
பட்டத்து யானையும் குட்டி இளவரசனும்
பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருக்கும் கலெக்டர் அலுவலகம். தயக்கத்துடனும் கண்களில் ஏக்கத்துடனும் பொதுமக்கள் சிலர். அதற்கு நேர்மாறாய் மிடுக்கோடு நடைபயிலும் உயரதிகாரிகள். ஒருபுறம் நிறைவேறாத கோரிக்கைகளைத் தாங்கிய கசங்கிப்போன காகிதங்கள். மறுபுறம் ரகசியம் காக்கும் அரசுக் கோப்புகளின் அசைவில்கூட அலட்சியம்.

என்னுடைய அறைக்குள் தயங்கியபடியே நுழைகிறார் அந்த அதிகாரி. தென் மாவட்டம் ஒன்றிலிருந்து பணி மாறுதல் பெற்று ஈரோடு மாவட்டத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து வந்திருப்பதாகத் தெரிவிக்கிறார். இதற்கு முன் அவர் இடத்தில் பணிபுரிந்த அதிகாரி சிறப்பாகப் பணியாற்றியதால் அவரைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்ற யோசனையில் இருந்தோம். மாணவர்களுக்குக் கல்விக்கடன் வழங்கிட ஏற்கெனவே பெரிய திட்டங்களை யெல்லாம் தீட்டி வைத்திருக்கிறோம். அவற்றையெல்லாம் நிறைவேற்றிட உங்களால் முடியுமா; விடுமுறை நாள்களில்கூடப் பணியாற்ற வேண்டியிருக்குமே, மாவட்டம் முழுக்க அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்குமே, வங்கி மேலாளர்களுடன் இணக்கமாகப் போக வேண்டி வருமே, பெற்றோர், மாணவர்களிடம் பொறுமையாக நடந்துகொள்ள முடியுமா எனத் தொடர் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருந்தேன். களத்தில் இறங்கிய கடைசி ஆட்டக்காரர், தான் சந்திக்கும் முதல் பந்தின் வேகத்திலேயே நிலைகுலைந்துபோய்விடுவார் என்பது என் எண்ணம். ஆனால் பால்ராஜ் என்ற அந்த அதிகாரி மென்மையாகத் தடுத்து ஆடினார். ஒருமாதகாலம் தான் பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தன்னுடைய பணி கலெக்டருக்குத் திருப்தியளிக்கவில்லை என்றால் தானே விடுப்பில் சென்றுவிடுவதாகவும் அவர் சொன்னபோது அதற்குமேல் வீசிட அம்புகள் ஏதும் என்னிடம் இல்லை.
ஒரு மாதம் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்பட்டவர், தொடர்ந்து பணியாற்றி மகத்தான சாதனைகளைப் புரிவார் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. கூடவே, அவர் மூலம் ரௌத்திரம் பழக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு முன்னால், முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதையைச் சொல்ல வேண்டும். நாமக்கல் நகரின் பாரத ஸ்டேட் வங்கிக்கிளை. எனக்குக் கல்விக்கடன் கொடுக்க மறுத்திட்ட அந்த முகம் தெரியா வங்கி மேலாளருக்கு நன்றிகள் பல சொல்லத்தான் வேண்டும். இல்லையென்றால், தடைகளைத் தகர்த்து இலக்கை அடையும் வேகத்தில், `இளமையில் வறுமை’ என்ற பழமொழிக்குப் பொருள் தெரியாமற்போயிருக்கக் கூடும். உறவினர்களின் உதவிக் கரங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் ஏளனப் பார்வை புரியாமலேயே போயிருக்கும். கல்லூரி மாணவனுக்கும் சுயமரியாதை உண்டு என்பது தெரியாமலேயே போயிருக்கும். அந்த ஒற்றை நிகழ்வுதான், பின்னர் கல்லூரி மாணவர்களின் கல்விக் கனவுகளுக்கு வண்ணம் தீட்டிட, பெற்றோரின் கடன் சுமையைப் பகிர்ந்துகொள்ள விரிவான திட்டம் தீட்ட உதவியது.
