
அந்த மனிதரின் கம்பீர நடைப்பயிற்சியைக் காண குன்னூர் நகரமே காத்துக்கிடக்கும்.
அந்த மனிதரின் கம்பீர நடைப்பயிற்சியைக் காண குன்னூர் நகரமே காத்துக்கிடக்கும். செல்லப் பிராணிகள் அணிவகுக்க, தன் மனைவியின் கைகோத்து, நேர்கொண்ட பார்வையும் மிடுக்குமாக அவர் நடைபயிலும் அழகே அழகுதான். வழியெங்கும், வணங்குபவர்களின் வயதுக்கேற்ப ராணுவ ஒழுங்கோடு மேலெழும்பி அசைந்துதிரும்பும் அவர் கரங்கள். குழந்தைகளைப் பார்த்தால் மட்டும், சட்டென்று மென்முகம் தரித்து கன்னங்களை செல்லமாகத் தட்டி மலர்கள் பரிசளித்துச் செல்வதை வழக்கமாகவே வைத்திருந்தார். 90 வயதைத் தாண்டியும் அந்தமனிதரைப் பார்க்க நாடெங்கிலும் இருந்து பலர் வந்துகொண்டே இருந்தார்கள். முக்கிய தலைவர்கள் ராணுவ தளபதிகள், உயர் அதிகாரிகள், நிர்வாகிகள்... எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

அந்த ஆளுமையின் பெயர், சாம் மானெக் ஷா, இந்தியாவின் முதல் ஃபீல்டு - மார்ஷல். தன் பணிக்காலத்தில் ஐந்து முக்கியமான போர்களில் அவரது பங்களிப்பு இருந்தது. 1971-ல் நடந்த பாகிஸ்தானுடனான போரில், இந்தியா மகத்தான வெற்றிபெற்று பங்களாதேஷ் என்ற நாடு உருவாக முதன்மைக் காரணியாக இருந்தவர் அவர்தான். அன்றிலிருந்து இன்றுவரை ராணுவ வீரர்கள் கொண்டாடி மகிழும் ராணுவத் தளபதி அவர். மானெக் ஷா வின் வீரம்; போர் முனையில் போராடும் வீரர்களின் நலனுக்காக உயர் அதிகாரிகளைக்கூட எதிர்த்திடும் இயல்பு; தனித்த நகைச்சுவை உணர்வு என ஓய்வு பெற்று சுமார் 50 வருடங்கள் கழிந்தபிறகும் அவரைப் பற்றிய நினைவுகள் தொடர்ந்து கற்பனை கலந்து பரிமாறப்பட்டு வருகின்றன.
இரண்டாம் உலகப் போரின்போது ‘ராயல் ஸ்காட்ஸ்’ படைப்பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த கேப்டன் மானெக் ஷாவிற்கு, பர்மாவின் சிட்டாங் பாலத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு. முன்னேறிவரும் ஜப்பானியப் படையைத் தடுத்து நிறுத்த கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. கடும் துப்பாக்கிச் சண்டையில் ஏற்கெனவே பாதிக்குமேல் வீரர்களைப் பறிகொடுத்தாகி விட்டது. மானெக் ஷாவின் வயிற்றிலும் ஒன்பது குண்டுகள். ஆனாலும் பெரும் மனவலிமையுடன் படைப்பிரிவை வழிநடத்திக் கொண்டிருந்தார். பாலம் பாதுகாக்கப்பட்டது. வீரர்கள் பதறி, ஊசலாடிக் கொண்டிருந்த தங்கள் கேப்டனின் உயிரைமீட்க ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள்.
படைப்பிரிவின் தலைவர் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து, மானெக் ஷா இறந்து கொண்டிருப்பதாக எண்ணி அவரது வீரத்தைப் பாராட்டி தன்னுடைய ராணுவச் சிலுவைப் பட்டையை அவருக்கு அணிவிக்கிறார். அந்த உயரிய விருது இறந்துபோன வீரர்களுக்கு அளிக்கப்படுவது மரபல்ல. அதனால் மானெக் ஷா இறந்துபோகும் முன்பாகவே அவருக்கு அணிவித்திடவேண்டும் என்கிற பதற்றம் படைப்பிரிவின் தலைவருக்கு.
