உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2022-ல், மொத்தம் உள்ள 146 நாடுகளில் இந்தியா 135 வது இடத்தையும், இதனின் துணை அறிக்கையான ஹெல்த் அண்ட் சர்வைவ் (Health and Survival) அறிக்கையிலும் மோசமான நிலையில் பின்தங்கியுள்ள இந்தியா 146வது இடத்தை பெற்றுள்ளது.

உலகின் பாலின இடைவெளி குறியீட்டை உள்ளடக்கிய உலகளாவிய பாலின அறிக்கை 2022 (Global gender gap index), சமீபத்தில் வெளியாகியது. இந்த அறிக்கை, உலகம் பாலின சமத்துவத்தை அடைய இன்னும் 132 ஆண்டுகள் ஆகும் என்று தெரிவிக்கிறது. குறிப்பாக, தெற்காசியா பாலின சமத்துவத்தை அடைய இன்னும் அதிக காலம் எடுக்கும்; இது 197 ஆண்டுகள் வரை இருக்கலாம் என கணித்துள்ளது.
உலக நாடுகளில் நிலவும் பாலின சமத்துவமின்மையை வெளிப்படுத்தும் இந்த முக்கியமான அறிக்கையில், இந்தியா அதன் அண்டை நாடுளுடன் ஒப்பிடும்போது தரவரிசையில் மிகவும் பிங்தங்கியுள்ளது. பங்களாதேஷ்நேபாளம் (96), இலங்கை (110), மாலத்தீவுகள் (117) மற்றும் பூட்டான் (126) ஆகிய நாடுகளுக்கு எல்லாம் பின்னால் உள்ளது இந்தியது.

இந்த அறிக்கை, நான்கு முக்கிய விஷயங்களின் அடிப்படையில் தயாராகியிருக்கிறது. பெண்களுக்கான பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்பு, கல்வி கிடைக்கும் அளவு, ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்தல், மற்றும் அரசியல் அதிகாரமளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பாலின சமத்துவத்தை வரையறுக்கிறது. அதன் அடிப்படையில் 0 முதல் 100 வரை மதிப்பெண்களை வழங்குகிறது. இந்த மதிப்பெண்கள் சமநிலையை நோக்கிய தூரத்தை குறிக்கும். இவற்றில், ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்தலில் இந்தியா 146-வது இடத்திலும், பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்பில் 143-வது இடத்திலும், கல்வியில் 107-வது இடத்திலும், அரசியல் அதிகாரமளிப்பில் 48-வது இடத்திலும் உள்ளது. ஒட்டுமொத்த குறியீட்டில் 135-வது இடத்தில் உள்ளது.
எந்த நாடும் முழு பாலின சமத்துவத்தை அடையவில்லை என்றாலும், பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த நாடுகள் அதிகபட்ச மதிப்பெண்களை பெற்றுள்ளன. ஐஸ்லாந்து (90.8%) உலக தரவரிசையில் முன்னணியில் உள்ளது. 90%க்கும் அதிகமாக பாலின இடைவெளியை குறைத்துள்ள ஒரே நாடு, ஐஸ்லாந்து மட்டுமே. மற்ற ஸ்காண்டிநேவிய நாடுகளான பின்லாந்து (86%, 2வது இடம்), நார்வே (84.5%, 3வது இடம்) மற்றும் ஸ்வீடன் (82.2%, 5வது இடம்) ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன. ஐரோப்பிய நாடுகளான அயர்லாந்து (80.4%) மற்றும் ஜெர்மனி (80.1%) ) முறையே ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் உள்ளன.

முன்னதாக 2021-ம் ஆண்டில், குறியீட்டில் இடம்பெற்ற 156 நாடுகளில் இந்தியா 140-வது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது .