
ஷெர்லாக் ஹோம்ஸ் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தால் எப்படி இருக்கும்?
களத்தில் இறங்கிய உடனேயே இதுவும் துப்பறியும் பணிதான் என்று உணர்ந்து துள்ளிக் குதித்திருப்பார். உண்மைதான். இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. கிடைக்கும் தடயங்களைக் கொண்டு உண்மையைத் தேடிப் பயணிப்பவர் துப்பறிவாளர் என்றால், முன்னோர் விட்டுச்சென்ற தொல்பொருட்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைப்பவர் அகழாய்வாளர்.

கடந்த காலத்தைத் துப்பறியத் துணிபவருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? காடு, மலைகளில் தொல்லியல் அடையாளங்களைத் தேடிப் பயணம் செய்யும் திடம் வேண்டும்; கிடைக்கும் எந்த ஒரு சிறு தகவலையும் புறக்கணிக்கக் கூடாது; தளர்வான மண் அடுக்குகளை ஆராய்ந்து தொல்பொருட்களைப் பிரித்தறியும் பொறுமை அவசியம்; கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் உள்ளுர்ச் செய்திகள்… இவை இரண்டையும் இணைக்கத் தெரியவேண்டும். கதிரியக்க கார்பன் காலக்கணிப்பு, தொல் மரபணு ஆய்வு, நிலவியல் சோதனை, லிடார் லேசர் தொழில்நுட்பம் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருந்தால் பணி சுலபம். தர்மபுரியிலும், தாண்டிக்குடியிலும் கிடைப்பது கற்படுக்கையா, நெடுகல் அல்லது நடுகல்லா என்பதை உறுதி செய்ய சங்க இலக்கியங்களில் தேர்ச்சியும், ‘காட்சி கால்கோள் நீர்ப்படை நெடுகல்’ என விரியும் தொல்காப்பிய நூற்பாவின் அறிமுகமும் மிகவும் அவசியம். சின்னஞ்சிறு செய்திகள் சேர்ந்து முழுமையான சித்திரம் மலரும்போது உண்மை துலங்கும்; வரலாறு விரியும்.
இப்படித்தான் எழுத்துக்களைப் படித்தறிய முயற்சி செய்யப்போய் கடைசியில் இந்த உலகம் மறந்துபோன ஒரு மாமனிதரைக் கண்டுபிடித்த சுவையான கதையை சார்லஸ் ஆலன் எழுதியுள்ளார். அது 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலம்.

வணிகம்புரிய வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி அதிகார நிழல், இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் பரவத் தொடங்கியது. இந்தியப் பண்பாட்டு அசைவுகளை ஆழமாகக் கற்று உணர்வதில்தான் பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி உறுதி செய்யப்படும் என்ற முடிவுக்கு அதிகார வர்க்கம் வந்தது. அதன் விளைவாக, கடல் கடந்து இந்தியா வந்திறங்கிய இளம் பிரிட்டிஷ் அதிகாரிகள் பலர் இந்தியப் பண்பாட்டின் பழமையான அடையாளங்களைத் தேடிப் பயணம் புறப்பட்டனர். அவர்களில் ஒருவர், பிரான்சிஸ் புக்கானன். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர் ஒரு மருத்துவர். பீகாரில் அவர் சென்று சேர்ந்த இடம், இராஜ்கிர். அங்கே பெருமளவில் கட்டடங்களின் இடிபாடுகள் புதைந்திருப்பதைக் கண்டார். ஒரு கட்டடத்தின் நீளம் 2000 அடி, அகலம் 240 அடி. அதைச் சுற்றி மேலும் பல கட்டடங்கள். சில கூம்பு வடிவில் இருந்தன. அழிவை எதிர்நோக்கி பல சிலைகள் பொலிவிழந்து நின்றன. அவருடன் வந்த ஓவியர்கள் அவற்றையெல்லாம் நகலெடுக்க ஆரம்பித்தனர். ஆனால் அவர்களுக்குத் தெரியாது, அந்த வளாகம்தான் ஒரு காலத்தில் உலகப் புகழ்பெற்று விளங்கிய நாலந்தா பல்கலைக் கழகம் என்பது.
