
ஆங்கிலப் புத்தாண்டு நம் மரபில் இணைந்துவிட்ட ஒன்று...
புத்தாண்டு பிறந்திருக்கிறது. கனவும் மறதியும்தான் நம் வாழ்க்கைப் பயணத்தைச் செதுக்குகின்றன. கடந்த காலத்தின் கசப்புகளை மறக்கவே மனம் என்றும் விழைகிறது.

கனவு நனவாகிட அற்புதங்கள் ஏதும் நிகழாதா என்ற ஏக்கம்தான் வாழத் தூண்டுகிறது. புத்தாண்டை வரவேற்க உருவாகியிருக்கும் வடிவங்கள் புதுமையானவை. கடற்கரையோர நள்ளிரவுக் கொண்டாட்டங்கள், காலைநேர வழிபாடு, அலைபேசியில் குறுஞ்செய்தி என வடிவம் மாறினாலும் ஆங்கிலப் புத்தாண்டு நம் மரபில் இணைந்துவிட்டதாகவே தோன்றுகிறது.
அதிகார வர்க்கம் புத்தாண்டை எதிர்கொள்ளும் விதம் சுவையானது. புத்தாண்டு விடுமுறை கழிந்து வரும் முதல் வேலைநாள், மிகவும் பரபரப்பாகக் காட்சியளிக்கும். வழக்கமான சோம்பலை விடுத்து அரசு அலுவலகங்களில் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். வாழ்த்து தெரிவிப்பதில் பணிவும் அதை ஏற்றுக்கொள்வதில் அதிகாரமும் எஞ்சி நிற்கும். உயர் அலுவலரை வாழ்த்த மேற்கொள்ளப்படும் புனிதப் பயணங்கள், வருடத்தின் முதல் நாளிலேயே அதிகம் உழைக்கப் பணிக்கப்பட்ட வாகனங்களின் சலிப்பு, பழங்கள், பரிசுப்பொருள்களின் அணிவகுப்பு இவை அனைத்தும் பிரிட்டிஷ் கால நடைமுறையின் நீட்சிதான். மரபின் தொடர்ச்சி சில நேரங்களில் மரபு மீறலாக மாறுவதும் உண்டு. புத்தாண்டு வாழ்த்துகளில் உண்மையை மட்டும் பிரித்தறிவது பெரும் சவாலாக மாறிவிடுவதால் வாழ்த்துகள் பரிமாறும் சடங்கை முற்றிலுமாகத் தவிர்ப்பதும், முடிந்தால் தலைமறைவாவதும் என் இயல்பு.

