தபால் நிலையத்துக்கு வந்த புளூடூத் ஸ்பீக்கரை சோதனை செய்தபோது, உள்ளே 450 கிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. பிட்காயின் மூலம் பணம் செலுத்தி வெளிநாட்டிலிருந்து ஹைட்ரோபோனிக் கஞ்சாவை ஆர்டர் செய்த புனேயைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்’’ என்றனர்.

புதுசு புதுசா யோசிக்கிறாங்கய்யா!