மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாபெரும் சபைதனில் - 9

மாபெரும் சபைதனில்
பிரீமியம் ஸ்டோரி
News
மாபெரும் சபைதனில்

ஓவியம்: டிராட்ஸ்கி மருது

லைமைச் செயலகம். நாமக்கல் கவிஞர் மாளிகையின் ஆறாவது தளத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்துக்குள் நுழைகிறேன். முதல் நாள், வழக்கமான வரவேற்புகள் முடிந்தன. கையொப்பத்துக்காக முதல் கோப்பு என் முன்னால் வைக்கப்படுகிறது. புரட்டிப் பார்த்தால், சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க திருக்குறளைக் கட்டாயப் பாடமாக்குவது குறித்த கோப்பு. ஒரு கருத்தரங்கில், ‘திருக்குறள், பொதுமறையா அல்லது பொதுமுறையா’ என்ற விவாதம் நடந்தது நினைவுக்கு வருகிறது. கோப்பைப் பொறுமையாகப் படிப்பதாகக் கூறிவிட்டு, பிற பணிகளில் மூழ்கிப்போனேன். இல்லம் திரும்பி முன்னிரவில் புத்தகங்கள் சிலவற்றைத் தேடிக் கொண்டிருந்தபோது சில குறிப்புகள் கைக்குக் கிடைத்தன. 25 ஆண்டுகளுக்கு முன் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக, தமிழ் இலக்கிய விருப்பப் பாடத்திற்கென எடுக்கப்பட்ட குறிப்புகள் அவை. படிக்கப் படிக்க, காட்சிகள் விரியத் தொடங்கின.

 IAS officer Udhayachandran shares his experiences part 9
IAS officer Udhayachandran shares his experiences part 9

“ செல்லாமை உண்டேல் எனக்குரை” என்று தொடங்கும் குறளைவிடச் சிறந்த புதுக்கவிதை உண்டா” என்று நண்பர்கள் மத்தியில் நடந்த விவாதம் நினைவலைகளை மீட்டுச் செல்கிறது. இந்த உலகமே தன் காலடியில் என்று சுற்றித் திரிந்தவனை வீழ்த்திக் காட்டிய விழிகள்… அரண் எழுப்பிக் கட்டிய மனக் கோட்டையைச் சிதைத்த பன்மாயக் கள்வன்… அன்னச் சிறகு தீண்டிய மலர்ப் பாதங்கள்... கண் இமைக்க மறுத்து நெஞ்சில் ஏந்தும் நினைவுகள்… இருவர் கூட்டணியில் இடைவெளி உண்டாக்கிட முயன்று தோற்றுப் போன காற்றும், கதிரொளியும்… தான் விரும்பியவளின் கடைக்கண் பார்வையை வென்றெடுக்கும் முனைப்பு ஒருபுறம்… தன் உள்ளம் கவர்ந்த கள்வனின் மார்பில் காலமெல்லாம் முகம் பதித்துச் சரணடைய விழையும் ஏக்கம் மறுபுறம்.

இருவருக்குமான போரில் வென்றபின் ஆண் காட்டும் அலட்சியமும், பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடும் பெண்ணின் நுட்பமான உணர்வுகளும் காலத்தை வென்றவை. திருக்குறளில் இறுதியாக இடம்பெறும் 150 குறள்களை முழுமையாகப் படித்தால் அந்த உணர்வுகள் காலந்தோறும் பொருந்தி வருவதைப் பார்க்கமுடியும். அகநானூற்றில் இடம்பெறும் தலைவன் தலைவி தொடங்கி சிலம்பில் நடமாடும் கோவலன், மாதவி முதல் வேள்பாரியில் வலம் வரும் முருகன், வள்ளி வரை! ஏன்… இருபத்தியோராம் நூற்றாண்டின் அலைபேசி உரையாடல் வரை ததும்பி வழியும் உணர்வுகள் அடிப்படையில் ஒன்றே. இதயத்தைப் பறிகொடுத்தவர்களின் எண்ண ஓட்டத்தை எழுத்துகளில் சிறைபிடித்து உறையச் செய்திட்ட திருவள்ளுவர், ஒரு மாபெரும் கவிஞர்.

