மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாபெரும் சபைதனில் - 15

மாபெரும் சபைதனில்
பிரீமியம் ஸ்டோரி
News
மாபெரும் சபைதனில்

ஓவியம்: டிராட்ஸ்கி மருது

னக்கான முதல் புத்தகத்தை நான் தேர்வுசெய்தபோது வயது ஐந்தரை. ஒரு சிறுவர் இதழின் டிசம்பர் மாத வெளியீடு அது. குழந்தை இயேசு, அன்னையின் பாதுகாப்பான கரங்களில் உறங்கும் அந்த அட்டைப் படம் இப்போதும் மனதில் தங்கியிருக்கிறது. அந்த இதழின் பெயர் `ரத்னபாலா.’ அங்கு தொடங்கி, `பாலமித்ரா’, `அம்புலி மாமா’ என்று நகர்ந்த பயணம், இரும்புக்கை மாயாவியை வைத்து சூனியக் கிழவிகளை வென்றிடத் திட்டம் தீட்டுவதில் முடிந்தது.  

 IAS officer Udhayachandran shares his experiences part 15
IAS officer Udhayachandran shares his experiences part 15

நண்பர்களுடன் சேர்ந்து நாங்களே உருவாக்கிய கதைகளில் மந்திர தந்திரங்களும் சாகசங்களும் நிரம்பியிருந்தன. புராண, இதிகாசங்களைக் கரைத்துக் குடிக்க வேண்டும் என்று விழுந்து விழுந்து படிக்கத் தொடங்கினேன். வீட்டுக்கு வரும் உறவினர் களுக்கு ராமாயணக் கதாபாத்திரங்கள் பற்றியும் மகாபாரதப் போர் பற்றியும் நுணுக்கமாக விளக்கம் கொடுக்கும் அளவுக்கு உயர்ந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு. ஒருமுறை நாமக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கிய சோவியத் புத்தகங்கள் புதிய உலகுக்கு வழிகாட்டின. விவரம் தெரியாத வயதில் மக்சிம் கார்க்கியின் ‘தாய்’ படித்ததாக நினைவு. தினமணி நடுப்பக்கக் கட்டுரை களைத் தேடிப்படித்தபொழுது, எதிர்பாராமல் ‘சிந்தா நதி’யில் பயணம்.  அம்மா படித்துக்கொண்டிருந்த ஜெயகாந்தன், நானே தேடிப் படித்த சுஜாதா என எங்களுடைய புத்தக வேட்டை தொடர்ந்தது.

அடிக்கடி ஓடி விளையாடினால் மூச்சிரைப்பு அதிகமாகும் என்பது மருத்துவரின் அறிவுரை. விளைவு என் நண்பர்கள் விளையாடும் அத்தனை விளையாட்டுகளுக்கும் நிரந்தர நடுவர் நான்தான். எனவே, இளமைக்காலம் புத்தகங்களுடனேயே கழிந்தது. மகிழ்ச்சியையும் சோகத்தையும் பகிர்ந்துகொள்ள, தோற்றுப்போனால் தாங்கிக்கொள்ளக் கிடைத்த தோழமையாய் புத்தகங்கள் மாறின.

தேடல் கொண்டு தஞ்சமடையும் நம்மை ஏளனம் செய்து பரிகசிக்காமல், தன்னிடமிருக்கும் அனைத்தையும் பருகக்கொடுக்கும் பெருந்தன்மை புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு.

சின்னஞ்சிறு வயதில் எனக்கு வாசிக்கக் கற்றுக் கொடுத்த என் அம்மா, பின்னாளில் என் இலக்கியப் பயணத்தில் தோழமையுடன் இணைந்துகொண்டது ஓர் அழகிய கவிதை. வாசிப்பும் எழுத்தும் இனிதாக அமைய நட்பு வட்டம் மிக அவசியம். பள்ளித் தோழர்கள் மதனோடும் விஜயபாஸ்கரோடும் அந்த வயதிலேயே பரிமாறிக்கொண்ட நூல்கள் பல நூறு இருக்கும். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஈரோட்டிலிருந்து பதவி உயர்வில் வந்த தலைமை ஆசிரியர் மூலம் பெரியார் அறிமுகமானார்.

