
பெருந்தொற்றுத் தாக்கம் சுழற்றியடிக்கும் சூழலில், நிற்க நேரமில்லாமல் களமாடிவரும் ஸ்டாலின் அரசின் புதிய படை பற்றிய சிறு அறிமுகம்.

தலைமைச் செயலாளர் முதல் தனிச்செயலாளர்கள் வரை தமிழக முதல்வர் ஸ்டாலினின் நியமனங்கள் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளன. பெருந்தொற்றுத் தாக்கம் சுழற்றியடிக்கும் சூழலில், நிற்க நேரமில்லாமல் களமாடிவரும் ஸ்டாலின் அரசின் புதிய படை பற்றிய சிறு அறிமுகம்...

வெ.இறையன்பு தலைமைச் செயலாளர்
கொடைக்கானலில் ஓய்விலிருந்த நேரத்திலேயே ஸ்டாலின் கையில் தலைமைச் செயலருக்கான சீனியாரிட்டி பட்டியல் தரப்பட்டது. பட்டியலில் 13வது இடத்திலிருந்த இறையன்புவை டிக் அடித்தார் ஸ்டாலின். சேலத்துக்காரரான இறையன்பு, கண்டிப்பும் கனிவும் மிக்கவர். எந்தத் துறையில் பணியாற்றினாலும் சார்பின்றி, நிதானமாகவும் ஆக்கபூர்வமாகவும் செயல்படுபவர். இன்றளவும் சிவில் சர்வீஸ் தேர்வெழுத வரும் இளைஞர்களுக்கு முன்மாதிரி. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தஞ்சாவூரில் உலகத்தமிழ் மாநாட்டையும், கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையும் தனி அலுவலராகப் பொறுப்பேற்றுச் சிறப்புற நடத்தி இருவரின் கவனத்தையும் பெற்றவர். கருணாநிதி முதல்வராக இருந்த நேரத்தில் அவரது தனிச்செயலராகவும் பணியாற்றியவா்.

த.உதயச்சந்திரன் முதல்வரின் முதன்மைச் செயலர்
ஸ்டாலின் பொறுப்பேற்றதுமே நிகழ்ந்த முதல் மாற்றம் உதயச்சந்திரன் உள்ளிட்ட நால்வரைத் தனிச்செயலர்களாக நியமித்ததுதான். நாமக்கல்லைச் சேர்ந்த உதயச்சந்திரன், மொழி, வரலாறு, தொன்மம், பண்பாடு, தொழில்நுட்பம் என எல்லாத்தளங்களிலும் ஈடுபாடு கொண்டவர். மதுரை ஆட்சியராகப் பணியாற்றிய காலத்தில், சாதிய வன்மத்தால் பாதிக்கப்பட்ட பாப்பாபட்டி, கீரிப்பட்டி பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி கருணாநிதியின் குட்புக்கில் இடம்பெற்றார். தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையக் குளறுபடிகளை நீக்கி இணையவழிப்படுத்தியதில் உதயச்சந்திரன் பங்களிப்பு முக்கியமானது. செங்கோட்டையன் கல்வி அமைச்சராக இருந்த நேரத்தில் பள்ளிக்கல்வித்துறைக்குப் பொறுப்பேற்று ரேங்கிங் சிஸ்டத்தை ஒழித்தது குறிப்பிடத்தகுந்த பணி. புதிய பாடத்திட்டங்களை உருவாக்கி மாநிலப் பாடத்திட்டம் மீதான விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கீழடி ஆய்வைத் துரிதப்படுத்தி அதன் காலத்தை வரையறை செய்து உலக அங்கீகாரம் பெறச் செய்தவர்.

டாக்டர் பி. உமாநாத் முதல்வரின் தனிச்செயலர்-2
உணவு, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை, போக்கு வரத்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் நீர் விநியோகம், பொதுப்பணி, நெடுஞ்சாலை, நிதி போன்ற துறைகளில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்குவது உமாநாத் பணி. கோவை மக்கள் கொண்டாடும் ஆட்சியராக இருந்த இந்த சாத்தூர்காரர், ‘உமாநாத் காலனி’ என்று தங்கள் குடியிருப்புக்கு மக்கள் பெயர் வைக்குமளவுக்கு நம்பிக்கை யளித்தவர். எவரும் எளிமை யாக அணுக முடியுமென்பது இவரது பலம். தமிழ்நாடு மருந்துப் பொருள்கள் கழக இயக்குநராக இருந்த இவர், கொரோனாத் தாக்கத்தின் அளவைக் கணித்து மருந்துகள் கொள்முதல் செய்து இருப்பு வைத்ததால்தான் இப்போது ஓரளவுக்கேனும் தமிழகம் தள்ளாடாமல் இருக்கிறது.

