Published:Updated:

அதிசய கிணறு: தொடரும் ஐ.ஐ.டி குழுவினரின் ஆய்வு; கிணறுகள் நிறைவதால் மகிழ்ச்சியில் விவசாயிகள்!

அதிசய கிணறு
News
அதிசய கிணறு

ஒரு வாரமாகத் தடையின்றி தண்ணீர் சென்றபோதும் அதிசய கிணறு நிரம்பாமல் தண்ணீர் முழுவதும் உள்வாங்கிக் கொள்கிறது. அதன் காரணம் குறித்து ஐ.ஐ.டி மற்றும் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தலைமையிலான குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

Published:Updated:

அதிசய கிணறு: தொடரும் ஐ.ஐ.டி குழுவினரின் ஆய்வு; கிணறுகள் நிறைவதால் மகிழ்ச்சியில் விவசாயிகள்!

ஒரு வாரமாகத் தடையின்றி தண்ணீர் சென்றபோதும் அதிசய கிணறு நிரம்பாமல் தண்ணீர் முழுவதும் உள்வாங்கிக் கொள்கிறது. அதன் காரணம் குறித்து ஐ.ஐ.டி மற்றும் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தலைமையிலான குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

அதிசய கிணறு
News
அதிசய கிணறு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் பகுதியில் சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலையில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு கிணறு உள்ளது. குளம் நிரம்பி விட்டதால் நம்பியாறு கால்வாய் மூலம் வரும் தண்ணீர் அந்த அதிசய கிணறு உள்ளே செலுத்தப்படுகிறது.

நேரில் பார்வையிட்ட சபாநாயகர் மற்றும் அதிகாரிகள்
நேரில் பார்வையிட்ட சபாநாயகர் மற்றும் அதிகாரிகள்

ஒரு வாரமாக உள்ளே நீர் சென்றபோதும் கிணறு நிரம்பவில்லை. அதனால் அந்த கிணறு அமைந்துள்ள பகுதியில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் அதைப் பார்த்தனர். கிணற்றைப் பார்வையிட்ட நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, கிணறு குறித்து ஆய்வு நடத்துமாறு ஐ.ஐ.டி நிர்வாகத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல ஆயிரம் கனஅடி தண்ணீர் கிணற்றுக்குள் சென்ற நிலையிலும் இதுவரை நிரம்பாத கிணற்றில் ஐ.ஐ.டி பேராசிரியர் வெங்கட்ரமண சீனிவாசன் தலைமையிலான மூவர் குழுவினர் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினரும் ஆய்வு செய்தனர்.

ஆய்வு நடத்தும் ஐ.ஐ.டி குழுவினர்
ஆய்வு நடத்தும் ஐ.ஐ.டி குழுவினர்

அந்தக் குழுவினர், இரண்டாவது நாளாக இன்றும் ஆய்வில் ஈடுபட்டனர். கிணற்றைச் சுற்றிலும் சுமார் 5 கி.மீ பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதிசய கிணற்றின் தண்ணீரையும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள தண்ணீரையும் மாதிரிக்கு எடுத்து பரிசோதனைகள் செய்யப்பட்டன. செயற்கைக்கோள் படங்களின் துணையுடனும் ஆய்வுகள் நடந்தது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஐ.டி பேராசிரியர் வெங்கட்ரமண சீனிவாசன், ``ஆயன்குளம் கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர் என்னவாகிறது என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளோம். இங்கு உள்ளது போல் பிற இடங்களிலும் மழை நீரைச் சேகரிக்கும் அமைப்பை உருவாக்க முடியுமா என்கிற எண்ணத்தில் இதை ஆய்வு செய்ய ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இங்குள்ள மண் மாதிரி மற்றும் தண்ணீரை ஆய்வு செய்திருக்கிறோம். அத்துடன் நிலத்தின் அடியில் இருக்கும் சுண்ணாம்பு பாறைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அதன் மூலம் தண்ணீர் கடத்தப்பட்டு சுற்றுப்புறப் பகுதிகளுக்குச் செல்கிறதா எனவும் ஆய்வு செய்து வருகிறோம். சில மாதிரிகளை பரிசோதனைக்காக வெளியிடங்களுக்கு அனுப்பியுள்ளோம்” என்றார்.

இதனிடையே, ஒரு வாரத்துக்கும் மேலாக அதிசய கிணற்றுக்குள் பல ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்ற நிலையில் தற்போது அந்த கிணற்றில் தண்ணீர் மேலே வந்துள்ளது. ஆனாலும் தண்ணீர் முழுமையாக உள்வாங்குகிறது. இது பற்றி ஆயன்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஜெயராஜன் கூறுகையில், ``ஒரு வாரத்துக்கும் மேலாகத் தண்ணீரை உள்வாங்கும் அதிசய கிணறு மூலம் சுற்றுப் பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் போர்வெல் நிரம்பி வருகின்றன.

விவசாயி ஜெபராஜன்
விவசாயி ஜெபராஜன்

ஒரு வாரமாகத் தண்ணீரை உள்வாங்கிய அதிசய கிணறு காரணமாக ஆயன்குளம் மட்டுமல்லாமல் பக்கத்து ஊர்களில் உள்ள கிணறுகளும் நிரம்பி வருகின்றன. முதுமொத்தன்மொழி கிராமத்தில் உள்ள ஒரு கிணறு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த நிலையில் இப்போது அந்த கிணற்றுக்குள் ஊற்று பெருக்கெடுத்து வழிவதால் நிரம்பியுள்ளது. இதே போல கிணறுகள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்” என்றார்.

ஐ.ஐ.டி பேராசிரியர்கள், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவினருக்குத் துணையாக பூச்சிக்கடு பகுதியில் உள்ள மரைன் கல்லூரி மாணவர்களும் தன்னார்வலர்களாக உதவி செய்து வருகிறார்கள்.