
முப்பதாண்டுக் காலம், தன் வாழ்வின் பெரும்பகுதியைத் தமிழின் வேர் தேடி அலைந்த அந்தத் தமிழ்மகன்...
முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தது அந்தச் சம்பவம். ஒடிசாவின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் அந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி. மதுரையில் பிறந்து முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து, முதன்முதலில் தமிழிலேயே சிவில் சர்வீஸ் தேர்வெழுதி வெற்றிபெற்றவர். தமிழ்மேல் தீராக்காதல் கொண்டவரைக் காலம் கலிங்கத்தில் பணியமர்த்தியது. ஒடிசாவைப் புரிந்து கொள்வதற்காக அதன் உள்ளும் புறமும் சுற்றிக்கொண்டிருந்தவர் கண்ணில், கோராபுட் நகருக்கு அருகேயிருந்த ஒரு மைல் கல் புதிய தரிசனத்தைக் கொடுத்தது. ‘தமிளி’ என்று எழுதப்பட்டிருந்த அந்தக் கல் அவரது பயணத்தை மாற்றியது.

‘தமிளி’ என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் கிராமத்திற்குள் நுழைந்தார். அந்தக் கிராமப் பழங்குடி மக்கள் பேசிக்கொண்டிருந்த ‘குவி’ எனும் மொழியின் வேரை ஆய்ந்து பார்க்கிறார். அது திராவிடப் பூர்வீகம் கொண்ட மொழியாக இருக்கிறது. அந்த மொழியின்மீது வேட்கை உருவாகிறது. குவியையும், கோயா போன்ற பழங்குடி மொழிகளையும் கற்றுத் தேர்கிறார். தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் குறிஞ்சித்திணை வாழ்வியலும் அந்தப் பழங்குடி மக்களின் வாழ்வியலும் அப்படியே பொருந்திப்போவது அவருக்கு வியப்பூட்டுகிறது. மாநிலம் கடந்து அவரது ஆய்வுகள் நீள்கின்றன. மத்தியப்பிரதேசப் பழங்குடி கிராமங்களின் பெயர்களும் தேனி, பழனி, குமுளி, இடுக்கி போன்ற தமிழக-கேரள எல்லையோர நகரங்களின் பெயர்களும் ஒன்றுபோலிருப்பதை அறிந்ததும் அவரது ஆய்வின் தன்மை மாறுகிறது. முப்பதாண்டுக் காலம், தன் வாழ்வின் பெரும்பகுதியைத் தமிழின் வேர் தேடி அலைந்த அந்தத் தமிழ்மகனின் பெயர் திரு.பாலகிருஷ்ணன்.
பாலகிருஷ்ணனின் மொத்த ஆராய்ச்சியும் இப்போது உலகத்தரத்திலான ஒரு நூலாகத் திரண்டிருக்கிறது. நூற்றாண்டுக்கால சிந்துவெளிப் புதிருக்கு விடைதேடும் விதமாக அவருடைய ‘Journey of civilization - Indus to Vaigai’ என்ற நூல், இந்த வாரம் வெளியாகி, ஆய்வுலகுக்கு இன்னுமொரு விளக்காகி வெளிச்சம் சேர்த்திருக்கிறது. அது என்ன சிந்துவெளிப் புதிர்?
இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கில் ஒரு நகரம் உறங்கிக்கொண்டிருந்தது. யாரேனும் தன்னை அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்களா என்று அந்த நகரத்தின் நெஞ்சில் ஏக்கம் தகித்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்ட தவிப்பு அது. அவ்வப்போது அந்த வழியே செல்லும் வழிப்போக்கர்கள் சிதிலமடைந்து கிடந்த அந்த நகரைப் பற்றிக் குறிப்பு எழுதிச்சென்றார்கள்.
