
உழவுக்கும் தொழிலுக்கும் பெயர் போன மாவட்டத்தின் தலைநகர்.
சனிக்கிழமை காலை 11 மணி, கலெக்டரின் முகாம் அலுவலகத்தில், வார இறுதி நாளுக்கே உரிய மெல்லிய சோம்பல் படர்ந்திருக்கிறது. வெளியே சிலர் காத்திருக்கிறார்கள். முக்கியப் பிரமுகர்கள் யாரோ உள்ளே கலெக்டருடன் விவாதித்துக்கொண்டிருப்பதாக அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். எனது இருக்கைக்கு முன்னால் அமர்ந்திருந்த அந்தச் சிறப்பு விருந்தினரின் ஒரு கையில் இனிப்பு, மறுகையில் குளிர்பானம். கண்களில் அலட்சியம். அந்தச் சிறப்பு விருந்தினருக்கு வயது எட்டு என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாகத்தானிருக்கும். மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். அருகில் பதற்றத்துடனும் தயக்கத்துடனும் அமர்ந்திருக்கும் தந்தை, நெடுஞ்சாலைத்துறையில் ஓர் உயரதிகாரி.
அந்தச் சிறுமிக்கு தன்னெதிரில் அமர்ந்திருப்பது கலெக்டர் என்ற தயக்கமோ, பயமோ இல்லை. நான் கேட்கும் கேள்விகளுக்கு மிக இயல்பாகப் பதில்கள் வந்து விழுகின்றன. படிக்கும் பள்ளியின் நீளமான பெயர், வகுப்பாசிரியையின் ஆங்கில உச்சரிப்பு குறித்த மென்மையான விமர்சனம், உடன் பயிலும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் மதிய உணவு, தனக்குப் பிடித்த நீல நிறம் என அந்தச் சிறுமியின் சுட்டித்தனமான மழலைப் பேச்சு, இறுக்கமான முகாம் அலுவலகத்துக்கு உயிர்கொடுத்தது. அவளின் முகத்தில் உற்சாகம் நிரம்பிவழிகிறது. ஆனால் தந்தையின் முகத்தில் மட்டும், `கலெக்டரிடம் தன் மகள் ஏதேனும் தவறாகப் பேசிவிடப்போகிறாளோ' என்ற தவிப்பு.

தாமதமாக வந்ததற்கு அவர் சொன்ன காரணம் ஆச்சர்யம் கொடுத்தது. வரும்வழியெல்லாம், தன் தந்தையிடம் குறுக்குக் கேள்விகள் கேட்டபடி வந்திருக்கிறாள் அந்தச் சிறுமி. சாலை விபத்தைத் தடுப்பது குறித்து விவாதம் நடத்தவும் ஆலோசனைகள் கூறவும்கூடத் தயங்கவில்லையாம். இதைக் கேட்டபின் அந்தச் சிறுமி அமர்ந்திருந்த நாற்காலியின் உயரம் சற்று அதிகமானதுபோல் தெரிந்தது.

வெகு விரைவிலேயே அந்தச் சிறுமி எய்த அம்பு என்னைப் பதம்பார்த்தது. `வரும் வழியில் பேருந்து நிலையம் அருகே அனுமார் வேடம் போட்டுக்கொண்டு ஒரு அண்ணன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான்... அவனை ஏன் பள்ளிக்கூடம் போக வைக்கவில்லை?' என்பதுதான் அவள் கேள்வி. இதைக்கேட்டு அறையில் இருந்தவர்கள் அனைவரும் திகிலடைந்தனர். எனக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. உடனடியாக அந்தப் பகுதி தாசில்தாரைத் தொடர்பு கொண்டு அனுமார் வேடம் தரித்த சிறுவனைத் தேடிப்பிடித்துப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டேன். அச்சிறுமியின் முகத்தில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் மலர்ந்தன.
