
தமிழ்ப் பண்பாட்டின் தலைநகர் மதுரையின் 195-வது கலெக்டராகப் பொறுப்பேற்றுச் சில நாள்கள்தான் ஆகியிருந்தன. பழைமையும் புதுமையும் கலந்து தூங்காநகரம் ஏற்படுத்திய பிரமிப்பிலிருந்து மீள்வதற்கு முன்பே சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு.
பேசியது ஓர் உயரதிகாரி. முந்தைய நாள் பெய்த மழை அளவு, சட்டம் ஒழுங்கு குறித்த வழக்கமான கேள்விகளுக்குப் பின்னால் அவர் சொன்ன செய்தி கேட்டுத் திகைப்புதான் மிஞ்சியது. அந்தக் குறிப்பிட்ட மூன்று ஊராட்சிகளிலும் உள்ளாட்சித் தேர்தலை நான்கு மாதங்களுக்குள் நடத்த வேண்டும், உடனே பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்ற அறிவுரை அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. கடந்த பத்தாண்டுகளாக நடத்த முடியாத தேர்தலை எப்படி இவ்வளவு குறுகிய காலத்துக்குள் நடத்தமுடியும் என்ற கேள்வி உடனே மனதில் எழுந்தது. அன்றாட அலுவல்கள் அடம்பிடித்து இழுத்துச் சென்றதில் இந்த உரையாடலே நினைவிலிருந்து அகன்றுவிட்டது.
சில நாள்கள் கழித்து, சிற்றிதழ் ஒன்றில் வெளிவந்த விமர்சனக் கட்டுரை ஒன்று ‘மக்களாட்சி மலருமா அந்த ஊராட்சிகளில்?’ என்று மனசாட்சியைச் சற்று உலுக்கிவிட்டு நகர்ந்தது. பின்னர் சென்னையிலிருந்து மீண்டும் அழைப்பு. இம்முறை, மறுமுனையில் ஒலித்த குரலில் கனிவு சற்றுக் குறைந்திருந்தது. இனியும் தவிர்க்க முடியாது என்று தெரிந்தவுடன் அந்த மூன்று ஊராட்சிகள் குறித்துத் தகவல்கள் திரட்டினோம். ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று ஓரிரு அதிகாரிகளை மட்டும் அழைத்துக் கொண்டு அந்த ஊராட்சிகளுக்குப் பயணம் புறப்பட்ட போது வரலாற்றின் முக்கியமான பக்கங்களில் நுழைகிறோம் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
மிக இயல்பாக இருந்தன அந்தக் கிராமங்கள். ஊர்ச் சாவடியில் ஆண்கள் சிலர் உலக அரசியல் பேசிக்கொண்டிருக்க, பெண்கள் பாப்பாபட்டி அம்மன் கோயில் நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். அடுத்து கீரிப்பட்டி. பின்னர் நாட்டார்மங்கலம். மூன்று கிராமங்களிலும் உள்ளடங்கி இருந்த குக்கிராமங்கள், குடியிருப்புகளைச் சுற்றிப் பார்த்து மக்களுடைய அடிப்படைத் தேவைகள் குறித்து உரையாடிக் கொண்டிருந்த எங்களை நூற்றுக்கணக்கான கண்கள் அலட்சியத்துடன் கடந்து சென்றன.

ஏளனப் பார்வை அந்தக் கிராமங்களில் மட்டுமல்ல; உடன் பணியாற்றுபவர்களும் சற்று அனுதாபத்துடன்தான் அணுகினர். ‘தேவையில்லாத வேலை’. ‘நேர விரயம்’, ‘வளர்ச்சித் திட்டங்கள் நோக்கி கவனம் செலுத்தலாம்’ என்றெல்லாம் அறிவுரைகள் வேறு. குழப்பத்துடன் சில நாள்கள் சென்றன. ஆனால், ஒரு நாளிதழ்ச் செய்தி அனைத்தையும் புரட்டிப் போட்டது. தமிழ்நாட்டின் சில கிராமங்களில் அரசியலமைப்புச் சட்டப்படி தேர்தல் நடத்த இயலாமல்போனது குறித்து லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்யப்படுவது குறித்து நீண்டது அந்தச் செய்தி. வரலாறு இப்போது தூண்டில் போடுவதை நன்கு உணர முடிந்தது.
