
ஓவியம்: டிராட்ஸ்கி மருது

அரை மணி நேரம் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கிறேன். அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.பதற்றம் பற்றிக்கொண்டது. எண்பது வயதாகிறது அவருக்கு. என்ன ஆனதோ என்ற கவலை... புலம்பத் தொடங்கிவிட்டேன். ஒரு திருமண விழாவுக்காக ஒட்டுமொத்தக் குடும்பமும் சென்னையில் முகாமிட்டிருக்க, திடீரென்று என் நினைவுகள் மட்டும் ஏன் அவரை நோக்கிச் சென்றதோ தெரியவில்லை. எல்லோரும் என்னை வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
வாரம் ஒருமுறை தொலைபேசியில் ஓரிரு நிமிடங்களேனும் பேசிவிடுவார் அவர். மாதம் ஒருமுறை எப்படியும் நேரில் சந்தித்துவிடுவார். கடந்த இருபது வருடங்களாகத் தொடரும் பந்தம் அது. பணி அழுத்தத்தில், கடந்த இரண்டு மாதங்களாக அவர் பேசவில்லை என்பதையே உணராமல் இருந்துவிட்டேன்.
காஞ்சிபுரம் மாவட்ட அலுவலர்கள் சிலரைத் தொடர்புகொண்டு அவரைப்பற்றி விசாரிக்கச் சொன்னேன். அடுத்த சில நிமிடங்களில் அலைபேசித் திரையில் அவர் பெயர். சுப்பிரமணியம். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். அவருடைய குரலைக் கேட்டவுடன்தான் நிம்மதி. ‘இரண்டு மாதங்களாக உடல்நலம் சரியில்லை... மருத்துவமனையில் இருந்தேன்... மன்னிக்க வேண்டும்’ என்றார். யார், யாரை மன்னிப்பது?
இருபது வருடங்களுக்கு முன் ஒரு திங்கட்கிழமை மதியம் அவரை முதன்முதலில் சந்தித்தேன். மனுதாரர்கள் நீண்ட வரிசையில் நிற்க, அன்றைய மதிய உணவு தாமதப்பட்டுக்கொண்டே சென்றது. இறுதியாக வந்தார் அவர். ‘அய்யா... நீங்கள் உணவருந்திவிட்டு வாருங்கள். நான் காத்திருக்கிறேன்’ என்றார். குறைகளைத் தெரிவிக்க வரும் மனுதாரர் தனிப்பட்ட ஆலோசனைகளைக் கூறுவதை அதிகார வர்க்கம் என்றுமே கனிவுடன் அணுகியதில்லை. ‘பரவாயில்லை. உங்களுக்கு என்ன பிரச்னை’ என்றேன். ‘அய்யா, எங்கள் ஊர் கிதிரிப்பேட்டை. காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள சிற்றூர். அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. நீங்கள் ஒருமுறை நேரில் வந்து பார்க்க வேண்டும்’ என்றார். ‘மாவட்டத்தில் மொத்தம் 784 ஊராட்சிகள் இருக்கின்றன. உங்கள் ஊராட்சியின் முக்கியத் தேவைகளையும் நிறைவேற்ற முயற்சி செய்கிறோம்’ என்று சொல்லி அனுப்பிவைத்தேன்.
அதோடு நிற்கவில்லை. ஒவ்வொரு திங்கட்கிழமையும் தவறாமல் தொடர்ந்து படையெடுத்துக்கொண்டிருந்தார். சராசரி உயரம். மெல்லிய தேகம். படிய வாரிய தலை. நரை முடி. அப்பாவித்தனமான முகத்தில் கண்கள் மட்டும் அலைபாய்ந்துகொண்டிருக்கும். கைகளில் ஒரு நைந்துபோன பழைய தோல் பை. இதுதான் அவரது அடையாளம்.

ஒருநாள், என் அலுவலர் ஒருவர் அவருடன் வந்து ‘நான் அரசு வேலையில் இருக்கக் காரணமே இவர்தான்... என் தாய் தந்தை இருவரும் விபத்தில் இறந்த பிறகு, என்னைப் படிக்கவைத்து, போட்டித்தேர்வு எழுதவைத்து, திருமணமும் செய்துவைத்தார்’ என்று சொன்னபோது வியப்பாக இருந்தது. ஆனால், ‘இதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்பதுபோல் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தார் அவர். எனக்கு அவர்மீதான ஆர்வம் அதிகரித்தது. விசாரிக்க ஆரம்பித்தால் பல ஆச்சர்யமான தகவல்கள் வந்தன.
ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். நல்லாசிரியர் விருது பெற்றவர். தனது மாத ஓய்வூதியத்தின் பெரும்பகுதியை ஊர்க் காரியங்களுக்குச் செலவிட்டுவிடுவார். இரண்டு மகள்களும் அரசுப்பணி பெற்று சென்னையில் இருக்க, இவர் மட்டும் கிராமத்தில் இருக்கிறார். காலை ஐந்து மணிக்கே எழுந்து, தானே சமையல் செய்து, ஏழு மணி முதல் பேருந்தில் தொடங்கும் அவர் பயணம். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம், தாசில்தார், சர்வே அலுவலகங்கள், மின்வாரியம் என்று ஒவ்வொரு நாளும் அவருக்கு என்று ஒரு பயணத்திட்டம். முதியோர், கணவனை இழந்தோருக்கு ஓய்வூதியம் வாங்கிக்கொடுக்க மனு கொடுப்பதில் தொடங்கி, அவருடைய ஊருக்குக் குடிநீர்த்திட்டம், கான்கிரீட் வீடுகள், சாலை வசதி கொண்டுவருவதுவரை அவரது பணிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
அவர், ஒவ்வொரு அலுவலரையும் அணுகும் முறையே அலாதியானது. எல்லா நலத்திட்டங்களின் விதிமுறைகளும் அவருக்கு அத்துப்படி. விதிமுறைகளை நுணுக்கமாகவும் மென்மையாகவும் சுட்டிக்காட்டி அவர் பேசுவதைக் கேட்டு எந்த அதிகாரியும் சற்று நிலைகுலைந்துதான்போவார். பெரும்பாலும் கோரிக்கைகளைப் பதிவுத்தபாலில், அதுவும் உயர் அலுவலர்களின் பெயருக்குத்தான் அனுப்புவார். ‘பெயரிட்ட தபாலை தொடர்புடைய உயர் அலுவலர், தானே தன் கையால் பிரித்துப் படிக்க வேண்டும்’ என்ற அலுவல் நடைமுறை அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. ‘என்ன, பதிவுத்தபால் அனுப்பத்தான் மாதம் பலநூறு ரூபாய் செலவாகிறது’ என்று அலுத்துக்கொள்வார்.
அவருடைய தொடர் வற்புறுத்தல் காரணமாக, கிதிரிப்பேட்டை கிராமத்துக்கென்று மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்கினோம். குடிநீர், கான்கிரீட் தெருக்கள், வீடுகள், சாலை வசதிகள், பள்ளிக் கட்டடங்கள் என முழுமையான திட்டம் அது. பொதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் உரிய தனித்தேவைகளை நிறைவேற்ற முடியாமல் திட்ட விதிமுறைகள் விழிபிதுங்கி நிற்கும். ஆனால் அந்த நல்லாசிரியரின் கிராமத்திற்கோ அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அரசுத் திட்டங்கள் அணிவகுத்தன.
ஆசிரியர் விண்ணப்பம் எழுதுவதோடு நின்றுவிடமாட்டார். தன் கிராமத்துக்குக் கிடைக்கும் திட்டங்கள் தரமாக நிறைவேற்றப் படுவதை நேரடியாகக் கண்காணிக்கவும் செய்வார். 3.5 கி.மீ. நீளமுள்ள தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்த ஒவ்வொரு நாளும் காலை ஏழு மணியிலிருந்து மாலை வரை அந்தப் பகுதியிலே நின்று கண்காணித்தார். குடிநீர்க் குழாய் பதிப்பது, கான்கிரீட் மேற்கூரை அமைப்பது போன்ற இரவு நேரப் பணிகளும்கூட இவரது மேற்பார்வையில்தான் நடக்கும். சிமென்ட், மணல் கலவையின் சதவிகிதம், ஆழ்துளைக் கிணற்றில் இறக்கப்படும் குழாயின் தரம் வரைக்கும் தெரிந்துவைத்துக்கொண்டு உலவும் இவரை அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்ற கேள்வி எனக்கு அடிக்கடி எழும். கேட்டால், ‘எனக்கான உணவை கேரியரில் எடுத்துச்சென்றுவிடுவேன். அவர்களிடமிருந்து டீகூட வாங்கிக் குடிக்க மாட்டேன். நானும் வாங்கித் தரமாட்டேன். சரியாக வேலை செய்யுங்கள் என்றால் முதலில் தயங்கத்தான் செய்வார்கள். பிறகு வேறுவழியின்றி செய்யத் தொடங்கிவிடுவார்கள்’ என்று சிரித்துக்கொண்டே சொல்வார்.