ஆனால் இம்முறை டிசம்பர் மாத இறுதியிலேயே புத்தாண்டுத் தாக்குதலுக்கு ஆளாக நேர்ந்தது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு பெங்களூரிலிருந்து வரும் ஒரு வழக்கறிஞருக்குச் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தேன். அவர் ஒரு கலை விமர்சகரும்கூட. அவரிடமிருந்து அவசரமாக ஒரு குறுஞ்செய்தி. ‘உங்கள் அலுவலக உதவியாளர்கள் உள்ளே விட மறுக்கிறார்கள்’ என்று. அதிர்ச்சியடைந்து விசாரித்தால் பொன்னாடை, பரிசுப் பொருள்களைத் தவிர்க்கச் சொல்லி நான் போட்ட உத்தரவு கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறதாம். உள்ளே வந்த வழக்கறிஞரின் முகத்தில் கோபம் கொப்பளித்தது. சட்டப்பிரிவுகளை யோசித்துக் கொண்டிருந்த வரை இயல்பு நிலைக்குக் கொண்டு வர சில மணித்துளிகள் ஆயின.
தான் கொண்டு வந்தது ஒன்றும் புத்தாண்டுப் பரிசு அல்ல, சென்ற வருடத்துக் காலண்டர் மட்டுமே என்றார். பிரித்துப் பார்த்தால் அத்தனையும் அழகிய ஓவியங்கள். மாபெரும் ஓவியரின் கைவண்ணத்தில் உருவான பேசும் பொற்சித்திரங்கள். இந்த வருடத்துக் காலண்டரில் இடம்பெறப் போகும் ஓவியத்திற்கான அனுமதி வேண்டிச் சந்திக்க வந்ததாகக் கூறினார். பேச்சு இயல்பாகத் திசை மாறியது. ஓவியரின் திறமை, அழகியல் நேர்த்தி, ஓவிய மரபு என்று தொடர்ந்து, காலண்டர் செய்த புரட்சியில் வந்து நின்றது. ஆம், காலண்டர் மூலம் இந்தியாவில் ஒரு பண்பாட்டுப் புரட்சியே நடைபெற்றது என்று சொன்னால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். எப்படி நடந்தது அது?
வாருங்கள், கிளிமானூர் அரண்மனைக்குச் செல்வோம். திருவிதாங்கூர் அரசரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி. கேரள கிராமங்களுக்கே உரிய எழில்கொஞ்சும் இயற்கைச் சூழல். பசுமை போர்த்திய நிலப்பரப்பில் மரங்கள், தடாகம் சூழ கம்பீரமாக எழுந்து நின்ற அரண்மனையின் முற்றம். ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, சமையலறை நோக்கி விரைந்து சென்று நொடிப்பொழுதில் திரும்புகிறான். கையில் கரித்துண்டு. வெண்மை தோய்ந்த அரண்மனைச் சுவரில் அவன் கரங்கள் வரையத் தொடங்குகின்றன. நீண்டு வளைந்த முதற்கோடு, கன்றைத் தேடும் பசுவின் உடலமைப்பைப் போன்றே இருந்தது. விலகி நின்று ரசித்த சிறுவனின் முகத்தில் திருப்தி.

அடுத்த அரைமணி நேரத்தில் அரண்மனை முற்றத்தில் ஒரு கானகமே உயிர்த்து எழுகிறது. பசும் புல்வெளிகள், வெட்கம் தவிர்த்துக் கூடிச் சிணுங்கும் மரக்கிளைகள், மழலையின் ஓவிய விரல்களுக்கு மதிப்பளித்து, பகைமை மறந்து கூடிநின்ற விலங்கினங்கள் எனப் புதியதோர் உலகம் உருவானது. மெய்ம்மறந்து நின்ற சற்று நேரத்தில் காலடியோசை கேட்கிறது. ‘என்ன காரியம் செய்தீர்கள் இளவரசே’ என்று கூறிய அரண்மனைப் பணியாளர், சிறுவன் வரைந்த ஓவியங்களை அழிக்க முயல்கிறார். சிறுவனின் மாமா பார்த்துவிட்டால் அவ்வளவுதான். அழித்தல் பணி தொடங்கிச் சில நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். “எத்தனை நாள்களாக இந்த வேலை நடக்கிறது” என அதட்டியது அந்தக்குரல். அந்தச் சிறுவனை அழைத்து வரக் கட்டளையிட்டது. ‘ஓவியம் வரைவதில் அவ்வளவு ஆர்வமா உனக்கு?’ தயக்கத்துடன் தலையசைத்த சிறுவனை வாரி அணைத்துக் கொள்கிறார் அரசர். முறையான ஓவியப் பயிற்சி தர உத்தரவிடுகிறார்.
அந்தச் சிறுவனின் பெயர் ரவிவர்மா. தந்தையின் கண்டிப்பும், தாயின் அரவணைப்பும் ஒருபுறம். தாய்வழி வந்த வடமொழி ஞானமும் இசையறிவும் மறுபுறம். ஒரு மேதை உருவாகிக் கொண்டிருந்தார். பன்னிரண்டு வயதில் தன் மாமா வரைந்த ஓவியத்தில் திருத்தம் செய்கிறார். கருட வாகனத்தில் எழுந்தருளும் மகாவிஷ்ணுவின் ஓவியம் அது. கருடனின் இறக்கைகளில் உரிய திருத்தம் செய்திட ஓவியம் உயிர் பெறுகிறது. தன் மருமகன் உயரப் பறந்திடத் தயாராகிவிட்டதை உணர்ந்தவர், ரவிவர்மாவைத் திருவிதாங்கூர் அரசவைக்கும் அழைத்துச் செல்கிறார். ஆயில்யம் திருநாள் அரசரின் அன்பும், ஆசியும் கிடைக்கிறது. ஓவியப் பயிற்சியைத் தொடர்கிறார் ரவிவர்மா. இடையில் இளவரசியைக் கரம்பிடிக்கும் வாய்ப்பு தவறிவிடுகிறது. காரணம், சற்று நிறம்குறைந்த ரவிவர்மாவின் உடல் அமைப்பு. நிறம் பார்த்து நிராகரிக்கப்பட்டவர் பின்னாளில் வண்ணம் கொண்டு தீட்டிய ஓவியங்களுக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே மயங்கிப்போனது.

