அலசல்
Published:Updated:

சொத்துகள் அரசுடைமை... சசிகலாவுக்கு விடுக்கப்படும் மிரட்டலா?

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா

இப்போது அரசுடைமை ஆக்கப்பட்ட ஆறு சொத்துகளையுமே இளவரசி, சுதாகரனின் தனிப்பட்ட சொத்துகளாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.

சசிகலா, இளவரசி ஆகியோர் பிப்ரவரி 8-ம் தேதி சென்னைக்குள் கால்வைக்கும் முன்னரே பிப்ரவரி 7-ம் தேதி இளவரசி, சுதாகரன் சம்பந்தப்பட்டிருந்த ஆறு சொத்துகளை அரசுடைமையாக்கி ஷாக் கொடுத்திருக்கிறது தமிழக அரசு.

அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதற்காக சசிகலாவின் சட்டப் போராட்டம் தீவிரமடையும் என்று சொல்லப்படும் சூழலில், “இந்தச் சொத்துகளை அரசுடைமையாக்கியதே சசிகலாவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக மிரட்டல்தான்” என்கிறார்கள் ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகிகள்!

சொத்துகள் அரசுடைமை... சசிகலாவுக்கு விடுக்கப்படும் மிரட்டலா?

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கின் கர்நாடக அரசின் மேல்முறையீட்டில், 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஜெ தவிர்த்த (மறைந்துவிட்டதால்) மூவரின் தண்டனையை உறுதி செய்தது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் சென்னை வருவாய் மாவட்டத்திலிருக்கும் இளவரசி, சுதாகரன் ஆகியோரின் ஆறு சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

இத்தனை நாள்கள் அமைதியாக இருந்துவிட்டு, சசிகலா தமிழகத்துக்கு வருவதற்கு முந்தைய நாளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால், இது சசிகலா முகாமுக்கு விடப்படும் மறைமுக மிரட்டல் என்கிறார்கள் ஆளுங்கட்சி வட்டாரத்தில். இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர், “சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்குச் சொந்தமாக சசி என்டர்பிரைசஸ், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ்.ப்ராப்பர்ட்டீஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக்‌ஷன், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட் உட்பட 32 தனியார் நிறுவனங்கள் இருந்தன. பிறகு அந்த நிறுவனங்களிலிருந்து சசிகலா விலகிவிட்டார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது வெளியான கர்நாடக மாநில தனி நீதிமன்றத் தீர்ப்பில் மொத்தம் 254 சொத்துகள் இணைக்கப் பட்டிருந்தன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகே அவர் சம்பந்தப்பட்ட சொத்துகளை இந்தப் பட்டியலிலிருந்து நீக்கி, 128 சொத்துகளை மட்டும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதையடுத்து, 2017-ம் ஆண்டே ஆறு மாவட்டங்களிலிருந்த 68 சொத்துகளை அரசுடைமையாக்கும் பணிகள் நடந்தன. அதேசமயம், இந்தச் சொத்துகள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் செலுத்த வேண்டிய அபராதத் தொகைக்கான ஈடல்ல என்பதும் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, மேற்கண்ட 128 சொத்துகளும் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சேர்த்த சொத்துகள்; அவை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்பதுதான் தீர்ப்பின் சாரம்.

குறிப்பாக லெக்ஸ் ப்ராப்பர்ட்டி டெவலப்மென்ட்ஸ், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ராமராஜ் அக்ரி ஃபார்ம்ஸ், சிக்னோரா பிசினஸ் என்டர்பிரைசஸ், ரிவர்வே அக்ரோ புராடக்ட்ஸ், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் ஆகிய ஆறு நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அசையாச் சொத்துகள் அனைத்தையும் மாநில அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூன்றாவது பகுதி தெளிவுபடுத்தியுள்ளது. அதன் அடிப்படையில்தான் தற்போது மேற்கண்ட ஆறு நிறுவனங்களின் சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

சொத்துகள் அரசுடைமை... சசிகலாவுக்கு விடுக்கப்படும் மிரட்டலா?

இவைத் தவிர, மேற்கண்ட நிறுவனங்களின் பெயரில் வேறு சில இடங்களிலும் சொத்துகள் இருப்பதாகத் தெரிகிறது. தற்போது மேற்கண்ட நிறுவனங்களுக்கு இளவரசியும் சுதாகரனும் இயக்குநர்களாக இல்லை; வேறு சில நபர்கள்தான் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இருப்பினும், ஆளுங்கட்சிக்கு எதிராக சசிகலாவின் செயல்பாடுகள் தொடர்ந்தால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இணைக்கப்பட்டுள்ள மீதமுள்ள சொத்துகள் அனைத்தையும் அடுத்தடுத்த நாள்களில் முழுமையாக அரசுடைமையாக்குவோம் என்று ஆளுந்தரப்பு விடுத்த எச்சரிக்கையே இந்த நடவடிக்கை” என்றார்கள் விரிவாக.

இளவரசி சார்பில் இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் அசோகனிடம் பேசினோம். “குன்ஹா தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கையைத் தமிழக அரசு எடுத்திருக்கிறது. ஆனால், 2017-ம் ஆண்டிலிருந்து சும்மா இருந்துவிட்டு சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையாகி, தமிழகத்துக்கு வரும் முந்தைய நாளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால், இதிலிருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி அப்பட்டமாகத் தெரிகிறது. அதேசமயம், இந்த நிறுவனங்களில் சசிகலாவுக்குச் சம்பந்தம் இல்லை” என்றார்.

சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனோ, “இப்போது அரசுடைமை ஆக்கப்பட்ட ஆறு சொத்துகளையுமே இளவரசி, சுதாகரனின் தனிப்பட்ட சொத்துகளாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. அதேபோல் சசிகலா பெயரில் இனி தமிழக அரசு முடக்குவதற்கு எந்தச் சொத்தும் இல்லை. அதனால், சொத்துகள் முடக்கப்படும் என்கிற காரணத்தைக் காட்டி சசிகலாவை மிரட்ட முடியாது” என்றார் உறுதியாக!

எப்படியாக இருந்தாலும்... எதிர்காலத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தித்தானே ஆக வேண்டும்!