1856-ல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, சிந்துநதியின் கரையில் லாகூரையும் கராச்சியையும் இணைத்து 150 கி.மீ தூரத்துக்கு ரயில்வே பாதை அமைக்கத் தொடங்கியது. சிதைந்துகிடந்த அந்தத் தொல்நகரத்தின் செங்கற்கள் அந்த ரயில்பாதையின் கட்டுமானத்துக்குப் பயன்படுத் தப்பட்டன. அந்த வேதனையைச் சகித்துக் கொண்டு தன்னை அடையாளம் காணப்போகும் மனிதர்களுக்காக அந்த நகரம் பொறுமையாகக் காத்திருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்திய மகாத்மா காந்தியை, காலம் இந்து -முஸ்லிம் ஒற்றுமைக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளப் பணித்த 1924-ம் ஆண்டு. அதேசமயம், பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் அகழாய்வு மேற்கொண்டிருந்த தொல்லியல் அலுவலர்கள், தாங்கள் கண்டெடுத்த பொருள்களுடன் சிம்லா நோக்கி விரைந்து கொண்டி ருந்தனர். கோடைக்காலத் தலைநகரின் கார்டன் மாளிகையில், சர் ஜான் மார்ஷல் காத்துக்கொண்டி ருந்தார். இந்தியத் தொல்லியல்துறையின் டைரக்டர் ஜெனரலான அவர் முன்னால், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அடுக்கப்பட்டன. மொகஞ்சதாரோ - ஹரப்பா இரண்டு இடங்களுக்கும் இடையே சுமார் 700 கி.மீ இடைவெளி இருந்தாலும் இரு இடங்களிலும் கிடைத்த பொருள்களின் ஒற்றுமை ஆச்சர்யத்தைக் கொடுத்தது. சுடுமண் உருவங்கள், முத்திரைகள், செங்கற்கள் என அனைத்தையும் ஆய்வுசெய்த மார்ஷலின் முகத்தில் மகிழ்ச்சி பரவுகிறது.
1924-ம் ஆண்டு செப்டம்பர் மாத ‘Illustrated London News’ பத்திரிகையில், அதுவரை உலகம் அறிந்திராத, 5,000 ஆண்டுப் பழைமையான ‘சிந்துவெளி நாகரிகம்’ பற்றி அறிவிக்கிறார்.
அன்றிலிருந்து இன்றுவரை சிந்துவெளி நாகரித்தின் மீதான ஆர்வம் குறையவே இல்லை. ஆய்வாளர்களையும், மக்களையும் தொடர்ந்து அந்தத் தொல்நகரம் கவர்ந்திழுத்துக்கொண்டே இருக்கிறதே... என்ன காரணம்? 5,000 ஆண்டுகளுக்கு முன்பே நகரமைப்பு, கட்டட நேர்த்தி, நீர்மேலாண்மை, கழிவு நீர்க்குழாய்கள், துறைமுகம், அழகிய அணிகலன்கள், சுடுமண் உருவங்கள் என அந்த நகரக்குழிகளுக்குள் கிடைத்த தொல்லியல் பொக்கிஷங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அது மட்டுமல்ல, இதுவரை படித்தறிய முடியாத சிந்துவெளி முத்திரைகளும் அதன்மீதான ஆர்வத்தைக் கூட்டத்தான் செய்கின்றன.
தாய்த் தெய்வவழிபாடு

சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்புகள் இருக்கட்டும்... அந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் யார்? நாகரிகம் தழைத்திருந்த அந்த நகரம் சிதைந்தது எப்படி? சிந்துவெளி மக்களின் வழிவந்த தலைமுறையினர் எங்கே போனார்கள்... இப்போது எங்கே இருக்கிறார்கள்? இவையெல்லாம்தான் சிந்துவெளிப் புதிர்கள். இந்தப் புதிர்களுக்கு விடைதேட முயன்று களைத்துப்போனது ஆய்வுலகம். திராவிடக் கருதுகோளை முன்வைத்து ஹீராஸ் பாதிரியார், சுனிதி குமார் சாட்டர்ஜி முதல் அஸ்கோ பார்பலோ, ஐராவதம் மகாதேவன் வரை பலரும் ஆய்வுசெய்து எழுதியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் தாண்டி இப்போது வந்திருக்கிற பாலகிருஷ்ணனின் புதிய நூல் என்ன சொல்லவருகிறது?
ஊர்ப் பெயர்களை வைத்து அதன் தோற்றம், வரலாறு என ஆய்வு செய்யும் முறை இடப்பெயர் ஆய்வு (Toponymy) எனப்படும். அதன்படி தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு தென்னிந்திய மாநிலங்களில் உள்ள சுமார் இரண்டு லட்சம் ஊர்ப் பெயர்களையும், சிந்துவெளி நாகரிகம் செழித்திருந்த இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளில் உள்ள இரண்டு லட்சம் ஊர்ப் பெயர்களோடு பொருத்திப்பார்த்தால் 2,037 பெயர்கள் மிகச்சரியாகப் பொருந்தி வருகின்றன.
