
22 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் வன்முறையின் பிடியில் சிக்கித் தவித்த காலகட்டம்.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அதிகாரிகள் கடுமையாக முயன்று கொண்டிருந்தார்கள். இரவுபகல் பாராமல் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் உயர் அதிகாரிகள் பயணம் செய்து நிலைமையைக் கண்காணித்து வந்தனர். அப்படித்தான் அந்தக் கடலோர மாவட்டத்தின் கலெக்டரும் அவர் பணிபுரிந்த மாவட்டத்தைச் சுற்றி வந்தார். வழக்கமாக அவர் எந்த ஒரு காவல்துறை அதிகாரியையும் உடன் அழைத்துச் செல்வதில்லை. வாகன ஓட்டுநர், இரண்டு உதவியாளர்கள் அவ்வளவுதான். அன்றும் அப்படித்தான். மாவட்டத்தின் கடைக்கோடிப் பகுதியில் ஆய்வு செய்துவிட்டுத் திரும்பும் வழியில் ஒரு கிராமத்தில் இரு தரப்பும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொள்வதாகத் தகவல் கிடைத்தது. உடன் அப்பகுதி நோக்கி வாகனத்தைத் திருப்பக் கட்டளை இடுகிறார். அந்தக் கிராமத்தை நெருங்கும்போது கடும் கூச்சல் கேட்கிறது.
சிதறி ஓடிக் கொண்டிருக்கின்றனர் சிலர். அதற்கு மேல் பாதுகாப்பில்லாமல் செல்ல வேண்டாம் என்று கலெக்டரை, உடன் வந்த உதவியாளர்கள் தடுக்கின்றனர். காவல்துறை அதிகாரிகள் வந்து சேர்ந்தபின் செல்லலாம் என்று தயங்கியபடியே கூறுகின்றனர். தன்மீது அதீத தன்னம்பிக்கை கொண்ட கலெக்டரோ ஆலோசனைகளைப் பொருட்படுத்தாமல் வன்முறைக் கும்பலை நோக்கி விரைகிறார். பதற்றத்துடன் உதவியாளர்கள் உடன் செல்கிறார்கள்.

தலைக்கு மேலே பறந்துகொண்டிருக்கும் கற்கள், புழுதிப்படலம், கடும் கூச்சல் இவற்றுக்கு நடுவே அரசு வாகனத்திலிருந்து இறங்கி வரும் அந்தச் சீக்கிய முகத்தைப் பார்த்ததும் கூச்சல் சற்று அடங்குகிறது. ஆயுதங்களைக் கொண்டு ரத்தப் பரிசோதனை நடத்திட முயன்ற நபர்கள் சற்றுப் பின்வாங்குகின்றனர். நெடிதுயர்ந்த உருவம், தலையில் சிவப்பு நிறத் தலைப்பாகை, உலகே தன் காலடியில் என்பதைப் போன்ற நடை. அவர் கம்பீரமாக முன்னேறியபோது மனதில் மனிதம் தவிர்த்து வன்மம் தாங்கி அதுவரை வலம் வந்தவர்கள் இப்போது முன்னேறத் தயங்கினர். அவர்கள் கைகளில் ஆயுதங்களும் கண்களில் கோபமும் நிழலாடுவதை அவர் கண்டுகொள்ளவே இல்லை. அவர்களை நெருங்கினார்.