தினமும் புதிது புதிதாய் மனிதர்கள். நள்ளிரவு வரை நீண்ட சந்திப்புகள். மாற்றத்தைக் கொண்டு வர முடியுமா என்று பார்த்தால், அன்றாட அலுவல்களுக்கிடையே தடம் பிடித்து நடப்பது கடினமாகத்தான் இருந்தது. ஆனால் தேடிக் கொண்டிருந்த புதிய பாதைக்கான வழி, 150 ஆண்டுக்காலப் பழைய நூலின் பக்கங்களிலிருந்து கிடைத்தது என்றால் உங்களுக்கு வியப்பாகத்தான் இருக்கும். ஆம். புதிதாய்ப் பதவியேற்றுக்கொண்டு வரும் எந்த கலெக்டரும் அந்த மாவட்டத்தின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு என அனைத்தையும் தெரிந்துகொள்ளப் பழைய நூல்களைத் தேடிப் படிப்பது வழக்கம். அரசு கெசட்டியர், மதுரையின் வரலாறு குறித்து நெல்சன், எட்கர்தர்ஸ்டன் எனப் பலரும் எழுதிய நூல்களை அவ்வப்போது விரல்கள் புரட்டிக்கொண்டிருந்தன. 1790-ம் ஆண்டில் முதல் கலெக்டராய்ப் பதவியேற்ற மெக்லியாட் முதல், சுதந்திரத்திற்குப் பின்னர் டி.என்.சேஷன் வரை பல அதிகாரிகளின் உழைப்பைப் பதிவு செய்த வரலாற்றின் சுவடுகளில் நடை பயிலத் தொடங்கிய நேரம். நள்ளிரவைத் தாண்டிய ஒரு பொழுதில் அலை பாய்ந்துகொண்டிருந்த கண்கள் ஓரிடத்தில் நிலை கொண்டு உற்சாகம் அடைகின்றன.

பழைமைக்கும், புதுமைக்கும் நடந்த மோதலில் வென்றது யார்? எழுத்துகள் காட்சியாய் விரிகின்றன.
ராணி மங்கம்மாளின் மாளிகை, மதுரை கலெக்டர் அலுவலகமாகச் செயல்பட்ட காலம். 1844-ம் ஆண்டு. கம்பீரமான அந்தக் கட்டடத்தின் மையப் பகுதியில் அதிகாரிகள் பலர் குழுமியிருந்தனர். வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரம், நில அளவைத்துறை அலுவலர்கள் என அனைவர் முகத்திலும் பதற்றம். கூட்டம் நடக்கும் அந்த நீண்ட அறை நோக்கி ஓர் நெடிய உருவம் அழுத்தந்திருத்தமாக அடியெடுத்து வைத்து நடந்து வருவதைக் காலடியோசை முன்னரே அறிவித்தது. அவர் மதுரையின் 17-வது கலெக்டர் பிளாக் பர்ன்.மிடுக்குடன் வந்தமர்ந்த அவர், கூட்டத்திற்கு வந்திருந்த அதிகாரிகளை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டுத் தலையசைக்கிறார். கூட்டம் தொடங்குகிறது. சுகாதாரத்துறை அலுவலர் பேசுகிறார்... ‘மதுரை நகரில் காலரா நோய் வேகமாகப் பரவிவருகிறது. மழைக்காலமாக இருப்பதால் ஒவ்வொரு நாளும் 50 பேர் செத்து மடிகிறார்கள். சென்ற ஆண்டு மட்டும் 1500 பேர் இறந்து போய்விட்டார்கள்’ என்று அவர் சொன்னபோது கூட்டத்தில் மயான அமைதி நிலவியது.