இதே காலகட்டத்தில் புக்கானனின் நண்பர் ஒருவரும், ஸ்காட்லாந்திலிருந்து வந்திருந்தார். அவர் பணி புரிந்தது நில அளவைத் துறையில். அவர் பெயர் காலின் மெக்கன்சி. மதராஸ் ராஜதானியில் உள்ள அமராவதி பகுதியில் பல அழகிய சிற்பங்களைக் கண்டு அவற்றைத் தமது ஓவியர்களைக் கொண்டு நகல் எடுக்கத் தொடங்கினார். அதில் ஒரு சிற்பம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கம்பீரமான நிலையில் அரசர் என மதிக்கத்தக்க ஓர் ஆண் உருவம். இடது கை நெஞ்சருகே குவித்து வலது கரத்தை உயர்த்தி உலகிற்கு ஏதோ உரத்துச் சொல்லிடத் துடிக்கும் வடிவம். தலைக்கு மேல் வெண்கொற்றக் குடை. பின்னால் ஒரு சக்கரம், அருகில் சிலர் கைகூப்பி வணங்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஆனால் அரசனின் முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. இந்த உருவம், தான் ஏற்கெனவே தில்லியிலும், பனாரஸிலும் கண்ட தூண்களில் இருந்த சிற்பங்களை ஒட்டியே உள்ளதை மெக்கன்சி உடனே கவனித்தார்.

அதேபோல், போபாலின் வடகிழக்குப் பகுதியில் பிரிட்டிஷ் படையை கர்னல் ஹென்றி டெய்லர் வழிநடத்திக் கொண்டிருந்தார். ஒரு நாள் பிஸ்ஸா என்ற கிராமத்தில் வேட்டையாடச் சென்ற அதிகாரிகள் அரைவட்ட வடிவிலான கூம்புகள் கொண்ட பிரமாண்டமான கட்டடங்களைக் கண்டனர். அதன் மையக் கட்டடத்தின் முகப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சிறகுகளோடு ஒரு புலி, தன் பின்னால் அமர்ந்திருக்கும் பெண் யானையை இழுக்கும் ஆண் யானை, சிறகுகள் கொண்ட மான், யானைகளால் குளிப்பாட்டப்படும் தேவதைகள்… அமர்ந்த நிலையில் சிங்கங்கள்… நீண்ட ஊர்வலத்தின் நடுவே நான்கு புரவிகளால் இழுக்கப்படும் தேர்…. நான்கு யானைகள் தாங்கி நிற்கும் ஒரு தேர்ச்சக்கரம் எனப் புதிய உலகமே கண்முன் திரண்டது. தாங்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்தின் பெயர் பிற்காலத்தில் சாஞ்சி என்று அழைக்கப்படப் போகிறது என்பதை அறியாமலே அந்த சிற்பக் கலை உன்னதங்களை ஓவியங்களாக நகல் எடுத்துக் கொண்டிருந்தனர்.
இதற்கு இணையாக, கிழக்குக் கடற்கரைப் பகுதியிலும் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ஒடிசாவின் புவனேஸ்வருக்கு மேற்கே பயணம் மேற்கொண்டிருந்த ஆண்ட்ரூ ஸ்டெர்லிங் என்ற இளம் அதிகாரி கந்தகிரி மலைப்பகுதியில் ஹத்திகும்பா என்று அழைக்கப்பட்ட யானைக் குகையில் பதினைந்து அடிநீளமும், பத்தடி உயரமும் பதினேழு வரிகளும் கொண்ட கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்தார். அது ஓர் புகழ்பெற்ற கல்வெட்டு என்பதையோ சேர, சோழ, பாண்டியர் குறித்த முதல் செய்திகள் அதில்தான் இடம் பெற்றுள்ளன என்பதையோ அறியாமல் தகவலைமட்டும் தன் உயரதிகாரி மெக்கன்சிக்கு அனுப்பி வைத்தார்.

அதே காலகட்டத்தில் சிலோன் பகுதியில் பணியமர்த்தப்பட்ட ஜார்ஜ் டர்னர் என்ற இளம் பிரிட்டிஷ் அதிகாரி பாலி மொழியில் எழுதப்பட்ட ஓர் நூலைப் படித்து அறிந்திட கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். மகாவம்சம் அதன் பெயர். பல புத்த பிக்குகள் உதவிக்கு வர மறுத்துவிட்ட நிலையில் தீப வம்சம் என்ற உரைநூலைக் கொண்டு ஒருவாறு வாசித்து முடித்தார். இலங்கை மற்றும் இந்திய அரசர்களைப் பற்றிய அரிய செய்திகள் அவருக்கு கிடைத்தன.