19-வது வயதில், நீண்ட கடற்பயணம் மேற்கொண்டு மதராசப்பட்டினம் வந்து சேர்ந்தார் மன்ரோ. இங்கே அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
விடுமுறை நாள்களில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் எனப் பலரும், முன்னனுமதி யெல்லாம் பெறாமல் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கலெக்டரைச் சந்திக்க வருவது தமிழ்நாட்டில் மிக இயல்பாக நடை பெறுவதுண்டு. என்றாவது ஒரு நாள் தன்னுடைய குழந்தையும் உயர் பதவியை அடைந்திடாதா என்ற கனவு களுடன் நடக்கும் சந்திப்புகள் அவை. ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், கிராமங்களில் தங்கள் அடிப்படைத் தேவைக்காகக்கூட கிராம நிர்வாக அலுவலரை அணுகத் தயங்கும் பொதுமக்கள், தாசில்தார் அலுவலக வாயிலைத்தாண்டி உள்ளே செல்லவே பலமுறை யோசிக்கும் எளிய மனிதர்கள் கலெக்டரை மட்டும் எப்படி உரிமையோடு அணுகுகின்றனர்? சகல அதிகாரங்களும் குவிந்து கிடக்கும் உயர் அலுவலர் என்றாலும் கலெக்டர் என்ற பிம்பம், எளிய மனிதர்களின் துயர் துடைக்கும் ஒன்றாய் மாறிப்போனது எப்படி?
இந்தக் கேள்விகளுக்கு விடைகாண 250 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும். பிரிட்டனின் ஸ்காட்லாந்து, பசுமையும் விடுதலை வேட்கையும் இணைந்து படர்ந்திருக்கும் பகுதி. கிளாஸ்கோ நகரின் தலைசிறந்த பள்ளி அது. தடகள விளையாட்டுப் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தான் அந்தச் சிறுவன். நெடிதுயர்ந்த உருவம். மரபின் வழி கிடைத்த உடற்கட்டு. குத்துச்சண்டையிலும் சிறந்து விளங்கினான். அந்த விளையாட்டுக்கே உரிய சாந்தமான குணமும், தேவைப்பட்ட நேரத்தில் வெளிப்படும் சீற்றமும் அவனது அடையாளங்கள். ஒருநாள், வயதில் மூத்த மாணவர்கள் முரட்டுத்தனமாகத் தாக்கியதில் உடன் பயின்ற மாணவர்கள் சிலர் காயமடைந்தபோது களத்தில் இறங்கி அவர்களைக் காப்பாற்றினான். பின் அதுவே அவனுக்கு வாடிக்கையாகிப்போனது. உடல் நலிந்த மாணவர்கள் எப்போதும் உச்சரிக்கும் மந்திரச்சொல்லாகிப்போனது அந்தச் சிறுவனின் பெயர். அது `தாமஸ் மன்ரோ.'

அன்றைய பிரிட்டன் இளைஞர்களுக்குக் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றுவது பெருங்கனவு. இலக்கியம், வரலாறு, அரசியல் அறிவியல் என்று பல துறைகளில் ஈடுபாடு கொண்ட தாமஸ் மன்ரோவுக்கு, கிழக்கிந்தியக் கம்பெனியில் படைவீரராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
19-வது வயதில், நீண்ட கடற்பயணம் மேற்கொண்டு மதராசப்பட்டினம் வந்து சேர்ந்தார் மன்ரோ. இங்கே அவருக்கு, பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரை வரவேற்ற துபாஷி ஒருவர் உடைகளும், படுக்கையும் வாங்கி வருவதாகச் சொல்லிப் பணம் பெற்றுச் சென்றார்; ஆனால், கடைசி வரை திரும்பவே இல்லை. மதராஸ் வாழ்க்கை ஏமாற்றத்தோடு தொடங்கியது. படைவீரராக மன்ரோவுக்கு மாதச் சம்பளம் 8 பகோடாக்கள் (1 பகோடா – 3½ ரூபாய்), அதில் துபாஷிக்கும், சமையற்காரருக்கும் சலவை செய்பவருக்கும் 3 பகோடாக்கள் கொடுத்துவிட்டு மீதம் உள்ளதைக்கொண்டு மன்ரோவின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

முதல் 12 ஆண்டுகள் ஹைதர் அலி மற்றும் திப்புவிற்கு எதிராகப் போர்க்களத்தில் கழிந்தன. திப்புவிடமிருந்து கைப்பற்றப்பட்ட பாராமஹால் பகுதிக்கு கேப்டன் அலெக்சாண்டர் ரீடு என்பவரை வருவாய்க் கண்காணிப்பாளராக நியமித்தார் கார்ன்வாலிஸ் பிரபு. அவருக்கு உதவியாக மன்ரோ உட்பட மூன்று பேர் நியமிக்கப்பட்டார்கள். தர்மபுரிப் பகுதியில் உதவி கலெக்டராய் தன் பணியைத் தொடங்கினார் மன்ரோ. நில அளவை செய்வதும், நிரந்தரத் தீர்வை விதிப்பதும் அவர் பணிகள்.