ப்ளஸ் டூ படிக்கும்போதே தமிழ் இலக்கிய ஆளுமைகள் பலர் நன்கு அறிமுகம். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கி.ரா, நீலபத்மநாபன், தி.ஜானகிராமன் என்று பறந்து கொண்டிருந்த என்னை, ஒரு புதிய உலகத்துக்கு அழைத்து வந்தது ஒரு நூல். அது `ஜே.ஜே: சில குறிப்புகள்.’ அந்தத் தாக்கத்தோடு பொறியியல் கல்லூரி சேர்ந்த முதல் வருடமே கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை நடத்த ஆரம்பித்தோம். அதில் ‘எது புதுக்கவிதை’ என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை இடம் பெற்றிருந்தது. ந.பிச்சமூர்த்தி, ஞானக்கூத்தன், பசுவய்யாவில் தொடங்கி பாலகுமாரனின் தொடக்கக் கால கணையாழி கவிதைகள், அப்துல் ரகுமானின் ஹைக்கூ என விரிந்தது அந்தக் கட்டுரை. கல்லூரி நூலகத்தில் அதைப் படித்துவிட்டு சீனியர்களின் ராகிங் சற்றுப் புதுவிதமாக மாறிப்போனது. ஒவ்வொரு நாளும் விதம்விதமாக, புதுக்கவிதை ஒன்றை கல்லூரியின் பிள்ளையார் கோயில் மரத்திடம் சொல்லிப் புரிய வைக்கவேண்டிய புதுமையான தண்டனை கிடைத்தது.

 IAS officer Udhayachandran shares his experiences part 15
IAS officer Udhayachandran shares his experiences part 15

கல்லூரியில் படித்த ஒவ்வொரு வருடமும் செமஸ்டர் விடுமுறையில் சென்னையை நோக்கிப் புனிதப் பயணம். வருடம் முழுக்க சேர்த்த பணம், அம்மாவின் சேமிப்பு எனத் திரட்டி எடுத்துக்கொண்டு வருவது வழக்கம். காயிதே மில்லத் கல்லூரியில் நடக்கும் புத்தகக் கண்காட்சியை முற்றுகையிட நண்பர்களுடன் வியூகங்கள் வகுப்பதும் உண்டு. முதல் இரண்டு நாள்கள் தனித்தனியே பிரிந்து கடை, கடையாய் ஏறி இறங்கி ஆராய்ச்சி. பின் கருத்துப் பரிமாற்றம். மூன்றாம் நாள்தான் புத்தகங்கள் வாங்குவது. இரண்டு மூன்று நண்பர்கள் இணைந்து வாங்கிப் பகிர்ந்துகொள்வதில் பலன் அதிகம்.

புத்தகங்களுடனான இந்த ஆழமான பிணைப்புதான் நான் பதவியேற்கும் மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்தவேண்டும் என்ற கனவைச் செதுக்கியது. மதுரையில் கலெக்டராகப் பதவியேற்ற முதல் வாரத்திலேயே இதற்கான வேலைகளைத் தொடங்கினோம். முதலில் உள்ளூர் விற்பனையாளர்கள் தயங்கினார்கள். பின் சென்னையில் பதிப்பாளர் சங்கத்தைத் தொடர்பு கொள்ள வழி பிறந்தது.

