
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு அளிக்காது. `குடித்தால் உயிரிழப்பீர்கள்’ என நாங்கள் தொடர்ந்து எச்சரித்துவருகிறோம்.
சுவாரஸ்யமான அதிரடிகளுக்குப் பெயர்போன பீகார் அரசியலில், புதுப் பிரச்னையாக வெடித்திருக்கிறது கள்ளச்சாராய மரணங்கள். இந்த மரணங்களை முன்வைத்து ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளக் கூட்டணி அரசை வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது எதிர்க்கட்சியான பா.ஜ.க. பதிலுக்கு ஆளுங்கட்சியினரும் பா.ஜ.க-வை வறுத்தெடுக்கிறார்கள். என்னதான் நடக்கிறது பீகாரில்?
ஏப்ரல் 2016 முதல் பீகாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார் அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார். 2017-ம் ஆண்டு பீகார் தலைநகர் பாட்னாவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ``பூரண மதுவிலக்கை அமல்படுத்தியது மிகவும் துணிச்சலான முடிவு’’ என்று நிதிஷ் குமாரை வெகுவாகப் பாராட்டினார். ஆனால், தற்போது அதே பூரண மதுவிலக்கு நடைமுறையை வைத்து நிதிஷ் குமாருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறது பீகார் பா.ஜ.க. பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது முதலே, பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. குறிப்பாக, பண்டிகைக் காலங்கள், குளிர்காலங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்றதால், கடந்த ஐந்து ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகளைத் தாண்டி, பலருக்குக் கள்ளச்சாராயம் குடித்ததால் தீவிர உடல்நல பாதிப்புகளும் ஏற்பட்டன.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 14-ம் தேதி பீகாரின் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், 34 பேர் மட்டுமே உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் சொல்கிறது. இந்த விவகாரம் நிதிஷ் குமார் அரசுக்குப் பெரும் தலைவலியை உண்டாக்கியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில்கூட, இந்த விவகாரத்தை முன்வைத்து பா.ஜ.க-வினர் அரசியல் புயலைக் கிளப்பினர். `பீகாரில் பூரண மதுவிலக்கைச் சரியான முறையில் நிதிஷ் குமார் அரசு அமல்படுத்தவில்லை. கள்ளச்சாராய விற்பனையையும் தடுக்கத் தவறிவிட்டது’ என பா.ஜ.க போர்க்கொடி தூக்கியது. உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமும் கோரியது.
இதற்கு ஆவேசமாக பதிலளித்த நிதிஷ், ‘‘கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு அளிக்காது. `குடித்தால் உயிரிழப்பீர்கள்’ என நாங்கள் தொடர்ந்து எச்சரித்துவருகிறோம். அப்படியிருந்தும், குடித்து உயிரிழப்பவர்களுக்கு எப்படி இழப்பீடு தர முடியும்... ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இது போன்ற மரணங்கள் ஏற்படும்போது ஏன் பெரிதாக்கப்படுவதில்லை?’’ என்று பேசியிருக்கிறார்.
இந்தக் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையக்குழு ஒன்றும் பீகாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றன. அதில், ‘குஜராத்தில், ஜூலை மாதத்தில் மட்டும் கள்ளச்சாராயம் குடித்து 45 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசத்தில் மே மாதம் 36 பேரும், ஹரியானாவில் கடந்த ஆண்டு நவம்பரில் 40 பேரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். ஆனால், பா.ஜ.க ஆளும் இந்த மாநிலங்களுக்கெல்லாம் மனித உரிமை ஆணையம் செல்லவில்லை. ஆணையத்தை எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் கருவியாகப் பயன்படுத்துகிறது மத்திய அரசு’’ என்று காட்டமாகச் சொல்லப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்துப் பேசும் சமூக ஆர்வலர்கள் சிலர், “பூரண மதுவிலக்கு அமலிலுள்ள குஜராத், பீகார் போன்ற மாநிலங்களில், கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை மோசமடைபவர்கள் தங்கள்மீது வழக்கு பாய்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் மருத்துவமனையில் சேர அஞ்சுகின்றனர். இதன் காரணமாகவே பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பீகார் மட்டுமல்ல, அனைத்து மாநில அரசுகளுமே கள்ளச்சாராய உற்பத்தியாளர்களைக் கண்டறிந்து கைதுசெய்ய வேண்டும். மக்கள் மத்தியிலும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என்கிறார்கள்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தனது செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ள, பூரண மதுவிலக்குக் கொள்கைகளில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார். ‘என்ன செய்யப்போகிறார் நிதிஷ்?’ என்பதுதான் பீகார் அரசியலை உலுக்கும் கேள்வி!