அதுமட்டுமல்ல... கொற்கை, வஞ்சி, தொண்டி ஆகிய பெயர்கள் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களிலும் பாகிஸ்தானிலும் இன்றும் இருக்கின்றன. ஊர், பட்டி, பள்ளி என்று முடியும் இடப்பெயர்கள் ஆப்கானிஸ்தானில் அதிகம். தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழின் வட்டார வழக்குகள் புழங்கும், தென்பாண்டி, குட்டநாடு, மலை நாடு, அருவ நாடு என அனைத்தும் அதே பெயர்களில் இன்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளில் இருக்கின்றன. பாரி, பேகன் போன்ற சங்ககால வேளிரின் பெயர்கள், மூவேந்தர்களைக் குறிக்கும் கரிகாலன், சோழன், சேரல், உதியன், மாறன், செழியனெல்லாம் இடப்பெயர்களாக அங்கே நிலைத்திருக்கின்றன. காவேரி வாளா, பாண்டியன் வாளா, முர்கன், தணிகே, குமரன் வாளி, பொதினே, மத்ரை, வன்னி... அங்குள்ள ஊர்ப்பெயர்கள் தமிழுக்கு மிகநெருக்கமாக இருக்கின்றன.
கீழடியும் சிந்துவெளியும்

பலுசிஸ்தானின் ‘பிராகூய்’ எனும் திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியில் ‘கல்’ என்னும் சொல் அதே பொருள்தாங்கி வருகிறது. அந்தப் பகுதிகளில் காணப்படும் மலை, வரை, கோடு என்ற பின்னொட்டுகளோடு முடியும் பெரும்பான்மையான இடங்கள் கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடிகள் உயரமான பகுதிகளாகவே இருப்பதும் வியப்புதான்.
சிந்துவெளிப்புதிரின் அடுத்த கட்டத்திற்குச் செல்லுமுன் நூலாசிரியர் முன்வைக்கும் சில கேள்விகள் முக்கியமானவை. பழந்தமிழ் இலக்கியங்களில் அடிக்கடி இடம்பெறும் மூதூர் எங்கே இருந்திருக்கும்... தொல்புகழ், பெரும்பெயர் எதைக் குறிக்கும்... சங்க இலக்கியங்களில் தெற்கேயிருந்து வீசும் தென்றல் (8 முறை), பருவ மழையைத் தாங்கிக் கிழக்கிலிருந்து வீசும் கொண்டல் (8 முறை) ஆகியவற்றைக் காட்டிலும் வடக்கிலிருந்து கடுங்குளிர் கொண்டு வீசும் வாடை (55 முறை) தீப்பிழம்பு கக்கும் கோடை (42 முறை) ஆகிய இரண்டும் அதிக அளவில் இடம்பெறுகின்றன. இது வடவேங்கடம் முதல் தென்குமரி வரை மட்டுமல்ல, தென்னிந்திய நிலப்பரப்பிற்கே புதுமையானதுதானே? சிறுபாணாற்றுப் படையில் வரும் ஒட்டகமும், இமயமலை பற்றிய குறிப்புடன் வலம்வரும் கவரிமாவும் எப்படி இடம்பெற்றன? நன்னன் சேய் நன்னன் ஆண்ட கொங்காணம் எங்கே? புறநானூற்றுப் பாடல் உரைக்கும் நாற்பத்து ஒன்பது வழிமுறைக்குமுன் வேளிர் ஆண்ட ‘துவரை’ எது ?
சங்ககாலப் புலவர்களின் இயற்கையைப் படம் பிடித்தாற்போன்ற நுணுக்கமான விவரிப்புகளின் துணைகொண்டு அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். நற்றிணை, அகநானூறு பாடல்களில் உப்பங்கழி நாட்டில் பயன்படுத்தப்படும் ‘கணைக்கால் அத்திரி’ எனப்படும் காட்டுக் கழுதையினம் சுட்டிக் காட்டப்படுகிறது.