ஐரோப்பாவில் நடந்த தொழிற்புரட்சி கலையுலகிலும் எதிரொலிக்கிறது. புதிய வண்ணக் கலவைகள், நவீனத் தூரிகைகள், நகரும் ஓவியக்கூடம் எனப் புதுமையான கண்டு பிடிப்புகள் ஓவிய மரபை மாற்றத் தொடங்கின. பல்வேறு நாடுகளிலிருந்து ஓவியர்கள் இந்தியா வரத் தொடங்கினர். அப்படி திருவிதாங்கூர் அரசவைக்கு வருகை புரிந்த நெதர்லாந்து நாட்டு ஓவியர் தியோடர் ஜென்சன், தயக்கத்துடன் ரவிவர்மாவைத் தனது ஓவியக் கூடத்துக்குள் அனுமதிக்கிறார். மேற்கத்திய பாணியையும் தொழில் நுட்பத்தையும் உள்வாங்கிக் கொண்ட ரவிவர்மா ஒரு புதிய ஓவிய மரபை உண்டாக்கினார்.
ரவிவர்மாவின் ஓவியங்களில் புராண, இதிகாசங்களில் இடம்பெறும் கதை மாந்தர்கள் உயிர்பெற்றார்கள். வடமொழி இலக்கியங்களில் பெற்ற தேர்ச்சி, கதகளி நாட்டிய அறிமுகம் அவர் ஓவியங்களில் பிரதிபலித்தது.

சாகுந்தலை, சீதை, அகலிகை, தமயந்தி ஆகியோர் மனித உருவம் கொண்டு மக்களை நெருங்கி வந்தார்கள். தோழியின் கரம் பற்றி, காலில் குத்தாத முள்ளைக் கரங்கள் தேடிட, சாகுந்தலையின் கண்கள் மட்டும் பிரிந்து துஷ்யந்தனின் பின்னால் செல்லும் காட்சியைக் கண்டு பெண்கள் மனம் உருகினர். அசோகவனத்தில் அமர்ந்திருக்கும் சோகமே உருவான சீதை, சாப விமோசனம் பெற்ற அகலிகை, அன்னப்பறவையுடன் உரையாடும் தமயந்தியின் உருவங்களில் மக்கள் தங்களையும், தங்கள் உறவுகளையும் பொருத்திப் பார்க்க அனுமதித்தன ரவிவர்மாவின் ஓவியங்கள்.
புதிதாய்க் கிடைத்த ஆங்கிலக் கல்வி, நிச்சயமற்ற அரசியல் சூழல், துளிர்க்கும் சீர்திருத்தக் கருத்துகள் இவற்றின் இடையே 19-ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் பெருகி வந்த சுதந்திர உணர்வின் கலை வடிவமாக உருப்பெற்றன ரவிவர்மாவின் ஓவியங்கள். கலந்துகொண்ட அத்தனை போட்டி களிலும் பரிசுகளை அள்ளிக் குவித்தன அவருடைய படைப்புகள்.