ராணுவ மருத்துவமனையின் மருத்துவர், குண்டுகளால் துளைக்கப்பட்ட மானெக் ஷாவின் உடலில் அறுவை சிகிச்சைசெய்ய மறுக்கிறார். “இவர் உயிர் பிழைப்பது கடினம்” என்று அருகில் நின்ற ராணுவ வீரர்களிடம் சொல்லியபடியே, “என்ன நடந்தது?” என்று கண்மூடிக் கிடக்கும் மானெக் ஷாவிடம் கேட்கிறார். அந்தச் சூழலிலும் சாம் மானெக் ஷா சிரித்தபடியே சொன்னார்... “ஒன்றும் இல்லை... என்னை ஒரு கழுதை ஓங்கி உதைத்து விட்டது”. அதைக்கேட்ட மருத்துவர் திகைத்தார். இந்த உயிரை எப்படியேனும் காப்பாற்றிவிட வேண்டும் என்று முடிவுசெய்தார். கடுமையாகப் போராடி, விளிம்பில் நின்ற மானெக் ஷாவின் உயிரை மீட்டார். மரணத்தின் வாயிலில் நின்ற தருணத்திலும் நகைச்சுவை உணர்வு மங்காமல் இருந்த மானெக் ஷா, பிற்காலத்தில் இந்தியாவின் எட்டாவது ராணுவத் தளபதியாகப் பதவியேற்று படைத்த சாதனைகள் பல. ஆனால், அவர் எதிரி நாட்டுப் படைகளை எதிர்த்து பெற்ற வெற்றிகளைவிட இந்திய மக்களின் மனதை, சாதாரண சிப்பாய்களின் இதயத்தைக் கவர்ந்த விதம்தான், காலத்தை வென்ற காவியமாகிறது.

இந்திய விடுதலைக்குப் பின் கூர்க்கா படைப்பிரிவை நிர்வகித்தார் மானெக் ஷா . ராணுவ வீரர்களின் உணவு, உடை, விடுமுறையென அவர்களின் நலன்சார்ந்தே சிந்தித்து உழைத்த மானெக் ஷாவை அந்தப் படைப்பிரிவே கொண்டாடி மகிழ்ந்தது. உணர்வுப்பூர்வமான உறவு அது. கூர்க்கா படைப் பிரிவுக்குத் தலைமையேற்ற நாள்முதல் ராணுவத் தளபதியாகி புகழின் உச்சத்தில் இருந்தது வரை ஒரு வழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார் மானெக் ஷா.
‘கூர்க்கா படைப்பிரிவைச் சேர்ந்தவர்’ என்று சொல்லி தன்னை யார் பார்க்க வந்தாலும், மறுகேள்வி கேட்காமல், அடுத்த நிமிடம் அந்த வீரரைத் தன் முன்னால் அழைத்துவந்துவிட வேண்டும். அந்த வீரரின் கோரிக்கை எதுவாகயிருப்பினும் உடனே நிறைவேற்றப் படவேண்டும். இதுதான் மானெக் ஷாவின் உத்தரவு.
தாம் தலைமைப் பொறுப்பேற்ற முதல் படைப்பிரிவின் கடைக்கோடி வீரர்வரை அவர் கொண்டிருந்த அன்பு கடைசிவரை மாறவில்லை. ஃபீல்டுமார்ஷல் பட்டம் பெற்றவருக்கு எப்போதும் பணி ஓய்வே இல்லை. இறக்கும்வரை பணியில் தொடர்கிறார் என்று பொருள். சாம் மானெக் ஷா, இறந்தபிறகும் வீரர்களின் மனதை வென்று தொடர்ந்து வழிநடத்துகிறார்.
