
ஓவியம்: டிராட்ஸ்கி மருது
இப்போதெல்லாம் நாளிதழ்களைப் புரட்டினாலே ஏமாற்றமும் குழப்பமும்தான் மிஞ்சுகின்றன.குறிப்பாக, விளையாட்டுச் செய்திகளைத் தாங்கிவரும் பக்கத்தில் சோகம் ததும்புகிறது. நேரத்தையும் நிறத்தையும் மாற்றி ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் கிரிக்கெட்; தோற்றுப்போவதற்காகவே இந்திய மண்ணுக்குவரும் வெளிநாட்டு வீரர்கள்; டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் கடந்த பத்தாண்டுகளாகக் காணப்படும் அதே பழைய பெயர்கள்; இந்தியாவில் நடந்தேறும் மற்றுமொரு சதுரங்கப் போட்டியில் நார்வே மீண்டும் தமிழகத்தை வீழ்த்திய பெரும் துயரம்… இவற்றுக்கு நடுவில், இளவேனில் வாலறிவன் தங்கம் வென்ற செய்தி மட்டுமே ஆறுதல் தருகிறது.

நாள்தோறும் நம்மை ஆட்டுவிக்கும் பரபரப்புகளுக்கு நடுவே, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வை நாம் எளிதாய்க் கடந்துபோய் விட்டோம். சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ரக்பி உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்க அணி வென்றது குறித்த செய்தி. அதிலும், அந்த அணியின் கேப்டன் சியா கோல்சி உலகக்கோப்பையைக் கைகளில் ஏந்தி, வெற்றியைத் தென்னாப்பிரிக்காவின் ஆறுகோடி மக்களுக்கும் காணிக்கை யாக்கிய விதமிருக்கிறதே... மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த தருணம் அது. அந்த வெற்றியின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள நாம் ஒரு திரைப்படத்தைப் பார்த்தாக வேண்டும். ‘Invictus’ அதன் பெயர். பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் உயிர்ப்பான படைப்பு. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.
படத்தின் முதல் காட்சி. இளைஞர்கள் சிலர் ரக்பி பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை பேரும் வெள்ளையர்கள். அருகிலேயே கறுப்பினக் குழந்தைகள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அருகருகே பயிற்சி மேற்கொண்டிருந்தாலும் இரு தரப்பும் வெவ்வேறு உலகங்களில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அடுத்த காட்சியில், மைதானத்தையொட்டிய சாலையில் வாகனங்களின் அணிவகுப்பு. கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் சாலையோரத்தில் குழுமி, “மடிபா! மடிபா!” என்று கத்திக்கொண்டே ஆனந்தக் கூத்தாடுகிறார்கள். வெள்ளையின வீரர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். முகங்களில் அவ்வளவு வெறுப்பு. பயிற்சியாளர் சொல்கிறார். ‘அந்தத் தீவிரவாதி விடுதலையாகிவிட்டதால் இனி நாட்டுக்குக் கேடுதான்..!’
ஆம். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கைதியின் பெயர் நெல்சன் மண்டேலா. 27 வருடங்கள் ராபின் தீவில் தனிமைச் சிறையிலிருந்து, உலக நாடுகளின் வற்புறுத்தலாலும், தென்னாப்பிரிக்க மக்களின் உக்கிரமான போராட்டங் களாலும் விடுதலையானவர். வன்முறையின் நிழல்படிந்து சிறை சென்றவர், ஒரு முழு காந்தியவாதியாக விடுதலையானார்.
காலம் கனிந்தது. தென்னாப்பிரிக்கா, நிறவெறி ஒழிப்புக்குப் பிறகான முதல் தேர்தலைச் சந்திக்கத் தயாரானது. எனினும், மண்டேலா சார்ந்திருந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸுக்கு, நாட்டின் தொல்பழங்குடியினர், வெள்ளையினச் சிறுபான்மையினரையெல்லாம் உள்ளடக்கிய ஓர் அரசியல் அமைப்பை உருவாக்குவது பெரும் சவாலாக இருந்தது. உள்நாட்டுப்போர் வெடிக்கும் அபாயம் நெருங்கிவந்தது. இவ்வளவு குழப்பங்களுக்கு நடுவே, நடந்த பொதுத் தேர்தலில் இரண்டு கோடிப் பேர் வாக்களித்தார்கள். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மகத்தான வெற்றிகண்டது. குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார் மண்டேலா. பதவியேற்பு நிகழ்ச்சியில், அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லப்போவதாக மண்டேலா அறிவித்தபோது அனைவரின் முகங்களிலும் அவநம்பிக்கைதான் படர்ந்திருந்தது. பத்திரிகைகளெல்லாம் ‘மண்டேலா வெற்றி பெறலாம்... நாட்டை ஆள முடியுமா?’ என்று முதல்நாளே கேள்வியெழுப்பின. உள்நாட்டுக் கலவரம், வேலை வாய்ப்பின்மை, குற்றச் செயல்கள் எனப் பட்டியல் நீண்டது. மண்டேலா முதல்நாள் அலுவலகம் செல்லும் காட்சி அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கும். குடியரசுத் தலைவராக பிரிட்டோரியா தலைமைச் செயலகத்தில் நுழையும் மண்டேலாவை எல்லோரும் வேண்டா வெறுப்பாக வரவேற்பார்கள். ஏற்கெனவே பணிபுரிந்து கொண்டிருந்த வெள்ளையினப் பணியாளர்கள் புதிய மாற்றத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் பணி விலகல் கடிதத்தை அளிப்பார்கள். அவர்களது பயத்தைப் போக்க மண்டேலா செய்யும் முயற்சிகள் வீணாகும். எல்லாப் பக்கமும் அவநம்பிக்கையே மிஞ்சும்.