கடல்கடந்து பயணம் செய்வது சமூகக் குற்றமாகக் கருதப்பட்ட காலகட்டத்தில் ரவிவர்மாவின் ஓவியங்கள் வியன்னா, சிகாகோ வரை சென்று பரிசுகளை வென்றன. அவர் படைப்புகளைக் கண்டு ரசிக்க பிரிட்டிஷ் இளவரசர்கள், கவர்னர் ஜெனரல்கள், இந்திய சமஸ்தானத்து அரசர்கள், செல்வந்தர்கள் என அனைவரும் அணிவகுத்தனர். பரோடாவில் நடைபெற்ற அவருடைய ஓவியக் கண்காட்சியைக் காண ரயில்களில் கூட்டம் வழிந்தது. ஒட்டகப் பயணம் மேற்கொண்டவர்கள் பலர்.
ஓவிய மேதைக்குக் கிடைத்த புகழை, புதிதாய்ப் பதவியேற்ற விசாகம் திருநாள் அரசரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வெறுத்து ஒதுக்கப்பட்டார் ரவிவர்மா. அரசவை உதவித்தொகை நிறுத்தப்பட்டது. கலைஞர்களுக்கே உரிய சுயமரியாதையுடன் வெளியே வந்த ரவிவர்மாவை நாடே தாங்கிப் பிடித்தது. இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார். பல்வேறு நகரங்களில் அவருடைய ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. ரவிவர்மாவின் தூரிகை தீட்டிய அணிகலன்கள் காலம் கடந்தும் ஒளிவீசின. அவர் பயன்படுத்திய வண்ணம், கலை நுணுக்கம், உடை மடிப்புகள், எதிரொளிக்கும் நிழல் என, நூறு ஆண்டுகள் கழிந்தும் கலை விமர்சகர்களால் பேசப்படுகிறார்.

ஓவியத் திறமைக்கு இணையாகப் போற்றப்பட வேண்டிய இன்னொரு குணமும் ரவிவர்மாவிடம் உண்டு. தன் ஓவியங்களை அரசர்களுக்கும் செல்வந்தர் களுக்கும் மட்டுமன்றி சாமானியர் களுக்கும் கொண்டு சேர்க்க விரும்பினார். நிரந்தரக் காட்சிக் கூடம் அமைப்பது ஒரு முயற்சி. மற்றொன்று ஜெர்மனி யிலிருந்து அச்சு இயந்திரத்தை இறக்குமதி செய்து பம்பாயில் வண்ண அச்சுக் கூடத்தை நிறுவி தன்னுடைய ஓவியங்களை ஆயிரக்கணக்கில் அச்சடித்து விநியோகம் செய்வது.
இப்படித்தான் ரவிவர்மாவின் ஓவியங்கள் அரண்மனையிலும், செல்வந்தரின் மாளிகைகளிலு மிருந்து விடுபட்டு, பொதுமக்களின் கரங்களைச் சென்றடைந்தன. கூடவே கடவுளர்களும், புராணக் கதை மாந்தர்களும் மனித உருக்கொண்டு சாமானியர் மத்தியில் வலம்வந்தார்கள். கோயில் கருவறையில், கோபுரங்களில் பக்தி மேலிடப் பார்த்த கடவுள் உருவங்கள் கேள்விகள் எதுவும் கேட்காமல் தங்கள் கரங்களில் தவழ்வதைப் பார்த்த மக்கள் ஆனந்தத்தில் திளைத்தனர். ரவிவர்மாவின் தூரிகை நிகழ்த்திய மாபெரும் புரட்சி அது.

