சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

நிர்மலா சீதாராமன்
பிரீமியம் ஸ்டோரி
News
நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் ஆனபிறகு, தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.

இன்பாக்ஸ்

‘வாரணம் ஆயிரம்’, ‘வெடி’, ‘வேட்டை’ படங்களில் நடித்தவர், சமீரா ரெட்டி. 2014-ல் அஷோக் வர்தே என்பவரை மணந்தவர், திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். இந்தத் தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை இருக்கிறது. இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கியிருக்கும் சமீரா ரெட்டி, போட்டோஷூட் ஒன்றுக்குப் போஸ் கொடுத்திருக்கிறார். முழுக்க முழுக்கத் தண்ணீருக்கு அடியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் ‘வாவ்’ ரகம்.. தாய்மை!

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள ரத்லாம் நகரில் ‘என்.ஒய் சினிமாஸ்’ என்ற மல்டிபிளக்ஸ் திரையரங்கைத் தொடங்கியுள்ளார். இந்தியாவின் முதல் ‘தீம் - மல்டிபிளக்ஸ்’ இது என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் நிலைய மாடலில் உருவாக்கப்பட்டுள்ளது, இந்தத் திரையரங்கம். தட்கல் டிக்கெட் இருக்குமா?

ரொம்ப நாள் தூங்கிக்கொண்டிருந்த ‘சேலஞ்ச்’ டிரெண்டு சென்ற வாரம் மீண்டும் விழித்துக்கொண்டது. பாட்டிலை ஒருவர் கையில் பிடித்துக்கொள்ள, திரும்பி, காலை உயர்த்தி ஒரு கிக் அடித்து, அந்த பாட்டில் மூடியைக் காலாலேயே திறக்க வேண்டும் என்ற #BottleCapChallenge வைரலோ வைரல். ஹாலிவுட்டின் ஜேசன் சாத்தம் தொடங்கி பாலிவுட் வித்யுத் ஜமால், கோலிவுட்டின் அர்ஜுன் என எல்லா பாடி பில்டர்களும் வாட்டர் பாட்டிலுடன் களமிறங்கினர். கண்ணைக் கட்டிக்கொண்டு திறப்பது, அந்தரத்தில் டபுள் பல்டி அடித்துத் திறப்பது என்று கிரியேட்டிவிட்டியில் அசத்தினர் பலர். ஓபன் பண்ணினா...

மல், ஷங்கர், லைகா நிறுவனம் அனைவரும் ஒருங்கிணைந்து ‘இந்தியன் 2’ படத்தின் அனைத்துச் சிக்கல்களையும் களைந்து, படத்தைத் தொடர முடிவெடுத்திருக்கிறார்கள். ‘இந்தியன் 2’ படத்தின் தாமதத்தால், ஷங்கர் - விஜய் கூட்டணி ‘முதல்வன் 2’ படத்திற்காக இணையவிருப்பதாகக் கூறப்பட்டது. அந்தப் படம் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ‘முதல்வன்’ படத்தில் விஜய்யை நடிக்கக் கேட்டு, சம்பள விஷயங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. தமிழன் 2 வருமா?

‘பிகில்’ படத்திற்குப் பிறகு அட்லி இயக்கும் படத்தில் ஷாருக் நடிக்கிறார்; அதனால், ‘பிகில்’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்... என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில், ‘தான் அடுத்து நடிக்கவிருக்கும் படம், பாலிவுட்டில் வெளியாகி வெற்றிபெற்ற ‘தூம்’ படத்தின் நான்காவது பாகம்.’ என அறிவித்திருக்கிறார், ஷாருக். எல்லாம் பொய்யா கோப்ப்பால்ல்ல்!

‘மேயாத மான்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, கோலிவுட்டின் பிஸியான நடிகையாகியிருக்கிறார், பிரியா பவானி சங்கர். சக்ஸஸ் சென்டிமென்ட்தான் இவரைக் கோலிவுட்டின் ‘லக்கி ஏஞ்சல்’ ஆக்கியிருக்கிறது எனத் தயாரிப்பாளர்கள் பலர் வர்ணிக்க, தற்போது ‘கசடதபற’, ‘மாஃபியா’, ‘குருதியாட்டம்’, ‘வான்’, ‘இன்று நேற்று நாளை 2’ என பிரியாவின் டைரியில் தேதிகள் ஃபுல்! வெற்றித்திருமகள்!