கலெக்டர் அலுவலகத்திலேயே கல்விக்கடன் முகாம். அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் என அனைவரையும், இணைத்துச் செயல்பட்ட நிகழ்வு அது. செப்டம்பர் மாத இறுதியில் சனி, ஞாயிறு என இரண்டு நாள்கள் முகாம் என அறிவிப்பு வெளியானது. தகுந்த ஆவணங்களுடன் வந்தால் அங்கேயே கல்விக்கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பைக் கேட்டு முதல்நாளே ஆயிரக்கணக்கான மாணவர்கள் குவிந்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே, ஒழுங்குபடுத்த காவலர்கள் அழைக்கப்பட்டனர். மாலை நாளிதழ்கள் `கல்விக்கடன் முகாமில் தள்ளுமுள்ளு, தடியடி’ எனத் தலைப்பிட்டு மகிழ்ச்சியடைந்தன. எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்த சோகத்தில் இருந்த என்னை, மாவட்டத்தின் உயரதிகாரிகள் பலரும் ஆறுதல்படுத்தினர். எப்படியும் கல்விக்கடன் முகாமை வெற்றிபெற வைப்போம் என்று உறுதியாகக் கூறினர். அந்த உறுதி அனைவரையும் பற்றிக்கொண்டது. திட்டங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதிலிருந்து மாணவர், பெற்றோர் அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களைக் கணினியில் பதிவது வரை ஒவ்வொன்றையும் நுணுக்கமாய்த் தீர்மானித்து அன்றிரவு உறங்கச் சென்றபோது விடியல் நெருங்கிக்கொண்டிருந்தது. உலகமே சதிசெய்து வீழ்த்த முயன்றாலும், அதை எதிர்கொண்டு எழுவது தனி சுகம்தான்.

அடுத்த மூன்று மாதங்கள் கல்விக்கடன் குறித்துதான் சிந்தனையே. ஒவ்வொரு நாள் இரவும் அன்றைய கல்விக்கடன் நிலவரங்களைத் தாங்கிய படியே கடைசியாக கலெக்டரின் முகாம் அலுவல கத்திலிருந்து வெளியேறுவது, நம் நண்பர்தான். பொதுவாக, கல்விக்கடன் வழங்குவதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கத் தேவை யில்லை. எனினும், அடம்பிடிக்கும் குழந்தையின் அழுகையினை நிறுத்திட எதையும் செய்யத் தயாராக இருக்கும் பெற்றோரின் பெருந்தன்மையினை அரசு அலுவலர்கள் வெளிப்படுத்தினர். வழக்கமான பணிச்சுமைகளுக்கு இடையே கூடுதல் பணி புரியமாட்டோம் என்று அவர்கள் சுலபமாக மறுத்திருக்க முடியும். ஆனால், ஒட்டுமொத்த மாவட்டமே அந்தப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. மாவட்ட ஆட்சியரின் வழக்கமான ஆய்வுப்பயண நிரலில் ஆங்காங்கே போகும் வழியெங்கும் கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சிகள் அலங்கரிக்க ஆரம்பித்தன. ஒரு சில மாதங்களிலேயே சுமார் 8000 மாணவர்களுக்குக் கல்விக்கடன் வழங்கப்பட்டது. அதற்குமுன்பாக 11 ஆண்டுகளில் மொத்தம் 92 கோடி ரூபாய் கல்விக்கடனாக வழங்கப்பட்டது என்றால் அந்த நான்கு மாதங்களில் மட்டும் 110 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கியதற்கு முழுக் காரணமும் கடுமையாக உழைத்த பல்வேறு துறை அலுவலர்களே.
மாவட்ட நிர்வாகம் என்பது பலம் பொருந்திய பட்டத்து யானை போன்றது. அதன்மேல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் குட்டி இளவரசன் சுட்டிக்காட்டும் திசையெங்கும் பயணித்து, அவன் பிறப்பிக்கும் அத்தனை கட்டளைகளையும் பணிவுடன் நிறைவேற்றிடக் காத்திருக்கும் அழகே தனிதான். ஒரு மாபெரும் படைப்பு தன் முழு பலத்தையும் அந்தக் குட்டி இளவரசனின் புன்னகை தவழும் முகத்திற்கு என்றென்றும் அடிமையாகிவிடத் துடிக்கும் அதிசய நிகழ்வு அது. இளவரசன் சுட்டிக் காட்டும் திசை மட்டும் நேர்மையான பாதையாக இருந்தால், பட்டத்து யானையின் வெற்றிகள் பல மடங்காகிடும்.