தான் பிறந்த மாவட்டத்தைவிட பணிபுரிந்த மாவட்டத்தை அதிக வாஞ்சையுடன் அணுகும் அதிகாரிகள் பலரைப் பார்த்திருக்கிறேன். பெரிய மனிதர்கள் பலர் காத்திருக்க, பல ஆண்டுகளுக்குமுன் தான் பணிபுரிந்த பகுதியிலிருந்து வந்திருக்கும் எளிய மனிதருக்கு முன்னுரிமை கொடுக்கும் அதிகாரிகள் பலர் உண்டு. தற்போதைய மழை, பயிர் விளைச்சல், அம்மன் கோயில் திருவிழா, ஊர்ப் பெரியவர்களின் உடல் நலம் என வந்தவரை வாஞ்சையாக விசாரித்து பழைய நினைவுகளில் மூழ்கிப்போகும் முகங்கள் அதிகார வர்க்கத்தில் நிறையவே உண்டு. அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் செயலராகப் பொறுப்பேற்றுச் சில நாள்கள்தான் ஆகியிருந்தன. ஆய்வுக் கூட்டங்கள், விவாதங்கள் என வழக்கம்போல் நேரம் துரிதமாகக் கடந்து செல்கிறது. உதவியாளர் இடையில் அறைக்குள் வந்து, காத்திருப்போர் பட்டியலைத் தருகிறார். ஆய்வுக் கூட்டத்தை மதிய உணவிற்குப் பிறகு ஒத்திவைத்துவிட்டு, ஈரோடு மாவட்டத்திலிருந்து வந்திருந்த அந்த மனிதரை முதலில் வரச் சொன்னேன். அந்த மனிதரோடு ஒரு பெண்... இருவரும் தயங்கிய படியே உள்ளே நுழைகிறார்கள். வந்ததும், “என் மகள் நிறை மாதக் கர்ப்பிணி... எதிரில் அமர்ந்துகொள்ளலாமா?” என்று கேட்கிறார். சிரித்தபடியே அமரச் சொல்கிறேன். அமர்ந்தவர், மிக இயல்பாக உரையாடத் தொடங்குகிறார். பொதுவாகவே தங்கள் மாவட்டத்தில் பணிபுரிந்த கலெக்டர்களை உறவினர்களாகப் பாவித்து உரையாடுவது தமிழகத்தில் இயல்பு. அதுவும் ஈரோடு மக்கள் இன்னும் கொஞ்சம் அதிக உரிமையை எடுத்துக் கொள்வார்கள்.
இப்போது அந்தப் பெண் பேசத் தொடங்குகிறார். கொடுமுடி பக்கத்தில் ஒரு கிராமம். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. உதவிப்பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்து எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார். நேர்முகத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும்போது சென்னையிலிருந்து முகம் தெரியாத நபர்கள் சிலர் தொடர்புகொண்டு, குறுக்கு வழியில் அரசுப் பணி பெற்றுத் தருவது குறித்து விலாவாரியாகப் பேசத் தொடங்கி யிருக்கின்றனர். ‘அப்படியெல்லாம் அரசு வேலை வாங்குவதில் எங்களுக்கு உடன்பாடில்லை’ என்று மறுத்தவர்கள், ‘நம் கலெக்டர்தானே அங்கு மாற்றலாகி வந்திருக்கிறார்’ என்று உடனே ரயிலேறி சென்னை வந்துவிட்டார்கள். அவர்கள் சொன்ன செய்தி எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

கொடுமுடியில் இருந்து அந்த மனிதரும், அவர் மகளும் மேற்கொண்ட பயணம், ஊழலுக்கு எதிரான போராக வடிவம் பெற்றது. பல்லாயிரக் கணக்கான தமிழக இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்திடும் வகையில் செயல்பட்ட ஒரு பெருங்கூட்டம் மீது அரசின் நடவடிக்கை பாய்ந்தது. களைகளை அகற்றினால் மட்டும் போதுமா? நீர் பாய்ச்சி, உரமிட்டு உழவர் கண்காணித்தால்தானே பயிர் முறையாக வளரும். காகித மலைக்கு நடுவே மூச்சுத் திணறிக் கொண்டிருந்த தேர்வாணையம் தொழில்நுட்பச் சாலையில் காலடி எடுத்துவைத்தது. இணைய வழி விண்ணப்ப முறையை அறிமுகப்படுத்தும் போது முதலில் சற்று தயக்கம் இருக்கத்தான் செய்தது. ராமநாதபுரம், தருமபுரி மாவட்டங்களின் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும், பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த மாணவர்களுக்கு கணினி வசதி கிடைக்குமா என்றெல்லாம் கவலையாகத்தான் இருந்தது. ஆனால் புதிய நடைமுறைக்கு அபார வரவேற்பு கிடைத்தது. முப்பதே நாட்களில் பதினைந்து லட்சம் பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மறுநொடி, குறுஞ்செய்தி ஒன்று அவர்களுடைய அலைபேசியில் வந்து விழ, இளைஞர்களுக்கு தேர்வாணையத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை பிறந்தது. விண்ணப்பதாரர்களின் பொறுமையைச் சோதிக்காமல் மூன்றே நிமிடத்தில் விண்ணப்பிக்க வைக்கவேண்டும். அதன்படி எளிமையான படிவமும், 5 வருடங்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் தனிப்பதிவு எண் வழங்கும் முறையும் கொண்டுவந்தோம்.
ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாடெங்கும் புதிதாய் ஆயிரம் பேர் விண்ணப்பித்துக் கொண்டிருப்பதைக் கணினித் திரையில் பார்க்கும்பொழுது கிடைத்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
தேர்வுகளுக்கான அறிவிப்பு முதல், தேர்வு நடக்கும் நாள், முடிவுகள் வெளிவரும் வாரம் என அனைத்தும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. முறைகேடுகளைத் தடுக்க நேர்முகத் தேர்வுகள் நேரடியாகப் பதிவு செய்யப் பட்டன. தேர்வு நடந்து முடிந்தவுடன் விடைகளை வெளியிட்டு தேர்வர்களிடம் இருந்து ஆட்சேபணைகள் பெறுவதில் இருந்து, கலந்தாய்வு மூலம் பணியிடங்களை நிரப்புவது வரை வெறும் எட்டே மாதங்களில் ஏகப்பட்ட மாற்றங்கள். அதற்கு அப்போதைய தேர்வாணையத் தலைவர் திரு.நடராஜ் ஐ.பி.எஸ் அவர்களின் ஊக்கம் ஒரு முக்கிய காரணம். தேர்வாணைய ஊழியர்கள் விடுமுறை நாட்களிலும் கடுமையாக உழைத்ததும் மாற்றம் மலர உதவியது.

திரும்பிப் பார்த்தால், தன் உடல் நலத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் முன்னாள் கலெக்டரிடம் முறையிட நம்பிக்கையுடன் தலைநகர் நோக்கி வந்த அந்தப் பெண்ணுக்கும் உடன் வந்த அவர் தந்தைக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
கடந்த பத்து வருடங்களில் தொழில்நுட்பம் உலகைச் சுருக்கிவிட்டது. தலைநகர் வந்து தகவல் தெரிவிக்க வேண்டிய தேவையெல்லாம் இப்போது இல்லை. அலைபேசியில் செய்தி அனுப்பினால் போதும். பல நிர்வாகச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிடும்.
ஆறு மாதங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து மாணிக்கம் என்ற ஆசிரியர் அனுப்பிய குறுஞ்செய்தி அலைபேசித் திரையில் ஒளிர்ந்தது. சிவகளை என்னும் பகுதியில் பழங்காலத் தொல்பொருட்கள் நிறைய கிடைப்பதாகவும், அப்பகுதியில் அகழாய்வு செய்யவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். பல ஒளிப்படங்களும் அந்த குறுஞ்செய்தியில் இணைக்கப்பட்டிருந்தன. தொல்லியல் துறை அலுவலர்கள் அடுத்த நாளே களத்தில் இறங்கினார்கள். மாணிக்கத்தைத் தேடி வீட்டுக்குப் போனால், “காடு, மலை, சுடுகாடுன்னு எங்காவது சுத்திக்கிட்டிருப்பார். பாத்தா சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொல்லுங்க” என்று அவரின் மனைவி அலுத்துக்கொண்டிருக்கிறார். அலுவலர்களுக்கு ஆர்வம் அதிகமாக, அலுவலர்கள் சிவகளையைத் தேடியிருக் கிறார்கள்.