ஏழைக் குடியானவர்களின் வாழ்க்கை குறித்த மன்ரோவின் கரிசனம் எல்லை கடந்தது. உதவி கலெக்டராக இருந்தபோதும் சரி, கலெக்டரான பிறகும் சரி, தங்கள் துயரங்கள், பிரச்னைகள் குறித்து மன்ரோவிடம் முறையிட விவசாயிகளும், பொதுமக்களும் வந்து குவிந்தார்கள். தன் தந்தைக்கு எழுதிய கடிதம் ஒன்றில், `இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்கூட என்னைச் சந்தித்து கஷ்டங்களைச் சொல்லப் பன்னிரண்டு பேர் சூழ்ந்து நிற்கிறார்கள்' என்று குறிப்பிடுகிறார் மன்ரோ. கடனைத் திருப்பிச் செலுத்த வழியில்லை என்று கண்ணீரோடு ஒருவர்; போரில் பங்கேற்கச் சென்றதைப் பயன்படுத்தித் தனது நிலத்தை அபகரித்துக் கொண்டு ஏமாற்றிய சகோதரன் குறித்து கனத்த இதயத்தோடு மற்றொருவர்; தன்னிடமிருந்த மிகச்சிறந்த உழவு மாடுகளைவிட அதிகம் உழைத்த தன் மனைவியின் மறைவுகுறித்து வருத்தத்தோடு ஒருவர்... இப்படி அந்த எளிய மக்களின் மனதில் முழுமையாக நிறைந்திருந்தார் கலெக்டர் மன்ரோ. தான் பணிபுரிந்த இடங்களில் கண்ட இயற்கை எழில் மிக்க காட்சிகளைத் தனது தாய்நாட்டின் பசுமையோடு ஒப்பிடும் அளவிற்கு இந்த மண்ணோடும் ஒன்றிப்போனார் மன்ரோ.

கலெக்டர் மன்ரோவின் மாபெரும் சாதனை, ஏழை எளிய விவசாயிகளை வரிச் சுமையிலிருந்து மீட்டதும், உழுதவரையே நிலத்தின் உரிமையாள ராக்கிப் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வந்ததும்தான். ஐம்பது சதவிகிதமாக இருந்த நிலவரி, மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டபோது அதுவரை கேள்விக்குறியாய் இருந்த குடியானவரின் வாழ்க்கை தலைநிமிர்ந்தது. ஜமீன்தார், நிலச்சுவான்தார் என்று புதிய இடைத்தரகர்களை உருவாக்காமல் நேரடியாக உழுபவர்களுக்கே நிலத்தைச் சொந்தமாக்கி அவர்கள் தங்கள் நிலத்தீர்வையை மாவட்ட நிர்வாகத்திடம் செலுத்த வகை செய்தார். இதுவே, ‘இரயத்து வாரி முறை’ என்று அழைக்கப்பட்டது. இதனால் நிர்வாகத்தின் வருவாய் உயர்ந்தது. கிழக்கிந்தியக் கம்பெனி மகிழ்ந்தது.
`மிகப்பெரிய அணைகள் கட்டுவதைவிட, சிறு பாசனக் கிணறுகள் அமைப்பதே விவசாயிகளுக்கும், நிர்வாகத்துக்கும் பயன்தரும்' என்று இலக்கு வைத்துச் செயல்பட்டார். `நிலவரியை உயர்த்து வதைவிட ஊழலை ஒழித்தலே சிறந்த சீர்திருத்தம்' என்று தன் உயர் அதிகாரிகளுக்கு எழுதும் தைரியம் மன்ரோவுக்கு இருந்தது.
இந்தியா வந்து 27 வருடங்கள் கழித்து, தன்னுடைய 46-வது வயதில் இங்கிலாந்து திரும்பினார். ஆறுவருடங்கள் அங்கே தங்கியிருந்தபோதும், சேலம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களை, மதராஸ் ராஜதானி முழுமைக்கும் விரிவுபடுத்தப் பல முயற்சிகளை எடுத்தார். கிழக்கிந்தியக் கம்பெனியின் வேண்டுகோளை ஏற்று இந்தியா வந்தவர், 1820-ம் ஆண்டு மதராஸ் ராஜதானி கவர்னராகப் பொறுப்பேற்றார். அவர் இங்கு வந்தபிறகுதான், வரி வருவாய் நிர்வகிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கலெக்டரின் கரங்களுக்கு, காவல்துறையும் நீதித்துறையும் வந்தன. மாவட்ட அளவில் கலெக்டரைச் சுற்றியே நிர்வாகம் சுழல ஆரம்பித்ததும் அந்தக் காலகட்டத்தில்தான்.