மாபெரும் சபைதனில்
மாபெரும் சபைதனில்

‘குழலினிது யாழினிது’ மட்டுமல்ல... ‘சிறுகை அளாவிய கூழ்’ எனும் சொற்றொடரும் இனிமை தோய்ந்தது. பாடநூல்களில், அன்றாடப் பேச்சுகளில், அரசுப் பேருந்துகளில், நிதிநிலை அறிக்கையில், குமரிமுனையில் என, சேருமிடமெல்லாம் வண்ணம் சேர்க்கும் திறன் திருக்குறளுக்கு உண்டு. தீவிரமாகத் திருக்குறளை நேசிக்கும் பலரைப் பார்த்திருக்கிறேன். தொல்காப்பியம் உரைக்கும் வண்ணக் கோட்பாடுகள் முதல் இன்றைய பின் நவீனத்துவக் கொள்கைகள் வரை பழமையும் புதுமையும், மரபும் நவீனமும் எனத் தொடர்ந்து அளவுகோல்களை மாற்றினாலும் தேர்வில் திருக்குறள் வெற்றிபெறும் என அடிக்கடி விவரித்துக் கொண்டிருப்பார் நண்பர் சங்கரசரவணன். `காலம்தான் சிறந்த விமர்சகர்’ என்று சொல்வார்கள். காலத்தை வென்று, பல தலைமுறையினரின் மனங்களைக் கவர்ந்த இந்த மாபெரும் படைப்பு, உலகெங்கும் சென்றடைந்ததில் வியப்பேதும் இல்லை. உணர்வுகளை இழைத்துத் தீட்டப்பட்ட சொல்லோவியம், மனித மனங்களை எல்லை தாண்டியும் வென்றெடுக்கிறது.

அப்படித்தான் கடல் கடந்து, எல்லை தாண்டி வந்த ஒரு பிரிட்டிஷ் அதிகாரி திருக்குறளை நேசிக்கத் தொடங்கி, பின்னர் தமிழ் மொழியின் காவலராகவே மாறிப்போனார்... வியப்பாக இருக்கிறதா, வாருங்கள் எல்லீஸ் சாலையில் பயணிப்போம்.

222 ஆண்டுகளுக்கு முன்னர், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநருக்கு மிகுந்த பணிவுடன் எழுத்தர் வேலை கேட்டு ஒரு விண்ணப்பம் வந்தது. எழுதியவர் பெயர், பிரான்சிஸ் வைட் எல்லீஸ். விண்ணப்பத்தைப் பரிசிலித்த கம்பெனியின் உயர் அதிகாரி, அதில் பணியிடம் குறித்த பகுதி நிரப்பாமல் விடப்பட்டிருந்ததைக் கவனித்து அதில் ‘மெட்ராஸ்’ என எழுதி முத்திரையிட்டார். அந்த முத்திரை, எல்லீஸின் வாழ்க்கையை மட்டுமல்ல, தமிழ்மொழியின் எல்லையையும் உயர்த்தப்போகிறது என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.

திருவள்ளுவர் உருவம் பொறித்த இரட்டை வராகன் தங்க நாணயம்
திருவள்ளுவர் உருவம் பொறித்த இரட்டை வராகன் தங்க நாணயம்

கிழக்கிந்தியக் கம்பெனியின் வருவாய்த்துறையில் எழுத்தராக எல்லீஸ் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். மதராஸின் தட்பவெப்ப நிலையை மீறி, தமிழ் அவருக்கு இதம் தந்தது. முறையாகத் தமிழ் கற்றுக்கொள்ள ராமச்சந்திர கவிராயரிடம் சிறப்பு வகுப்புகளுக்குச் சென்றார். ஓலைச்சுவடிகளைப் பதம் பிரித்துப் படிக்கும் அளவிற்கு மொழியில் முன்னேறினார். பழந்தமிழ் இலக்கியங்களிலும் தேர்ச்சிபெற்றார். இரண்டு அடியில் உலகை வென்ற திருக்குறள், எல்லீஸின் மனதை வெகுவாகக் கவர்ந்தது.

திருக்குறளின் அறத்துப்பாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1812-ல் வெளியிட்டார் எல்லீஸ். அவர் எழுதிய திருக்குறளுக்கான தெளிவுரையில், மேற்கத்திய இலக்கியங்கள் மட்டுமன்றி 63 பழந்தமிழ் இலக்கியங்களையும் மேற்கோள் காட்டியிருப்பதை இன்றும் தமிழ் அறிஞர்கள் வியந்து பார்க்கிறார்கள். அச்சுக் கலை வளராத அந்தக் காலத்தில் 63 இலக்கியங்களையும் எல்லீஸ் ஓலைச்சுவடிகள் மூலமாகத்தான் படித்திருக்க முடியும் என்பதை யோசித்தாலே மலைப்பாக இருக்கிறது. வெண்பா - சங்கரா பரணம், அகவல் தோடி, கலிப்பா பந்துவராளி எனப் பா வகைகளைக் கர்னாடக சங்கீத ராகங்களோடு பொருத்திப் பார்க்கும் அளவுக்கு அவருக்கு இசைப்புலமை இருந்தது.