சென்னைக்கு வெளியே தென் தமிழ்நாட்டில் மதுரையில் நடைபெறும் முதல் புத்தகக் கண்காட்சியே பிரமாண்டமாக அமைய வேண்டும் என்ற கனவு. 150 அரங்கங்கள், தினந்தோறும் கலைநிகழ்ச்சிகள், இலக்கியச் சொற்பொழிவுகள், ஆவணப்படம் திரையிட ஏ.கே.செட்டியார் அரங்கம் எனத் திட்டங்கள் தயாராகின. நன்றாக நினைவிருக்கிறது... தமுக்கம் மைதானத்தில் அரங்கம் அமைக்கும் பணி தொடங்குவதைப் பார்வையிடச் சென்றபோதுதான் தலைமைச் செயலகத்திலிருந்து ஒரு முக்கியமான செய்தி கிடைத்தது. பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் தேர்தல் நடத்துவது குறித்துத் தமிழ்நாடு அமைச்சரவை எடுத்த ஒரு முக்கியமான முடிவு அது. திரும்பிப் பார்த்தால், மிகவும் பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்த காலகட்டம் அது. ஒருபுறம் மதுரைக்குப் புதிய ஐ.டி.பூங்கா ஏற்படுத்த உரிய இடத்தைத் தேர்வு செய்தல், தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறி முறைப்படி மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடத்தி முடித்தல், பாப்பாபட்டி முதலான கிராமங்களில் சமூக நீதியை நிலைநாட்டும் முயற்சிகள். இவை அனைத்தும் ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தன. இதற்கு நடுவே புத்தகத் திருவிழா. போர்க்காலத்தில் ஒரு கையில் போர்வாளும் மறு கையில் புத்தகமும் ஏந்தி நிற்கும் போர்வீரனின் விநோத உருவம்தான் நினைவுக்கு வருகிறது.

இத்தனை பரபரப்புகளுக்கும் இடையே புத்தகத் திருவிழாவிற்கு நுணுக்க மாகத்  திட்டமிட்டது சுவையான அனுபவம். மதுரை மாநகர் மட்டுமன்றித் தென் தமிழ்நாட்டின் அனைத்து நகராட்சிகளிலும் சுவர் விளம்பரங்கள் செய்யவும், பத்திரிகை, தொலைக்காட்சி, பண்பலை என எல்லா ஊடகங்களிலும் விளம்பரங்கள் செய்யவும் முடிவுசெய்தோம். பேருந்துகளில், ஆட்டோக்களில் புத்தகக்கண்காட்சியை வரவேற்கும் பதாகைகள், தென் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டக் கலெக்டர்கள், கல்லூரி முதல்வர்களுக்குக் கடிதம், பள்ளி, கல்லூரிகளுக்கு அழைப்பு என அடுக்கடுக்காய் பல முடிவுகள் செயல் படுத்தப்பட்டன.

பெருமழை பெய்வதற்கான ஒத்திகைகளை அவ்வப்போது நடத்தி எங்கள் மன உறுதியைக் குலைக்கும் முயற்சியில் இயற்கை ஈடுபட்டுவந்தது. எனினும் புத்தகத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் உறுதியாக நடந்தன. கலெக்டர் ஆர்வத்துடன் ஈடுபடும் செயல்களுக்கு மாவட்டத்தின் மொத்த நிர்வாகமும் இணைந்து வரும் அழகே தனிதான். வழக்கமாக விண்ணப்பதாரர்களைச் சீண்டுகிற விதிமுறைகள் இப்போது பெட்டிப் பாம்பாய்ச் சுருங்கிட, அனுமதி வீடுதேடி வரும். வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை, மறுவாழ்வுத்துறை அலுவலர்கள் எல்லாம் புத்தகத் திருவிழா நடக்கும் தமுக்கம் மைதானத்திற்கு தினந்தோறும் புனிதப் பயணம் மேற்கொள் வார்கள். கலெக்டரைச் சந்திக்கும் முன்னர் சிலர் தாங்கள் வாங்கிய புத்தகங்களின் பெயரை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வார்கள்.

திருவிழாக்கோலம்  பூண்ட தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழாவை இறையன்பு ஐ.ஏ.எஸ் தொடங்கி வைத்தது மிகப் பொருத்தமாக அமைந்தது.  கலெக்டராக இருந்தபோது காஞ்சிபுரத்தில் புத்தகக் கண்காட்சியை முதன்முதலில் நடத்தியவர் அவர். சிறு தூறலுக்கு நடுவே தொடங்கியது நிகழ்வு.  புத்தகக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், இலக்கியம், குறும்படம் என ஒரு பண்பாட்டுத்  திருவிழாவாகவே மலர்ந்தது. முதல்நாள் சிலப்பதிகார நாட்டிய நிகழ்ச்சி. அடுத்து ஜெயகாந்தனின் சொற்பொழிவு. ‘இலக்கிய உலகின் முடிசூடா மன்னருக்கு மாவட்ட ஆட்சியர் கட்டியம் கூறுவதே முறை’ என்று சொல்லி, ‘சில நிமிடங்களுக்கு முன் இம்மேடையில் கண்ணகி மதுரையை எரித்தாள். ஜே.கே-வின் கர்ஜனையில் மீண்டும் ஒருமுறை மதுரை நடுங்கி ஒடுங்கிட மாவட்ட ஆட்சியராக என் ஒப்புதலைத் தருகிறேன்’  என்று சொல்லி அமர்ந்தபோது, ஜே.கே-வின் கரங்கள் வாஞ்சையோடு என்னைப் பற்றிக்கொண்டன. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இலக்கிய நிகழ்ச்சிகள். முக்கியமான தமிழ்ப் படைப் பாளிகள் அனைவரும் கலந்து கொண் டனர்.  முதல் முயற்சியே மாபெரும் வெற்றி பெற்றது.  