நகரில் நிலவும் சுகாதாரக் கேட்டிற்குக் காரணம், பராமரிப்பில்லாமல் கிடக்கும் கோட்டையும், அதைச் சுற்றியுள்ள அகழியும்தான் என்று எடுத்துரைக்கப்படுகிறது. எனினும் கோட்டை மதிற்சுவர்கள் மதுரையின் அடையாளம் எனவும், 72 பாளையங்களின் உணர்வோடு கலந்தவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. கோட்டை மதிற்சுவரில் உடன் உறைந்து நகரைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதாக நம்பப்படும் காவல் தெய்வங்கள் சிலருக்கு நினைவில் வந்து பயமுறுத்தின. அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பொறுமையாகக் கேட்ட கலெக்டர் பிளாக்பர்ன் ‘மதுரை நகரின் கோட்டை மதிற்சுவர் இடிக்கப்பட்டு, அகழிகள் நிரப்பப்பட்டு புதிய வீதிகள் உருவாக்கப்படும்’ என்று அறிவித்தார். ‘இது நிறைவேறாத கனவு’ எனக் கூட்டத்தினர் முணுமுணுத்தனர். மேலும், ‘கோட்டை மதிற்சுவரில் குடியிருக்கும் காவல் தெய்வங்கள் பலி வாங்கிடும்’ என்றும் சிலர் நடுங்கினர். மதராஸ் கவர்னரிடம் புகார் மனு அளிக்க ஒரு கூட்டம் கிளம்பிச் சென்றது. இதன் விளைவாக பிளாக்பர்ன் பணியிலிருந்து ஒரு மாதம் ஒதுக்கி வைக்கப்பட்டார்.
எதிர்ப்புகளைக் கண்டு பின்வாங்கவில்லை பிளாக்பர்ன். மதராஸ் சென்று கவர்னரிடம் முறையிட்டு, தன் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொன்னதில் மாற்றம் நிகழ்ந்தது. மீண்டும் அடுத்த மாதமே பணிக்குத் திரும்பினார். ஆனால் இம்முறை தன் வியூகத்தை மாற்றியமைத்தார். நிதானமாக யோசித்துப் பார்த்தபோது, அவர் தகர்க்க வேண்டியது கோட்டை மதிற்சுவர்களை அல்ல, மதுரை மக்களின் மனங்களில் எழுப்பப்பட்டிருந்த மூடநம்பிக்கைச் சுவர்களைத்தான் என்று புரிந்தது. அதற்குப் பல புதிய வழிகளைக் கையாண்டார். நகரில் வாழும் ஒவ்வொரு சமூகப் பிரதிநிதியையும் சந்தித்தார். புது மண்டப வணிகர்கள், கோயில் அர்ச்சகர்கள் என அனைவரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். முடிந்தவற்றை உடனுக்குடன் நிறைவேற்றினார்.
எனினும் புதிய சிக்கல் நிதிப்பற்றாக்குறை வடிவில் வந்தது. மதுரை நகரை விரிவாக்கி அழகுபடுத்தும் திட்டத்திற்கு 40,000 ரூபாய் தேவைப்படும் எனத் திட்டமிடப்பட்டது. ஆனால் மதராஸ் கவர்னரும், கம்பெனி நிர்வாகமும் கைவிரித்திட, செய்வதறியாது திகைத்த பிளாக்பர்னின் மூளையில் ஒரு புதுமையான யோசனை தோன்றியது. ‘கோட்டை மதிற்சுவரை யார் யாரெல்லாம் இடித்து அகழியை நிரப்புகிறார்களோ அவர்களுக்கு அந்த இடம் சொந்தம்’ என அறிவிக்கப்பட்டது. அதற்கு அவர்கள் செலுத்தும் வரியைக் கொண்டு நகரவீதிகளை விரிவுபடுத்தும்போது நிலம் இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.