ஒரு புதிய திட்டம் குறித்து கம்பெனி நிர்வாகத்திற்குத் தொடர் கடிதங்கள் எழுதிக் களைத்துப்போனார் எல்லீஸ். இறுதியில் அவரது திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்தது நிர்வாகம். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ‘சென்னை கல்விச் சங்கம்’ உருவானது. அந்த சங்கத்தின்மூலம் ஓலைச்சுவடியில் உறங்கிக் கொண்டிருந்த பழந்தமிழ் இலக்கியங்கள் பெருமிதத்துடன் அச்சுவாகனம் ஏறின. தமிழ்மகள் நவீன உடை தரித்து நளின நடை பயிலத் தொடங்கினாள்.

உயர்பதவியிலிருக்கும் அதிகாரிகள் தமிழ் மேல் காதல் கொண்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு எல்லீஸின் வாழ்வே மிகச்சிறந்த விளக்கம். ‘மதராஸ் ராஜதானியில் பணியமர்த்தப்படும் பிரிட்டிஷ் அதிகாரிகள் கண்டிப்பாகத் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற விதிமுறையை முதலில் நடை முறைப்படுத்தியது எல்லீஸ் தலைமையில் இயங்கிய சென்னைக் கல்விச் சங்கம்தான். பெர்சியன், உருது, இந்துஸ்தானி என்று அதுவரை இருந்த வழிமுறைகள் மாறி, புனித ஜார்ஜ் கோட்டைக்குத் தமிழ்வழிச் சாலையில் மட்டுமே பயணிக்கமுடியும் என்ற நிலை உருவானது. சிதம்பர வாத்தியார், பட்டாபிராம சாஸ்திரிகள், உதயகிரி வெங்கடநாராயணய்யா, சையது அப்துல் காதர் என பலமான ஆசிரியர்கள் கூட்டணி எல்லீஸுக்கு உதவியது. ஏராளமான நூல்கள், இலக்கணங்கள், அகராதிகள் அச்சடிக்கப்பட்டன. சுதேசி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ் உள்ளிட்ட தென்னக மொழிகளில் புலமை பெறுவோர்க்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. உண்மையில் தமிழ்மொழிக்கு அது ஒரு மறுமலர்ச்சிக் காலம். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தமிழ்மொழி மீண்டும் அரியணை ஏறத் தொடங்கியது எல்லீஸ் காலத்தில்தான்.

உதயச்சந்திரன்
உதயச்சந்திரன்

தன் மனம்கவர்ந்த நபருக்கு விலையுயர்ந்த பொருளைப் பரிசாக அளிப்பது மனித இயல்பு. அப்படித்தான் எல்லீஸின் மனம்கவர்ந்த திருக்குறளுக்குத் தங்கப்பரிசு கிடைத்தது. ஆம், சென்னை நாணயத் தொழிற்சாலையின் பொறுப்பில் இருந்த எல்லீஸ், திருவள்ளுவர் உருவம் பொறித்த 7 கிராம் எடைகொண்ட இரட்டை வராகன் தங்க நாணயத்தை வெளியிட்டார்.

தமிழுணர்வோடு ஒன்றிப்போன எல்லீஸ், தன்பெயரைத் தமிழ் ஒலிமரபுக்கேற்ப ‘எல்லீசன்’ என்று மாற்றி அழைக்கத் தொடங்கினார். தமிழ்மேல் கொண்ட ஆர்வம் பிற தென்னிந்திய மொழிகள்மீதும் திரும்பியது. மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தேர்ச்சிபெற்று அந்த மொழி களுக்கிடையே உள்ள உறவை ஆராயத் தொடங்கினர். சம்ஸ்கிருதத்திலும் தேர்ச்சிபெற்றார். வில்லியம் ஜோன்ஸ் என்பவர் 1785-ல் கல்கத்தாவில் ஏற்படுத்திய ஓர் அமைப்பு, இந்திய மொழிகளின் மூலத்தை வடமொழியில் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருந்தது. ஆனால், இந்தோ - ஐரோப்பிய மொழியில் இருந்து தென்னிந்திய திராவிட மொழிகள் வேறுபட்டது என்றும், அவற்றுள் பழமை வாய்ந்தது தமிழ் என்றும் புதிய கருத்தாக்கத்தை முதலில் முன்மொழிந்தவர் எல்லீஸ். அந்த வகையில் கால்டுவெல்லின் முன்னோடி அவர்.

