அரசியல்
அலசல்
Published:Updated:

சட்டவிரோதச் செங்கல் சூளைகளுக்கு துணைபோகிறதா தி.மு.க? - கொதிக்கும் கோவை

செங்கல் சூளை
பிரீமியம் ஸ்டோரி
News
செங்கல் சூளை

பையா கிருஷ்ணனும் சி.ஆர்.ராமசந்திரனும் முன்பு, செங்கல் சூளையை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்று சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.

நீதிமன்றத்தால் மூடப்பட்ட சட்டவிரோதச் செங்கல் சூளைகளைத் திறப்பதில், தி.மு.க நிர்வாகிகள் ஆர்வம்காட்டுவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் கோவைப் பகுதி மக்கள். என்ன நடக்கிறது அங்கே?

கோவை மாவட்டம், தடாகம் பள்ளத்தாக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில், சுமார் 200 செங்கல் சூளைகள் இயங்கிவந்தன. அதற்காக நீர்நிலைகள், புறம்போக்கு நிலங்கள், விவசாய நிலங்கள் என அனைத்து இடங்களிலும் பல நூறு அடிகளுக்குச் செம்மண் சுரண்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட, சட்டவிரோதச் செங்கல் சூளைகளுக்குத் தடைவிதித்து 2021 மார்ச்சில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கோவை மாவட்ட நிர்வாகம் 186 செங்கல் சூளைகளுக்கு சீல் வைத்தது.

தி.மு.க ஆட்சிக்கு வந்த குறுகிய காலகட்டத் திலேயே, கோவை செங்கல் உற்பத்தியாளர் சங்கத்துக்குத் தலைவராக, தி.மு.க கோவை வடக்கு மாவட்டப் பொறுப்பாளரான சி.ஆர்.ராமசந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அவரைத் தலைவராக நியமித்ததன் காரணமே, சட்டவிரோதச் செங்கல் சூளைகளுக்கு கிரீன் சிக்னல் வாங்குவதற்கான முயற்சிதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். போதாக் குறைக்கு, தி.மு.க கோவை மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பையா கிருஷ்ணனும் ராமச்சந்திரனுடன் இணைந்து செங்கல் சூளைகளைத் திறப்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

சட்டவிரோதச் செங்கல் சூளைகளுக்கு துணைபோகிறதா தி.மு.க? - கொதிக்கும் கோவை

சட்டவிரோதச் செங்கல் சூளைகளுக்கு எதிராகப் போராடிவரும் கணேஷிடம் பேசினோம். ‘‘தடாகம் பள்ளத்தாக்கைச் சுற்றி, மூன்று பக்கமுள்ள மலைகளிலிருந்து 200 சிறு ஓடைகளுக்குத் தண்ணீர் வருகிறது. கோவை வடக்குப் பகுதியில் 70,000 ஏக்கர் விவசாய நிலங்கள் இதை நம்பியிருக்கின்றன. ஆனால், கனிமவளச் சுரண்டலால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நீர்வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. அப்போது, 30 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்துவந்தது. இப்போது, 1,200 அடி போர் போட்டால்தான் தண்ணீர் கிடைக்கிறது. வருவாய்த்துறை, கனிமவளத்துறைகளில் சிலர் இவர்களின் சுரண்டல்களுக்கு பார்ட்னர்களாக இருந்து உதவுகிறார்கள். எந்தப் புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. சட்டவிரோதச் செங்கல் சூளைகளின் மின் இணைப்புகள்கூட பல இடங்களில் இன்னும் துண்டிக்கப்படாமல் இருக்கின்றன.

நீதிமன்றத்தால் செங்கல் சூளைகள் மூடப்பட்டதை அடுத்து, அதை மீண்டும் திறப்பதற்கு அனைத்து வகையிலும் முயற்சி செய்து சோர்ந்துபோன செங்கல் உற்பத்தியாளர்களுக்கு, தி.மு.க நிர்வாகிகள்தான் இப்போது ஆறுதல் அளித்துவருகிறார்கள். தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர்கள் பையா கிருஷ்ணன், சி.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட துறையினரைச் சந்தித்து பிரச்னையைச் சரிசெய்ய முயன்றுவருகிறார்கள்’’ என்றார் கோபமாக.