அதோடு நின்றதா குழந்தையின் அழுகுரல்? வழக்கம்போல் அந்தத் திங்கட்கிழமை காலை அன்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்கள் கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. விண்ணப்பித்துப் பல மாதங்கள் ஆகியும் கல்விக்கடன் கிடைத்திடத் தாமதமாவதாகத் தெரிவித்தான் ஒரு மாணவன். வகுப்புக்குச் செல்லாமல் கடன் வாங்க அலைக்கழிக்கப்படும் கல்லூரி மாணவன். கோபத்தின் உச்சத்தில் கண்கள் பால்ராஜைத் தேடுகின்றன. அவர் வழக்கமாக அமரும் இருக்கை காலியாக இருக்கிறது. இடதுபுறம் உதவியாளர் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயல்கிறார். முடியவில்லை “திங்கட்கிழமையன்று எப்படி தகவல் தெரிவிக்காமல் போகலாம் அவர்” என்று கடிந்து கொண்டே மாற்று அலுவலரிடம் பொறுப்பை ஒப்படைத்தோம். மாலையில் தொலைபேசி அழைப்பு கொடுக்கப்படுகிறது, மறுமுனையில் பால்ராஜ் பேசக் காத்திருக்கிறார் என்று. பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளும் அலுவலரிடம் பேசத் தயாராக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் கலெக்டரிடம் அவசியம் பேச வேண்டும் என அவர் வற்புறுத்துவதால் தயக்கத்துடன் தொலைபேசியை ஏந்திய எனக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது, அவர் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருக்கிறார் என்றும் அவசரமாக குடல் வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால் தகவல் தெரிவிக்க இயலவில்லை என்றும் கூறி, அடுத்து அவர் கூறியதுதான் என்னைத் திகைப்படையச் செய்தது. மருத்துவமனையில் இருந்தபடியே வங்கி அலுவலர்களைத் தொடர்புகொண்டு கல்விக்கடன் வழங்குவதைக் கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும், அன்று மட்டும் 12 மாணவர்களுக்குக் கல்விக்கடன் வழங்கப்பட்டது என்றும் புள்ளிவிவரத்தைத் தெரிவித்தபோது முழுவதுமாக நொறுங்கிப்போனேன். பணியில் சேர வந்தபோது சொல் அம்புகள் எய்திட்ட உயர் அலுவலருக்கு அவர் கொடுத்த வாழ்நாள் தண்டனைதானே இது?
பள்ளி வளாகமெங்கும் உற்சாகமாகச் சுற்றித் திரிந்த சின்னஞ்சிறு மாணவன் ஒருவன் அவன் செய்யாத தவற்றுக்காகத் தண்டிக்கப்பட்டு வகுப்பறையின் ஒரு மூலையில் சில பாடப்புத்தகங்களோடு முடக்கி வைக்கப்பட்டால் என்ன நடக்கும்? பாடநூலிலிருந்து ஆயிரம் பூக்கள் மலரும்.

புதிய பாடநூல் தயாரிப்பில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் இரவுபகலாக ஈடுபட்டுக் கொண்டிருந்த காலம். தன்னை மறந்து, தன் குடும்பத்தை மறந்து, உடல்நல பாதிப்போடு இந்த வேள்வியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏராளம். எண்ணம், வண்ணம், வடிவம் அனைத்திலும் புதுமை கொண்டு படைத்திடத் துடித்திட்ட ஓவியர்கள் அவர்கள். தமிழ் மொழிப்பாட நூல்களைக் கூடுதல் கவனத்துடன் செதுக்கிட முயன்ற குழுவிற்குத் தலைமை யேற்று நடத்திக் கொண்டி ருந்தவர் அந்த அதிகாரி. பழந்தமிழ்ப் பாடல்களிலும், நவீன இலக்கியத்திலும் ஒருசேரப் பயிற்சி பெற்றவர். பழகுவதில், பேசுவதில் மென்மையான சுபாவம். பாடநூல் தயாரிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வேலையில் ஒருநாள் மாலை அவரைத் தொடர்புகொள்ள முடிய வில்லை. பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறாரே என்று நினைத்துக்கொண்டி ருந்தபோது, சொந்த வேலையாக மூன்று நாள் விடுமுறையில் வெளியூர் செல்வதாகக் குறுஞ்செய்தி வந்தபோது கோபம் சற்று அதிகமானது. இருக்கும் மற்ற அலுவலர்களுக்குப் பணிகளைப் பகிர்ந்தளித்து விட்டு இல்லம் திரும்பும் வேளையில் கிடைத்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த அதிகாரியான அருள் முருகனின் மனைவி, சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார் என்பதுதான் அந்தச் செய்தி. உடனே அருகிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவமனை ஆம்புலன்ஸ் வசதிகள் என உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம். பத்து நிமிடம் கழித்து வந்த செய்தி, அவர் மனைவி மட்டுமல்ல, உடன் சென்ற நெருங்கிய உறவினர்கள் மற்றும் இரண்டு உறவினர்களும் சாலை விபத்தில் இறந்து விட்டனர் என்று தெரிவித்தது.