ஒருமுறை, பல்வேறு அரசுத்துறைகளின் அதிகாரிகளை ஒருங்கிணைத்து, எல்லோரும் சேர்ந்து செயல்படுவது குறித்து விவாதிப்பதற்கான கருத்தரங்கு ஒன்றைக் காஞ்சிபுரத்தில் ஏற்பாடு செய்திருந்தோம். ஒருபுறம் செலவழிக்கப்படாமல் இருக்கும் நிதி, மறுபுறம் கேட்ட நிதி கிடைக்காமல் தேங்கிக் கிடக்கும் திட்டங்கள்... ஒவ்வொரு துறையும் அவரவர் விதிமுறைகளை வைத்து எழுப்பிய சுவர்கள், காலப்போக்கில் பெரிதாக வளர்ந்துவிட்டன. தான் உருவாக்கிய விதிமுறைகளே தன் கழுத்தை இறுக்குவதுதான் அதிகார வர்க்கத்திற்குக் கிடைத்த ஆயுள் தண்டனை.

மாவட்டத்தின் உயர் அலுவலர்கள் கூடியிருந்த அந்தக் கருத்தரங்கின் இறுதியில், ஐந்து நிமிடம் உரையாற்ற அந்த ஆசிரியரை அழைத்திருந்தோம். தயங்கியபடியே பேச ஆரம்பித்தவர் அரை மணிநேரம் பொழிந்துதள்ளிவிட்டார். கள நிலவரம், மனிதத்தன்மையற்ற விதிமுறைகள், காணாமல்போன விதிவிலக்குகள், அரசு அதிகாரிகள் பணிக்கு வந்தவுடன் தொலைத்த மனிதம், சராசரிக் குடிமகனின் எதிர்பார்ப்பு என அவர் அடுக்கிக்கொண்டேபோன வார்த்தை களால் அரங்கம் அதிர்ந்தது. அன்றைய நாளிதழில் தலைப்புச் செய்தியைக் குறிப்பிட்டு, ‘பகை நாடுகளின் பிரதமர்களே பேச்சுவார்த்தையில் ஈடுபடும்பொழுது ஒரு துறையின் அலுவலர்கள் இன்னொரு துறையுடன் ஏன் பேசிக்கொள்ள மறுக்கிறீர்கள்’ என அவர் கேட்டு முடித்தபோது, அரங்கில் பலருடைய முகங்கள் குற்ற உணர்ச்சியில் உறைந்துபோயின.
காலம் மாறுகிறது. இப்போது கிராமப்புறங்களில் தேவைகளும் மாறுகின்றன. வளர்ச்சி என்பது அடுத்த கட்டம் நோக்கிச் சிந்திப்பது. சென்றமாதம் என்னைப் பார்க்க வந்த ஆசிரியரிடம், ‘உங்கள் செயல்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்’ என்றேன். ‘கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் வந்துவிட்டன. இனி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனியே செயல்திட்டம் வேண்டும். கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறன் கொண்டோருக்கு முன்னுரிமை. சமூகக்கூடத்தைவிட சமத்துவ மயானம் முக்கியம்..!’ நான் சொன்னதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்டார். அடுத்த முறை புதிய திட்டத்தோடுதான் வருவார் என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன்.
குக்கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த என்னுடைய பிஹெச்.டி பட்ட ஆய்வுத் தலைப்பைக்கூட அவருடன் விவாதிக்க முடியும். ஏன், சமீபத்தில் பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்றவரைப் பற்றி நான் சொன்னபோது, பிரதமரை அவர்கள் சந்தித்தது பற்றியெல்லாம் ஆரம்பித்துவிட்டார். நோபல் வென்ற அபிஜித் பானர்ஜி குழுவினர் தமிழ்நாட்டில் மேற்கொண்ட ‘Randomized Control Techniques’ பற்றிச் சொன்னவுடன், குறித்து வைத்துக்கொண்டார்.