எம்.எஸ்.சண்முகம் முதல்வரின் தனிச்செயலர்-3
ரூ.2,441 கோடி மதிப்புள்ள பாரத்நெட் டெண்டரை வேண்டியவர்களுக்கு வழங்க அ.தி.மு.க அரசு முயன்றபோது, தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராக இருந்த சண்முகம், ‘இந்த ஏலமுறை விதிமுறைகளை மீறியது’ என்று கையெழுத்திட மறுத்தார். எவ்வித அதிகாரமும் அற்ற அருங்காட்சியகங்களின் ஆணையராக அவரைத் தூக்கியடித்தது அ.தி.மு.க அரசு. இப்போது அவரைத் தன் செயலாளராக்கியிருக்கிறார் ஸ்டாலின். தஞ்சையில் ஆட்சியராகப் பணியாற்றிய காலத்தில் பிரசவத்துக்காகத் தன் மனைவியை அரசு மருத்துவமனையில் சேர்த்து கவனம் ஈர்த்தார். மனிதவளம், கூட்டுறவு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், விவசாயம், சட்டம் உள்ளிட்ட துறைகளைக் கவனிக்கப்போகிறார் இந்தச் சென்னைக்கார ஐ.ஏ.எஸ்.

அனு ஜார்ஜ் - முதல்வரின் தனிச்செயலர்-4
மீடியா வெளிச்சத்தை விரும்பாத அனு, அரியலூரில் கலெக்டராகப் பணியாற்றிய காலத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க பல முனைப்புகளை எடுத்தார். அவரால் மீட்கப்பட்ட பல பெண்கள் இன்று பொறியா ளர்களாக, மருத்துவர் களாக இருக்கிறார்கள். உள்ளூர் எம்.எல்.ஏ சத்துணவு அமைப்பாளர் பணி வாங்கித் தருவதாகப் பலரிடம் பணம் வசூலிப்பதை அறிந்து இரவோடு இரவாக தகுதியானவர்களுக்குப் பணிநியமனம் வழங்கி அதிர வைத்தார். எம்.எல்.ஏ-வின் செல்வாக்கு அனுவை இடமாற்றம் செய்யவைத்தது. ஜெயலலிதாவின் விருப்பத் துக்குரிய அதிகாரிகளில் ஒருவராக இருந்த அனு, கருணாநிதியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளை ஒருங்கி ணைக்கும் பணியில் அமுதா வோடு இணைந்து சிறப்பாகச் செயல்பட்டதால் ஸ்டாலினின் மதிப்பையும் பெற்றார்.

சங்கர் ஜிவால் - சென்னை கமிஷனர்
சென்னை கமிஷனர் பணிக்குப் பல பெயர்கள் அடிபட, ஸ்டாலின் தேர்வு செய்தது, ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவாலை. அ.தி.மு.க ஆட்சியில் 10 ஆண்டுகள் அதிகாரமில்லாத இடங்களில் இருந்தவர் இவர். உத்தரகாண்டைச் சேர்ந்த சங்கர் ஜிவால், மதுரை, கோவை, திருச்சி மாவட்டங் களில் பணியாற்றி யுள்ளார். காவல்துறையில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திய முன்னோடி களில் ஒருவர். போதைப் பொருள் தடுப்புப்பிரிவில் பணியாற்றிய காலத்தில் கடத்தல் காரர் களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் என்று பாராட்டு கிறார்கள். உளவுப்பிரிவில் நெடுங்காலம் பணியாற்றிய அனுபவம் இவரது பலம்.

பி.தாமரைக்கண்ணன் -தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி
நுண்ணறிவுப்பிரிவு, போக்குவரத்துப் பிரிவு, உளவுப்பிரிவு, சிபிசிஐடி எனக் காவல்துறையின் எல்லாப் பிரிவுகளிலும் பணியாற்றி அனுபவம்பெற்ற தாமரைக் கண்ணனை ஜெயந்த் முரளிக்குப் பதிலாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமித்திருக்கிறார் ஸ்டாலின். துணை காவல் கண்காணிப் பாளராகத் தொடங்கியது இவரது பணி. படிப்படியாக வளர்ந்து காவல்துறையின் நம்பர்-2 இடத்தைப் பிடித்திருக்கிறார். தவற்றைச் சட்டென சுட்டிக்காட்டத் தயங்காதவர். பெரிதாக அரசியல் சார்புகளுக்குள் நுழையாமல் தன் பணியே முதன்மையென இருந்து அ.தி.மு.க ஆட்சியிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். காவல்நிலைய ‘கட்டப் பஞ்சாயத்து’களைக் களை யெடுக்கவே ஸ்டாலின் இந்த டெரர் ஆபீசரை இந்தப் பொறுப்புக்குக் கொண்டு வந்தார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