பிரபல ‘டியோர்’ பிராண்டின் 2019-ம் ஆண்டின் இலையுதிர் கால கலெக்ஷன் அறிமுக விழா கடந்த வாரம் பாரிஸில் கோலாகலமாகத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் பிரியங்கா-நிக் ஜோடி பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக வந்திருந்த ‘Wonder Woman’ புகழ் கல் கடோட், பிரியங்காவோடு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. ‘Keyhole Slit’ கழுத்து வடிவமைப்பில் எமரால்டு பச்சை நிற கவுனில் மிடுக்கான தோற்றத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் பிரியங்கா. கறுப்பு, சாம்பல், ரஸ்ட் நிறங்களிலான ஃபேன்ஸி கவுனில் மிகவும் எளிமையாகவே வந்திருந்தார் கல் கடோட். சாம்பல் நிற பெரிய ரோஜாப்பூ அப்ளிக் பதித்த Bomber ஜாக்கெட் அணிந்து பிரியங்காவிற்கு ‘டஃப்’ கொடுத்தார் நிக். சபாஷ்... சரியான ஜோடி!

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையுடன் இருக்கும் புகைப்படம்தான் சென்ற வாரத்தின் வைரல். இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பையில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தனது டிவிட்டர் பக்கத்தில் சச்சின் வெளியிட்டிருந்தார். ‘Kya yeh Sundar pic-hai?’ என கேப்ஷன் இட்டிருந்த சச்சினுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் தட்டினர் ரசிகர்கள். பேட்டிங் மாஸ்டரும் ப்ரௌஸிங் மாஸ்டரும்!

நெட்ஃப்ளிக்ஸுக்குக் குட்டு வைத்திருக்கிறது, ‘ட்ரூத் இனிஷியேட்டிவ்’ என்ற தனியார் தொண்டு நிறுவனம். சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘ஸ்டேரஞ்சர் திங்ஸ்’ தொடரில் போதைப் பொருள்கள் மற்றும் புகையிலைப் பொருள்களை உபயோகிக்கும் காட்சி அதிகமாக இருப்பதால், அது இளைஞர்களைத் தவறாக வழிநடத்தும் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும் ‘இனி தங்களுடைய படைப்புகளில் இளைஞர்கள் மத்தியில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களைக் கட்டுப்படுத்துவோம்’ என அறிவித்துள்ளது. சார்... சென்சார்!

இன்பாக்ஸ்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போதெல்லாம் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் திருக்குறளை மேற்கோள் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார். அதே பாணியில், நிர்மலா சீதாராமன் புறநானூற்றில் இருந்து ‘யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே’ என்கிற பிசிராந்தையாரின் பாடல் வரிகளை மேற்கோள்காட்டிப் பேசியிருக்கிறார். திருக்குறளைவிட புறநானூற்றில் ‘வரிகள்’ அதிகம்!

1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதன் முறையாக உலகக் கோப்பையை வென்றது. அதை மையப்படுத்தி ‘83’ என்ற திரைப்படம் பாலிவுட்டில் உருவாகி வருகிறது. படத்தில் ரன்வீர் சிங் கபில்தேவாக நடிக்கிறார். ரன்வீர் பிறந்தநாளன்று படத்தில் அவரது கபில்தேவ் லுக்கை வெளியிட்டிருந்தது படக்குழு. ஹரியானா புயல் என்ற கபில்தேவின் செல்லப் பெயரை ஹேஷ்டாக் ஆக்கி உணர்ச்சிவசப்பட்டனர் ரசிகர்கள். மலையாள ‘1983’ ஹிட்டடித்தது போல இதுவும் ஹிட்டடிக்கும் என எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். வெற்றி நமதே!