ஒவ்வொரு முறையும் என்னைச் சந்திக்க அவர் வருவதே தனி அழகுதான். அடிக்கடி உள்ளே வந்து செல்லும் உதவியாளரின் அதிகப்படியான பணிவு போலியானது என்று சுட்டிக்காட்டுவார். வாகன ஓட்டுநர் திருமணம் ஆனவராக இருந்தால் பயணம் நிதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்பது அவர் எண்ணம். ஆனால், அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று என்னை நோக்கி வைத்த கோரிக்கை மட்டும் இன்னும் நிறைவேறவே இல்லை என்ற வருத்தம் அவருக்குண்டு.

தன் வாழ்க்கையையே ஊருக்காக அர்ப்பணித்த அந்த நல்லாசிரியர் குறித்துக் குறிப்பிட வேண்டிய ஒரு செய்தி. எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஊராட்சித் தலைவர் தேர்தலில் நின்று மிகக் குறைந்த வாக்குகளே பெற்றுத் தோற்றுவிட்டார். அதுபற்றிக் கேட்டபோது, ‘தேர்தலில் வென்றுதான் மக்கள் சேவை செய்ய வேண்டுமா என்ன? தேர்தலில் நின்றது என்னுடைய தவறு. அதற்காக, செய்யும் வேலைகளை விட்டுவிட முடியுமா’ என்று கேட்டுவிட்டு, இருளர் குடியிருப்புக்கு வசதிகள் கேட்டு ஒரு விண்ணப்பத்தை நீட்டினார்.
தன்னலமற்ற சேவை செய்துவருபவரால் சொந்தக் கிராம மக்களின் மனங்களை ஏன் வெல்ல முடியவில்லை என்று அவ்வப்போது யோசிப்பதுண்டு. அதுதான் இயல்பா என்றால் அதற்கு விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன.
சில மாதங்களுக்கு முன்னால், கனடா நாட்டின் டொரான்டோ பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். ஹார்வர்டு, எம்.ஐ.டி., பெர்க்லி என உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சூழ்ந்திருக்கிற அறையில், வேட்டி கட்டிய தமிழர் ஒருவர் பேச அழைக்கப்படுகிறார். பத்தாம் வகுப்பின் பாதியில் பள்ளிப்படிப்பை விட்டவர். பெயர் சண்முகம். பத்தாண்டுகள் தன் ஓடந்துறை கிராமத்தில் செய்த பணிகள் குறித்து அவர் பட்டியலிட்டதைக் கேட்டு அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.
‘கோவையிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள, பத்தாயிரத்தும் குறைவான மக்கள்தொகை கொண்ட சிறு ஊராட்சி. வருவாயில் பெரும்பகுதி மின்கட்டணம் செலுத்துவதிலேயே கழிந்துபோக, சொந்தமாகவே காற்றாலை அமைக்கத் தீர்மானம் நிறைவேற்றுகிறது. 50 லட்ச ரூபாய் சுயநிதி, ஒன்றரைக் கோடி ரூபாய் வங்கிக்கடன் என்று அவர்கள் வகுத்த திட்டத்தைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ந்துபோனார்கள். அனுமதி கிடைக்கவில்லை. நீதிமன்றம் சென்று போராடுகிறது ஊராட்சி. விருப்பமின்றி ஒப்புதல் கொடுக்கிறார்கள் அதிகாரிகள். புதிய அத்தியாயம் பிறந்தது. உடுமலைப்பேட்டைக்கு அருகில் வாங்கப்பட்ட 3 ஏக்கர் நிலத்தில் காற்றாலை பிரமாண்டமாக எழுகிறது. சுழலத் தொடங்கிய காற்றாலையின் கரங்கள், ஓடந்துறை ஊராட்சிக்கு வளர்ச்சிப் பாதைக்கான வழியைக் காட்டின.

ஓராண்டுக்கு 8 லட்சம் யூனிட் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது எங்கள் ஊராட்சி. குடிநீர், தெருவிளக்குத் தேவைகளுக்கு 4 லட்சம் யூனிட் போக, மீதம் உள்ள மின்சாரத்தை மின் வாரியத்துக்கு விற்பனை செய்கிறோம். அந்தவகையில் வருடம் 20 லட்ச ரூபாய் ஊராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது. வங்கிக்கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்திவிட்டுப் பார்த்தால், ஊராட்சியின் நிதிநிலைமை திருப்திகரம்.