மண்டேலாவின் முதல்நாள் பணி வித்தியாசமாகத் தொடங்கும். அன்றைய நிகழ்ச்சிநிரலில் பிரதான இடம், தென்னாப்பிரிக்காவும் இங்கிலாந்தும் மோதும் ரக்பி போட்டியை நேரில் கண்டுகளிப்பது. பாதுகாப்புப் படையினர் அதிர்ந்துபோகிறார்கள். அரங்கத்தில் ரசிகர்கள் இரண்டாகப் பிளவுபட்டு நின்றார்கள். வெள்ளையரின ரசிகர்கள் தென்னாப்பிரிக்க Springbok அணியையும், கறுப்பரின ரசிகர்கள் இங்கிலாந்து அணியையும் ஆதரித்துக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர். தென்னாப்பிரிக்க வெள்ளையரின வீரர்களை எதிர்த்து யார் விளையாடினாலும் அவர்களை ஆதரிப்பதே கறுப்பரின மக்களின் வழக்கம். சிறையிலிருந்தவரை மண்டேலாவும் அப்படித்தான்.
போட்டி தொடங்கு முன் இசைக்கப்பட்ட புதிய தேசியகீதத்தை வீரர்கள் மனமுவந்து பாடவில்லை. உற்சாகமிழந்து, ஒருங்கிணைப்பு இல்லாமல் மிக மோசமாகத் தோற்றுப்போகிறது தென்னாப்பிரிக்க அணி. ‘இந்தப் படுதோல்வி தேசிய அவமானம்’ என்றும் ‘கேப்டனை நீக்க வேண்டும்’ என்றும் குரல்கள் ஒலிக்கத் தொடங்குகின்றன. இதற்கிடையே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் செயற்குழுக் கூட்டத்தில், தென்னாப்பிரிக்க அணியின் இலச்சினையையும், வீரர்கள் அணியும் உடையின் நிறத்தையும் மாற்ற முடிவெடுக்கப்படுகிறது. ஆண்டாண்டுக் காலமாக நிலவிவந்த நிறவெறியின் அவமானச் சின்னங்கள் அவை என்பதால் அந்த முடிவு.
ஜப்பான் நாட்டுத் தூதுக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் மண்டேலாவுக்கு இந்தச் செய்தி எட்டுகிறது. உடனடியாகக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு விரைந்தார். ‘முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றார். எல்லோரும் திகைத்துப்போனார்கள். “அவர்களிடமிருந்து ரக்பி விளையாட்டைப் பிரித்தால், வெள்ளையர்களை நாம் இழக்கத்துணிந்து விட்டோம் என்று பொருள். பழிவாங்கப்படுவதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அவர்களுக்கு நாம் அதிர்ச்சியைக் கொடுக்க வேண்டும். மன்னிப்பும் பெருந்தன்மையும் நாம் ஏந்தும் புதிய ஆயுதங்கள். உங்களை வழிநடத்த என்னை அனுமதியுங்கள்” என்பார் மண்டேலா.

தலைவரின் அன்புக் கட்டளைக்குப் பணிகிறது அந்தக் கூட்டம். உலகக்கோப்பைப் போட்டியை நடத்தத் தயாராகிறார்கள். ஆனால், வீரர்களோ தன்னம்பிக்கை இழந்து நிற்கிறார்கள். அந்த நேரத்தில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பிராங்க் பியானருக்குக் குடியரசுத் தலைவருடன் தேநீர் அருந்த அழைப்பு வருகிறது. குழப்பத்துடன் மண்டேலாவின் மாளிகைக்குச் செல்கிறார் கேப்டன். அன்புடன் வரவேற்ற மண்டேலா, ‘சில நாள்களுக்கு முன் கணுக்காலில் அடிபட்டதாகச் சொன்னார்களே... குணமாகிவிட்டதா இப்போது’ என்று கேட்பார். வியந்துநிற்கும் கேப்டனுக்குத் தானே தேநீர் தயாரித்துக் கொடுப்பார். மெல்ல பேச்சு அவருடைய சிறை வாழ்க்கை நோக்கித் திரும்புகிறது. 27 வருடங்கள் தனிமைச்சிறையில் கழித்த நாள்களில் அவர் உதடுகள் அடிக்கடி உச்சரித்த விக்டோரிய மகாராணியார் காலத்திய கவிதை ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ‘Invictus’ என்ற தலைப்பில் வில்லியம் ஹென்லி எழுதியது.
