Published:Updated:

`இடஒதுக்கீட்டிலிருந்து எங்களுக்கு விலக்கு கொடுங்கள்' - மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் ஐ.ஐ.எம்

இடஒதுக்கீடு
News
இடஒதுக்கீடு

ஐ.ஐ.எம்-கள், தங்களுக்கு இடஒதுக்கீட்டு முறையிலான ஆசிரியர் தேர்விலிருந்து விலக்கு அளிக்குமாறு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

Published:Updated:

`இடஒதுக்கீட்டிலிருந்து எங்களுக்கு விலக்கு கொடுங்கள்' - மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் ஐ.ஐ.எம்

ஐ.ஐ.எம்-கள், தங்களுக்கு இடஒதுக்கீட்டு முறையிலான ஆசிரியர் தேர்விலிருந்து விலக்கு அளிக்குமாறு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இடஒதுக்கீடு
News
இடஒதுக்கீடு

ஐ.ஐ.டி எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களைப் போலவே மத்திய அரசால் தொடங்கப்பட்டது, ஐ.ஐ.எம் எனும் இந்திய மேலாண்மை நிறுவனம். டெல்லி, அகமதாபாத், ஜம்மு, சென்னை, திருச்சி உட்பட, இந்தியாவில் 20 இடங்களில் நிறுவப்பட்டிருக்கும் இந்த ஐ.ஐ.எம்-கள் தங்களுக்கு இடஒதுக்கீட்டு முறையிலான ஆசிரியர் தேர்விலிருந்து விலக்கு அளிக்குமாறு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இந்திய மேலாண்மைக் கழகங்களின் ஆசிரியர்களில் 90 சதவிகிதம் பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மேலாண்மைக் கழகங்களின் ஆசிரியர்களில் 90 சதவிகிதம் பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள்.
ஐ.ஐ.எம். போத் கயா
ஐ.ஐ.எம். போத் கயா

அமைச்சகத்துக்குக் கடந்த வாரம் அனுப்பிய கடிதத்தில், இந்திய மேலாண்மைக் கழகங்களையும் சிறப்பு அந்தஸ்து கல்விக் கழகங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளும்படியும், அப்படி சேர்க்கப்படும் நிலையில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கத் தேவை இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளது. ஐ.ஐ.எம்-களைப் பொறுத்தவரை எஸ்.சி பிரிவுக்கு 15 சதவிகிதமும் எஸ்.டி பிரிவுக்கு 7.5 சதவிகிதமும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகிதமும் பொருளாதார அடிப்படையில் 10 சதவிகிதமும் ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பெரும்பாலான மேலாண்மைக் கழகங்களில் இது பின்பற்றப்படாத நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பு மத்திய அரசு இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றக் கோரி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், 1970-களில் பெர்சனல் மற்றும் பயிற்சித்துறையின் (அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை) கடிதத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகப் பதவிகளுக்கு இடஒதுக்கீடு செல்லாது எனக் குறிப்பிட்டிருந்ததைக் காரணம் காட்டி, உத்தரவை அமல்படுத்த மறுத்தது. இருந்தாலும் இதற்கு மறுமொழி அளித்துக் கடிதம் ஒன்றை அனுப்பிய தற்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், இதற்கு முன்பு பிறப்பித்த எந்த உத்தரவுகளும் செல்லாது, இனி இந்த உத்தரவே செல்லும் எனக் குறிப்பிட்டு, இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த நிர்பந்தித்தது.

ஐ.ஐ.எம் கொல்கத்தா
ஐ.ஐ.எம் கொல்கத்தா

இனி, எதிர்காலத்தில் நியமிக்கப்படும் எந்தவொரு ஆசிரியரும் இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கடுத்து கடிதம் அனுப்பிய ஐ.ஐ.எம் மத்தியக் கல்வி நிறுவனங்கள் சட்டம் 2019 (ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு) பிரிவைத் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. அதில், உட்பிரிவு 4-ன்படி சிறப்பு அந்தஸ்து கல்வி நிறுவனங்கள், ஆய்வுக்கூடங்கள், தேசியப் பாதுகாப்பு மற்றும் திட்டமிடல் துறை சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுவரை டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச், தேசிய மூளை ஆய்வு நிறுவனம், ஹோமி பாபா தேசிய கல்வி நிறுவனம் மற்றும் அதன் 10 துணை நிறுவனங்கள் ஆகிய சில நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.