தன் தந்தை எம்.ஆர்.ராதாவைப் போன்றே, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத மனிதர் நடிகர் ராதாரவி. அரசியல், சினிமா என எந்த மேடையிலும் `பளிச்' எனப் பேசி கைதட்டல்களால் அரங்கை நிறைத்துவிடுபவரை, அரசியல் பேட்டிக்காகச் சந்தித்தேன்...
இனி அவருடன்...
``பா.ஜ.க., ஒரு மதவாதக் கட்சி - என்று தொடர்ச்சியாக திராவிட இயக்கங்கள் குற்றம்சாட்டுகின்றனவே...?''
``அது பொய் பிரசாரம். `50 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் என்ன செய்தன...' என்று கேட்கும்போது நமக்கு எவ்வளவு கோபம் வருகிறதோ... அதே கோபம்தானே `மதவாதக் கட்சி பா.ஜ.க' என்று சொல்லும்போது அவர்களுக்கும் வரும்?
முஸ்லிம் - கிறிஸ்துவப் பள்ளிகளில் படித்துவந்தவன் நான். எனவே, முஸ்லிம் - கிறிஸ்த சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பு குறித்த என் சந்தேகங்களைக் கேட்டறிந்து தெளிவு பெற்ற பின்னர்தான் பா.ஜ.க-விலேயே நான் இணைந்தேன்.
`இந்து என்ற வார்த்தையே 200 வருடங்களுக்கு முன்புவரை கிடையாது' என்ற தேவையற்ற ஆய்வுகளுக்குள் எல்லாம் நான் போகவே மாட்டேன். நான் பார்க்க எனக்குத் தெரிந்து இந்த எல்.ஐ.சி கட்டடம் இப்படித்தான் இருக்கிறது. அதைத்தான் நான் பேச முடியும். அதற்கு முன் அங்கே என்ன இருந்தது என்பதையெல்லாம் எனக்கு சொல்லத் தெரியாது.
`ஜம்மு காஷ்மீர் பற்றிப் பேசாதீர்கள்; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டும் பேசுங்கள்' என்று இன்றைக்கு பா.ஜ.க சொல்கிறது. இந்தத் துணிச்சல் இதுநாள்வரையில் இங்கே யாருக்குமே இல்லாமல் போய்விட்டதே என்பதைச் சிந்திக்கும்போதுதான் `இதுநாள்வரை நான் ஓர் இருட்டறையில் வாழ்ந்துவிட்டவன்' மாதிரி ஆகிவிட்டேன்.''
``குடியுரிமை சட்டத் திருத்தம், இந்தி திணிப்பு என்று பா.ஜ.க-வின் திட்டங்கள் அனைத்தும் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகிறதே...?''
``குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்த விஷயங்களை இப்போதுதான் நான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். முழுவதுமாகப் படித்து அறிந்தபிறகு பேசுகிறேன்.
எந்த ஒரு மொழியுமே, இனிப்பாக இருக்கவேண்டுமே தவிர, திணிப்பாக இருக்கக்கூடாது. எனவே, இந்தித் திணிப்புக்கு எதிராக எப்போதுமே நான் பேசுவேன். பா.ஜ.க-வில் சேர்ந்த அன்றேகூட, இதுகுறித்த எனது இந்தக் கருத்தை தமிழக பா.ஜ.க தலைவர்களிடம் தெரிவித்திருக்கிறேன்.''

``நீண்ட நெடிய அரசியலில் இருந்தபோதும்கூட பெரிதாக எந்தப் பதவியையும் வகிக்கவில்லையே ராதாரவி ஏன்?''
`` `சேவை செய்யவேண்டும்' என்பதுதான் என்னுடைய அடிப்படை நோக்கம். அதனால்தான் சினிமா தொழிலில் இருந்தபோதும்கூட, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி, டப்பிங் யூனியன் என்று தொடர்ச்சியாக சங்கப் பணிகளில் ஈடுபட்டுவருகிறேன். வருமானத்துக்கு எந்தக் குறைவும் இல்லாமல், என் அப்பா நிறைய சேர்த்துவைத்திருக்கிறார். இதற்குமேல் வருவது ஜாக்பாட்தான். அதனால் சந்தோஷமாகவே இருக்கிறேன்.''
``தமிழக அரசியலில், பலமான திராவிடக் கட்சிகளை வெற்றிகொள்ள ரஜினி - கமல் கூட்டணி அவசியம்தானே?''
``சினிமாவில், ரஜினிகாந்தின் ஒரு படம் 150 கோடி வசூலிக்கிறது என்றால், கமல்ஹாசன் படம் 120 கோடி வசூலிக்கிறது என்று ஓர் உதாரணத்துக்கு வைத்துக்கொள்வோம். இதே ரஜினியும் கமலும் இணைந்து ஒரு படத்தில் நடித்தால், அந்தப் படம் 250 கோடியா வசூலிக்கப் போகிறது? அதே 150 கோடி ரூபாய்தான் வசூலாகும். அரசியலிலும் அதுதான். ரஜினி - கமல் தனித்தனியே நின்றால், அவரவருக்கான ஓட்டுகள் கிடைக்கும். சேர்ந்து நின்றாலும் அதே ஓட்டுதான் கிடைக்கும்.''

`` `தெலுங்கர்களால்தான் தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது. எனவே, தமிழ், தமிழர் என்று நாம் சொல்லுவதெல்லாம் வேஸ்ட்' என்று மேடையிலேயே நீங்கள் கோபப்படக்கூடிய அளவுக்கு இங்கே என்ன நடந்துவிட்டது?''
``ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா என அனைத்து மாநிலங்களிலும் தமிழர்கள் இருக்கிறார்கள். மிகப்பெரிய வசதி வாய்ப்பு இல்லாதவர்களாக இந்த மாநிலங்களின் எல்லைகளில் மட்டுமே வாழ்ந்துவருகிறவர்கள் இவர்கள். ஆனால், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தெலுங்கர்கள் வசதி வாய்ப்போடு மிகப்பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்துவருகிறார்கள். தமிழகத்தின் 40 சதவிகித வாக்குகள் தெலுங்கு மக்களிடம்தான் இருக்கின்றன. ஆனாலும்கூட, இன்னும் எங்களை 'வந்தேறி, வந்தேறி' என்று சொல்லிக்கொண்டிருப்பதனால் வந்த கோபத்தில்தான், அன்றைக்கு மேடையில் அப்படிப் பேசினேன்.''
``உங்களை `வந்தேறி' என்று குறிப்பிட்டுப் பேசுபவர்களை நேரடியாக அடையாளம் காட்டிப் பேசுவதில் என்ன தயக்கம்?''

``சில வெத்துவேட்டுகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அதேசமயம் கட்சி ரீதியாக பதில் சொல்லியிருந்தால், நிச்சயம் நானும் பதில் சொல்லியாகவேண்டும். சமீபத்தில் தம்பி சீமான்கூட, எனது அந்தப் பேச்சை பாராட்டித்தான் பேசியிருந்தார். ஏனெனில், தனிப்பட்ட யாரையும் திட்டிப் பேசுவதோ அல்லது குடும்பத்தினரைத் திட்டுவதோ எனக்குப் பழக்கமில்லாதது.''
இதே போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு ராதாரவி அளித்துள்ள பதில்கள் நாளை வெளிவரும் ஆனந்த விகடன் இதழில் விரிவாக...