இதுமட்டுமா, பொதுமக்கள் பங்களிப்போடு பவானி ஆற்றிலிருந்து கூட்டுக் குடிநீர்த்திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறது. காலம் மாறுகிறது. இப்போது ஓடந்துறை மகளிர் சுய உதவிக்குழு தயாரிக்கும் ‘சுகம்’ குடிநீர் பாட்டில்கள் திருப்பூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் வெகு பிரபலம். ஊரில் இருக்கும் மூன்று பள்ளிகளுக்கும் புதிய கட்டடங்கள் கட்டியிருக்கிறார்கள். எல்லாப் பள்ளிகளிலும் 100 சதவிகிதத் தேர்ச்சி வேறு. 13 கி. மீ. அளவுக்குத் தார்ச்சாலை. எந்தத் திசையிலும் ஒரு குடிசையைக்கூடப் பார்க்கமுடியாது. அனைத்து வீடுகளிலும் கழிப்பறை, இயற்கை எரிவாயு இணைப்பு, சோலார் விளக்குகள்...’ என சாதனைகளை அடுக்கிக்கொண்டே போனார் அவர். அனைத்துப் பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெறும் மாணவரைப் பார்த்து வியந்து நிற்பவர்களைப்போல மாறிப் போனார்கள் அங்கு குழுமியிருந்த பேராசிரியர்கள்.
உலக வங்கி அதிகாரிகள் உட்பட 43 நாடுகளில் இருந்து வந்து ஓடந்துறை ஊராட்சியைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள். இருபது ஆண்டுகளுக்கு மேல் ஊராட்சித் தலைவர்களாக அவரும், அவர் மனைவியும் பணியாற்றியிருக் கிறார்கள். அடுத்த தேர்தலில் இளைஞர்களுக்கு வழிவிட எண்ணியிருக்கும் அவரிடம், ‘எப்படி இவ்வளவு சாதித்தீர்கள்’ என்று கேட்டேன். கோவைக்கே உரிய கொஞ்சும் தமிழில் பதில் சொன்னார். ‘ஊழல் ஒரு சதவிகிதம் கூட இல்லை.’
ஓய்வுபெற்ற பின்னாலும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் நல்லாசிரியர் ஒருவர். உலகப் புகழ்பெற்ற பேராசிரியர்களுடன் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுமளவுக்கு சாதித்த, பத்தாம் வகுப்பில் இடைநின்ற மற்றொருவர். அலுவல் பயணத்தில் சோர்வடைந்து வேகம் குறையும்போதெல்லாம் எனக்கு உற்சாகம் கொடுப்பது இவர்களுடைய குரல்தான். ஒவ்வொருமுறை வீழ்த்தப்படும்போதும் மீண்டு வந்து பயணத்தைத் தொடர வழிகாட்டுவது இவர்களைப் போன்றவரின் முகங்களே.
நல்லாசிரியரும், ஓடந்துறைத் தலைவரும் எனக்கான கலங்கரை விளக்கங்கள்!
- நடை பயில்வோம்...
சபைக் குறிப்பு
1919-ம் ஆண்டு. மிகச்சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஈரோட்டு நகர்மன்றக் கூட்டத்தில் ஒரு புரட்சிகரமான திட்டம் முன்மொழியப்படுகிறது. பொதுமக்கள் குடிநீருக்காகக் குடங்களைத் தூக்கிக்கொண்டு வீதிவீதியாக அலையாமலிருக்க நகரெங்கும் குழாய் பதித்துக் குடிநீர் வழங்கும் திட்டம் அது.

காவிரி ஆற்றிலிருந்து நீரேற்றம். ஈரோடு, வ.உ.சி பூங்காவில் 5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி. இரும்புக்குழாய் மூலம் குடிநீர். இந்தியாவிலேயே குழாய்வழி பாதுகாக்கப்பட்ட குடிநீர் முதலில் வழங்கியது ஈரோட்டு நகராட்சிதான். புதுமையான அத்திட்டத்தை முன்னின்று செயல்படுத்தியவர், அப்போது ஈரோட்டு நகர்மன்றத் தலைவராய்ப் பதவி வகித்த தந்தை பெரியார். இத்திட்டத்தைக் கேள்விப்பட்டு, அச்சமயம் சேலம் நகர்மன்றத் தலைவராக இருந்த ராஜாஜியும் சேலத்தில் குடிநீர் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த முன்வந்தார்.த்த முன்வந்தார்.
-உதயச்சந்திரன்
இத்தொடரை ஒலிவடிவில் கேட்க Vikatan Audio யூடியூப் தளத்தை சப்ஸ்க்ரைப் செய்யவும்.