``தமிழக அரசியலில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த மாதிரியான தாக்கம் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் சசிகலா தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகேயுள்ள விளார் கிராமத்தில் ஈழப்போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினவைு முற்றம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகள் அனைவரின் படங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. வீரவணக்க நாளை முன்னிட்டு தஞ்சாவூர் இல்லத்தில் தங்கியிருந்த சசிகலா, முள்ளிவாய்க்கால் முற்றத்துக்குச் சென்று மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது கார்கில் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான கர்னல் அரசன் என்பவர் சசிகலாவுக்கு மலர் கொத்து கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சசிகலா, ``தமிழுக்காக `தமிழினம்' என்கிற காரணத்துக்காக நாடு வேறு, இடம் வேறு என்ற கணக்கு இல்லை, தமிழ் ஒன்றுதான் ஒற்றுமையைக் குறிக்கும். அந்த வகையில், உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழக அரசியலில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த மாதிரியான தாக்கம் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வது குறித்து பின்னர் அறிவிப்பேன். ஆளுநர் தேநீர் விருந்தை சில கட்சிகள் புறக்கணிக்கின்றன. தமிழ்நாட்டின் விருந்தோம்பலை தமிழ் மக்கள் எப்போதும் கொண்டாடுவார்கள். அதைத் தவிர்ப்பது என்பது தமிழ்நாட்டுக்கு அழகல்ல" என்றார்.