முதல்நாள் வருகைபுரிந்த பள்ளிக் குழந்தைகள் அடுத்த நாள் தங்கள் பெற்றோரை அழைத்து வந்தார்கள். தென்தமிழ்நாடெங்கிலுமிருந்து பார்வை யாளர்கள் குவிந்தனர்.  நான்மாடக் கூடல்  நீண்ட உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், புத்தகம் வாங்கிட சுலபத் தவணைகளில் வங்கிக் கடன் வழங்கப்பட்டது. பத்து நாள் கண்காட்சியின் நிறைவு விழாவில் பேசியது பதினான்கு ஆண்டுகள் கழிந்தும் இன்றும் நினைவில் இருக்கிறது. ‘வழக்கமாக புயல், வெள்ளம், சட்டம், ஒழுங்கு எனப் பேரிடரைச் சந்திப்பதுதான் மாவட்ட நிர்வாகத்துக்கு வழக்கம். முதன்முறையாய் தென்றலைத் தீண்டியிருக்கிறோம். இனி ஒவ்வோர் ஆண்டும் நூறு பூக்களை மலரச் செய்வோம்.  புத்தகத் திருவிழா நடைபெற்ற பத்து நாள்களும், பெருமழை பெய்திட இடைக்காலத் தடை வழங்கிச் சிறப்பித்த இயற்கை நீதிமன்றத்திற்குத் தலை வணங்குகிறேன். அவ்வப்போது முகங்காட்டி விடைபெற்ற வாழ்த்து மழைத்துளிக்கு மட்டும் என் மனமார்ந்த நன்றி’ என்று குறிப்பிட்டேன்.

இப்போது அநேகமாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறத் தொடங்கி விட்டன. மாவட்ட கலெக்டர்களின் வரையறுக்கப்படாத கடமைகளில் ஒன்றாகவே புத்தகத் திருவிழா நிகழ்ச்சி மாறிவிட்டது. அதுவும் என் இளவல்கள் தாரேஸ் அகமது மற்றும் நந்தகுமார் இருவரும் பெரம்பலூர், இராமநாதபுரம் மாவட்டங் களில் நடத்திய புத்தகக் கண்காட்சிகள் மாபெரும் வெற்றி பெற்றன. சொல்லப் போனால், நந்தவனங்களைவிடப் பாலைவனச் சோலைகள் புனிதமானவை.

வாசகர்களுக்காக மாநிலமெங்கும் புத்தகக் கண்காட்சிகள் இந்தியாவில் வேறெங்கும் நடப்பதாகத் தெரியவில்லை. திரு.ஸ்டாலின் குணசேகரன் முன்னின்று நடத்தும் ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவில் அப்துல்கலாம் கலந்துகொண்டபோது பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டது நினைவுக்கு வருகிறது.

மதுரையில் புத்தகக் கண்காட்சி நடத்தி முடித்து, பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்தோம். எனக்கு வந்துசேர்ந்த பாராட்டுக் கடிதங்களில் ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. மேலூரில் இருந்து நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி எழுதியது. அழகிய கையெழுத்தில், புத்தகக் கண்காட்சிக்கு அப்பா, அம்மாவுடன் சென்றதாகவும், நிறைய கடைகள் இருந்ததால் கால் வலித்த தாகவும், அங்கங்கே ஐஸ்கிரீம் கடை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் எழுதியிருந்தாள்.