சக்கரபாணி
சக்கரபாணி

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வேலு, ‘‘பையா கிருஷ்ணனும் சி.ஆர்.ராமசந்திரனும் முன்பு, செங்கல் சூளையை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்று சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போது, இருவரும் சமாதானமாகிவிட்டார்கள். செங்கல் சூளை உற்பத்தியாளர்களுடன் கூட்டம் போடுகிறார்கள். கோவைக்கு எந்த அமைச்சர் வந்தாலும் சென்று பார்க்கிறார்கள். சென்னை சென்று அமைச்சர்கள், அதிகாரிகளைப் பார்க்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளாகச் சரியான மழை இல்லாமல் வறண்டுபோன இந்தப் பகுதியில், செங்கல் சூளைகளை மூடிய இந்த ஆறு மாதங்களில் நல்ல மழை கிடைத்திருக்கிறது. ஆனால், இங்கு தவறே நடக்கவில்லை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் போலியான ஆதாரங்களைக் கொடுக்கிறார்கள்’’ என்று ஆதங்கத்தைக் கொட்டினார்.

பையா கிருஷ்ணனிடம் பேசியபோது, ‘‘செங்கல் சூளைகளை மூடிய இந்த ஆறு மாதங்களில் ஏழு ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கல், 13 ரூபாயாக விலையேறிவிட்டது. செங்கல் சூளைகளைத் திறந்தால், கல் விலை குறையும். இதனால், வீடு கட்டுபவர்கள் பயன்பெறுவார்கள். மேலும், செங்கல் சூளைகளைத் திறந்தால், 10,000 பேருக்கு வேலை கிடைக்கும். அந்த நோக்கத்துக்காகத்தான் நாங்கள் முயன்றுவருகிறோம்’’ என்றார்.

‘‘இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம், தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றில் நடந்துவருகின்றன. அந்த வழக்குகளை சட்டரீதியாகச் சந்திப்பதற்கான முயற்சிதான் நடந்துவருகிறது. மற்றபடி வேறு ஏதுமில்லை’’ என்றார் சி.ஆர்.ராமசந்திரன்.

கொரோனா காலத்தில் கோவைப் பகுதியின் பொறுப்பாளராகத் தலைமையால் நியமிக்கப்பட்ட அமைச்சர் சக்கரபாணியிடம் இது பற்றிக் கேட்டோம், ‘‘தேர்தல் பிரசாரத்துக்காக மேட்டுப்பாளையம் வந்தபோது, `மூடப்பட்டுள்ள செங்கல் சூளைகள் திறக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும்’ என்று முதல்வர் கூறினார். அதன் அடிப்படையில்தான் அந்தச் சங்கத்தினர் எங்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரின் அறிக்கை அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

சுரங்கங்கள் மற்றும் புவியியல்துறை கோவை மாவட்ட உதவி இயக்குநர் ரமேஷ், ‘‘நாங்கள் யாருக்கும் உதவியாக இல்லை. சொல்லப்போனால் சூளைகள் மூடப்பட்டிருப்பதால், உரிமையாளர் களெல்லாம் எங்கள்மீது கோபத்தில் இருக்கிறார்கள். நீதிமன்றத்தின் உத்தரவைக் கடைப்பிடித்து, அங்கு நடந்துள்ள பாதிப்புகளை அளவிடும் பணிகள் நடந்துவருகின்றன’’ என்றார்.

சி.ஆர்.ராமச்சந்திரன், கணேஷ், வேலு, பையா கிருஷ்ணன், சமீரன்
சி.ஆர்.ராமச்சந்திரன், கணேஷ், வேலு, பையா கிருஷ்ணன், சமீரன்

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ‘‘பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கிணங்க, குழு அமைத்து அங்கு நடந்த பாதிப்புகள் அளவிடும் பணிகள் நடந்துவருகின்றன. செங்கல் சூளைகளைத் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த விவகாரம் உயர் நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் பார்வையில் உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாகக் கடைப்பிடித்து நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

‘நீட் தேர்வு, மகளிருக்கு உரிமைத் தொகை, சூயஸ் பிரச்னை என்று பல தேர்தல் வாக்குறுதிகளில் மௌனம் காக்கும் தி.மு.க., சூழலியல் கேடு நிறைந்த செங்கல் சூளை விவகாரத்தில் மட்டும் ஆர்வம் காட்டுவது ஏனோ?’ என்று கேட்கிறார்கள் மக்கள்!