Published:Updated:

என்எல்சி: உணவில் இறந்துகிடந்த எலி?! - 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி
News
தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

நெய்வேலி என்.எல்.சி தொழிலாளர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் எலி விழுந்த காலை உணவைச் சாப்பிட்டதால் வாந்தி, மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

Published:Updated:

என்எல்சி: உணவில் இறந்துகிடந்த எலி?! - 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

நெய்வேலி என்.எல்.சி தொழிலாளர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் எலி விழுந்த காலை உணவைச் சாப்பிட்டதால் வாந்தி, மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி
News
தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இயங்கிவருகிறது மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம். இங்கு ’நெய்வேலி நிலக்கரி நிறுவனம்’ அனல்மின் நிலையம் – I மற்றும் விரிவாக்கம், அனல்மின் நிலையம் – II மற்றும் விரிவாக்கம், என்.என்.டி.பி என ஐந்து அனல்மின் நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இதில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.

இரண்டாவது அனல்மின் நிலையத்தில் மட்டும் நாளொன்றுக்கு 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 7 யூனிட்டுகள்கொண்ட இந்தப் பிரிவில் சுமார் 3,000 தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் காலை ஷிஃப்ட்டில் பணிபுரிந்துவந்தனர்.

உணவில் கிடக்கும் எலி
உணவில் கிடக்கும் எலி

அவர்களுக்கு தினமும் காலை 8:30 முதல் 9 மணிக்குள் அங்கிருக்கும் கேன்டீனில் காலை உணவு வழங்கப்பட்டுவிடும். அதன்படி இன்று காலை SME, GWC பிரிவுகளில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு தயிர் சாதமும், இட்லியும் வழங்கப்பட்டன. அதைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஒருசிலருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கடுத்து ஒருவர் பின் ஒருவராக உணவு சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட, தயிர்சாதம் வைத்திருந்த பாத்திரத்தைச் சோதனை செய்திருக்கிறார்கள்.

அப்போது அதில் எலி ஒன்று இறந்துகிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த உணவைச் சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம், என்.எல்.சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதையடுத்து, நம்மைத் தொடர்புகொண்ட பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், ``எலி கிடந்த உணவைச் சாப்பிட்டதாலேயே தங்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகக் கூறியதுடன், அந்தப் புகைப்படத்தையும் அனுப்பிவைத்தனர்.

என்.எல்.சி தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி
என்.எல்.சி தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

ஆனால், இது குறித்து நம்மிடம் பேசிய என்.எல்.சி-யின் மக்கள் தொடர்பு அலுவலர் அப்துல் காதர், “எலி, சாப்பாட்டில் இல்லை. அந்தப் பக்கமாக ஓடியிருக்கிறது. அதைப் பார்த்துதான் அப்படிக் கூறியிருக்கிறார்கள். யாருக்கும், எந்தப் பிரச்னையும் இல்லை. தொழிலாளர்கள் நன்றாக இருக்கிறார்கள்” என்றவரிடம், ”எலி, சாப்பாட்டில் இல்லையென்றால் தொழிலாளர்கள் ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு, “சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று முடித்துக்கொண்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.