முன்பு கூட்டத்தோடு சேர்ந்து எதிர்க்குரல் எழுப்பியவர்கள் இப்போது தமது இல்லக் கனவுகளில் லயித்து தனித்தனி நபராய்ச் சுருங்கிப் போனார்கள். எதிர்ப்பாளர்கள் திட்டத்தின் பங்குதாரர்களாக மாறிப்போனார்கள். நகரின் நலன் கருதி எடுத்த முடிவுக்கு வரவேற்பு அதிகரித்தது. கலெக்டர் பிளாக்பர்ன், தன் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கினார். ஒவ்வொரு சமூகப் பிரிவிற்கும் அவர்கள் இடிக்க வேண்டிய கோட்டைப் பகுதி அளந்து தரப்பட்டது. தொலைதூரப் பாளையங்களில் இருந்தெல்லாம் ஊர்ப்பெரியவர்கள் வருகைபுரிந்து அவரவர் காவல் தெய்வங்களை ஊர்வலமாய் எடுத்துச் சென்றனர். கோட்டையின் மேற்குப்பகுதியில் கம்பீரமாக நின்றுகொண்டிருந்த பீரங்கி மேடை முதலில் வீழ்ந்தது. ஒருகாலத்தில் மதுரை மாநகரை விழிப்போடு அரவணைத்துக் காத்துக் கொண்டிருந்த மதிற்சுவர் வெறும் கற்களாக உதிர்ந்து அகழியை நிரப்பத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாய் 5,670 கஜம் நீளம் கொண்ட அகழி தூர்ந்து வெளிவீதிகளுக்கு வழிவிட, நகர் விரிவடையத் தொடங்கியது.

தேரோடும் வீதிகளின் அகலம் 19 கஜம் என நிச்சயிக்கப்பட்டது. கழிவு நீர் தேங்கிக் கொடிய நோய் பரப்பும் பகுதிகள் கண்டறியப்பட்டன. நகருக்குள்ளேயே இருந்த தென்னந்தோப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கலெக்டர் பிளாக்பர்ன் அதோடு நிற்கவில்லை. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் நிர்வாகக் குழுவைச் சீரமைத்தார். கோயில் நிதியிலிருந்து மதுரை நகரில் மூன்று காய்கறி, வணிகச் சந்தைகளை நிறுவ 28,514 ரூபாய் ஒதுக்கப்பட்டது. நகரின் முக்கிய வீதிகளை விரிவாக்கம் செய்திடவும், கழிவு நீர்ப் பாதைகள் அமைத்திடவும் 1,322 ரூபாய் ஒதுக்கப்பட்டது. அனைத்துப் பணிகளையும் கலெக்டர் பிளாக்பர்ன் நேரடியாகக் கண்காணித்தார். நகரின் விரிவாக்கப்பணிகளை விரைந்து நிறைவேற்றிடத் தன் சொந்தப் பணத்திலிருந்து 500 ரூபாயை பிளாக்பர்ன் அளித்தது குறித்து மக்கள் வியந்து பேசினர். பிளாக்பர்னுக்கு உதவியாக நில அளவைத் துறையில் பணியாற்றிய மாரெட் என்ற அதிகாரியும் பெருமாள் மேஸ்திரி என்பவரும் கடுமையாக உழைத்தனர்.
மதுரை மாநகர் தயக்கத்துடன் தன்னுடைய பழைமையான உருவத்தைக் களைந்து நவீனத்தை உடுத்திக்கொள்ள முயன்றது. மாசி வீதிகளுக்குள் வெகுகாலம் சிறைப்பட்டுக் கிடந்த தூங்கா நகரம் வெளிவீதிகளின் வழி அடியெடுத்து வைத்தது. முதலில் எதிர்ப்பை உமிழ்ந்த மதுரை மக்கள் கொடிய நோயின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றிய கலெக்டர் பிளாக்பர்னைப் புதிய காவல் தெய்வமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 1847-ல் அவர் மதுரையிலிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டபோது அவர் நினைவாக விளக்குத் தூண் நிறுவப்பட்டு, ‘மதுரை மக்களின் நண்பன்’ என்று அதன் பீடத்தில் பொறிக்கப்பட்டது. நாயக்கர் மகாலில் இருந்து எடுத்து வரப்பட்டு யானைச் சிற்பம் ஒன்று அருகிலேயே நிறுவப்பட்டது. மதுரையிலிருந்து விடைபெற்றுச் செல்லும்போது நகர் விரிவாக்கப் பணிகளை இறுதியாகப் பார்வையிட்டு, அதுவரை கடுமையாக உழைத்திட்ட நில அளவையாளர் மாரெட் மற்றும் பெருமாள் மேஸ்திரி பெயர்களை வெளி வீதிகளுக்குச் சூட்டிச் சென்றார்.
இவ்வாறு அன்று நள்ளிரவில் புரட்டிய வரலாற்றின் பக்கங்கள் ஒரு புதிய விடியலுக்கு வித்திட்டன. விளக்குத்தூண் காட்டிய வழியில் பயணிக்கத் தொடங்கினோம். மக்களின் மனதை வெல்வதே நம் இலக்கு என்று உதடுகள் அடிக்கடி உச்சரிக்கத் தொடங்கின. பார்வை மாறியதில் அந்த கிராமங்களுக்குப் பல நலத்திட்டங்கள் சென்றடைந்தன. தனிநபர்கள் பலர் பயன்பெற்றனர். நெருங்கிப் பழகியதில் குக்கிராமங்களுக்கு இடையேயான உரசல்கள், தனிமனித அபிலாஷைகள் தெரியவந்தன. கனிவும் கண்டிப்பும் இணைந்து பயணித்ததில் கைமேல் பலன் கிடைத்தது. குறைந்தது ஐந்து அலைவரிசைகளில் தனித்தனியே அங்கு நடக்கும் நிகழ்வுகள் தகவல்களாகத் தினந்தோறும் கொட்டின. அவற்றை வகைப்படுத்தி மூளையில் தேக்கி வைத்தால் தேவைப்படும்போது பயன்படும் என்ற எண்ணம்.

இம்முறை மக்களின் மனதை வெல்ல `சொல் ஆயுதம்’ ஏந்த முடிவு. மாணிக்கம் என்ற நபரை கிராம நிர்வாக அலுவலராக அங்கே நியமிக்கலாம் என்று ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டபோது உதவி கலெக்டர் மறுக்கிறார். மாணிக்கத்தின் கீழ்ப்படியாமை, போர்க்குணம் என்று அடுக்கடுக்காய் காரணங்களைக் கேட்டுவிட்டு ‘அவரையே பணிமாற்றம் செய்யலாம், சரியாக வரும்’ என்று நான் சொன்னதில் அனைவருக்கும் சற்று அதிர்ச்சிதான். அன்றே உத்தரவு வழங்கப்படுகிறது.
இரண்டு நாள்கள் கழித்து ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணி. மதுரை கலெக்டர் முகாம் அலுவலகத்தில் கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, பாப்பாபட்டியின் புதிய கிராம நிர்வாக அலுவலர் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னார்கள். உடனே உள்ளே அழைத்தேன். வந்தவர் முகத்தில் தொல்பழைமை தெரிய, கையில் பழத்தட்டுடன் நெஞ்சை நிமிர்த்தி வணக்கம் சொன்னார். வழக்கமான விசாரிப்புகள் முடிந்து, உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஒரு நீண்ட வகுப்பு எடுத்துவிட்டு, ‘உங்களால் செய்ய முடியுமா’ என்றேன். மாணிக்கம் ‘சர்க்கார் உத்தரவு’ என்று ஒற்றை வார்த்தையை மட்டும் உதிர்த்துவிட்டு விறுவிறுவென்று கிளம்பிப் போய்விட்டார்.
அடுத்தடுத்த நாள்களில் மாணிக்கம் உருவாக்கிய நகர்வுகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில் எங்களுக்கு நம்பிக்கை பிறக்க ஆரம்பித்தது. ‘குறிப்பிட்ட ஒரு ஊர்ப்பெரியவரை மட்டும் மனமாற்றம் செய்தால் இம்முறை வெற்றி உறுதி’ என்றார்கள். ஒருமுறை பேசினால் பத்து வருட முடிவை எப்படிக் கைவிடுவார் என்ற சந்தேகம் எனக்கு. இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாமே என்று அழைத்துவரச் சொன்னேன். பெயர், தொழிலில் ஆரம்பித்து அவருடைய முழு ஜாதகமே என் கையில் இருந்தது. ஒரு நாள் மாலை நேரத்தில் அழைத்துவரப்பட்டார். நெடிய உருவம். தூய நரை. நல்ல உடற்கட்டு. வந்தவர் வணக்கம் தெரிவிக்கிறார். இயல்பான நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு நான் கேட்ட முதல் கேள்வி, அவரை நிலைகுலையச் செய்தது. ‘நான்கைந்து தலைமுறைகள் தாண்டி உங்களுடைய குடும்பத்தில் உங்களுக்கு முதல் பெண்குழந்தை ஒன்று பிறந்ததாகக் கேள்விப்பட்டேன். எப்படி இருக்கிறாள் அந்தப் பெண்... என்ன படிக்கிறாள்?’