குறிப்பாக அகநானூற்றுப் பாடல் ஒன்றில், தலைவியைப் பார்க்க அத்திரி வகைக் கழுதையில் அமர்ந்து தலைவன் செல்லும்போது உப்பங்கழியில் அக்கழுதையின் கால்களைச் சுறா மீன் கடித்ததைப் பற்றி ஒரு குறிப்பு வருகிறது. ‘அவ்வகைக் கழுதையினமும், அரிய வகை சுறா மீனும் வாழக்கூடிய உப்பங்கழிப்பகுதி இந்தியாவிலேயே குஜராத்தின் கட்ச் வளைகுடாதான்’ என்று ஆதாரத்துடன் நிறுவுகிறார் நூலாசிரியர். வறண்ட பகுதியில் பெரும் பசியோடு அலையும் ஒட்டகம் எலும்பைத் தின்னும் அரிய காட்சி சிறுபாணாற்றுப் படையிலும், அகநானூற்றுப் பாடலிலும் இடம்பெறுகிறது. தமிழகத்தில் பாலை நிலமே இல்லாதநிலையில், அக்காட்சியானது குஜராத் பகுதிக்கே பொருந்தி வருகிறது. அது மட்டுமல்ல... வடக்கிலிருந்து வீசும் கடுங்குளிர் வாடைக் காற்றும், மேற்கிலிருந்து பாலைத் திணையில் இடம்பெறும் எரிவாய் கோடைக் காற்றும் அந்தப் பாடல்கள் இயற்றப்பட்ட பகுதி இன்றைய குஜராத்தாக இருக்கக்கூடும் என்பது நவீன ‘Windrose Graphical Tool’ வழியே நிறுவப்படுகிறது.
சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நன்னன் அரசாண்ட பொன்படு கொங்காணம், ஏழில் குன்றம் எங்கே என்று தேடினால், இன்றைய மராட்டியத்தில் நாசிக் நகரத்துக்கு அருகே ‘சப்தசிருங்கி’ எனும் ஏழுமலைகள் அடங்கிய சக்திபீடம் கிடைக்கிறது. பெருஞ்சேரல் இரும்பொறை விந்திய மலையில் எழுந்தருளிய கொற்றவையை வணங்கியதாகப் புறநானூற்றில் ஒரு குறிப்பு வருகிறது. இன்றும் மகாராஷ்டிரப் பகுதிகளில் 22 இடங்கள் ‘வையை’ என வழங்கப்படுகின்றன. அத்தனை இடங்களும் ஏதாவது ஒரு நதி, குளம், கால்வாய் போன்ற நீர்நிலைகளின் கரைகளிலேயே அமைந்துள்ளன என்பது வியப்பு. அகநானூற்றை ஒட்டி, ‘அகம் எழுநூறு’ எனக் கருதத்தக்க ‘சட்டாசாயி’ என்ற 1800 ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பட்ட நூலில் தலைவன் தலைவியின் காதல் வாழ்க்கை சங்க இலக்கிய மரபுப்படியே அமைந்திருக்கிறது.

பழந்தமிழ் மன்னர்களின் ஆட்சிப்பரப்பு இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை நீண்டிருந்தது என்பதைச் சங்க இலக்கியங்கள் நிறுவுகின்றன. அதன் தொடர்ச்சியாக, சிந்துவெளி நாகரிக மக்கள் சங்ககாலத் தமிழரின் மூதாதையர் என நிரூபிக்கும்வகையில் வலுவான ஆதாரங்களை முன்வைக்கிறது பாலகிருஷ்ணன் எழுதியுள்ள இந்த நூல். சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, குஜராத், மராட்டியம் வழியாக தெற்கு நோக்கிப் பயணம் நிகழ்ந்திருக்க வேண்டும். அலை அலையாய் நிகழ்ந்த இடப்பெயர்வுகள், ஏற்கெனவே பழந்தமிழ்ப் பரப்பில் வசித்த மக்களுடன் இரண்டறக் கலந்திருக்க வேண்டும். சங்க இலக்கியப் பாடல்கள் ஒரு சில ஆண்டுகளில் இயற்றப்பட்டு ஒரே நாளில் தொகுக்கப்பட்டவை அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் நினைவலை களின் தொகுப்பே என்ற தெளிவு, இங்கு அவசியம்.