பி.கந்தசாமி - லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி
அ.தி.மு.க ஆட்சி ஊழல் பற்றிப் பக்கம் பக்கமாகப் புகார்களைத் தயாரித்து அரசுக்கு அளித்தது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கோவிட் கொஞ்சம் தணிந்ததும் அத்தனை புகார்களும் தூசிதட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், மாஜிகளுக்குக் கிலி ஏற்படுத்தும் விதமாக கந்தசாமியை லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக நியமித்தி ருக்கிறார் ஸ்டாலின். எந்த அழுத்தத்துக்கும் பணியாமல் அசைக்கமுடியாத ஆதாரங் களைத் திரட்டி எவர்மேலும் கைவைக்கத் தயங்காத அதிகாரி கந்தசாமி. சிபிஐயில் பணியாற்றியபோது, கேரள கன்னியாஸ்திரி அபயாவின் கொலை வழக்கை விசாரித்தவர் இவர்தான். குஜராத்தில் மோடி காலத்தில், சொராபுதீன் என்கவுன்டர் வழக்கில், அமைச்சராக இருந்த அமித்ஷாவைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினார். கோவா சிறுமி வன்கொடுமை வழக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடர் பான லாவ்லின் ஊழல் வழக்கு என இந்தியா முழுக்க அதிரடி காட்டியவர். கொரோனா அடங்கியதும் இருக்கிறது கச்சேரி!

எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் - உளவுத்துறை ஏடிஜிபி
தினமும் முதல்வரைச் சந்தித்து ரிப்போர்ட் செய்யவேண்டிய பணி. நம்பகமான இந்த இடத்துக்கு டேவிட்சனைக் கொண்டு வந்திருக்கிறார் ஸ்டாலின். துடிப்பும் தீவிரமும் கண்டிப்பும் கொண்ட அதிகாரி என்று பெயரெடுத்தவர். கியூ பிரிவு, போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு எனப் பலதுறைகளில் பணியாற்றிய அனுபவம் உண்டு. தேர்தல் நேரத்தில், கோவை ஆட்சியர், காவல் ஆணையர் இருவரும் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக வந்த புகாரையடுத்து, தேர்தல் ஆணையம் டேவிட்சனைக் கோவை ஆணையராக்கியது. பொறுப்பேற்றதும் அப்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்து அதிரடி காட்டினார். காந்திபுரம் உணவகத்தில் அப்பாவிகளைத் தாக்கிய உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்ததோடு அந்த உணவகத்துக்கு நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார். டேவிட்சனின் தேர்வு பொருத்தமானது என்கிறார்கள் காவல்துறையினர்.

ஆர். ஆனந்தகுமார் - நுகர்பொருள் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை ஆணையர்
கொரோனாத் தொற்றின் தாக்்கம் ஒரு பக்கம், ஊழல் ஒரு பக்கமென சிதைவடைந்து கிடக்கும் உணவு விநியோகத் துறையை, ஆனந்தகுமார் கையில் தந்திருக்கிறார் ஸ்டாலின். விலை நிர்ணயம், உணவுப்பொருள் கொள்முதல், விநியோகம் அனைத்தையும் இவரே நிர்வகிப்பார். அ.தி.மு.க ஆட்சியில் பருப்பு கொள்முதலில் பல கோடி ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் ஆதாரத்தோடு குற்றம் சாட்டியிருந்தது. ‘ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு’ திட்டம் அமலுக்கு வந்து அதில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. இந்தச்சூழலில் ஆனந்தகுமார் பொறுப்புக்கு வந்திருக்கிறார். ஈரோட்டு ஆட்சியராக இருந்த காலத்தில் தன் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்து கவனம் ஈர்த்தவர்தான் ஆனந்தகுமார். இவரை ஈரோட்டிலிருந்து மாற்றியபோது விவசாயிகள் எதிர்த்துப் போராட்டமே நடத்தினார்கள். கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர் என்ற அடையாளங்களும் ஆனந்தகுமாருக்கு உண்டு.