‘I am the master of my fate... I am the captain of my soul’ என்று முடியும் பாடல் அது. பின்னர் தன்னம்பிக்கையின் தேவை குறித்தும், பிறரது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்போது ஏற்படும் தடைகள் குறித்தும் பேசி வழியனுப்புவார் மண்டேலா. வெளியே வந்த கேப்டன், காத்திருந்த தன் தோழியிடம் சொல்வார்... ‘மண்டேலாவிற்கு உலகக்கோப்பையை வென்று பரிசளிக்க வேண்டும்!’
மண்டேலா தன் வீரர்களுக்குப் புதுமையான ஒரு திட்டத்தை முன்மொழிகிறார். வீரர்கள் ஒரே இடத்தில் பயிற்சிபெறாமல் நாடு முழுக்கப் பயணம் செய்து குழந்தைகளோடு, இளைஞர்களோடு இணைந்து விளையாடுவது. முதலில் தயங்கினாலும் தங்களுக்கு நாடு முழுவதும் கிடைத்த வரவேற்பில் அசந்து போனார்கள் வீரர்கள்.
அணியின் ஒரே கறுப்பரின வீரர் செஸ்டரை நோக்கிச் செல்லும் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டுமொத்த அணியுடனும் இரண்டறக் கலக்கிறார்கள். இந்தக் காட்சிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் நேரலையாய் ஒளிபரப்பாகின்றன. அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் புதிய நலத்திட்டங்கள் பற்றியும் அந்நிய முதலீடுகள் பற்றியும் விவாதித்துக் கொண்டிருக்க, மண்டேலா ரக்பி விளையாட்டை ரசித்துக்கொண்டிருப்பார்.
உலகக்கோப்பையின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. போட்டிக்கு முதல் நாள் இரவு இருவர் மட்டும் உறங்கவேயில்லை. ஒருவர் மண்டேலா; மற்றொருவர் அணியின் கேப்டன். போட்டி கடுமையாக இருக்கிறது. ரசிகர்களின் உற்சாகம் வீரர்களையும் தொற்றிக்கொள்ள உயிரைக் கொடுத்து விளையாடுகிறார்கள் வீரர்கள். போட்டியில் வெல்கிறது தென்னாப்பிரிக்கா. அரை இறுதியில் பிரெஞ்சு அணியை வென்று கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த கேப்டனுக்கு ஒரு செய்தி வருகிறது. ‘அடுத்த நாள் காலை 6 மணிக்கு வீரர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.’ பயிற்சிக்காக இருக்கும் என்று நினைக்கிறார்கள் வீரர்கள். ஆனால், ராபின் தீவுச் சிறைக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். 27 வருடங்கள் தனிமைச்சிறையில் வாடிய மண்டேலாவின் நிழல் அந்த வெளியெங்கும் உறைந்துகிடக்கிறது. வீரர்கள் மௌனத்தில் ஆழ்ந்து போகிறார்கள். மண்டேலா அடைக்கப்பட்டிருந்த அறை எண் 466-ல் நிற்கிறபோது கேப்டனுக்கு மண்டேலா பாடிய விக்டோரியக் கவிதை நினைவுக்கு வருகிறது.

இறுதிப்போட்டி நியூஸிலாந்துடன். போட்டி தொடங்குமுன் நியூசிலாந்து அணியினர் படுஆக்ரோஷமாக, அவர்க ளுடைய பழங்குடியினர் நடனமான ‘ஹாகா’வை மைதானத்தில் ஆடும் பொழுதே பாதி வெற்றியை ருசித்துவிடுவார்கள். அந்த அணியின் 120 கிலோ எடை கொண்ட லோமு என்ற வீரரைப் பார்த்தால் எல்லோருக்கும் மிரட்சி வரும். எல்லிஸ் பார்க் ஸ்டேடியம் நிரம்பிவழிகிறது. 60,000 ரசிகர்கள்... அவர்களின் உற்சாகக் குரல் நகரெங்கும் மிதந்து செல்கிறது.
