அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கொத்தடிமை ஊராட்சி மன்றத் தலைவர், ஆட்டுவிக்கும் பா.ஜ.க நிர்வாகி, கொந்தளிக்கும் அனுமந்தை கிராம மக்கள்!

புஷ்பலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
புஷ்பலிங்கம்

அனுமந்தை ஊராட்சித் தலைவர் புஷ்பலிங்கம் 24 மணி நேரமும் போதையில்தான் மிதப்பார்.

‘மாப்பிள்ளை அவருதான்... ஆனால், அவர் போட்டுருக்குற சட்டை என்னுடையது’ என்ற ‘படையப்பா’ பட டயலாக்போல, ‘ஊராட்சித் தலைவர் அவர்தான்... ஆனால், அவரை இயக்குவதே பா.ஜ.க மாவட்டத் தலைவர்தான்’ என்று புகார் வாசிக்கிறார்கள் அனுமந்தை கிராம மக்கள்!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள அனுமந்தை ஊராட்சியில் தலைவராக இருக்கிறார் புஷ்பலிங்கம். இவரை, விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ.க தலைவரான ஏ.டி.ராஜேந்திரன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அதனால் புஷ்பலிங்கம் செயல்படாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இதையடுத்து அனுமந்தை கிராமத்துக்குச் சென்ற நாம், ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பலிங்கம் வீட்டுக்குச் சென்றோம். கதவுகூட இல்லாத அந்தக் கூரை வீட்டில் யாருமே இல்லை. அருகிலிருந்தவர்களிடம் புஷ்பலிங்கம் குறித்து விசாரித்தோம்... ‘‘அப்படியே ஊருக்குள்ள போய் ‘வட்டாரம்’ வீடு எங்கேன்னு கேளுங்க.... அங்கேதான் தலைவர் இருப்பாரு” என்று ஏ.டி.ராஜேந்திரனின் வீட்டை வழிகாட்டியவர்கள்,

புஷ்பலிங்கம்
புஷ்பலிங்கம்

“ஏ.டி.ராஜேந்திரன் வீட்டில் கொத்தடிமை போல் உழைத்துவந்தவர்தான் புஷ்பலிங்கம். இந்த முறை ஊராட்சித் தலைவர் பதவி, பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டதும் புஷ்பலிங்கத்தையே தலைவர் பதவிக்கு நிறுத்தி, ஜெயிக்கவும் வைத்துவிட்டார் ஏ.டி.ராஜேந்திரன். பெயருக்குத்தான் புஷ்பலிங்கம் அனுமந்தை ஊராட்சித் தலைவர். ஆனால், அவருக்கு எதுவுமே தெரியாது. ஏ.டி.ஆர் சொல்கிற இடத்தில் கையெழுத்து மட்டும் போடுவார். இதற்காகவே அவரை எப்போதும் போதையிலேயே வைத்திருக்கிறார்கள். அண்மையில், ஊர்ப் பள்ளிக்கூடம் அருகே மழைநீர் தேங்கி நின்றது. ஊராட்சித் தலைவர் கண்டுகொள்ளாததால், ஊராட்சித் துணைத் தலைவராக இருக்கும் தி.மு.க-வைச் சேர்ந்த கலியமூர்த்தி அந்தப் பள்ளத்தில் மண் போட்டு மேவினார். இதையறிந்து ஊராட்சித் துணைத் தலைவரை ஏ.டி.ராஜேந்திரன் திட்டித் தீர்த்துவிட்டார். இவர்களது அரசியல் சண்டையால், எங்கள் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து தரப்படாமல் இருக்கின்றன’’ என்று கொந்தளித்த கிராம மக்கள், ஊராட்சி மன்றத் துணைத்தலைவரை ஏ.டி.ராஜேந்திரன் அண்மையில் மிரட்டியதாகச் சொல்லப்படும் ஆடியோ ஒன்றையும் நமக்கு அனுப்பிவைத்தனர்.

அந்த ஆடியோவில், ‘இங்க தலைவர் நானு. கோபத்தைக் கிளப்பினே... வீடேறி வந்து அடிப்பேன்’ என்ற மிரட்டலில் ஆரம்பித்து, அச்சிலேற்ற முடியாத வகையிலான ஆபாச வார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.

