
கீழடி ஏறுதழுவதலுக்குப் பிறகு உலகத் தமிழர்களை ஒன்றிணைத்த ஒற்றைச் சொல் இதுவே.
தமிழர்தம் மரபு தேடிய பயணத்தின் முக்கிய மைல்கல்; கூடல் மாநகருக்கு அருகே மொழி, அறிவியல், வரலாறு, தொழில்நுட்பம் எனப் பல்துறைகளின் சங்கமத்தைக் கண்டது உலகம். ஓர் அகழ்வாராய்ச்சியை ஒட்டுமொத்தச் சமூகமும் இவ்வளவு எழுச்சியுடன் கொண்டாடிய நிகழ்வுகள் உண்டா என்று தெரியவில்லை. தொல்லியல் ஆர்வத்தை மக்களிடம் விதைப்பதில் `கீழடிக்கு முன்’, `கீழடிக்குப் பின்’ என எதிர்காலத்தில் அறிவுலகம் வகைப்படுத்தக்கூடும்.

`கீழடி’ என்ற இந்தச் சொல் தலைமுறைகளைத் தாண்டித் தமிழரின் மனதில் எப்படி ஊடுருவி உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. தொடர்ச்சியான வாழ்த்து மழைத்துளிகளுக்கு இடையே ஒரு அலைபேசிச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது. “என் அம்மாவும், வெண்பாவும் உங்களிடம் பேச விரும்புகிறார்கள்” என்று அழைத்தது அந்தக் குறுஞ்செய்தி. அனுப்பியது சென்னையின் பிரபல மருத்துவர் ஒருவர். தமிழ் இலக்கியங்களில் சிறந்த தேர்ச்சி கொண்டவர். என் நெருங்கிய நண்பர். அவருக்கு, `பின்னர் ஓய்வான சூழலில் பேசுகிறேன்’ என்று மறுமொழி பகிர்ந்தேன். இல்லம் திரும்பும் வேளையில் அலைபேசியை வருடின என் விரல்கள். அடுத்த முப்பது நிமிடங்கள் என் நினைவுப் பெட்டகத்தில் என்றென்றும் நிரந்தரமாய்த் தங்கிப் போயின.
ஆம், கீழடி குறித்து வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்த நண்பரின் கரங்களிலிருந்து அலைபேசி தவழ்ந்து அவர் அம்மாவிடம் சென்றது. ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அவர். 80 வயதில் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருப்பவர். அவருடைய உடல்நலம் பற்றியும் சமீபத்தில் படித்த புத்தகம் பற்றியும் பேசிக்கொண்டிருந்தவர், ‘கடந்த சில நாள்களாக வலியை மறந்து இயல்பாக நடமாடிக்கொண்டிருப்பதற்கான ஒரே காரணம் கீழடி குறித்த செய்திகள்தான்’ என்று கூறியபோது மறுமுனையில் என்னிடமிருந்து பேச்சு எழவில்லை. தன்னால் நேரடியாக மதுரை வரை பயணம் செய்ய முடியாதென்றும் தன் கணவர் உயிரோடு இருந்திருந்தால் இதைக் கேட்டு எப்படி மகிழ்ந்திருப்பார் என்றும் அவர் குரல் உடைந்து பேசியது. சற்று மெளனத்திற்கிடையே அலைபேசி, நண்பரின் கரங்களில் தஞ்சமடைந்தது. மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை எனப் பழந்தமிழ் இலக்கிய வரிகளை மேற்கொள்காட்டி, கீழடி அகழாய்வுக் கண்டுபிடிப்புகளுக்கு இலக்கியச் சான்றுகளை அள்ளிவீசிக்கொண்டிருந்தவர் திடீரென நிலைகுலைந்துபோனார்.