என்று கேட்டேன். அதைக் கேட்டவுடன் அவர் கண்களில் தாரை தாரையாய்க் கண்ணீர். தாயை இழந்த தன் மகளின் எதிர்காலம் குறித்துக் கவலைப்படும் தந்தையாக நொடிப்பொழுதில் மாறிப்போனார். அதன்பின் தேர்தல் நடந்து, சமூக நீதி வென்றதில் அந்தப் பெரியவரின் மனமாற்றம் மிக முக்கியமானதாக இருந்தது என்பதை விளக்கவும் வேண்டுமா?
இந்த மாய உலகம் சொற்களால் வடிவமைக்கப்பட்டது. தாயின் கருணை, தந்தையின் கண்டிப்பு, நட்பின் தோழமை, காதலின் இதம் என உணர்வுகளைத் தாங்கிய சொற்களே உறவுகளைச் செதுக்கி அழகு பார்க்கின்றன. ஆனால் அதேநேரம், பகையாய் மாறிய நட்பும், சிதைந்து விழுந்த உறவும், முறிந்து போன காதலும், சிதறிய சொற்கள் கொடுக்கும் வலியை என்றென்றும் மறப்பதில்லை. சொல் கொண்டு வாழ்த்தவும், வீழ்த்திடவும் நம்மால் முடியும். எனினும் அம்பு எய்தலும் மயிலிறகு வருடலும் நம் கையில்..!
நடை பயில்வோம்...
சபைக் குறிப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணியாளர் குறித்து லண்டன் மானுடவியல் பேராசிரியர் ஃபுல்லர் எழுதிய ‘Servants of the Goddess’ என்ற நூலும், முனைவர் தொ.பரமசிவம் எழுதிய ‘அழகர்கோயில்’ நூலும் மதுரையைப் புரிந்துகொள்ள உதவும் மிக முக்கியமான படைப்புகள். மதுரை கலெக்டராய்ப் பொறுப்பேற்ற சில நாள்களில் மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர்கள் மரியாதை நிமித்தம் வந்து வாழ்த்திவிட்டு, “மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரைக்கு கலெக்டராய் வந்திருக்கிறீர்கள்” என்று கூறினால் எப்படி இருக்கும்? முதலில் திடுக்கிட்டுத்தான் போனேன். போகப் போகத்தான் தெரிந்தது. மதுரை மக்களின் மனதில் நிரந்தரமாக கம்பீரத்துடன் ஆட்சி செய்வது மீனாட்சி மட்டுமே. மற்றபடி மாவட்ட ஆட்சியர்கள் அவ்வப்போது வந்து போவதுண்டு என்ற உண்மை பிடிபட சற்று நாளானது. மீனாட்சி மதுரை மக்களின் மனதில் நிரம்பி வழிகிறாள்.

பக்தர்களுக்குக் கடவுளாய், வரலாற்றின் பக்கங்களில் வீரத்திருவுருவாய், இறை மறுப்பாளர் களுக்குத் தமிழ்ப் பண்பாட்டின் உருவகமாய், பெண்மையின் உன்னதமாய், காலம் கடந்தும் மோனத்தவம் புரிந்து தன் இனத்தின் தலைமுறைகளைப் பாதுகாத்திடும் தாய்மையின் முழுவடிவமாய் ஒவ்வொருவரையும் தனித்தனியே வசீகரிக்கும் சக்தி ‘மீனாட்சி’ என்ற சொல்லுக்கு உண்டு. இதில் கூடுதல் சிறப்பு, ஆலவாய் சொக்கநாதர் மதுரையின் அரசர் அல்லர்; மீனாட்சியின் கணவர் மட்டுமே என்ற நம்பிக்கை. இந்த வியப்பின் நீட்சியில்தான் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அடுத்த நாள் பிறந்த என் செல்ல மகளுக்கு ஓவிய மீனாட்சி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தோம்.
-உதயச்சந்திரன்