இந்தியாவின் நவீனக் கல்விமுறை உருவாகக் காரணமாயிருந்த முன்னோடிகளில் ஒருவர் தாமஸ் மன்ரோ. மதராஸ் ராஜதானியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்விமுறை குறித்த முதல் கணக்கெடுப்பு மன்ரோவால்தான் நடத்தப்பட்டது. 'குறைந்தது 500 மக்கள் கொண்ட பகுதிக்கு ஒரு பள்ளிக்கூடம் திறக்க வேண்டும்' என்ற திட்டத்தை முன்மொழிந்தார். ஆசிரியர் பயிற்சிக்கென மதராஸ் பாடநூல் கழகத்தை உருவாக்கியது, பெண் கல்வியை உறுதி செய்தது எனப் பல புரட்சிகர மாறுதல்களுக்குச் சொந்தக்காரர் மன்ரோ.
சட்டம், ஒழுங்கைப் பேணிக் காப்பதிலும் தேர்ந்தவர் அவர். இடங்கை வலங்கை மோதல்களைத் தவிர்க்க அவர் பரிந்துரைத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியமானவை. கொடிகள் கட்டுவதும், பந்தல்கள் எழுப்புவதும்கூட நுணுக்கமாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்று அவர் எழுதிய குறிப்புகள் இன்றும் பேசுகின்றன.
சென்னையில் நிலவிய கடும் வெப்பநிலை தாளாமல் மன்ரோவின் மனைவியும் குழந்தைகளும் ஸ்காட்லாந்து திரும்பினர். சில காலம் கழித்து, தன்னையும் பணியிலிருந்து விடுவிக்கக் கோரினார் மன்ரோ. அவருக்கு மாற்றாக யாரை நியமிப்பது என கம்பெனி முடிவெடுக்கத் தாமதமாகவே, தான் கலெக்டராகப் பணியாற்றிய பகுதிகளுக்கெல்லாம் சென்றுவிட்டு, இறுதியாக 1827-ம் ஆண்டு ஜூலை மாதம் கடப்பா பகுதிக்குச் சென்றார். ஏழை, எளிய மக்களின் நலன், பயிர் விளைச்சல் குறித்த விசாரிப்பு எனக் கருணை மழை பொழிந்தவாறே தொடர்ந்த மன்ரோவின் பயணம் எதிர்பாராத விதமாய் தடைப்பட்டது.

கூட்டி என்ற இடத்திற்கு அருகில் புத்தே கொண்டா என்ற பகுதியில் கவர்னர் மன்ரோவும் அவர் குழுவினரும் முகாமிட்டி ருந்தபோது காலரா நோய் அவரைத் தாக்கியது. தொடக்கத்தில் அவர் உடல்நிலை சீராகவே இருந்தது. தனக்குப் பணிவிடையும், சிகிச்சையும் செய்த பணியாளர்களிடம் `இதுபோன்று அன்பாகக் கவனிக்கப்படு வதற்காகவேனும் அடிக்கடி உடல் நலமில்லாமல் போவது நல்லதுதான்' என்று சொன்னார் மன்ரோ. எதிர்பாராதவிதமாக நோயின் தீவிரம் அதிகமானது. காலரா நோய் மற்றவர்களுக்கும் பரவிவிடாமல் இருக்க, சக அலுவலர்கள் முகாமை விட்டு வெளியேறுமாறு ஆணை யிட்டார்.
கடல் கடந்துவந்து, இந்த மண்ணையும், மக்களையும் உயிருக்குயிராய் நேசித்த சர் தாமஸ் மன்ரோவின் உயிர், ஜூலை 6-ம் தேதி இரவு 9.30 மணிக்குப் பிரிந்தது. மன்ரோவின் மறைவு குறித்த செய்தி மதராஸ் ராஜதானியெங்கும் பரவி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஓர் மக்கள் தலைவனை, தம் உள்ளம் கவர்ந்த உன்னத உறவை இழந்துவிட்டதாக ஏழை, எளிய மக்கள் அழுது புலம்பினர். ராஜதானியெங்கும் அஞ்சலிக்கூட்டங்கள் நடைபெற்றன. அவர் உடல் சென்னைக்கு எடுத்துவரப்பட்டு புனித ஜார்ஜ் கோட்டைக்குள் அமைந்துள்ள புனித மேரி தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மன்ரோ இறந்து வெகுகாலத்திற்குப் பின்னும் குழந்தைகளுக்கு `மன்ரோலய்யா' என்றும் 'மன்ரோலம்மா' என்றும் பெயரிட்டு மகிழ்ந்தனர் மக்கள். அரசு ஆவணங்களும், எளிய மக்களின் கதைப்பாடல்களும் அவரவர் பார்வையில் மன்ரோவின் புகழைக் காலந்தோறும் பாடிக்கொண்டிருக்கும்.