இம்முறை தாக்குதல் நடத்தி அலைபேசியைக் கைப்பற்றியது அவருடைய செல்ல மகள் வெண்பா. அவளுடைய அழகிய தமிழ்ப் பெயருக்காகவும், இனிமையான தமிழ் உச்சரிப்புக்காகவுமே மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்கலாம். வெண்பாவின் கேள்விகள் அறிவியல் சோதனைகளைச் சுற்றியே அமைந்தன. அடுத்தவாரம் அவள் படிக்கும் பள்ளியில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் கீழடிக் கண்டுபிடிப்புகள் குறித்து மாதிரிகள் செய்து விளக்கப்போவதாகக் கூறி என்னை நோக்கிக் கேள்விக்கணைகள் தொடுத்துக்கொண்டிருந்தாள். முப்பது நிமிடம் நீடித்த அந்த அலைபேசி உரையாடல் தலைமுறைகள் தாண்டிப் பயணிக்கும் தமிழ்ப் பெருமிதம் குறித்த ஓர் அழகிய குறும்படம்!
விடைபெறக் காத்திருக்கும் ஒரு தலைமுறை, தான் வாழ்ந்த வாழ்வின் பொருளைக் கீழடியில் கண்டு உணர்கிறது. அடுத்த தலைமுறை தன் இலக்கியத் தேர்ச்சியை உரசிப் பார்த்திடும் தோழமையாகக் கீழடியுடன் பயணிக்கிறது. தகவல் தொழில்நுட்பச் சாலையில் விரைந்து பயணிக்கும் இளைய தலைமுறையோ சான்றுகளின் அடிப்படையில் கீழடியை அறிவியல் முறையில் அணுகத் துடிக்கிறது. மூன்று தலைமுறைகளையும் ஒரே நேரத்தில் கீழடி எதிர்கொள்கிறது.

இந்தமுறை கீழடியில் சங்ககாலச் செங்கற்களை நோக்கிய பயணத்தைத் தொழில்நுட்பம் வழிநடத்தியது. செயற்கைக்கோள் உதவியுடன் கீழடியைச் சுற்றி 15 சதுர கி.மீ. பரப்பிற்கான செயற்கைக்கோள் வரைபடங்கள் சேகரிக்கப்பட்டன. ஆளில்லா விமானம் மூலம் இரும்புத் தாது, களிமண் படிவங்கள் அதிகமுள்ள பகுதிகள் கண்டறி யப்பட்டன. பின்னர் புவிக் காந்தவியல் கருவிகள் மூலம் பூமிக்கு அடியில் கட்டுமானங்கள் உள்ள பகுதியைத் தேடும் முயற்சி தொடங்கியது. செங்கற் கட்டுமானம் உள்ள பகுதி எழுப்பும் காந்த அலைகளுக்கும் இயல்பான மண் அடுக்குகளில் இருந்து கிடைக்கும் அதிர்வலைகளுக்கும் இடையே உள்ள நுண்ணிய வேறுபாடுதான் நாம் தேடுவது. எந்தெந்தப் பகுதிகளில், எந்த நேர்கோட்டில் செங்கற்சுவர்கள் கிடைக்கும் என்று முடிவு செய்து நிலத்தை ஊடுருவும் ரேடார் சோதனை செய்தால் பல நுணுக்கமான தகவல்கள் கிடைக்கும். மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து, அறுவை சிகிச்சை செய்வதைப்போல் சரியான இடத்தில் தேவையான ஆழத்திற்கு இப்போது அகழாய்வு செய்திடமுடியும். மேலைநாடுகளில் இப்போதெல்லாம் `லிடார்’ எனப்படும் லேசர் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுகிறது. அமேசான் மழைக்காடு களிலும், கம்போடியாவின் அடர்ந்த வனப்பகுதிகளுக்கு அடியிலும் புதைந்து போயிருந்த புராதன நகரங்களைக் கண்டுபிடித்தது அப்படித்தான்.

