மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாபெரும் சபைதனில் - 16

மாபெரும் சபைதனில்
பிரீமியம் ஸ்டோரி
News
மாபெரும் சபைதனில்

ஓவியம்: டிராட்ஸ்கி மருது

கிட்டத்தட்ட பதின்மூன்று வருடங்களா கிவிட்டன. அந்த மார்கழி மாதக் குளிர் இப்போதும் நினைவில் ஒட்டியிருக்கிறது. மிகவும் பதற்றமாக இருந்தது. எல்லோரையும் போல நானும் அந்தத் தீர்ப்புக்காகக் காத்திருந்தேன். நீதி தேவதை நம் பண்பாட்டு அடையாளங்களைப் பரிவுடன் பாதுகாப்பாள் என்ற ஒற்றை நம்பிக்கை தெம்பூட்டியது. இறுதியில் உயர்நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு வந்தது. அந்தத் தீர்ப்பைக் கேட்டுத் தமிழ்ப் பண்பாட்டின் தலைநகரம் உற்சாகத்தில் குலுங்கியது. வைகை நதியில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது.

மாபெரும் சபைதனில் - 16
மாபெரும் சபைதனில் - 16

‘விலங்குகள் நலன் பாதுகாப்பில் சிறப்பு முயற்சிகள் எடுத்து இம்முறை ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பாதுகாப்புடன் நடத்தலாம்’ என்று உயர்நீதிமன்றம் தன் உத்தரவை வழங்கியிருந்தது. வழக்கத்தைவிட அதிக உற்சாகத்தில் திளைத்தனர் மதுரை மக்கள்; உயர்நீதிமன்ற நிபந்தனைகளை எச்சூழலிலும் மீறிவிடக்கூடாது என்ற பதற்றம் எனக்கு. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஊர்ப்புற மணற்குவியலில் முட்டிமோதிப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன காளைகள்.

வழக்கத்துக்கு மாறாக, பல புதிய ஏற்பாடுகளைச் செய்ய முடிவெடுத்தோம். இதுபோன்ற நிகழ்வுகளில் வழக்கமாக மாடுபிடி வீரர்களைவிடப் பார்வையாளர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதைத் தடுக்க பார்வையாளர்களுக்குத் தடுப்பு வேலிகள்; பங்கேற்கும் வீரர்களுக்கும் காளைகளுக்கும் உரிய மருத்துவப் பரிசோதனைகள்; பாதுகாப்புப் பணியில் ஆயிரம் காவலர்கள்; தயாரான நிலையில் ஆம்புலன்ஸ் வசதி; மருத்துவர் குழுவினர் எனத் திட்டமிடல் நுணுக்கமாக இருந்தது.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

அவனியாபுரம், பாலமேடு... அடுத்து அலங்காநல்லூர் எனப் போட்டி அமைப்பாளர்களும், அரசு அதிகாரிகளும் விறுவிறுப்பாகத் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். அவனியாபுரம் போட்டி, அளவில் சிறியது. சிக்கல் குறைவு. பாலமேட்டில் போட்டி நடக்குமிடம் நீர்வற்றிப்போன மணற்பாதை. எனவே ஏற்பாடுகள் செய்வது எளிது. செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள், உத்தரவுகள் எனப் பரபரப்பாய் இயங்கியது அந்தப்பகுதி. வழக்கமாய் போட்டி அமைப்பாளர்களால் சுதந்திரமாக நடத்தப்பட்டு வந்த நிகழ்வு, முதல்முறையாய் அரசு அலுவலர்கள் துணையோடு நிகழப்போகிறது. உத்தரவிட்டே பழக்கப்பட்டுப்போன அதிகார வர்க்கம் தோழமையுடன் நீட்டிய கரங்களை ஏற்றுக் கொள்வதில் மக்களுக்கு முதலில் சற்றுத் தயக்கம் இருந்தது.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் போய் இறங்கினோம். பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கவிருந்த இடம் விசாலமான மணற்படுகை. பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்ய முடியும். ஆனால் அலங்காநல்லூரில் அப்படியல்ல. இங்கு வழக்கமாக ஜல்லிக்கட்டு நடத்தப்படும் முனியாண்டி கோயில் திடலும், அதையொட்டிய பகுதிகளும் மிகக் குறுகலாக இருந்தன. நூற்றுக்கணக்கான சாலைகளும், ஆயிரக்கணக்கான மக்களும் கூடும் இடம் என்பதால் பாதுகாப்புடன் நடத்தமுடியுமா என்ற என்னுடைய கேள்விக்குத் தயக்கத்துடன் பதில்கள் வந்து விழுந்தன. என்னவாயினும், எனக்கு அந்த இடத்தில் ஜல்லிக்கட்டை நடத்துவதில் உடன்பாடில்லை. மாற்று இடம் குறித்து வலியுறுத்திப் பேசிக்கொண்டிருந்த போது என்னை நோக்கி வயதான மூதாட்டி ஒருவர் வந்தார்.

தள்ளாத வயது. கூன் விழுந்த முதுகு. நீண்ட காதுகளில் சீரான ஆட்டத்துடன் ஆடிக்கொண்டிருக்கும் பாம்படம் கவனத்தை ஈர்க்கிறது. சுற்றியிருந்த அதிகாரிகளை விலக்கி என்னை நெருங்குகிறார். கிராமத்துச் சூழலில் வயதான நபர் உயர் அதிகாரியை அணுகினால், கோரிக்கையாக... அநேகமாக முதியோர் உதவித்தொகை தொடர்பாக இருக்கும். அந்த நினைப்பில் நான் கருணையோடு அந்த மூதாட்டியைப் பார்க்க, அவரிடமோ அறச்சீற்றம். “காலங்காலமா இந்த முனியாண்டி கோயில் முன்னதான் சல்லிக்கட்டு நடக்குது. மாடு பிடிக்கிற இளவட்டப்பயக காலடி இங்கதான் படணும். விழற ஒண்ணு ரெண்டு சொட்டு ரத்தமும் இந்த மண்ணுதான் ஏந்தணும். அந்தக் காலடி மண்ணும், சொட்டுக் கீறலும் இந்த முனியாண்டி கோயில் விபூதி குங்குமம்போல” என்று இடைநிறுத்தாது பேசிவிட்டு, விறுவிறுவென்று சென்று ஓரமாய் நின்று கொண்டார். ஒட்டுமொத்தக் கூட்டமும் அதிர்ச்சியில் உறைந்து நின்றது. ஒருபுறம் உயர்நீதிமன்ற உத்தரவுகள். மறுபுறம் உள்ளூர் மக்களின் காலம் கடந்த ஆழமான நம்பிக்கைகள். கலெக்டர் என்ன சொல்லப் போகிறாரோ என்று அனைவரும் காத்திருந்தனர். ஓரிரு நிமிடங்கள் ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு சொன்னேன்... “ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடர்ந்து இங்கேயே நடத்துவோம். தேவையான சிறப்பு ஏற்பாடுகளை விரிவாகவே விரைந்து செய்யலாம்...”

சூழ்ந்திருந்த அத்தனை பேரும் பெருமூச்சு விட்டனர். அனைவரின் கண்களும், தள்ளாத வயதில் தன் குல நம்பிக்கையை நிலைநாட்டிய அந்த மூதாட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தன. தூரத்தில் நின்றுகொண்டிருந்த அவருடைய முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. கண்கள் எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. காலந்தோறும் அந்த வாடிவாசலைக் கடந்து திமிறிய காளைகளும், அடக்கத் துணிந்த காளையரின் காலடி ஓசையும், கண்டுகளித்துக் கொண்டிருந்த கன்னிப் பெண்களின் ஆரவாரமும் அவருக்கு மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன.

அந்த வருடம் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் மிகச்சிறப்பாக அதேநேரம் உயிர்ச்சேதமின்றி நடந்து முடிந்தன. வழக்கமாகக் கோப்புகள், ஆய்வுக் கூட்டங்கள் என்று இயல்பாகப் போய்க் கொண்டிருந்த அலுவல் பயணத்தில், ஒரு புதிய அனுபவத்தைச் சுவைத்தனர் அரசு அதிகாரிகள். உயர்நீதிமன்ற ஆணையை நிறைவேற்றிவிட்ட திருப்தியில் உயர் அதிகாரிகள் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டு நடந்து முடிந்து ஒரு மாதம் கழிந்தபின் நாளிதழ்களில் இடம்பெற்ற செய்தியொன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. `மதுரை மேலூருக்கு அருகே ஒரு கிராமம். ஊரே கொண்டாடிய அந்த முரட்டுக் காளை... பெயர் கருப்பன்... கலந்துகொண்ட அத்தனை போட்டிகளிலும் வெற்றிபெற்று ஊருக்கும் தன் உரிமையாளருக்கும் பெருமை சேர்த்தது. ஆனால் இதுவரை தோல்வியே கண்டிராத கருப்பன் முதல் தடவையாக இந்தமுறை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பிடிபட்டது. தோல்வியைச் சகித்துக்கொள்ள முடியாத கருப்பன் கடந்த ஒரு மாதமாகச் சரியான உணவு உட்கொள்ளாமல் உயிர் நீத்தது. அது மட்டுமல்ல, கருப்பனின் பிரிவைத் தாங்க முடியாத அதன் உரிமையாளரும் உடனே தற்கொலை செய்துகொள்கிறார். கருப்பனின் தோல்வி, அதன் மரணம், அந்த துக்கம் தாளாமல் உரிமையாளரின் தற்கொலை என அடுத்தடுத்த அதிர்ச்சிகளால் உறைந்துபோயிருக்கிறது அந்தக் கிராமம்’ என்று விவரித்திருந்தது நாளிதழ்ச் செய்தி. கூடவே இருவருக்கும் சேர்த்து மணிமண்டபம் கட்டப்படுமா என்ற கேள்வி வேறு.

காலங்காலமாய்த் தங்கள் உணர்வோடு கலந்துவிட்ட வழமைகளை மாற்றிட முயல்வது சகல அதிகாரங்களைப் பெற்ற கலெக்டரே என்றாலும் அதை எதிர்த்து நிற்கும் துணிவு ஒருபுறம். தான் மிகவும் நேசித்த தன் கால்நடை உறவின் தோல்வியையும், பிரிவையும் தாங்காமல் தன்னையே மாய்த்துக்கொள்ளும் உணர்ச்சிப் பேரலை மறுபுறம். இந்த இரு நிகழ்வுகளையும் எப்படிப் புரிந்துகொள்வது?

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

ஒரு சமூகம் தன் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாத்திட எதையும் செய்யத் துணிவதையும், தான் நேசித்த தன் குடும்ப உறவினரின் இழப்பைத் தாங்க முடியாமல் தன்னையே மாய்த்துக் கொள்வதையும் எப்படிப் புரிந்துகொள்வது? இவை எங்கிருந்து தோன்றின என்ற கேள்விக்கு வரலாற்றின் வழியெங்கும் சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஜான் மார்ஷல் கண்டுபிடித்த சிந்துவெளி முத்திரையொன்றில் திமில் கொண்ட காளையினை அடக்க முயன்ற சில வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தன்னைப் பிடிக்க வந்த வீரர்களை மோதி வீசியெறியும் காட்சி மிக நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சீற்றம் மிகு காளை, நீண்டு கொழுத்த திமில், தன் கழுத்தைத் திருப்பி, வளைந்த கொம்புகளைக் கொண்டு தன்னை நெருங்கிய வீரரை வீசியடிக்கும் காட்சி. ஏற்கெனவே இருவர் காளையின் காலடியில் கிடக்க மேலும் இருவர் காற்றில் பறந்துகொண்டிருக்கின்றனர். அந்த முத்திரையில் காணப்படுவது ஒரே வீரர்தான்; காளையின் கொம்புகளால் காற்றில் வீசப்பட்ட நபர் காளையின் காலடியில் படிப்படியாய் வீழும் காட்சிதான் அது என்றும் சில அறிஞர்கள் கருதுகின்றனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளை தூக்கியெறிந்தது ஒருவரையா அல்லது பலரையா என்பதைச் சில அடி தூரத்திலிருந்து பார்ப்பவர்களாலேயே கணிக்க முடியாது என்பதே உண்மை. அந்தக் கணநேரப் பாய்ச்சலைப் பகுத்துப் பார்ப்பது மனிதக் கண்களுக்குத் தோற்றப்பிழைதான். சிந்துவெளி முத்திரையை வடித்த கலைஞனுக்கும் அதே சிக்கல்தான்போல. அதுமட்டுமல்ல. இரண்டு சேவல்கள், வாலும் இறக்கையும் விறைத்து நிற்க, கால்கள் தரையில் பரவாமல் இரண்டும் சண்டையிடும் தோற்றத்தில் மற்றுமொரு சிந்துவெளி முத்திரை. ஆடுகளம் அங்கே தொடங்கியிருக்க வேண்டும்.

காட்சி மாறுகிறது. பழந்தமிழகத்தின் நீலமலைப்பகுதி, அடர்ந்த வனப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி மக்கள் கால்நடைகளை உறவாகவும், உடைமையாகவும் கருதிய காலமது. மலைப்பாங்கான பகுதியில் தங்கள் கால்நடைகளுடன் களித்துத் திரிந்த பொழுதுகள் பாறை ஓவியமாய் மலர்ந்தன. கோத்தகிரி மலைப் பகுதியில் காணக்கிடைக்கும் ஓவியங்கள் வெண்மையும் செந்நிறமும் கலந்து வரையப்பட்டவை. திமில் கொண்ட வலிமை மிகு காளைகள் மூன்றை பலர் சேர்ந்து துரத்திக் கொண்டிருக்கும் ஓவியம் ஒன்று குறிப்பிடத்தக்கது.