கூடியிருப்பவர்களைப் பார்த்து கலெக்டர் பேசத்தொடங்கினார். ``உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்னை? கலைந்து போய்விடுங்கள். இல்லையென்றால் கைது செய்வோம்” என்று எச்சரிக்கிறார். கலெக்டர் மழலைத் தமிழில் விடுத்த எச்சரிக்கையைக் கேட்டு ஆயுதம் தாங்கிய கரங்கள் அவர்கள் அறியாமலே மெல்லத் தளர்கின்றன. வன்மம் நிழலாடிய முகங்களில் இப்போது புன்னகை தவழ்கிறது. கலெக்டருக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்கிறார். கலவரம் கூடாது என்றும் அமைதி திரும்ப வேண்டும் எனவும் அந்தக் கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றும் அவர் கொஞ்சும் தமிழில் பேசிச் செல்வதை அனைவரும் ரசிக்க ஆரம்பித்தனர். சில நிமிடங்களில் தகவல் கிடைத்து காவல்துறை அதிகாரிகள் அங்கே வந்து கூட்டத்தைக் கலைக்கின்றனர். இயல்பு நிலை திரும்புகிறது. கலெக்டர் தான் எடுத்த பணி முடிந்தது என்ற திருப்தியில் கிளம்பத் தயாரானார். அப்போது நான்கைந்து இளைஞர்கள் அவரை நெருங்கினர். உதவியாளர்களும், அருகிலிருந்த காவலர்களும் பதற்றத்துடன் கலெக்டரைப் பாதுகாக்க விரைந்தனர். அருகில் வந்த இளைஞர்களோ கலெக்டரைப் பார்த்து ``நீங்கள் அழகாகத் தமிழ் பேசுகிறீர்கள். உங்களை எங்களுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது” என்றனர். கலெக்டருக்கு அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அவருக்கு மட்டுமல்ல, தமிழர்களின் மரபணுவில் தமிழ் மொழி பின்னிப் பிணைந்து இழையோடுவதைக் கவனிக்கத் தவறுபவர்களுக்கு இது ஆச்சர்யத்தை மட்டுமே தரக்கூடும்.
தமிழ்மொழி குறித்த பெருமிதம் பாமரருக்கும், பண்டிதருக்கும் ஒரு சேர நிறைந்திருக்குமா என்ற கேள்விக்கு சமீபத்தில் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய கட்டுரையொன்றில் விடை கிடைத்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக சுதேசிக் கப்பல் விட்டு வெற்றிக் கொடி நாட்டிய வ.உ.சிதம்பரனாரைக் காலம் செக்கிழுக்க வைத்தது மட்டுமன்றி வறுமையிலும் தள்ளியது. தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் நிதி உதவியைப் பெற காந்தியடிகளுக்குத் தொடர் கடிதங்கள் எழுதுகிறார் வ.உ.சி. பொறுமை காத்திட அறிவுறுத்துகிறார் காந்தி.
இந்நிலையில் வ.உ.சி-யின் நினைவூட்டல் கடிதத்திற்கு காந்தி தமிழில் பதில் எழுதியிருக்கிறார். ‘. . . தென்னாப்பிரிக்காவிலிருந்து இன்னும் வந்து சேரவில்லை’ என்று தொடங்கி ‘வந்தே மாதரம்’ என்று முடிகிறது அந்தக் கடிதம். காந்தி அதைத் தமிழில் எழுதியிருந்ததைக் கண்டவுடன்
வ.உ.சி-க்கு தனது பணத் தட்டுப்பாடு, கவலை எல்லாம் மறந்தே போய்விட்டது. ‘தாங்கள் தமிழில் எழுதிய கடிதம் கிடைத்தது. எந்தப் பிழையும் இல்லாமல் எழுதியிருப்பது மகிழ்ச்சி. என்னால் எளிய நடையில் எழுதப்பட்ட தமிழ் உரைநடை, செய்யுள் நூல்களை உங்களுக்கு அனுப்புகிறேன்’ என்று காந்திக்கு ஆர்வம் பொங்கக் கடிதம் எழுதினார்.
கொஞ்சும் தமிழ் கேட்டு வன்முறையும், வறுமையும் தற்காலிகமாக விடைபெறும் மாயம் என்ன? மழலைத் தமிழ் பேசிய மகாத்மா காந்திக்கு மடை திறந்த வெள்ளமாய்த் தமிழர்கள் அன்பைப் பரிமாறி அடிமையாகிப்போனது எப்படி? வாருங்கள் தென்னாப்பிரிக்கா செல்வோம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்நாட்டிலிருந்து பஞ்சம்பிழைக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறத் தொடங்கினர். அப்படி அவர்கள் கரைசேர்ந்த பகுதிகளில் கனிம வளம் கொழிக்கும் தென்னாப்பிரிக்காவும் ஒன்று. வெள்ளையர்களின் தோட்டத்தில் ஒப்பந்தக் கூலிகளாகப் பணியமர்த்தப்பட்டனர். சில ஆண்டுகளில் ‘கூலித்தமிழர்’ என்ற சொல் அங்கே பரவலாகப் பயன்படுத்தப்பட்ட அவலமும் நிகழ்ந்தது. ஆண்டான் – அடிமை மனப்பான்மையோடு நிறவெறியும், இனவெறியும் சேர்ந்துகொள்ள, சிக்கல் அதிகமானது.