கடந்த மே மாதத்தில் ஒருநாள், தகிக்கும் வெயிலையும் மீறி எழும்பூரில் இருக்கும் தொல்லியல்துறை அலுவலகம் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்தது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து வந்த செய்திதான் அதற்குக் காரணம். மியாமி நகரத்தில் அமைந்துள்ள `Beta Analytic Testing Laboratory’யில் இருந்து வந்த ஆய்வு முடிவுதான் அது. கீழடியில் நடத்திய அகழாய்வின்போது கிடைத்த கரிமத்துண்டு ஒன்று அமெரிக்கா நோக்கிப் பயணப்பட்டது. 134 கிராம் எடை கொண்டது. 353 செ.மீ ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது. அந்த சின்னஞ்சிறு கரிமத்துண்டு, கண்டெடுத்த நேரத்தில், தமிழர்களின் வரலாற்றையே அது மாற்றிவிடப்போகிறது என்று யாரும் யூகிக்கவில்லை. ஆனால், இறுதியில் கிடைத்த ஆய்வறிக்கை அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம், கரிமத்தின் காலம் கி.மு.580 என, அதாவது, 2600 ஆண்டுகள் பழைமையானது என அறிவித்தது அந்த ஆய்வறிக்கை. அதுமட்டுமல்ல, இதுவரை நிலவிவந்த பல புதிர்களுக்கும் விடை கிடைத்தன. தமிழ் எழுத்து வடிவத்தின் காலம், 2600 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும் அந்தக் காலத்தில் சங்க காலச் சமூகம் எழுத்தறிவு பெற்றிருந்தது என்ற உண்மையும் தெரியவந்தபோது மே மாதத்திலும் சட்டென வானிலை மாறுவது இயல்புதானே!
கீழடி அகழாய்வில் விலங்குகளின் 70 எலும்புத்துண்டுகள் கிடைத்தன. அவை அறிவியல் அடிப்படையில் பகுப்பாய்வு செய்ய, புனேவிலுள்ள டெக்கான் கல்லூரிக்கு அனுப்பப்பட்டன. சிறிதும், பெரிதுமாக எலும்புத் துண்டுகள், கொம்புகளின் உடைந்த பகுதிகள் என்று பாதுகாப்பாகச் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அவை. எலும்புத் துண்டுகளின் நீள, அகலம் என அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு எந்தெந்த விலங்குகள் என அடையாளம் காணப்பட்டு வகைப்படுத்துவது வழக்கம்.
மகப்பேறு மருத்துவமனை வாயிலில் பதற்றத்துடன் காத்திருக்கும் உறவினர்கள் போல, நாங்கள் புனேவிலிருந்து வரும் செய்தியை எதிர்நோக்கி இருந்தோம். மின்னஞ்சலில் அறிக்கை வந்து விழுந்தது. பட்டியலில் வெள்ளாடு, காட்டுப் பன்றி, மயில் என விலங்குகளின் அணி வரிசை நீண்டது. ஆனால் அந்த ஆய்வறிக்கையிலிருந்து ஒரு சூப்பர் ஸ்டார் எழுந்து கம்பீரமாக நடந்து வந்ததுதான் ஆச்சர்யம். ஆம். திமில் கொண்ட காளைதான் அது. சிந்துவெளி நாகரிக மக்கள் பயன்படுத்திய அதே காளை இனம். சங்க இலக்கியங்களில், கன்னிப்பெண்களின் கடைக்கண் பார்வையை வென்றிட அடலேறுகள் அணைந்திட்டதாகக் குறிப்பிடப்படும் அதே காளை இனம். இன்றளவும் அலங்காநல்லூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியே சீறிப்பாயும் அதே காளை இனம். `Bos Indicus’ என்ற அந்தத் திமில் கொண்ட காளையின் எலும்புத் துண்டுகள் கீழடியில் கிடைத்திருப்பது மிகப் பொருத்தமே.

அதுமட்டுமா? பழந்தமிழகத்திலிருந்து மிளகும் முத்தும் நறுமணப்பொருள்களும் ரோமப் பேரரசின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்பது வரலாறு; ஆனால் இம்முறை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 17 பானை ஓடுகள் அறிவியல் தனிம சோதனைக்காக இத்தாலி யிலுள்ள பைசா பல்கலைக் கழகம் நோக்கிப் பயணம் தொடர்ந்தன.