இறுதியில் அவர்கள் சென்றடைந்தது, ‘பறம்பு’ என்றழைக்கப்பட்ட செம்மண் காடு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நேரடிப் பார்வையிலேயே பல முதுமக்கள் தாழிகள். தகவல் உடனடியாக சென்னைக்கு வந்தது. அடுத்த வாரத்திலேயே நேரடியாக அந்த தொல்நிலத்துக்குச் சென்றோம். அந்தப் பகுதி முழுவதும் ஆய்வு செய்து முடித்தபோது எங்கள் குழுவினர் முகத்தில் பெருமிதம். நாங்கள் நின்று கொண்டிருப்பது மிக முக்கியமான ஒரு தொல்லியல் மேடு. புதைந்துகிடந்த தாமிரபரணி நதிக்கரை நாகரிகத்தின் சுவடுகளை வெளிக் கொணரக் கிடைத்த பெரும் வாய்ப்பு. உரிய முன்மொழிவுகள் தயார் செய்யப்பட்டு மத்தியத் தொல்லியல் துறையின் அனுமதி பெறப்பட்டது. இதோ, வரும் தைப் பொங்கல் முடிந்து சிவகளையில் அகழாய்வுப் பணி தொடங்கவுள்ளது.
அன்று அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியைக் கொண்டு பழந்தமிழர் வாழ்வைத் தேடும் மற்றொரு பயணத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளோம். ‘செய்தியைப் பெறுபவர் உடனே நடவடிக்கை எடுப்பார்’ என்ற நம்பிக்கை, செய்தியை அனுப்பியவருக்கு இருந்திருக்கும். எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் கடைக்கோடியில் இருந்து வரும் செய்தியில் நிறைய உண்மை இருக்கும் என்ற முக்கியத்துவம் மறுமுனைக்குத் தெரிந்திருக்கும்.
‘நம்பிக்கையும், நம்பகத்தன்மையும் நாணயத்தின் இரு பக்கங்கள்!’
- நடை பயில்வோம்...
சபைக் குறிப்பு
இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் ஜெர்மானியப் படையை எதிர்கொள்ள முடியாமல் பிரிட்டன் உள்ளிட்ட நேசப்படையின் 3 இலட்சம் வீரர்கள் வடக்கு ஃபிரான்ஸின் Dunkirk துறைமுகத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். போர்முனையிலிருந்து வீரர்களை எப்படி வெளியேற்றினார்கள் என்பது குறித்து ‘Dunkirk’ என்ற திரைப்படமும், அதே நிகழ்வின்போது லண்டனில் நடந்த அரசியல் சதுரங்கம் குறித்து விவரிக்கும் ‘Darkest Hour’ திரைப்படமும் ஒரே ஆண்டில் (2017) வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றன. வீரர்களை வெளியேற்றும் போர்முனைக் காட்சிகளை நிலம் (ஒரு வாரகால முற்றுகை) , கடல் (ஒரு நாள் முயற்சி), ஆகாயம் (ஒரு மணி நேரத் தாக்குதல்) என மூன்றையும் மிக நேர்த்தியுடன் இணைத்து நெய்த திரைக் கதையோடு Christopher Nolan இயக்கிய ‘Dunkirk’ மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றது. அடுத்து, போர்முனைச் சம்பவங்கள் ஒரு காட்சியில் கூட இடம்பெறாமல் அதே நேரம் போரின் பதற்றத்தைப் பார்வையாளர்கள் உணரும்படி செய்த Darkest Hour திரைப்படத்தில் சர்ச்சிலாக நடித்த Gary Oldman சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்றார்.

2017-ம் ஆண்டு ‘ Dunkirk ’ திரைப்படம் வெளியாகி சில மாதங்கள் கழித்தே ‘Darkest Hour’ வெளியானது. எனினும், ‘Darkest Hour’ திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் சர்ச்சிலின் உணர்ச்சி மிகுந்த உரையைக் கேட்டு மக்கள் வீரர்களைக் காப்பாற்ற விரைவார்கள். அதுதான் ‘Dunkirk’ திரைப்படத்தின் முதல் காட்சியாக விரியும். திரைமொழியின் அழகிய அந்தாதி அது.
இரு திரைப்படங்களையும் தொடர்ச்சியாகப் பார்த்தால் அரசியல் சதுரங்கத்தின் நீட்சியே யுத்தகளம் என்பதும், அதன் நடுவே அப்பாவி பொதுமக்களின் தவிப்பு, சோகம் கவிந்தது என்பதும் புரியும்.
-உதயச்சந்திரன்