அடுத்த சில நாள்கள் சோகத்திலும், அதிர்ச்சியிலும் கழிந்தன. ‘தாயுமானவராகி பயணத்தைத் தொடருங்கள். தோழமையுடன் என்றும் உடன் வருவோம்’ என்று நான் அனுப்பிய குறுஞ்செய்திக்கு மறுமொழி இல்லை. சில நாள்கள் கழித்து, அவரிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை நினைத்தால் இப்போதும் மனம் நடுங்குகிறது. பதினொன்றாம் வகுப்புத் தமிழ்ப்பாடநூலில் வைக்கப்பட வேண்டிய சங்க இலக்கிய புறநானூற்றுப் பாடலின் தற்காலக் கவித்துவ மொழிபெயர்ப்பு சரியா என்று கேட்டது அவர் அனுப்பிய குறுஞ்செய்தி. மனைவியும், உற்ற உறவினர்களும் மாண்டபோதும் கடமையைச் செய்திட விழையும் அந்த அலுவலருக்கு என்ன செய்யப்போகிறோம் நாம்?
இந்தக் கட்டுரையை உதயச்சந்திரன் குரலிலேயே கேட்க இதை ஸ்கேன் செய்யவும்.

ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் உயிரைக் கொடுத்து உழைக்கும் அதிகாரிகள், கடைநிலை ஊழியர்கள் உண்டு. உயரதிகாரிகளின் திறமைக்கும், நேர்மைக்கும் உரிய அங்கீகாரங்கள் கிடைக்கின்றன. ஆனால் இவை எவற்றையுமே எதிர்பாராமல் கடமையுணர்வுடன் மிகுந்த நேர்மையுடன் பணியாற்றும் ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் கண்ணுக்குத் தெரியாமல் நிறைந்துள்ளனர்.
கொட்டும் மழைக்கு நடுவே அதிகாலையில் தன் பணியைத் தொடங்கும் துப்புரவுப் பணியாளர் முதல், நகரின் ஒட்டுமொத்த மாசையும் உள்வாங்கி, தன் ஆயுளைத் தினமும் குறைத்துக்கொண்டிருக்கும் போக்குவரத்துக் காவலர் வரை; கால்நடையாய்ச் சென்று பழங்குடிக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் செவிலியர் முதல், சட்ட விரோதச் செயல்களைத் தடுக்க முயன்று உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் வரை; தன் சொந்த நகைகளை விற்று, தான் பணியாற்றும் அரசுத் தொடக்கப் பள்ளிக்கு வசதிகள் செய்துகொடுத்த ஆசிரியை முதல், பயணியர் நலன் காத்து மாரடைப்பால் உயிர்விட்ட பேருந்து ஓட்டுநர் வரை; உயிரைப் பணயம் வைத்து மின்கம்பிகளுக்கு நடுவே வாழும் மின் ஊழியர் முதல், இரவுபகலாக வெள்ள நிவாரணப் பணிகள் செய்யும் அரசு ஊழியர் வரை அரசு இயந்திரத்தைச் சுமக்கும் அடிப்படை ஊழியர்களின் பங்கு மகத்தானது.
குடமுழுக்கின்போது அனைவருடைய கண்களும், குவிந்த கரங்களும் கோபுரக் கலசங்களை நோக்கியே இருக்கும். தவறில்லை. கூடவே, கோபுரத்தைத் தாங்கும் பக்கத் தூண்களையும், அடிக்கற்களையும் மறந்திடத் தேவையில்லையே. எதையும் எதிர்பாராமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் அலுவலர்களுக்கு, அடிப்படை ஊழியருக்குத் தேவையெல்லாம் அவர்களது இருப்பை, உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் மென்மை கூடிய மயிலிறகு வருடல் மட்டுமே.
நடை பயில்வோம்...
சபைக் குறிப்பு
தமிழ்நாட்டின் புதிய பாடநூல்களில் தொழில்நுட்பம் இழையோட அறிமுகப்படுத்தப்பட்ட விரைவுக் குறியீடுகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்கள் முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கானவீடியோ பாடங்கள் வரை, சிந்துவெளி நாகரிகம் குறித்த விளக்கப்படம் முதல் புகழ்பெற்ற அமெரிக்க Colorado பல்கலைக் கழகத்தின் PhET Simulations மூலம் செயல்முறைப்பயிற்சிகள் வரை சுமார் 7,400 இணைய வளங்கள் இடம்பெற்றுள்ளன. தொடக்கத்தில் ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் பார்வைகளை ஈட்டி இதுவரை இரண்டு கோடி முறை பயன்படுத்தப்பட்டுள்ளது மிகப் பெரிய சாதனை.

தொழில்நுட்பம் ஆசிரியர் மாணவ உறவை நெகிழச் செய்ததில் வகுப்பறைச்சூழல் சற்று மாறத் தொடங்கியது. பாடநூல்களில் தொழில்நுட்ப அறிமுகத்திற்காகத் தமிழ்நாட்டிற்கு தேசிய அளவில் `சாம்பியன்’ விருது கிடைத்தது. இந்த வெற்றிக்குப்பின்னால் கடுமையாக உழைத்தது 100 பேர் கொண்ட குழு. அந்த நூறு பேரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களே!
-உதயச்சந்திரன்