‘Spectroscopic Analysis’ எனப்படும் நிறமாலையியல் சோதனை முடிவுகளில் கறுப்பு, சிவப்புப் பானை ஓடுகளில் சிவப்பு நிறத்திற்கு, `ஹேமடைட்’ என்ற இரும்பின் தாதுப் பொருளும் கறுப்பு நிறத்திற்கு கரிமப் பொருளான கரியும் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இவ்வகைப் பானைகளை உருவாக்க 1,100 செல்சியஸ் வெப்பநிலையில் சுட்டு உருவாக்கும் தனித்தன்மை வாய்ந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கீழடி அகழாய்வில் சேகரிக்கப்பட்ட செங்கற்கள், சுண்ணாம்புச் சாந்து, கூரை ஓடுகள், சுடுமண்ணாலான உறைக் கிணற்றின் பூச்சு போன்றவை அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஒவ்வொன்றிலும் சிலிக்கா மணல் சுண்ணாம்பு, இரும்பு, அலுமினியம், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் காணக்கிடைக்கின்றன. பயன்படுத்தப்பட்டிருக்கும் சுண்ணாம்பின் அளவு சங்க கால மக்கள் தரமான கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்தினர் என்று பெருமிதம் கொள்ளச் செய்கிறது. கீழடியில் கிடைத்த இரும்பு ஆணிகளை வைத்து, இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தைத் தெரிந்து வைத்திருந்தனர் சங்க காலத் தமிழர்கள் என்பது உறுதியாகிறது.

இனி வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வின்போது சேகரிக்கப்படும் மகரந்தம் மற்றும் பைட்டோலித் போன்ற தாவரவியல் மாதிரிகளையும், மனித எலும்புகளையும் தொல் மரபணுச் சோதனை செய்வதன் மூலம் சங்க காலம் குறித்து இன்னும் கூடுதலான உண்மைகள் வெளிவரும்.

இந்தக் கட்டுரையை உதயச்சந்திரன் குரலிலேயே கேட்க இதை ஸ்கேன் செய்யவும்.
கீழடியில் கண்டுபிடித்த பொருள்களை அறிவியல் சோதனைக்கு உட்படுத்துவது ஒருபுறம். அதே நேரம், சங்க இலக்கியச் சொற்றொடர்களை நேரடியாகப் பரிசோதிக்கும் மொழியியல் ஆய்வகமாகவும் கீழடி திகழப்போகிறது. ஆம். மதுரையில் தமிழ் மொழிப்பாடம் படிக்கும் மாணவர்கள் நெடுநல்வாடையில் இடம்பெறும் நெசவுத்தொழில் கருவிகளை நேரில் பார்க்க விரும்பினால், மதுரைக்காஞ்சியில் இடம்பெறும் நாளங்காடி, அல்லங்காடிகளை அலங்கரிக்கும் அழகிய முத்து, பவளம் மற்றும் தங்க அணிகலன்களைக் கண்டுகளிக்க விரும்பினால், புறநானூறு குறிப்பிடும் ஆதன், அந்துவன் போன்ற பெயர்கள் தாங்கிய பானை ஓடுகளை மென்மையாக வருட நினைத்தால் கீழடி அவர்களை இனிதே வரவேற்கும்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நிதித்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தபொழுது, மதுரையைச் சேர்ந்த நண்பர்களிடமிருந்து அழைப்பு. மதுரைக்கு அருகே மத்திய தொல்லியல்துறை நடத்திக் கொண்டிருக்கும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கும் தொல்பொருள்கள் மிக முக்கியமானவை என்று செய்தி கிடைத்தது. ஒரு சனிக்கிழமையன்று தனிப்பட்ட முறையில் கீழடிக்கு முதல் முறையாக சென்றது இன்னும் நினைவில் உள்ளது. அமர்நாத் ராமகிருஷ்ணா ஆர்வத்துடன் அழைத்துச் சென்றார். சங்க கால செங்கற் கட்டடங்கள், அரிய தொல்பொருள்கள் எனப் புதிய உலகமே கண்முன் திரண்டது. கீழடியில் அகழ்வாராய்ச்சி நடந்த பகுதியைச் சுற்றிப்பார்க்கும் பொழுது, தொல்லியல் துறை அலுவலர்களோடு வேட்டி கட்டிய முதியவர் ஒருவர் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கீழடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி யின் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். பாலசுப்ரமணியம் அவர் பெயர். அவர் சொன்ன அந்தச் செய்தி அதிர்ச்சி அளித்தது. கீழடியில் பள்ளிச்சந்தை திடலில் பானை ஓடுகள் உட்பட பல பழைமையான தொல்பொருள்கள் கிடைப்பதைத் தன் மாணவர்கள் மூலம் கண்டுபிடித்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே, 1974-லேயே அரசுக்குத் தெரியப்படுத்தி யதாகவும், ஆனால், தொல்லியல் துறை தாமதமாகத்தான் வந்திருக்கிறது என்றபோது ஆசிரியரின் அறச்சீற்றம் தெரிந்தது.
அந்த ஆசிரியர் தொடங்கி அமர்நாத் குழுவினர் வரை, கீழடி குறித்து உலகிற்கு உரத்துச் சொன்ன எழுத்தாளர்கள் முதல் கீழடி நம் தாய்மடி என முழங்கிய உலகத் தமிழர்கள் வரை, பணம் காய்க்கும் தென்னந்தோப்பினை மனமுவந்து அகழாய்வு செய்திட முன்வந்த நில உரிமையாளர் முதல், இரவு பகல் பாராமல் உழைத்திட்ட கடை நிலை ஊழியர் வரை, நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொண்ட வழக்கறிஞர்கள் முதல், இதழியல் நண்பர்கள் வரை, தொல்லியல் வல்லுநர்கள் தொடங்கி நீதியரசர்கள் வரை, மாணவர்கள் தொடங்கி மக்கள் பிரதிநிதிகள் வரை, ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகம் ஒன்று கூடி வடம் பிடித்து இழுத்திட்ட சங்கத் தேர்தான் கீழடி.
கீழடியில் நாம் காலடிதான் எடுத்து வைத்துள்ளோம். இன்னும் நீண்ட பயணம் காத்திருக்கிறது. வரலாறு விரியும்பொழுது உண்மைகள் உலகெங்கும் பரவும், வைகை நதி நாகரிகம் வாகை சூடும்.
- நடை பயில்வோம்...
சபைக் குறிப்பு
கீழடி அகழாய்வில் ஆயிரக்கணக்கான பானை ஓடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. சிலவற்றில் குறியீடுகளும் சிலவற்றில் ஆதன், குவிரன் போன்ற பெயர்களும் காணப்படுகின்றன. அவற்றில் இரண்டு பானை ஓடுகள் அனைவரது கவனத்தையும் கவர்ந்தன. முழுமையான மீன் உருவம் பொறித்த பானை ஓடு ஒன்று. கைகளில் ஏந்திப் பார்த்தால், காலவெள்ளத்தில் நீந்தி, புதிய தலைமுறைகளைச் சந்திக்கத் துடிக்கும் கண்களோடு அந்த மீன். தவழ்ந்து, துள்ளிக்குதித்துவிடுமோ என்ற பயத்தில் விரல்கள் இறுகப்பற்றிக்கொள்ளும் அந்தப் பானை ஓட்டினை. மதுரை... மீன்... அழகிய கண்கள்... நூற்றாண்டுகள் கடந்தும் வீசப்படும் தூண்டில்... பார்ப்பவர் அனைவரும் மயங்கித்தான் ஆகவேண்டும்.