தென்னாப்பிரிக்காவின் நடால் நகரம். கிழிந்த ஆடைகளும் உடலெங்கும் ரத்தக் காயங்களுமாக ஒருவர். தளர்வான நடையுடன் அந்த நகரின் புதிய வழக்கறிஞர் ஒருவரின் அறைக்குள் நுழைகிறார். வழக்கறிஞரின் பரிவு வந்தவரை ஈர்த்தது. வந்தவர் பெயர் பாலசுந்தரம். தமிழர். ஓர் ஒப்பந்தக்கூலி. தன் தோட்ட முதலாளியால் கடுமையாகத் தாக்கப்பட்டு, அவர்மேல் குற்றம் சாட்ட முன் வந்தவர். அவர் கொடுத்த புகார்க் கடிதத்திலும்கூட ரத்தம் தோய்ந்திருந்தது. பால சுந்தரத்திற்கு ஆறுதல் கூறி வழக்கை ஏற்று நடத்துகிறார் அந்தப் புதிய வழக்கறிஞர். பல தடைகளுக்கு இடையே சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டு வழக்கில் வெற்றியும் பெறுகிறார். தோட்ட முதலாளிக்குத் தண்டனை கிடைக்கிறது. அந்த வழக்கறிஞரின் பெயர் மோகன்தாஸ் காந்தி என்று தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் மத்தியில் நன்றியுடன் உச்சரிக்கப்பட ஆரம்பித்தது. காந்திக்கும் தமிழருக்கும் இடையே உறவு துளிர்த்தது இப்படித்தான்.
தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய அத்தனை போராட்டங்களிலும் தமிழர்கள் முன்னின்றனர். இந்தியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் திருமணங்களைச் செல்லாததாக அறிவித்த சட்டத்தை எதிர்க்க முன்வந்து சிறை சென்ற பதினோரு பெண்களில் பத்துப் பேர் தமிழ்ப்பெண்கள். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 17 வயதே ஆன தில்லையாடி வள்ளியம்மை என்ற சிறுமியைத் தன் கைகளில் ஏந்தி அழைத்துச் சென்றார் காந்தி. அந்தச் சிறுமி இறந்தும் காந்தியின் நினைவில் தொடர்ந்து வாழ்ந்தார்.
‘என் கணவன் சிறையில் இருக்கிறான். மகன் விரைவில் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை செல்வான். எனவே எனக்கு நகைகள் எதற்கு?’ என்று சொல்லி காந்தியிடம் நன்கொடை யாகக் கொடுத்தார் திருமதி.பக்கிரிசாமி என்ற பெண்மணி. புறநானூற்றுத் தாயின் புதிய வடிவங்கள் காலந்தோறும் வரத்தான் செய்கின்றன.
காந்தி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, தென்னாப்பிரிக்காவில் கைது செய்யப்பட்ட தன் மகன் ஹரிலால் குறித்துத் தன் குடும்பத்தினருக்கு ஆறுதல்கூறிக் கடிதம் எழுதுகிறார். அதில் `நாகப்பன் என்ற தமிழ் இளைஞன் போராட்டத்தில் ஈடுபட்டு இறந்து போனானே! அப்போது அவனுக்கும் வயது குறைவுதானே’ என்று.

தமிழர்கள் காந்தியை மனதார நேசித்தார்கள். அவருக்காகப் பொன், பொருள் மட்டுமல்ல, தமிழர் ஒருவர் தன் நான்கு மகன்களையும் அவருக்குப் பணிவிடை செய்து உதவிடத் தத்துக் கொடுத்த நிகழ்வும் நடந்தது. காந்தியும் நன்றிக் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தினார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் காந்திக்கு வழியனுப்பு விழா நடக்கிறது. தனக்கு அணிவிக்கப்பட்ட பூமாலையை விழாவிற்குத் தலைமை தாங்கிய தமிழர் தலைவர் ஒருவரின் கழுத்தில் சூடிவிட்டு காந்தி சொன்னது: “இனவெறிப் போராட்டத்தின் உக்கிரத்தைத் தாங்கிய தமிழர்கள் என் உடன்பிறந்த சகோதர்கள்” என்று.