இவ்வாறு இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுகள், சிற்பங்கள் மற்றும் மாபெரும் தூண்களைத் தொகுத்து ஒரு முழுச் சித்திரத்தை வரைந்திட காலம் பொறுமையோடு காத்திருந்தது. கடைசியில், இரண்டு இளம் அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்தது. நீலக் கண்கள் ; மஞ்சள் கேசம்; ஒல்லி உருவம் கொண்டு தன்னுடைய 21 வது வயதில் இந்திய மண்ணை மிதித்து நாணயத் தொழிற்சாலையில் பயணத்தைத் தொடங்கிய ஜேம்ஸ் பிரின்செப் மற்றும் அவருக்கு உதவியாளராய்ச் செயல்பட்ட கன்னிங்ஹாம்.
முதலில், தமக்குக் கிடைத்த கல்வெட்டின் நகல்களை ஆராய்ந்தார் பிரின்செப். அலகாபாத், தில்லி, பீகார் பகுதிகளைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் அவரைக் கவர்ந்தன. அந்த மூன்று கல்வெட்டுகளில் இருந்த எழுத்துகளும் ஒன்றேதான் எனத் தெரியவந்தது. ஆனால் அவற்றைப் படித்தறிவதில் சிக்கல் நீடித்தது. ஒவ்வொரு கல்வெட்டுக் குறிப்பின் முடிவிலும் ஒரே மாதிரியான இரு எழுத்துகள் மீண்டும் மீண்டும் வந்தன. பாம்பு போல் வளைந்து நெளியும் எழுத்து ஒன்று. அதனை அடுத்து தலைகீழாய் நிற்கும் ஆங்கில ‘T’ வடிவிலான எழுத்து. அடுத்து ஓர் புள்ளி. பழங்கால ஆவணக் குறிப்புகளின் முடிவில் எப்போதும் நன்கொடை கொடுத்தவர் பெயரைக் குறிப்பிடுவது இந்தியாவெங்கும் வழக்கம். அப்படிப் பார்த்தால், ஒவ்வொரு குறிப்பிலும் இறுதியாக இடம்பெறும் அந்த இரண்டு எழுத்துகளுக்கு முன்னால் இடம் பெறுவது நன்கொடை கொடுத்தவர்களின் பெயர் எனமுடிவுக்கு வந்தார். பாலியிலும், வடமொழியிலும் கொடை என்பது ‘தானா’ என்றும் அதன் பெயர்ச்சொல் ‘தானம்’ என்றும் வழங்கப்பட்டது. இதை வைத்து பாம்புபோல் வளைந்து நிற்கும் எழுத்து ‘தா’ என்றும், தலைகீழ் ஆங்கில எழுத்து ‘ன’ என்றும் அதைத் தொடர்ந்து வருவது ‘ம்’ எனும் மெய்யெழுத்து என்றும் கண்டுபிடித்தார். நான்கு ஆண்டுகள் தொடர்ந்த இம்முயற்சி இறுதியில் வெற்றி பெற்றது. இடமிருந்து வலமாக எழுதப்பட்ட அந்த மொழியில் மொத்தம் முப்பத்து மூன்று எழுத்துகள் இருந்தன. அதுவே, பிராமி வரிவடிவம் என்று அழைக்கப்படத் தொடங்கியது.
பின்னர் கல்வெட்டுகளை ஆராயத் தொடங்கினர். ஒவ்வொரு கல்வெட்டிலும் 15 எழுத்துகள் அடங்கிய ஒரே வாசகம் திரும்பத் திரும்ப வந்தது. அதைப் படித்தால் ‘தேவ நாம பியா பியாதசி லஜா ஹோவம் அஹா’ என்று வந்தது. அதற்கு, ‘கடவுளின் அன்பிற்குரிய அன்பான அரசர், இவ்வாறு பேசுகிறார்’ என்று பொருள்.

