அலசல்
Published:Updated:

இன்னும் பத்து வருடங்களில் கரூர் பாலைவனமாகும்!

கரூர்
பிரீமியம் ஸ்டோரி
News
கரூர்

பதறும் சமூக ஆர்வலர்கள்... மிரட்டும் குவாரி அதிபர்கள்

‘‘கரூரில் ஏற்கெனவே 200-க்கும் மேற்பட்ட குவாரிகள் அனுமதியோடு இயங்கிவருகின்றன. 300-க்கும் மேற்பட்ட குவாரிகள் அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் இயங்கிவருகின்றன. இவற்றைத் தாண்டி, இன்னும் புதிதாக எட்டு குவாரிகளுக்கு அனுமதி கொடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இப்படியே தொடர்ந்தால், இன்னும் 10 வருடங்களில், மனிதர்கள் வாழ முடியாத பாலைவனமாக கரூர் மாறிவிடும்!’’ என்று பதைபதைப்புடன் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கரூர் மாவட்டத்தில் காவிரி, நொய்யல், அமராவதி உள்ளிட்ட ஆறுகள் பாய்ந்தாலும்கூட, மாவட்டத்தின் 80 சதவிகிதப் பகுதிகள் வறட்சியில் வாடுகின்றன. ‘இதற்குக் காரணமே இங்கு இயங்கும் கல், கிரானைட், எம் சாண்ட் குவாரிகள்தான்’ என்கிறார்கள் விவசாயிகள்.

இன்னும் பத்து வருடங்களில் கரூர் பாலைவனமாகும்!

‘சாமானிய மக்கள் கட்சி’யின் கரூர் மாவட்டச் செயலாளரான சண்முகம் நம்மிடம் பேசியபோது, ‘‘கரூர் ஏற்கெனவே கொஞ்சம் கொஞ்சமா பாலைவனம் ஆகிட்டுவருது. அரவக்குறிச்சி, க.பரமத்தி, தோகைமலை உள்ளிட்ட பகுதிகள்ல 1,100 அடிக்குக் கீழே நிலத்தடி நீர்மட்டம் போயிடுச்சு. தேவையான மழை பெஞ்சு பல வருடங்கள் ஆகிடுச்சு. பொதுவா, எந்தவொரு பகுதிக்கும் 32 சதவிகிதம் அளவுக்குக் காடுகள் இருக்கணும்னு சொல்வாங்க. ஆனா, கரூர் மாவட்டத்துல ரெண்டு சதவிகிதம்கூட காடு இல்லை. கடந்த மூன்று வருஷத்துல க.பரமத்தி, தமிழ்நாட்டுலேயே அதிகம் வெப்பம் பதிவாகும் பகுதியா மாறியிருக்கு. இதுக்கெல்லாம் காரணம், கணக்கில்லாத குவாரிகள்தான்.

600-க்கும் மேற்பட்ட குவாரிகள்...

கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஏற்கெனவே அனுமதி பெற்ற 160 கல்குவாரிகளும், அனுமதி பெறாத 90 கல்குவாரிகளும் இயங்குது. அனுமதியோடு 54 கிரானைட் குவாரிகளும், அனுமதி பெறாம 80 கிரானைட் குவாரிகளும் இயங்குது. 68 எம் சாண்ட் ஆலைகளுக்கு மட்டுமே அனுமதி இருக்கும் நிலையில, அனுமதியே இல்லாம 200-க்கும் மேற்பட்ட எம் சாண்ட் ஆலைகள் இயங்குது. அனுமதியோடு இயங்குற பல குவாரிகள்ல விதிகள் முறையா பின்பற்றப்படுறதில்லை.

ஐந்து ஏக்கர் மட்டும் வெட்ட அனுமதி வாங்கிட்டு, 10 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள்ல கல்லை வெட்டியெடுக்குறாங்க. அதேபோல, 100 அடி ஆழம் வரை வெட்ட அனுமதி வாங்கிட்டு, 250 அடி ஆழம் வரைக்கும் கல்லை வெட்டியெடுக்குறாங்க. தினமும் 100 வண்டி லோடுக்கு மட்டும் ட்ரிப் ஷீட் வாங்கிட்டு, 500 வண்டிகள்ல கல் லோடு கொண்டுபோறாங்க. கல்குவாரிகள்ல மதியம் 1-லருந்து 2 மணி வரைதான் வெடிவெக்கணும்னு விதி இருக்கு. ஆனா, நினைச்ச நேரத்துல வெடிவெக்கிறதால, பக்கத்துக் குடியிருப்புகள்ல எல்லாம் விரிசல் ஏற்படுது. காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரைதான் குவாரி இயங்கணும்கிறது விதி. ஆனா, 24 மணி நேரமும் மூணு ஷிஃப்டுல குவாரிகளை இயக்குறாங்க.