மற்றொரு பானை ஓட்டில் இருப்பது குறியீடா அல்லது தமிழி எழுத்துகளா என்று கூர்ந்து பார்த்தால் ஆச்சர்யம்தான் ஏற்படுகிறது. `குவிர’ என்று எழுதி அடிக்கப்பட்டிருக்கிறது. ஏன் எழுதி அடிக்கவேண்டும்? ஒருவேளை, தவறுதலாக பெயரை மாற்றிப் பொறித்து விட்டார்களா, அல்லது பானைகள் மறுவிற்பனை செய்தபின் புதிய உரிமையாளர் பெயர் பொறித்திடும் முயற்சியா? இல்லை, தன் பெயரைவிட தன் உள்ளம் கவர்ந்த நபரின் பெயர் இன்னும் பொருத்தமாக இருக்குமே என்ற தவிப்பா, தெரியவில்லை. மரபு மீறாத ஓர் அழகிய கவிதையைத் தாங்கிய அந்தச் சின்னஞ்சிறு பானை ஓடு, திருத்தி எழுதிய அந்தத் தருணத்தைக் காலத்தால் உறையச் செய்தது மட்டுமல்ல, சான்றுகளின் அடிப்படையில் வரலாறு அவ்வப்போது மாற்றி எழுதப்படவேண்டும் என்பதையும் உரத்துச் சொல்கிறது!
-உதயச்சந்திரன்