மாபெரும் சபைதனில் - 16

கலித்தொகைக் கவிஞன் பதிவு செய்யும் ஏறுதழுவுதல் குறித்த காட்சிகள் கவித்துவம் வாய்ந்தவை. ஏறுதழுவுதல் நிகழ்வைத் தொடங்கிட முரசும் பறை முழக்கமும் கேட்கின்றன. காளைகளை அடக்கும் வீரர்கள் வரவேற்கப்படுகின்றனர். காளையை அணைய மறுக்கும் நபரை மறு பிறவியிலும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டேன் எனும் மகளிரின் உறுதி காற்றில் கலந்து முல்லை நிலமெங்கும் பரவுகிறது; மறுபுறமோ, திமில் மிகுந்த காளைகள் சில நிலத்தில் மோதி நீரைக் கொண்டு வர முயன்றன. சில நிலத்தைச் சாடி நொறுக்கின. மண்டியிட்டுப் பாய்ந்தன. ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.

“எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு கலங்கினர் பலர்’’ எனக் கூறிச் செல்லும் முல்லைக் கலி வரிகளில் ஏறுதழுவுதல் ஓர் அரங்க விளையாட்டாய் வடிவம் மாறுவதை உணர முடிகிறது. எனினும் இடைக்காலத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்து பாளையக்காரர்களும், நிலக்கிழார்களும் நிலைபெற்ற பின் இதன் வடிவம் மேலும் மாற்றத்துக்குள்ளானது. காளைக்கும், காளையருக்குமான உறவு பல்வேறு கிராமங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் இடையேயான சல்லிக்கட்டுப் போட்டியாகக் காலப்போக்கில் மாறின. காளையின் பிறை நுதலில் கட்டிய பரிசை வென்ற வீரன் விரும்பிய பெண்ணை மணந்தான். மாண்டவனோ நடுகல்லாய் மாறி வழிபடப்பட்டான்.

கால்நடைகளுடனான உறவும், விளையாட்டும் உலகில் பரவிய விதம் ஆழமான ஆய்வுக்குரியது. திமில் கொண்ட காளையினம், Zebu (அ) Bos Indicus வகை இன்றைய பலுசிஸ்தான் பகுதியில் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் புதிய கற்காலத்தில் தோன்றியிருக்க வேண்டும் என்று அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகப் பேராசிரியர் டேவிட் மெக்காவ் தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவிக்கிறார். அப்பகுதி சிந்துவெளி நாகரிகம் தழைத்தோங்கிய பகுதிக்குள் அடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. பிராகூய் எனப்படும் தொல் திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வாழும் பகுதி அது. சிந்து வெளி முத்திரையில் காணப்படும் Bos Indicus வகை காளையின் எலும்புகள் கீழடியிலும் கண்டுபிடிக்கப்பட்டன.

ஏறுதழுவுதல் நிகழ்வை உயிருக்குயிராய் நேசிப்பவரும், விலங்கு நலன் கருதி எதிர்ப்பவரும், தவிர்க்க இயலாமல் வியந்து பார்ப்பது ஒன்றைத்தான். அது,

‘தமிழினத்தின் தொன்மையையும் தொடர்ச்சியையும்!’

- நடை பயில்வோம்...

சபைக் குறிப்பு

றுதழுவுதல் அலங்காநல்லூரைப்போல் அச்சு அசலாக நடந்தேறும் இன்னொரு இடம், ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில்தான். பெட்சிலோ எனப்படும் பழங்குடி மக்கள் இன்றும் திமில் கொண்ட காளைகளை அடக்கும் அரங்க விளையாட்டை நடத்துகின்றனர். ‘சாவிகா’ என்று அதற்குப் பெயர். அவர்கள் மொழியில் சாவிகா என்றால் ‘தழுவுதல்’ என்பது பொருள் என்று அறியும்பொழுது ஆச்சர்யம்தான். அந்த விளையாட்டு குறித்த பிபிசி ஆவணப்படங்களை இணையத்தில் பார்த்தால் ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே செல்ல நேரிடும். சாவிகா, விளையாட்டு அரங்கம், உற்சாகத்துடன் வந்து குவியும் பார்வையாளர்கள், கொஞ்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் என அனைத்தும் அலங்காநல்லூரை நினைவுபடுத்துகின்றன. காளைகளை அடக்க முயலும் வீரர்கள், காளைகளோடு மோதி ஏற்பட்ட காயங்கள், பழங்குடிப் பெண்களின் மயிலிறகு வருடும் பார்வையில் மாயமான வலி என ஏதோ சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவைப் பாடல் பகுதிகளை மாற்று மொழித் திரைப்படத்தில் பார்ப்பதுபோன்ற உணர்வு கிடைப்பது உண்மை.