போட்டி தொடங்கச் சில நிமிடங்களே இருக்கின்றன. ஒரு ஜெட் விமானம் மைதானத்தை நோக்கி வருகிறது. மைதானத்திற்கு அருகே வந்தவுடன் அந்த விமானம் தாழப் பறக்கிறது. ரசிகர்கள் பதற்றத்தோடு அண்ணாந்து பார்க்கிறார்கள். விமானத்தின் கீழே இறக்கைப் பகுதியில் ‘Good Luck Springbok’ என்ற எழுத்து விரிகிறது. உணர்ச்சி வெள்ளத்தில் உந்தப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர்கள் உயிரைக் கொடுத்து விளையாடுகின்றனர். போட்டி மிகக் கடுமையாக இருக்கிறது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 9-9 என சமமான எண்ணிக்கை பெறுகின்றன. கூடுதல் நேரம் தரப்படுகிறது. ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. வேறுபாடுகளை மறந்து தங்கள் நாட்டு அணியை ஆதரித்தவர்களுக்கு இறுதியில் மாபெரும் வெற்றி. தென்னாப்பிரிக்கா 15-12 என்ற எண்ணிக்கையில் நியூசிலாந்து அணியைத் தோற்கடித்து உலகக்கோப்பையை வெல்கிறது.
பார்வையாளர் மாடத்தில் இருந்த மண்டேலா துள்ளிக் குதிக்கிறார். ஆறாம் எண் கொண்ட தென்னாப்பிரிக்க ஜெர்சியை அணிந்தபடியே தன் அணிக்கு உலகக்கோப்பையைப் பரிசளிக்கிறார். இன வேறுபாடுகளை மறந்து நாடே உற்சாகத்தில் மிதக்கிறது. வரலாறு திரும்புகிறது.
பன்னிரண்டு வருடங்கள் கழித்து, 2007-ல் உலகக் கோப்பையை மீண்டும் வென்ற தென்னாப்பிரிக்க அணியில் இரண்டு கறுப்பரின வீரர்கள் இடம்பெற்றார்கள். ஆனால் இந்த ஆண்டான, 2019-ம் ஆண்டில் ஜப்பானில் மீண்டும் உலகக்கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்க அணியின் மொத்தம் 31 பேரில் 11 பேர் கறுப்பரின வீரர்கள். அதுமட்டுமா? உலகக்கோப்பையைத் தன் கரங்களில் ஏந்திய சியா கோல்சி, இளமையில் அடுத்த வேளை உணவுக்கே வழியின்றி வறுமையில் வாடிய கறுப்பரின வீரர்.
இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை மிக எளிதில் வென்று உலகக்கோப்பையை ஏந்தியபடியே, தென்னாப்பிரிக்கக் குடியரசுத் தலைவர் மட்டுமன்றி முதன் முதலில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட தன் தந்தையின் முன்னிலையில், கேப்டன் சியா கோல்சி சொன்னது... “எங்கள் வானவில் தேசத்தின் ஆறு கோடி மக்களுக்கும் உலகக் கோப்பையைக் காணிக்கையாக்குகிறேன்!” வென்றது தென்னாப் பிரிக்கா மட்டுமல்ல, மண்டேலாவின் தெலைநோக்குப் பார்வையும்தான். வரலாறு தன் பயணக்குறிப்பில் ஒரு வாசகத்தைக் கவனமுடன் பதிவு செய்து கொண்டது.
‘மன்னிப்பும் பெருந்தன்மையும் மிகச்சிறந்த ஆயுதங்களே!’
- நடை பயில்வோம்...
இத்தொடரை ஒலிவடிவில் கேட்க Vikatan Audio யூடியூப் தளத்தை சப்ஸ்க்ரைப் செய்யவும்.
சபைக் குறிப்பு
மேற்கு இந்தியத் தீவுகளின் கிரிக்கெட் அணி இருபது ஆண்டுக்காலம் கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தது. அதன் வேகப்பந்து வீச்சாளர்களான ஆண்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல், காலின் கிராப்ட் ஆகியோர் எதிரணி வீரர்களைக் கனவிலும் மிரட்டிக்கொண்டிருந்த காலம்.

ஆனால் அதற்குப் பின்னால் அந்த அணி உலகெங்கும் சந்தித்த அவமானங்கள், குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியப் பத்திரிகைகள், ரசிகர்களின் கேலி, கிண்டலுக்கு நடுவே கிளைவ் லாயிட் தலைமையில் விஸ்வரூபம் எடுத்த கதை ‘Fire in Babylon’ என்ற டாக்குமென்டரி படமாக வெளிவந்தது. ‘Calypso இசையும், மதுக்கிண்ணம் ஏந்திய விடலைகளும்’ என்று பரிகசிக்கப் பட்டவர்கள், உலகை வென்ற வரலாறு இது.
-உதயச்சந்திரன்