புஷ்பலிங்கம், ஏ.டி.ராஜேந்திரன், கலியமூர்த்தி
புஷ்பலிங்கம், ஏ.டி.ராஜேந்திரன், கலியமூர்த்தி

இது குறித்து, தி.மு.க-வைச் சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவர் கலியமூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘அனுமந்தை ஊராட்சித் தலைவர் புஷ்பலிங்கம் 24 மணி நேரமும் போதையில்தான் மிதப்பார். எனவே, விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவரான ஏ.டி.ராஜேந்திரன்தான் இங்கே மறைமுகத் தலைவராகச் செயல்பட்டுவருகிறார். அண்மையில் காளியாங்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி அருகே மழைநீர் தேங்குவதாக கிராமசபையில் தலைமையாசிரியர்கள் புகார் கூறினர். ‘அதை முதலில் சரிசெய்வோம்’ என்று நானும் ஏ.டி.ராஜேந்திரனிடம் சொன்னேன். ‘சரி வர்றேன்’ என்றவர், கடைசிவரை வரவேயில்லை. எனவே, மழைநீர் தேங்கிய பகுதியில், நானே மண் அடித்துக் கொட்டினேன். அப்போதுதான், என்னை போனில் தொடர்புகொண்ட ஏ.டி.ராஜேந்திரன், ‘உன் இஷ்டத்துக்கு மண் அடிப்பியா நீ... உங்க ஆட்சி இருக்குதுன்னு பாக்குறீங்களா... ஆட்சி முடிஞ்சதும் முறிச்சுப் போட்டுடுவேன். எங்க ஊர்ல வந்து அரசியல் பண்ணுறீங்களா... நம்மாளுங்களைக் கிளப்பிவிட்டா, வீடேறி வந்து அடிப்பானுங்க’ என்றெல்லாம் மிரட்டினார். எனவே, மரக்காணம் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது வரையில் பஞ்சாயத்தும் செயல்படாமலே இருக்கிறது” என்றார் வருத்தத்துடன்.

புஷ்பலிங்கம் வீடு
புஷ்பலிங்கம் வீடு

இதையடுத்து, சர்ச்சைக்குள்ளான பா.ஜ.க மாவட்ட தலைவர் ஏ.டி.ராஜேந்திரன் வீட்டுக்குச் சென்று, புஷ்பலிங்கம் குறித்துக் கேட்டோம். ‘‘அவர் இங்கு இல்லை’’ என்று ஒற்றை வரியில் பதில் கிடைக்கவே, செல் போனில் புஷ்பலிங்கத்தைத் தொடர்பு கொண்டோம். நம்மை யாரென்றும் கேட்காமல், “எனக்கு வேலை இருக்கு... போனை வைங்க” என்று சட்டென நமது அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

இதையடுத்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ.க தலைவரான ஏ.டி.ராஜேந்திரனிடம் சர்ச்சைகள் குறித்து விளக்கம் கேட்டுப் பேசினோம். “புஷ்பலிங்கத்தின் அப்பா வேண்டுமானால் எங்களிடம் வேலை செய்ததுண்டு. இவர் செய்யவில்லை. புஷ்பலிங்கம் பா.ஜ.க-வைச் சார்ந்தவர் என்பதால், கட்சிரீதியாக தேர்தலில் நிற்கவைத்து ஜெயிக்கவைத்தேன். மற்றபடி துணைத் தலைவராக போட்டியிட்ட கலியமூர்த்தி ஆளுங்கட்சி என்பதால், அப்படியே அறிவித்துவிட்டார்கள். ஊராட்சி விஷயத்தில் நான் தலையிடுவதில்லை.

ஏ.டி.ராஜேந்திரன் வீடு
ஏ.டி.ராஜேந்திரன் வீடு

ஊராட்சித் துணைத் தலைவர் கலியமூர்த்தியை நான் தவறாக எதுவும் பேசவில்லை. ஆனால், அவர்களே வில்லங்கமாக எடிட் செய்து ஆடியோ வெளியிட்டிருக்கிறார்கள்’’ என்று தன்மீதான குற்றச்சாட்டுகளை ஒட்டுமொத்தமாக மறுத்தார்.

தமிழகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்களின் நிலையை சமீபத்தில்தான் தீண்டாமை முன்னணி தனது சர்வேயின் மூலம் தோலுரித்திருந்தது. களத்தில் கொஞ்சம்கூட மாற்றம் வரவில்லை என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம். !