அலசல்
Published:Updated:

சட்டவிரோத செங்கல்சூளைகளுக்கு கிரீன் சிக்னல்... கொதிக்கும் கோவை!

சட்டவிரோத செங்கல்சூளை
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டவிரோத செங்கல்சூளை

தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சீனியர் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து கிரீன் சிக்னல் வாங்க செங்கல்சூளை அதிபர்கள் தீவிர முயற்சி செய்துவந்தனர்.

உயர் நீதிமன்ற உத்தரவால் கோவை மாவட்டத்தில் சீல் வைக்கப்பட்ட சட்டவிரோத செங்கல்சூளைகளுக்கு, இப்போது கனிம வளத்துறை அனுமதி வழங்கியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

கோவை மாவட்டம், தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் சட்டவிரோதமாக இயங்கிவந்தன. இந்தச் சூளைகளுக்காக கொள்ளையடிக்கப்பட்ட செம்மண்ணால், சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து ஜூனியர் விகடனில் தொடர்ச்சியாகக் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம். இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு செங்கல்சூளைகளின் செயல்பாடுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில், கடந்த 2021-ம் ஆண்டு, ‘177 சட்டவிரோத செங்கல்சூளைகளை மூட’ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் 2021, மார்ச் மாதம் சம்பந்தப்பட்ட செங்கல்சூளைகளுக்கு சீல் வைத்தார் மாவட்ட ஆட்சியர். தேசிய பசுமை தீர்ப்பாயமும் தாமாக முன்வந்து இது குறித்த வழக்கை விசாரித்துவருகிறது.

சட்டவிரோத செங்கல்சூளைகளுக்கு கிரீன் சிக்னல்... கொதிக்கும் கோவை!

இந்த நிலையில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் ஜெயகாந்தன், கோவை செங்கல்சூளைகள் தொடர்பாக ஒரு செயல்முறை ஆணையைத் தற்போது வெளியிட்டிருக்கிறார். அதில், ‘அபராதத் தொகையைக் கட்டிவிட்டு செங்கற்களை அப்புறப்படுத்திக்கொள்ளலாம். செங்கல்சூளைகள் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கப்படுகிறது’ என்று கூறப்பட்டிருக்கிறது.

இது அந்தப் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டவிரோத செங்கல்சூளைகளுக்கு எதிராகப் போராடிவரும் கணேஷ் கூறுகையில், ‘‘இது யானைகள் வாழும் பகுதி, 97 சிற்றோடைகள், சின்னவேடம்பட்டி ஏரி, பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இங்கு உள்ளன. பசுமை தீர்ப்பாயம் அமைத்திருக்கும் குழு, ‘இங்கு ரூ.373 கோடிக்குச் சட்டவிரோத செம்மண் கொள்ளை நடந்திருப்பதாக’ அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. ஆனால், கனிம வளத்துறை தற்போது ரூ.13 கோடி மட்டுமே அபராதமாக நிர்ணயித்து, கொள்ளையர்களுக்கு உடந்தையாகச் செயல்பட்டிருக்கிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்சார வாரியம், மலையிட பாதுகாப்பு குழுமம், உள்ளாட்சி அமைப்பு போன்ற எந்தத் துறையிலும் எந்த முறையான அனுமதியும் வாங்கப்படவில்லை. எனவே, ஆணையரின் இந்தப் புதிய ஆணை பொருந்தாது.” என்றார்.

செம்மண் கொள்ளையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை ஆய்வுசெய்திருக்கும் சமூகச் செயற்பாட்டாளர் சாந்தலா, “இங்கு செங்கல்சூளைகள் இயங்கிவந்த 2016 – 2021 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 29 யானை – மனித மோதல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. செங்கல்சூளைகள் மூடப்பட்டிருந்த காலகட்டத்தில், 2021-ம் ஆண்டு ஒரே ஒரு சம்பவம்தான் நடந்திருக்கிறது. 2022-ம் ஆண்டு முழுவதும் ஒரு மோதல்கூட நடக்கவில்லை.

இந்த நிலையில், புதிய ஆணையை அடிப்படையாகவைத்து, ஏற்கெனவே உற்பத்திசெய்த செங்கற்களை செங்கல்சூளை தரப்பினர் இரவு பகலாக எடுத்துவருகின்றனர். இதனால் தொந்தரவுக்குள்ளான யானை ஒன்று, கடந்த 7-ம் தேதி காலை கணுவாய் பகுதி வரையிலும் வந்திருக்கிறது. பிரச்னையின் வீரியத்துக்கு இது ஓர் உதாரணம்” என்றார்.

கணேஷ், சாந்தலா, பழனிசாமி, சமீரன்
கணேஷ், சாந்தலா, பழனிசாமி, சமீரன்

“தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சீனியர் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து கிரீன் சிக்னல் வாங்க செங்கல்சூளை அதிபர்கள் தீவிர முயற்சி செய்துவந்தனர். இந்த ஆணைக்குப் பின்னணியில், தி.மு.க சீனியர் அமைச்சர்கள் இருவரின் பங்கு இருக்கிறது. இதற்காகப் பெரிய அளவில் தொகை கைமாறியிருக்கிறது”என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

கோவை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஜெம் பழனிசாமி கூறுகையில், “கனிம வளத்துறையினர் எங்களையெல்லாம் தனித்தனியாக விசாரணை செய்துதான் இந்த ஆணையைப் போட்டிருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளாக எங்கள் தொழில் முடங்கிக்கிடக்கிறது. மாவட்டப் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில், அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும், தி.மு.க மாவட்டச் செயலாளர் ரவியிடமும் எங்கள் குறைகளை முறையிட்டோம். எங்கள் நலனுக்காக அவர்கள் செயல்படுகின்றனர். மற்றபடி தி.மு.க-வில் யாரும் எங்களிடம் பணம் கேட்கவுமில்லை; நாங்களும் யாருக்கும் பணம் கொடுக்கவும் இல்லை” என்றார்.

கோவை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் சசிக்குமார், “ஆணையர், செங்கல் சூளைகளை இயக்கச் சொல்லவில்லை. அபராதம்தான் கட்டச் சொல்லியிருக்கிறார். அபராதம் தவணை முறையில் கட்டிய பிறகு செங்கல்களை அப்புறப்படுத்திக் கொள்ளலாம் என்றுதான் செயல்முறை ஆணையில் கூறப்பட்டுள்ளது.” என்றார்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறுகையில், “அந்த ஆணையிலேயே இது நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளனர். வருகிற 11-ம் தேதி இந்த வழக்கு பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது. அதுவரை பழையநிலையிலேயே தொடர உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், ‘எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது’ என செங்கல்சூளை அதிபர்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறோம்’’ என்றார் சுருக்கமாக.

காப்புக் காடுகளைச் சுற்றி குவாரிகளுக்கு அனுமதி... கிரானைட் குவாரிகளுக்கு மீண்டும் திறப்புவிழா... இப்போது சட்டவிரோத செங்கல் சூளைகளுக்கு அனுமதி... நல்ல விடியல்தான்!