மிகச்சிறந்த அதிகாரியாகவும் திகழ்ந்தார் எல்லீஸ். இன்றும் பொறாமைப்படும் அளவுக்கு, ஒன்பது வருடங்கள் சென்னை கலெக்டராகப் பணியாற்றினார். 1818-ம் ஆண்டு பெரும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டபோது, சென்னையில் 27 கிணறுகளை வெட்டி பொதுமக்களுக்கு உதவியிருக்கிறார். அவற்றில் ஒன்று, சென்னை ராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலுக்கு அருகில் இன்றும் இருக்கிறது. எல்லீஸ் அன்று வெட்டிய கிணறு குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கியது; கிணற்றுடன் அவர் பதிப்பித்த கல்வெட்டோ காலம் கடந்தும் தமிழ் நெஞ்சங்களைக் குளிர வைக்கிறது. ‘சென்னப் பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே... திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றி இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு என்பதன் பொருளை என்னுள் ஆய்ந்து... யோக கரணம் பார்த்து சுபதினத்தில் இதனோடு இருபத்தேழு துறவு கண்டு புண்யாக வாசகம் பண்ணுவித்தேன். 1818’ என்று கல்வெட்டின் வாசகங்கள் தெரிவிக்கின்றன.

நாள், நேரம் பார்த்து சுபதினத்தில் குடிநீர் வழங்கிய எல்லீஸ், உள்ளுர் மக்களின் உணர்வுகளைப் பெரிதும் மதித்தார். 1818-ல் மதராசப்பட்டினம் முழுக்க காலரா நோய் கடுமையாகத் தாக்கியது. இடங்கை-வலங்கை மோதலால் நின்றுபோன மண்ணடி எகத்தாளம்மன் திருவிழா மீண்டும் நடத்தப்பட்டால் நோயின் தீவிரம் குறையும் என்று அப்பகுதி மக்கள் நம்பினர். அந்த நம்பிக்கையை மதித்து ‘நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எல்லாக் கோயில் திருவிழாக்களையும் நானே முன்னின்று நடத்து கிறேன்’ என்றும், ‘சட்டம், ஒழுங்கு சிக்கல்கள் ஏதும் நடக்காமல் இருக்க நானே பொறுப் பேற்றுக்கொள்கிறேன்’ என்றும் நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதியபோது மதராஸ் மக்கள் தங்களுக்கு ஒரு புதிய காவல் தெய்வம் கிடைத்ததாக உணர்ந்தனர்.

பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி குறித்துப் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தேவதையும் தன்வந்திரியும் உரையாடும் வகையில் சிறு கையேடு ஒன்றைத் தயாரித்தார் எல்லீஸ். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து, ‘பசுவின் கொடையான பஞ்சகவ்யத்தை அடுத்த ஆறாவது கவ்ய’மென தேவதை கூறுவதாய் அமைந்திருந்தது. தமிழ்மொழியை மட்டுமல்ல, இந்த மண்ணையும் மக்களையும் மனதார நேசித்தவர் எல்லீஸ். செங்கல்பட்டுப் பகுதியில் நிலவிய மிராசுதாரர் நிலவுரிமை குறித்து அவர் அனுப்பிய அறிக்கைகள் மிக முக்கியமானவை. வெறும் வறட்சியான அலுவல் குறிப்பாக அவற்றை எழுதாமல், மக்களிடையே காணப்பட்ட பண்பாட்டு அசைவு களையும் மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார். மிராசுதார்- படியாள் உறவு பற்றிக் குறிப்பிடும்போது, ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் வெற்றிலை மாற்றி ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொள்ளும் சடங்கு குறித்தும் பதிவுசெய்திருக்கிறார் எல்லீஸ்.