பெல்லாரி கலெக்டராக இருந்தபோது உயர் அதிகாரிகளின் உத்தரவைப் பொருட்படுத்தாமல் ராகவேந்திர சுவாமிகளின் மந்த்ராலயா மடத்துக்கு உரிய ஆவணங்களின் அடிப்படையில் முழுவரிச்சலுகை அளித்தது, திருப்பதி கோயில் மதிய நைவேதனத்திற்கு சித்தூர்ப் பகுதியின் சில கிராமங்களின் வருவாயை ஒதுக்கியது என மன்ரோவின் செயல்கள் இன்றளவிலும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூரப்படுகின்றன.
இன்றும் கடைக்கோடிப் பகுதிகளில் இருந்து, தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்கள் கரங்களில் மனுக்களை ஏந்திக்கொண்டு கலெக்டரை நோக்கி நம்பிக்கையோடு வருகிறார்கள். பொதுமக்கள் குறை கேட்பதில் பொறுமை, நியாயமான தீர்வு, அதையும் தாண்டி அந்த ஏழை, எளிய மக்கள் மீது மயிலிறகு வருடலாய் கருணை ததும்பும் பார்வை என `கலெக்டர்' என்ற மந்திரச் சொல்லுக்குப் பின்னால் என்றென்றும் நிறைந்திருப்பது சர் தாமஸ் மன்ரோ மட்டும்தான்.
பொதுமக்கள் பங்களிப்போடு தலைநகர் சென்னையில் எழுப்பப்பட்ட கம்பீரமான மன்ரோவின் சிலை ஓர் செய்தியை உரத்துச் சொல்கிறது. ஏழைக் குடியானவர் ஒருவரின் அழுகுரல் கேட்கும் திசை நோக்கி சேணம் மற்றும் பயணக் கருவிகளைக்கூடத் தவிர்த்து விட்டுக் குதிரையேறி விரைந்திடக் காத்திருக்கும் மன்ரோ, காலத்தில் உறைந்துபோன வெறும் சிற்பம் அல்ல; நீதியின் பக்கம் நின்று, எளிய மக்களின் துயர் துடைப்பதே அரசு அதிகாரிகளின் முழுமுதற்கடமை என்பதைக் காலந்தோறும் நினைவுபடுத்தும் காவல் தெய்வம்..!
(நடை பயில்வோம்...)
சபை குறிப்பு
The Men who ruled India – Philip Mason
வெறும் 1200 பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதையும் எப்படி ஆட்சி செய்தார்கள் என்பதை விளக்கும் நூல் இது.

கடல் கடந்து வந்த இளைஞர்கள் இங்கு சந்தித்த சவால்கள், நடத்திய போர்கள், கொண்டு வந்த சீர்திருத்தங்கள், கட்டிய அணைகள், காக்கத் தவறிய உயிர்கள் என பிரிட்டிஷ் இந்திய நிர்வாகம் நடந்த விதம் குறித்து விரிவாகப் பேசுகிறது இந்தப் புத்தகம். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு சிறப்புப் பயிற்சி அளித்து சராசரி குடிமக்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்தி ‘உயர்ந்தவர்கள்’ எனத் திரும்பத் திரும்ப அறிவுறுத்தி வார்த்தெடுத்தால் கிடைப்பது அதிகார வர்க்கம். அதைக் கொண்டு எந்த ஒரு சமூகத்தையும் நிர்வகிக்க முடியும் என்று நம்பினார் கிரேக்க அறிஞர் பிளேட்டோ. அதை நடைமுறையில் செய்து காட்டியது பிரிட்டிஷ் ஆட்சி. இந்தியாவில், ஐ.சி.எஸ். மற்றும் ஐ.ஏ.எஸ் குறித்து பிரமிப்பு ஒருபுறம், கடும் விமர்சனம் ஒருபுறம். இரு தரப்பும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
போட்(டோ)டூன்
உலகத்தின் புகழ்பெற்ற சிலைகளில் ஒரு நவீன விஷயத்தைச் சேர்த்தால் அதன் வடிவமே மாறிவிடுகிறதே!