காந்தி தமிழ்மொழியையும் அளவுகடந்து நேசித்துள்ளார். தென்னாப்பிரிக்காவிலேயே தமிழ் கற்றுக்கொள்ளப் பெருமுயற்சி எடுத்திருக்கிறார். டாக்டர் போப் எழுதிய தமிழ் இலக்கண நூல்களைத் தேடி அலைந்திருக்கிறார். அவர் சிறை செல்லும்போதெல்லாம் தமிழ்ப் புத்தகங்கள் உடன் சென்றிருக்கின்றன. தனக்குத் தமிழ் கற்றுக்கொடுக்க தகுந்த ஆசிரியரை அறிமுகப்படுத்துமாறு நண்பர்களுக்குத் தொடர் கடிதங்கள் எழுதியிருக்கிறார். ‘கற்க கசடற’ என்று தொடங்கும் குறள் அவர் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. பழமொழிகள்மீதும் அவருக்கு ஆர்வம் அதிகம். “பிறப்புண்டேல் இறப்புண்டு” “திக்கற்றவருக்கு தெய்வமே துணை” என்று அடிக்கடி அவர் உச்சரிப்பதுண்டு. அவர் நடத்திய ஆசிரமத்தில் திருவாசகப் பாடல்கள் அவ்வப்போது ஒலித்தன. கம்பரின் கவிநயம் குறித்து ருசித்த காந்தி, ஔவையாரை “மதர் ஔவை” என்று அழைத்து அழகு பார்த்தார். ‘அன்பு’ மற்றும் ‘அம்பு’ என்ற இரு சொற்களுக்கும் இடையே உள்ள நுண்ணிய வேறுபாடு கண்டு வியந்திருக்கிறார். வன்முறை தவிர்த்து அன்பைப் போதித்த காந்திக்கு அந்த இரு சொற்களையும் தமிழ்மொழி கையாண்ட விதம் மிகவும் பிடித்துப் போயிருக்கக் கூடும்.

இத்தொடரை ஒலிவடிவில் கேட்க Vikatan Audio யூடியூப் தளத்தை சப்ஸ்க்ரைப் செய்யவும்.
ஒருமுறை மாயவரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விழாத் தலைவர் ஆங்கிலத்தில் வரவேற்புரை ஆற்றியதைக் கண்டித்து, தமிழில்தான் உரை நிகழ்த்த வேண்டும் என அறிவுறுத்துகிறார். தான் ஒருமுறை எழுதிய கடிதத்தில் “ரோம்பு அன்புடன்” என்று எழுதி விட்டதை ராஜாஜி திருத்தி உதவியதை நினைவுகூர்கிறார். அதே ராஜாஜி தன் மகனுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது குறித்த தன் ஆதங்கத்தைப் பதிவு செய்யவும் காந்தி தயங்கவில்லை.
தமிழ்மொழிப்பற்று காந்தியைச் செயலிலும் இறங்க வைத்தது. தென்னாப்பிரிக்காவின் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க அரசாங்கம் முன்வராததைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். லண்டன் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் தமிழை விருப்பப் பாடமாகச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஐரோப்பாவிற்கு எப்படி இத்தாலிய மொழியோ அப்படி இந்தியாவிற்குத் தமிழ்மொழி என்றது அவர் கடிதம். கோரிக்கை ஏற்கப்படும் வரை உலகத் தமிழர்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்ற காந்தியின் கனவை நூறாண்டுகள் கடந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்து உலகத் தமிழர்கள் நனவாக்கினர்.
தாய்மொழிக் கல்வியையும், தமிழ்மொழிக் கல்வியையும் தொடர்ந்து வலியுறுத்திய காந்தி, இந்தியாவின் பிற பகுதிகளில் வாழ்பவர்களும் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். அதே நேரம், தமிழர்கள்மீது உரிமையோடு விமர்சனங்களை வைக்கவும் அவர் தயங்கவில்லை. மீனாட்சி அம்மன் கோயிலிலும், குற்றால அருவி யிலும் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமையைக் கண்டிக்கத் தவறவில்லை அவர்.
காந்தி தன் வாழ்நாளில் 20 முறை தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்துள்ளார். 1896ஆம் ஆண்டு முதல் வருகையின்போதே தமிழகம் அவரை அடையாளம் கண்டுகொண்டு அங்கீகரித்துள்ளது. சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆலோசித்துள்ளனர். காந்தியின் முயற்சிகளைப் பாராட்டி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி வாழ்த்துத் தந்தி அனுப்பியுள்ளார். காந்தியின் வாழ்க்கைப் பயணத்தில் தமிழகம் உணர்வுபூர்வமாக இணைந்தே வந்திருக்கிறது.