நேர்மையான அதிகாரியாகவும் பணிபுரிந்திருக்கிறார் எல்லீஸ். தன் பணிக்காலம் நெடுக, மூன்று மாதத்துக்கு மேல் ஓரிடத்தில் பணிபுரிய முடியாமல் ஓடிக்கொண்டே இருந்தார். கும்பகோணத்தில் பணியாற்றும்போது, தஞ்சை அரசருடன் ஏற்பட்ட மோதலால் மசூலிப்பட்டணத்துக்கு மாற்றப்பட்டார். தமிழகத்திலிருந்து மாற்றப்பட்டதன் வலி அதிகம் இருந்தாலும் அவரின் மசூலிப்பட்டண வாழ்வு பின்னாளில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திராவிட மொழிக்குடும்ப ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவியது. ஆம். வரலாறு தன் தேவைக்கேற்ப அவ்வப்போது தகுதியான சேவகர்களை நியமித்துக்கொள்கிறது.

நாற்பது வயதுக்குப் பிறகு, தமிழில் நல்ல புலமைபெற்ற பிறகுதான் நூல்கள் எழுதவேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார் எல்லீஸ். கம்பெனி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் விடுமுறையில் சென்றார். 1819-ல் மதுரையிலிருந்து ராமநாதபுரம் சென்று தங்குகிறார். வயிற்று வலிக்கான மருந்து என நினைத்துத் தவறுதலாக உட்கொண்ட விஷம் எல்லீஸின் உயிரைப் பறித்தபோது அவருக்கு வயது 41. அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகள் பல பதிப்பிக்கப்படாமலேயே அழிந்தன. எனினும் அவரது கல்லறையில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்தை யாராலும் அழிக்க முடியவில்லை. ‘எல்லீசன் எனும் இயற்பெயருடையோன்’ என்று தொடங்கும் வரிகள், முத்தமிழ் இலக்கியங்களையும் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைக் குறிப்பிட்டு, ‘எல்லீஸ் மறைவு கேட்டு நிலமகள் தலைவிரித்து அழுது புலம்புகிறாள்’ என்று முடிகிறது.

கடல் கடந்து வந்து இந்த மண்ணையும் மக்களையும் மனதார நேசித்தவருக்குத் தலைமுறைகள் தாண்டியும் நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும். தமிழ்மொழி அரியணை ஏற செயல்திட்டம் வகுத்துக் கொடுத்தவரை என் மனம் இப்படித்தான் வரித்து வைத்திருக்கிறது...

‘தமிழ்த்தாயின் தலைமகன் எல்லீசன்!’

- நடை பயில்வோம்...

சபைக் குறிப்பு

என்றென்றும் வெல்லும் சொல் வள்ளுவம். ஆம். திருக்குறளின் எளிமைக்கும் இனிமைக்கும் அடிப்படையே அதன் அழகிய சொல்லாட்சிதான். தமிழின் முதல் எழுத்தான அகரத்தில் தொடங்கி இறுதி எழுத்தான ‘ன்’ என்பதுடன் முடிகிறது.

 IAS officer Udhayachandran shares his experiences part 9
IAS officer Udhayachandran shares his experiences part 9

திருக்குறளின் 1,330 குறள்களில் இடம்பெற்றுள்ள சுமார் 12,000 சொற்களில் சுமார் 5,000 சொற்கள் மட்டுமே வெவ்வேறானவை; ஆய்த எழுத்து 14 முறை வருகிறது; துணை எழுத்தே வராத குறள், ‘கற்க கசடற; அதிக நெடில் எழுத்துகள் கொண்டு, தொல்காப்பியர் குறிப்பிட்ட நெடுஞ்சீர் வண்ணத்தில் அமைந்த குறள் ‘யாகாவாராயினும் நாகாக்க’ ; ஒரே குறளில் ஆறுமுறை இடம் பெறும் சொல் ‘பற்று’ ; 24 குறள்களை உதடு ஒட்டாமல் பாட முடியும். அதுமட்டுமா... வேளாண்மை (Agriculture), இறையாண்மை (Sovereignty), தக்கார் (Fit person), குடிமை (Civil), இடித்துரைப்பாளர் (Whistle blower) என நவீனக் கலைச்சொற்கள் பல உருவாக்குவதற்கும் அடித்தளமாக அமைவது திருக்குறள்!

- உதயச்சந்திரன்

இத்தொடரை ஒலிவடிவில் கேட்க Vikatan Audio யூடியூப் தளத்தை சப்ஸ்க்ரைப் செய்யவும்.