இன்னும் பத்து வருடங்களில் கரூர் பாலைவனமாகும்!

‘கிராவல் மண் எடுக்க 13 மாவட்டங்களில் தடை’னு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கு. அதுல ஒரு மாவட்டமான கரூர்ல தினமும் 5,000 லோடு கிராவல் மண் கடத்தல் நடக்குது. மணல் கொள்ளையும் ஓயாம நடக்குது. விதிகளை மீறும் குவாரிகள் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கிட்ட கொடுத்தும் பெருசா நடவடிக்கை இல்லை. இன்னும் 10 வருடங்கள் இப்படியே தொடர்ந்தா மக்கள் வசிக்க முடியாத நிலைக்கு கரூர் தள்ளப்படும்’’ என்றார் விரக்தியாக.

“எதிர்த்து பேசுனா உயிரோட வெளிய போக முடியாது!”

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான விஜயன், ‘‘க.பரமத்தி பகுதியில மூணு கல்குவாரிகள், கே.பிச்சம்பட்டி, வீரியம்பாளையம் பகுதிகள்ல தலா ரெண்டு கிரானைட் குவாரிகள், தோகைமலை பகுதியில ஒரு கல்குவாரினு எட்டு குவாரிகளுக்கு அரசு புதுசா அனுமதி வழங்கியிருக்கு. இதுக்காக நடந்த எட்டு கருத்துக்கேட்புக் கூட்டங்கள்லயும் ‘புதுசா குவாரிகளை அனுமதிக்கக் கூடாது’னு விவசாயிகள்வெச்ச கோரிக்கையை நிராகரிச்சுட்டாங்க.

க.பரமத்தியில நடந்த கூட்டத்துல டி.ஆர்.ஓ முன்னிலையிலேயே ஒரு கல்குவாரி அதிபர், ‘எதிர்த்து பேசுனா உயிரோட வெளிய போக முடியாது’ன்னு விவசாயிகளை மிரட்டினார். அவர்மீது புகார் கொடுத்தும், நடவடிக்கை இல்லை. அந்த எட்டு குவாரிகளுக்குச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சுருக்க அறிக்கையைத் தயார்செய்த கம்பெனி, நேர்ல வந்து ஆய்வு செய்யாம ‘காப்பி அண்ட் பேஸ்ட்’ முறையில் ரெடி செஞ்சு கொடுத்திருக்கு. எட்டு இடங்களுக்கும் பெயர், பட்டா எண் மட்டும் மாறியிருக்கிறதே தவிர, மற்ற அனைத்தும் ஒரே மாதிரி இருக்கு. இதை அதிகாரிகள்கிட்ட சுட்டிக்காட்டியும் பதில் இல்லை. தமிழக அரசு புதிய குவாரிகளை அனுமதிக்கக் கூடாது. இதுவரை முறைகேடாகக் கனிமவளங்களைச் சுரண்டியவர்களிடம் சட்டரீதியாக அபராதம் வசூலிச்சாலே, தமிழகத்தோட கடன்களை அடைச்சுடலாம். தேர்தல் வாக்குறுதியில தெரிவிச்சதுபோல, கல், கிரானைட் குவாரிகள் அனைத்தையும் தமிழக அரசின் டாமின் நிறுவனமே ஏத்து நடத்தணும்’’ என்றார்.

சண்முகம், விஜயன், பிரபுசங்கர்
சண்முகம், விஜயன், பிரபுசங்கர்

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் பேசினோம். ‘‘விதிகளை மீறும் குவாரிகள்மீது பொதுமக்கள் புகார் கொடுத்தால், உடனே அங்கே ஆய்வுசெய்கிறோம். தேவையான இடத்தில் நடவடிக்கையும் எடுக்கிறோம். புதிதாக குவாரிகள் அமைப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. அதற்கு அனுமதி இன்னும் தரவில்லை” என்றார்.

கரூரை கவனத்தில்கொள்ளுமா தமிழக அரசு?