ரவிவர்மா மறைந்து 50 ஆண்டுகள் கழிந்து தமிழ்நாட்டிலும் ஓவியம் கொண்டு ஒரு பண்பாட்டுப் புரட்சி நடந்தது. எனினும் அதன் வடிவம் சற்றுத் தனித்துவம் கொண்டது. இம்முறை ஓவியம் காலண்டர் வடிவில் எங்கும் பரவியது. அதன் தொடக்கப் புள்ளி சிவகாசியை மையங்கொண்டது சுவையான கதை. முதல் உலகப் போரின்போது தடைப்பட்ட தீப்பெட்டி உற்பத்தியை இந்தியாவில் தொடங்க முனைகிறது, சுவீடன் நாட்டு விம்கோ நிறுவனம். பம்பாயில் வளர்ந்த நிறுவனத்தின் கரங்கள் சிவகாசி வரை நீண்டன . தொழில் முனையும் திறன் கொண்ட தொழிலதிபர்களால் சிவகாசி ‘குட்டி ஜப்பான்’ ஆனது. ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அச்சு இயந்திரங்கள் தீப்பெட்டி அட்டையை அச்சிட்டபின் ஓய்வுநேரத்தில் வேறு ஏதும் பணி உண்டா என்று கேட்க, உருவானது காலண்டர் தயாரிக்கும் தொழில். அதேநேரத்தில் சினிமாவின் வருகையால் நலிவடைந்துபோன நாடக சபாக்களில் பணியாற்றியவர் பலர் கோவில்பட்டியில் தங்கி ஓவியம் வரையவும், புகைப்படம் எடுக்கவும் தொடங்கினர்.
காலண்டர்களில் தெய்விக மணம் கமழ கோவில் பட்டியைச் சேர்ந்த ஓவியர் கொண்டையராஜு தலைமையிலான குழுவே முக்கியக் காரணம். மீனாட்சி திருக்கல்யாணம் தொடங்கி வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள், பாலமுருகன் எனக் கடவுள் உருவம் தாங்கிய காலண்டர்கள் சாமானியர்களின் இல்லங்களிலும் இடம்பெற ஆரம்பித்தன. பயபக்தியோடு பாதுகாப்பான தூரத்தில் தரிசித்த கடவுள்கள் எல்லாம் இப்போது வீட்டு வரவேற்பறையில் எழுந்தருளினார்கள்.

தன் மகள் திருமணம் தாமதமாகிறதே என்று கலங்கும் தாய்க்கு, மீனாட்சி திருக்கல்யாண காலண்டர் சுற்றம் சூழ விரைவில் திருமணம் நடக்கும் என உறுதியளித்தது. கடன் வாங்கி நொடித்துப்போன வணிகருக்கு செல்வலட்சுமி ஆறுதல் கூறினாள். தேர்வில் வெற்றிபெற மாணவர்களுக்குக் கலைமகள் துணைவந்தாள். பள்ளி சென்று மகன் திரும்பிவரும் வரை தாய்க்குத் துணையாய் குறும்புகள் பல செய்து உடனிருப்பான் பாலகிருஷ்ணன்.
காலண்டர் வழியே சாமானியர்களின் இல்லங்களுக்கு வருகை புரிந்த கடவுள் உருவங் களுடன் மக்கள் உரையாடவும், உறவாடவும் தொடங்கினார்கள்.
காலண்டர் மூலம் நடந்த மாபெரும் மௌனப்புரட்சி அது.
- நடை பயில்வோம்...

சபைக் குறிப்பு
உலக அளவில் காலண்டர் ஓவியங்களில் புகழ்பெற்றவர், அமெரிக்காவின் நார்மன் ராக்வெல். தன் வாழ்நாளில் 4000-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்தவர். உலகப்போரின்போது அவரால் வரையப்பட்ட ஓவியங்கள் அழியாப்புகழ் பெற்றவை. அவருக்கு இணையாகத் தமிழ்நாட்டில் சாதனை புரிந்தவர் ஓவியர் மாதவன். இவரது கைவண்ணத்தில் சினிமா சுவரொட்டிகளும், பகுத்தறிவுக் கூட்ட அழைப்புகளும் ஒளிர்ந்தன. இவர் ஓவியங்களில் சாமானியர்கள் அதிகம் இடம்பெற்றனர். தமிழரின் பண்பாட்டு அசைவுகள் மாதவனின் ஓவியங்களில் உறைந்து பின் உயிர்பெற்றுத் தமிழர் கரங்களில் தவழத் தொடங்கின. மகிழ்ச்சி பொங்கும் உழவர் திருமுகம் தாங்கிய பொங்கல் வாழ்த்து அட்டைகள் காலத்தை வென்றன.
-உதயச்சந்திரன்