அக்கல்வெட்டுகளில் இடம்பெற்ற வாசகங்கள் இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தின. ‘நான் இதுவரை செய்த தவறுகளையும், மனதில் குவித்து வைத்திருக்கும் குற்றங்களையும் முழுவதுமாக உணர்ந்து அதற்காக மிகவும் வருந்துகிறேன். இங்கு சொல்லப்படுபவை சூரியனும் சந்திரனும் இருக்கும் காலம் வரை நிலைத்து நிற்க வேண்டும்’ என்று ஆரம்பித்து, ‘எனது ஆட்சியின் கீழ் எந்த உயிர்ப்பலியும் கூடாது. இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டபின் தினமும் ஆயிரக்கணக்கான மிருகங்கள் கொல்லப்பட்ட அரண்மனையில் இப்போது மூன்றே மூன்று உயிரினங்கள், இரு மயில்கள், ஒரே ஒரு மான் மட்டுமே கொல்லப்படுகின்றன. அதுவும் இன்னும் சில நாட்களில் நிறுத்தப்பட்டுவிடும்’ என அறிவித்தது.
தாய், தந்தையரிடம் காட்ட வேண்டிய மரியாதை, பணியாளர்களை நடத்திடும் முறை குறித்து ஒரு கல்வெட்டு விளக்கியது. இன்னொரு கல்வெட்டு ‘அரசன் அந்தப்புரத்தில் இருந்தாலும், தூங்கிக் கொண்டிருந்தாலும், தேரிலோ பல்லக்கிலோ பயணம் செய்து கொண்டிருந்தாலும் அங்கங்கே நாட்டு நடப்புகள் தெரிவிக்கப்பட வேண்டும். அதன்மூலம் மக்களுக்குத் தேவையானதைச் செய்வேன்’ எனப் பறைசாற்றியது.
‘எல்லா மதங்களும் தனி மனித ஒழுக்கம், நேர்மையான மனது குறித்தே போதிப்பதால் அவை வேறுபாடின்றி நாட்டில் தழைத்தோங்கலாம். மக்களின் விருப்பத்திற்கேற்ப அவரவர் பின்பற்றும் கருத்துகளும், மதங்களும் மாறுபடலாம்’ என்று உரைத்தது மற்றொரு கல்வெட்டு.
எனினும் பியாதசி என்ற மன்னரின் பெயர் இந்திய அரசர்களின் பட்டியலில் காணப்படவில்லை. இவ்வளவு சிறந்து விளங்கும் அந்த மாமன்னன் யாராக இருக்கும்..? 1837-ம்ஆண்டு சிலோனிலிருந்து ஜார்ஜ் டர்னர் ‘மகாவம்சம்’ நூலில் கூறப்பட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு அனுப்பிய அறிக்கையில்தான் அந்த மாபெரும் புதிருக்கான விடை இருந்தது. ஆம். மக்களைப் பெரிதும் நேசித்த, போரை வெறுத்திட்ட, நோயாளிகள் மற்றும் விலங்குகளிடமும் அன்பைப் பொழிந்த, தர்மத்தின் அடிப்படையில் அரசாட்சி செய்திட்டவரின் பெயரை அப்போதுதான் உலகம் மீண்டும் தெரிந்து கொண்டது. அவர்தான் ‘மாமன்னர் அசோகர்’.
(நடை பயில்வோம்...)
சபை குறிப்பு
தமிழி - 3 ஆண்டுகள், 18,000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் வல்லுநர்கள் உதவியோடு தமிழ் எழுத்துகளின் தோற்றம், அவற்றின் வளர்ச்சி குறித்துச் சான்றுகளுடன் பதிவு செய்யும் ஆவணப்படத்தொடர்.

உலகத்தமிழர்களை எளிமையாகச் சென்றடைய யூடியூப்பில் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஒரு பகுதியென 8 பகுதிகளாக வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தமிழிக்கல்வெட்டுகளை நேரில் தேடிச் சென்று பதிவுசெய்துள்ளதுடன் சிந்துவெளி நாகரிக இடங்களும் இதில் இடம்பெற்றுள்ளமை இதன் சிறப்பு. ஆவணப்படத்தின் இயக்குநர் பிரதீப்குமார், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. ஆய்வும் எழுத்தும் மாநிலக்கல்லூரியில் இயற்பியல் பயின்ற இளங்கோ எனும் ஊடகவியலாளர். இசை ஹிப்ஹாப் ஆதி. தமிழ், வரலாறு, தொல்லியல் என எதையும் முறையாகப் படிக்காமலேயே இவ்வளவு நேர்த்தியாகத் திரைமொழியைக் கையாண்டிருக்கும் இளைஞர்கள் எதிர்காலத் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.
- உதயச்சந்திரன்