
படம்: கிரண் சா
யூடியூப் சென்சேஷன்கள் எல்லோரும் தன் படத்தில் இருக்கவேண்டும் என்பது விஜய்யின் விருப்பமாம். அதற்காக லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் படத்தில் `பிளாக் ஷீப்', `நக்கலைட்ஸ்' உள்ளிட்ட பிரபல யூடியூப் சேனல்களின் ஸ்டார்களை எல்லாம் நடிக்க வைக்க ஆடிஷன் நடந்துகொண்டிருக்கிறது. நடிச்சிட்டும் நக்கல் பண்ணுவாங்களே!

`அசுரன்' முடித்த கையோடு கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிக்க லண்டன் பறந்துவிட்டார் தனுஷ். லைகா தயாரிக்கும் இந்தப்படத்தில் `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' புகழ் ஜேம்ஸ் காஸ்மோ நடிக்கவிருக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக கடவுளின் தேசத்தில் இருந்து ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கிறார். படத்தின் கதை பல நாடுகளில் நடப்பதால் `உலகம் சுற்றும் வாலிபன்' எனப் படத்துக்குத் தலைப்பு வைக்க யோசனையாம்!. அவரு ஏற்கெனவே இன்டர்நேஷனல் ஸ்டாராச்சே!
இங்கிலாந்து அரச குடும்பத்தைப் பற்றி ஒரு துண்டுச் செய்தி வந்தால்கூட வைரல்தான். இதில் செம க்யூட்டாக ஒரு போட்டோ கிடைத்தால் விடுவார்களா என்ன? இங்கிலாந்து இளவரசர் வில்லியமும் அவர் மனைவி கேட் மிடில்டன்னும் தங்கள் மகள் சார்லெட்டை முதல்நாள் பள்ளிக்கு அழைத்துவரும் போட்டோ இந்த வாரத்தின் வைரல்! மழலை மாறாத சிரிப்போடு கேமராக்களைப் பார்த்து சார்லெட் கையசைக்கும் அந்த படங்கள் கொள்ளை அழகு!

மும்பையில் ஆரம்பித்து ஜெய்ப்பூருக்குப் பறந்த ‘தர்பார்’ டீம் மீண்டும் மும்பையில் தீவிரப் படப்பிடிப்பில் இருக்கிறது. ரஜினி, நயன்தாரா, ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன், அனிருத் என ஸ்டார்களின் சம்பளமே பல கோடிகளைத் தாண்டுவதால் படத்தின் பட்ஜெட்டும் 250 கோடிக்கு எகிறியிருக்கிறதாம். படத்தின் பிசினஸோ 500 கோடிகளைத் தாண்டும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறதாம் லைகா! மார்க்கெட்டிங் மாஸ்டர்ஸ்!
ராஷ்மிகா மந்தனாதான் இப்போது அகில இந்திய ஹீரோயின்! வரிசையாக விஜய் தேவரகொண்டாவுடன் நடித்தவர் இப்போது மகேஷ் பாபுவுடன் ஒரு படம், அல்லு அர்ஜுனுடன் ஒரு படம் என செம பிஸி. தெலுங்குக்கு அடுத்தபடியாக தமிழுக்கும் வருகிறார் . ‘ரெமோ' இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி, கார்த்தி நடிக்கும் படத்தின் ஹீரோயின் ராஷ்மிகாதான். டோலிவுட், கோலிவுட்டைத் தொடர்ந்து பாலிவுட்டுக்கும் பறக்கவிருக்கிறார். தெலுங்கில் வெளிவந்த `ஜெர்ஸி' படத்தின் இந்தி ரீ-மேக்கில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா! வெல்கம் பொண்ணே!

அதிரடிப் பேட்டிகளால் கவனம் ஈர்க்கும் கங்கனா ரனாவத் மீண்டும் ஒரு பரபர பேட்டி தட்டியிருக்கிறார். ‘`பாலிவுட் பிரபலங்களுக்குச் சுற்றுச்சூழல் பற்றியோ, மக்களின் பிரச்னைகள் பற்றியோ எந்தக் கவலையும் இல்லை’’ எனப் பொங்கியி ருக்கிறார் கங்கனா. ‘`மும்பை நகரின் மரங்கள் அடர்ந்த பகுதியான ஆரே காலனியில் 2,600 மரங்களை வெட்டிச் சாய்க்க மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தி ருக்கிறது. ஆனால் இதுகுறித்து எந்த பாலிவுட் நட்சத்திரமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை’’ என ஆதங்கப்பட்டிருக்கிறார் கங்கனா. மும்பை நிர்வாகமே... நியாயமாரே!
பாகிஸ்தான் அணி ஒவ்வொரு முறையும் பேட்டிங்கில் சொதப்பும்போது தனியாளாகக் களத்தில் நின்று டீமை கரைசேர்க்கப் போராடுவார் மிஸ்பா உல் ஹக். இப்போது களத்திற்கு வெளியேயும் அணியைக் காப்பாற்றும் பொறுப்பு அவரிடத்தில்! பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகவும் தேர்வுக்குழுத் தலைவராகவும் இப்போது நியமிக்கப்பட்டிருக்கிறார். ‘சம்பளமும் இதுவரை இல்லாத அளவிற்கு...’ எனப் புருவம் உயர்த்துகிறார்கள் முன்னாள் வீரர்கள். டீம் பழையபடி ஆனா சரி!

கிரிக்கெட் உலகம் மொத்தமும் ஸ்மித்தின் ஆட்டத்தில் திளைத்திருக்க, ஒற்றை பௌன்சரில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார் ஆர்ச்சர். மூளைக் கலக்கத்தில் இருந்து ஸ்மித் மீண்டு வந்து. ``ஆர்ச்சரின் பந்துவீச்சில் நான் தடுமாறுவதாகச் சொல்கிறார்கள். பிட்ச்சில் சில பள்ளங்கள் இருந்ததால் அவர் பந்து என்னைத் தாக்கியது, அவ்வளவுதான்... ஆனால் ஆர்ச்சர் என்னை ஆட்டமிழக்கச் செய்யவில்லை” என்றார். நான்காவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், ஸ்மித் களத்தில் இருக்கும்வரை 23 ஓவர்கள் பந்து வீசினார் ஆர்ச்சர். ஆனால், ஸ்மித்தை அசைக்க முடியவில்லை. டபுள் செஞ்சுரி அடித்து ‘நான்தான் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன்’ எனப் புரியவைத்தார். டெஸ்ட்டின் ராஜா!
`ஐ யம் லெஜண்ட்', `ஐ ரோபோ' என சயின்ஸ் ஃபிக்ஷன்களில் அசத்திய வில் ஸ்மித் மீண்டும் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தோடு வருகிறார். `பிரில்லியன்ஸ்' என்ற பெயரில் மார்க்கஸ் எழுதிய நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படவிருக்கிறது. சூப்பர் பவர் கொண்ட போலீஸாக இந்தப் படத்தில் வில் ஸ்மித் நடிக்கவிருக்கிறார். வில் ஸ்மித்தின் முந்தைய இரண்டு சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களுக்கும் திரைக்கதை எழுதிய அகீவா கோல்ட்ஸ்மேன்தான் இந்தப் படத்துக்கும் திரைக்கதை ஆசிரியர். வீ ஆர் வெயிட்டிங்!