கே.நந்தகுமார் - பள்ளிக்கல்வித்துறை ஆணையர்
கொரோனாப் பெருந் தொற்றுத் தாக்கத்தால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புக்கு மாற, அரசுப் பள்ளியில் படித்த லட்சக் கணக்கான குழந்தைகளைக் கைவிட்டது, கடந்த அ.தி.மு.க அரசு. எப்போது நிலை சீராகும் என்பது தெரியாத சூழலில், தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையச் செயலாளராக இருந்த நந்தகுமார் பள்ளிக் கல்வித் துறை ஆணையராக நியமிக்கப் பட்டிருக்கிறார். கடந்த கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு, அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கை என எல்லாமே குழப்பத்தில் இருக்கும் நேரத்தில் வந்துள்ளார் நந்தகுமார். இவர் கல்வித் துறையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களைக் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. ராமநாதபுரம் ஆட்சியராகப் பணியாற்றிய காலங்களில் கல்வி, வேளாண்மை எனப் பல தளங்களில் தடம் பதித்தவர்.அரசியல் அழுத்தங்களுக்குப் பணியாமல் செயல்படக் கூடியவர்.

டாக்டர் தாரேஷ் அகமது - தேசிய சுகாதாரத்திட்ட இயக்குநர், கோவிட் வார்ரூம் ஒருங்கிணைப்பாளர்
கேரளாவைச் சேர்ந்த தாரேஷ், நிர்வாகம் படித்தது, மதுரை ஆட்சியராக இருந்த உதயச்சந்திரனிடம். தாரேஷ் அகமது பெரம்பலூர் கலெக்டராக இருந்த காலத்தில் சூப்பர்-30, சிகரம் போன்ற திட்டங்கள் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் நம்பிக்கை யளித்தார். புத்தகக்் கண்காட்சியை மக்கள் இயக்கமாக மாற்றியது இவரது முக்கியப் பணி. எளிமையும் திறமையும் கலந்த கலவை என்கிறார்கள் இவரை அறிந்தவர்கள். அதிகாரத் தோரணையின்றி மக்களின் தோளில் கைபோட்டு களத்தில் நிற்கும் தாரேஷ், சிறந்த ஆட்சியருக்கான மத்திய அரசின் விருதையும் பெற்றிருக்கிறார். தமிழக அரசின் கோவிட் வார் ரூம், ஆக்சிஜன் விநியோகம் என மொத்தப்பணிகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு தாரேஷுக்கு வழங்கப் பட்டுள்ளது.

ஷில்பா பிரபாகர் சதீஷ் -‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ சிறப்பு அலுவலர்
ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றதும் போட்ட 5 கையெழுத்துகளில் ஒன்று, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்துக் கானது. மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 100 நாள்களில் தீர்வு காண்பதற்காக உருவாக் கப்பட்டுள்ள புதிய பிரிவு. இந்தப் பிரிவுக்கு ஷில்பா பிரபாகர் சதீஷ் சிறப்பு அலுவலர். மக்களிடம் பெறப்பட்ட 6 லட்சம் மனுக்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 600க்கும் மேற்பட்ட மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மனுக்களுக்கு 100 நாள்களுக்குள் தீர்வு காண்பது இலக்கு. ஷில்பா திருநெல்வேலியில் ஆட்சியராகப் பணியாற்றிய காலத்தில் அங்கன்வாடியில் தன் மகளைச் சேர்த்து முன்மாதிரியானவர். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி, ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்தபோது, தொழில் தொடங்குவதற்கான அனுமதி நடைமுறைகளை ஒருங் கிணைத்து ஒற்றைச்சாளர முறையைக் கொண்டுவந்தது, குறிப்பிடத்தகுந்த பணி.

ககன்தீப் சிங் பேடி -சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னை மாநகர நிர்வாகம் என்பது மாநில நிர்வாகத்தின் உரைகல் மாதிரி. அதனால் ஆட்சிப் பொறுப்பேற்பவர்கள் முதலில் மாநகராட்சி மீதுதான் கவனம் செலுத்துவார்கள். ஸ்டாலின் கவனம் போனது, ககன்தீப் சிங் பேடி பக்கம். பஞ்சாபைச் சேர்ந்த ககன், பல மாவட்டங்களில் பணியாற்றி யுள்ளார். உள்ளாட்சி நிர்வாகத்திலும் பேரிடர் பணி களிலும் பெரும் நிபுணத்துவம் வாய்ந்தவர். தமிழகத்தில் எங்கு இயற்கைச் சீற்றம் நிகழ்ந்தாலும் ஆட்சியாளர்கள் நினைவுக்கு வருவது ககன் பெயர்தான். சுனாமி தாக்குதல் நேரத்தில் இவரின் செயல்பாடு தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. வேளாண்துறைச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் பிரதமரின் வேளாண் திட்டத்தில் நடந்த முறைகேடு பற்றி வெளிப்படையாகப் பேசியதோடு, தவறு செய்த 80 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தார். பெருந்தொற்றால் சென்னை சிதிலமடைந்து கிடக்கும் நிலையில் மிகுந்த நம்பிக்கையோடு இவரை ஆணையர் இருக்கையில் அமரவைத்துள்ளார் ஸ்டாலின்.