சிந்துவெளி நாகரிகத்தில் முதன்மையாகக் காணப்படும் தாய்த்தெய்வ வழிபாடு ஆதிச்சநல்லூரில் தொடர்கிறது; வன்னி மரத்தின் முக்கியத்துவம் சிந்துவெளி தொடங்கி நாடெங்கும் பரவி, ஏன், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வரை நிறைந்திருக்கிறது; சிந்துவெளி முத்திரையில் காணப்படும் சேவற்சண்டை, இந்தளுர் கல்வெட்டிலும் காணப்படுகிறது; மொகஞ்சதாரோவின் திமில்கொண்ட காளை இன்றும் அலங்காநல்லூரில் வலம்வருகிறது; கீழடியில் கிடைத்த குறியீடுகள் சிந்துவெளிக் குறியீடுகளுடன் ஒத்துப்போகின்றன;

சேயோன், செம்மை, செங்கல் என சங்க இலக்கியங்களில் அதிகம் விரவிவரும் சிவப்பு நிறம் சிந்துவெளியிலும் எதிரொளிக்கிறது; சிந்துவெளி தொடங்கி தமிழகம் வரை சிவப்பு-கறுப்பு இருவண்ணப் பானை வழித்தடம் இருக்கிறது... இப்படி அடுக்கடுக்காக ஆதாரங்கள் அணிவகுக்கும்போது, ‘சிந்துவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும்’ என்ற சொற்றொடரின் பொருள் புலனாகிறது.
இதுவரை நடைபெற்ற சிந்துவெளிப் புதிரை விளக்கும் முயற்சிகளில் மிக முக்கியமானது இந்த நூல்.
இந்த நூல் பேசும் பொருள், முன்வைக்கும் ஆதாரங்கள் இன்னும் பல ஆண்டுகளுக்குப் பேசப்படும். விரைவில் இந்நூல் தமிழில் வெளிவந்தால், வருங்காலத்தில் இதையொட்டி நூறு நூல்கள் புதிதாய் எழுதப்படக்கூடும். முப்பதாண்டுக்கால உழைப்பில் முகிழ்ந்த ‘Journey of civilization - Indus to Vaigai ’ நூல் சிந்துவெளி நாகரிகத்தின் செழிப்பில் தென்னிந்திய நிலப்பரப்பில் பரவியிருக்கும் ஆதிக்குடிகளின் பங்கு குறித்து ஆதாரத்துடன் விளக்குகிறது. அதிலும் சிந்துவெளி நாகரிகத்திற்கு உரிமை கொண்டாடும் தகுதி தமிழுக்கே அதிகம் என்பதை உரத்துச் சொல்கிறது.
இந்தச் சிந்துவெளிப் பயணம் குறித்து ஒன்றைச் சுருங்கச் சொல்லலாம்.
‘ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்!’
- நடை பயில்வோம்...
சபைக் குறிப்பு
வேதியியலும், சட்டமும் பயின்று ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஒருவர் தமிழ்க்கல்வெட்டியலில் சாதனை படைக்க முடியுமா? அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் சமீபத்தில் மறைந்த ஐராவதம் மகாதேவன். இந்திய வெளியுறவுப் பணிக்கு முதலில் நியமிக்கப்பட்டவர், அன்றைய பிரதமர் நேருவின் தலையீட்டால், இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து தமிழ்நாட்டில் பணியாற்றத் தொடங்கினார். தமிழகத்தில் மொழிப் போராட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது சங்ககாலத்தைச் சேர்ந்த புகளூர்க் கல்வெட்டை மகாதேவன் கண்டுபிடித்ததும் ஒருவகையில் பொருத்தமே.

பழந்தமிழ் எழுத்துகள் குறித்து அவர் சமர்ப்பித்த கட்டுரைகள் தமிழ் ஆய்வுலகில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தின. தினமணி ஆசிரியராக அவர் பணியாற்றிய காலகட்டம் இதழியலின் பொற்காலம். சிந்துவெளிப் பண்பாடு ஒரு தொல்திராவிடப் பண்பாடு என்பதையும், சிந்துவெளிக் குறியீடுகள் தமிழ் எழுத்துகளின் முன்னோடி வடிவங்கள் என்பதையும் அறிவியல் முறைப்படி ஆய்வுசெய்தவர்.
-உதயச்சந்திரன்