உண்மைதான். குழந்தைகளின் பார்வையிலும் திட்டமிட வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்ட நாள் அது. இன்றும் எந்த ஊரில் நடக்கும் புத்தகத் திருவிழாவுக்குச் சென்றாலும், அந்த ஐஸ்கிரீம் சிறுமியின் கண்களைத் தேடுவது என் வழக்கமாக மாறிவிட்டது. மழலைக் குழந்தைகளின் மனதை வென்றால் புதிய அத்தியாயம் படைக்கிறோம் என்று பொருள்!

- நடை பயில்வோம்...

னம் சோர்வடையும் போதெல்லாம், இலக்கின்றிப் பயணிக்கத் துடிக்கும் போதெல்லாம் நான் தஞ்சமடையும் புத்தகங்கள் சில உண்டு. நூலின் எந்தப் பக்கத்தில் ஆரம்பித்து எங்கே வேண்டுமானாலும் முடிக்க அனுமதிக்கும் பெருந்தன்மை கொண்ட அந்தப் புத்தகங்கள் என் மனதுக்கு நெருக்கமானவை.

  • திருக்குறள்

  • யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி நினைவுகள் மற்றும் பாரதி கவிதைகள்

  • கொங்குதேர் வாழ்க்கை

  • தி.ஜானகிராமன் சிறுகதைகள்

  • கரிசல் காட்டுக் கடுதாசி

  • பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய `பண்பாட்டு அசைவுகள்’

  • காமராஜரின் வாழ்க்கைச் சம்பவங்கள் அடங்கிய ‘ஆகட்டும் பார்க்கலாம்’

  • கணையாழியின் கடைசிப் பக்கங்கள்

  • எஸ்.ரா.வின் `துணையெழுத்து’

  • கல்யாண்ஜி கவிதைகள்

  • ஜெயமோகனின் `அறம்’

  • சிதம்பர நினைவுகள்

  • என் மேசையில் தற்போது நான் வாசிக்கக் காத்திருக்கும் புத்தகங்கள்:

21Lessons for the 21st Century - by Yural Noah Harari

  • The Anarchy - William Dalrymple

  • Upheaval - Jared Diamond

  • How Democracies Die – Steven Levitsky

  • The Courtesan, the Mahatma and the Italian Brahmin – Tales from Indian History

- Manu S. Pillai

  • Good Economics for Hard Times: Better Answers to our Biggest Problems –Abhijit Banerjee and Esther Duflo 

  • வைக்கம் போராட்டம் - பழ அதியமான்

  • காந்தி கொலை – பத்திரிகைப் பதிவுகள் – கடற்கரய் மத்த விலாசம்

  • சுளுந்தீ – முத்துநாகு

  • ஏதிலி - அ.சி.விஜிதரன்

  • அக்காளின் எலும்புகள் - வெய்யில்

சபைக் குறிப்பு

தமிழரின் தொன்மையை உலகெங்கும் கொண்டு சேர்த்திட, தமிழகத் தொல்லியல் துறையின் ஒரு சிறு முயற்சி. கீழடி அகழாய்வு அறிக்கை தமிழ், ஆங்கிலம் உட்பட மொத்தம் 24 மொழிகளில் வெளியாகிறது.

சபைக் குறிப்பு
சபைக் குறிப்பு

ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், சீனம், ரஷ்யம், அரபி என 6 ஐ.நா. அலுவல் மொழிகள்; இந்தி, சமஸ்கிருதம், பஞ்சாபி, குஜராத்தி, அசாமி, ஒடியா, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என்று 12 இந்திய மொழிகள்; ஜப்பானியம், கொரியன், இத்தாலி, போர்த்துகீசியம், ஜெர்மானியம் என மேலும் 5 உலக மொழிகள் எனக் கீழடியின் பெருமை இனி உலகை வலம் வரும்.

விலை மதிப்பற்ற கீழடி அகழாய்வு அறிக்கையின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிப்புகளின் விலை ரூ.50 மட்டுமே. இம்முறை சென்னைப் புத்தகத் திருவிழாவில் அதிகம் விற்பனையாகப்போகும் நூல் இதுதான் என்பது என் கணிப்பு.

-உதயச்சந்திரன்