1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தியாக வந்தவரை, தமிழகம் மகாத்மாவாகப் புதிய வடிவம் கொடுத்து உலகிற்கு அறிமுகம் செய்தது. ஆம். மதுரை நெசவாளர்கள் கூட்டத்தில் மேலாடை துறந்து வெறும் இடுப்பு வேட்டியுடன் தோன்றியபோது அவருடன் இருந்த தலைவர்கள் முதலில் அதிர்ச்சியடைந்துதான் போயினர். காந்தியின் எளிய உடை குறித்த செய்தி காட்டுத்தீயாய்ப் பரவியது. மக்கள் என்ன நினைப்பார்களோ என்ற தலைவர்களின் அச்சம் அகன்றது. ஆனால், அடுத்த நாள் மதுரையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியெங்கும் மக்கள் கூடி நின்று காந்தியை வரவேற்றனர். மகாத்மா பிறந்தார்.
மகாத்மா காந்திக்கும் தமிழருக்கும் இருந்த உறவு ஆழமானது.
மேலாடை துறந்த மாமனிதரின் காலடியில் பொன், பொருள், வாழ்வு என அனைத்தையும் காணிக்கையாக்கி வணங்கினர் தமிழர்கள். அவருடைய முகத்தில் தவழ்ந்த கள்ளமில்லாச் சிரிப்பில் தங்களை அடிமையாக்கிக்கொள்ளத் துடித்தனர். தமிழ்மொழியை மனதார நேசித்தவருக்குத் தமிழர்மீது விமர்சனம் செய்திடும் உரிமையையும் வழங்கி அழகு பார்த்தனர். காந்தி, மழலைத் தமிழில் கடிதம் எழுதிக் கிறுக்கலாகக் கையெழுத்திட்டதைத் தமிழர்கள் தம் நெஞ்சில் ஏந்திச் சுமந்து கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழைக் கொண்டு தமிழர்களை வென்றிடலாம் என்று காந்திக்குத் தெரிந்திருந்தது. அளவு கடந்த அன்பைப் பொழிவதன் மூலம் மகாத்மாவையும் வீழ்த்த முடியும் என்று தமிழருக்கும் தெரிந்தே இருந்தது.
காந்தி பிறந்து 150 ஆண்டுகள் கழிந்த சூழலில் எழும் ஓர் இயல்பான கேள்வி:
மகாத்மா காந்தி இன்று இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்?
நொடியில் கிடைக்கும் விடை:
“கீழடியில் காலடி எடுத்து வைத்திருப்பார் .”
நடை பயில்வோம்...
சபைக் குறிப்பு
வரலாறு அவ்வப்போது தன் நாயகர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.. மேலும், தேவைக்கேற்ப அது நாயகர்களைப் புதுப்பிப்பதும் உண்டு. மகாத்மா காந்தி குறித்துப் பலரும் அவரவர் பார்வையில் எழுதிக் குவித்திருக்கிறார்கள். லூயி ஃபிஷர் எழுதிய ‘காந்தியின் வாழ்க்கை’, தரம்பாலின் ‘காந்தியை அறிதல்’, ராமச்சந்திர குஹா காந்தியை முன் வைத்து எழுதிய மூன்று நூல்கள் India after Gandhi, Gandhi before India, Gandhi : The years that changed the world ஆகியவை அதிகமாக வாசிக்கப்படுகின்றன.

`தமிழ்நாட்டில் காந்தி’ என்ற தலைப்பில் அ.ராமசாமி மற்றும் காந்தி குறித்த ராஜனின் புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றுக்கு இடையே என்னை மிகவும் கவர்ந்த நூல் பிரமோத் கபூர் எழுதிய Gandhi - An illustrated Biography. ரோலி பதிப்பகத்தின் நிறுவனரான பிரமோத் கபூர், பல ஆண்டுகள் கடுமையாக உழைத்துத் திரட்டிய அரிய பல புகைப்படங்கள் வழியே காந்தியின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் புத்தகமான இது, காந்தியை ஆழமாகக் கற்றவர்களையும், காந்தியவாதிகளையும்கூட வியப்பில் ஆழ்த்தும் கருவூலம்.
-உதயச்சந்திரன்