ஊடகங்களும், செயற்பாட்டாளர்களும், பெண்ணிய இயக்கங்களும் பாலின சமத்துவத்தை பல்வேறு வடிவங்களில் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இன்றும் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு பெண்களும் திருநர் சமூகத்தினரும் ஒடுக்குமுறைகளுக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகிறார்கள். அவர்களது திறமைக்கான அங்கீகாரம் எளிதில் கிடைப்பதில்லை.

இந்நிலையில், சென்னை இலக்கியத் திருவிழா, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஜனவரி 6 - 8-ம் தேதி வரை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கரன் கார்க்கி, இளம்பிறை, மனுஷ்யபுத்திரன், வெற்றிமாறன், மிஷ்கின், யுகபாரதி, கபிலன், கதை சொல்லி சதீஷ், தெருக்குரல் அறிவு உள்ளிட்ட கலை உலகின் ஜாம்பவான்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். பள்ளிக்கல்வித் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு உரையாற்றவும், உரையாடவும் உள்ளனர். ஆனால், இதில் திருநர் எழுத்தாளர்களுக்கான அமர்வு வழங்கப்படவில்லை என்ற குரல்கள் எழுகின்றன.
திருநர் மக்களின் வாழ்க்கையை தன் எழுத்துகள் மூலம் சமூகத்திற்கு உணர்வுபூர்வமாகவும் உரக்கவும் சொல்லிவருகிறார்கள் திருநர் எழுத்தாளர்கள். கல்கி சுப்பிரமணியம், ரேவதி, பிரியா பாபு என, பல திருநர் எழுத்தாளர்கள் இருக்கும் சூழலில், அவர்களில் ஒருவருக்குக்கூட சென்னை இலக்கியத் திருவிழாவில் திருநர் சமூகத்தின் வாழ்வுரிமை கருத்துகளை முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்கிறார்கள் அவர்களின் பிரநிதிகள். நடனக்கலைஞர் நர்த்தகி நடராஜுக்கு மட்டும் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
`சமூகத்தின் விளிம்பு நிலை மக்களை காட்சிப்படுத்தும் மிகப்பெரிய ஆயுதம் எழுத்து. திருநர் வாழ்க்கையை எழுத்துகளாகச் செதுக்கிய திருநர் எழுத்தாளர்களுக்கு பேசுவதற்கான அமர்வு வழங்கப்படாதது ஏன்?’ என்று திருநர் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான கிரேஸ் பானு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அவரிடம் பேசினோம்.

``திருநர்களின் உரிமைகளை மேடைகளில் மட்டுமே பேசுவதால் எங்கள் சமூகத்துக்கு எந்த பயனும் இல்லை. கட்டணமில்லா பஸ் டிக்கெட் முதல், திருநர்களுக்கான நல வாரியம் வரை போராடி பெற வேண்டியுள்ளது. பாலின சமத்துவத்தை நடைமுறையில் சாத்தியப்படுத்துவதில் அரசும் சமூகமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இன்று பல திருநர்கள் எழுத தொடங்கியிருக்கிறார்கள். எங்கள் சமூகத்தினரின் புத்தகங்களையும் பரவலாக மக்கள் வாசிக்கின்றனர். ரேவதி, வித்யா, கல்கி சுப்பிரமணியம் போன்ற எழுத்தாளுமைகள் திருநர் சமூகத்தில் இருக்கின்றனர். நானும் புத்தகம் எழுதியுள்ளேன். ஆனால் திருநர் எழுத்தாளர்களில் ஒருவருக்கு கூட இலக்கியத் திருவிழாவில் பேசுவதற்கான அமர்வு வழங்கப்படவில்லை. வெளி மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளுக்கெல்லாம் தமிழ்நாட்டை சேர்ந்த திருநர் எழுத்தாளர்களுக்கு அழைப்பு வருகிறது. ஆனால், சொந்த மாநிலத்தில் இதுதான் நிலை. திருநர் எழுத்தாளர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் சமூகநீதியா?" என்று கேள்வி எழுப்புகிறார்.
`WE ARE NOT THE OTHERS’ புத்தகத்தின் ஆசிரியர் திருநங்கை கல்கி சுப்பிரமணியமிடம் பேசினோம். ``சென்னை இலக்கியத் திருவிழாவில், சமூகத்தில் மிகவும் பின்தங்கிய விளிம்புநிலை மக்களை தங்கள் எழுத்துகளில் வடித்த பல எழுத்தாளர்களை பேச அழைத்துள்ளனர். ஆனால், அவர்களையெல்லாம் விட அதிகமாக விளிம்புநிலையில் உள்ள திருநர் சமூகத்தின் அவலங்களை எழுதிய எழுத்தாளர்கள் பேசுவதற்கான அமர்வு ஒதுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.

பாலின சமத்துவம் குறித்து பேசுவதற்கான வாய்ப்பு நடனக் கலைஞர் திருநங்கை நர்த்தகிக்குக் கொடுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஆனால், இலக்கிய திருவிழாவில் திருநர் எழுத்தாளர்கள் பேசுவதற்கான அமர்வு ஏன் இல்லை? திருநர்கள் வாழ்க்கையை எழுத்துகளாக்கிய எங்களுக்கு எங்கள் வாழ்வியல் குறித்து பேச முடியாதா? அல்லது திருநர் சமூகத்தில் எழுத்தாளுமைகள் இல்லையென்று அரசு நினைத்துவிட்டதா? கேரளாவில் இன்று திருநர் இலக்கியத்துக்கு பெரிய மதிப்புள்ளது. இதே நிலை தமிழகத்திலும் ஏற்பட வேண்டும்’’ என்றார்.
இது குறித்துக் கேட்க, பொது நூலக இயக்ககம் இயக்குநர் இளம்பகவத் ஐ.ஏ.ஸ் (பள்ளிக்கல்வித்துறை) அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் தொடர்பு கொள்ள இயலவில்லை.