Published:Updated:

இன்பாக்ஸ்

விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் சேதுபதி

தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தார்.

லாக்டெளனிலும் விஜய் சேதுபதி பிஸிதான். ஜனநாதனின் லாபம் படத்துக்கான ஷூட்டிங்கை முடித்துவிட்ட அவர், அடுத்து யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் படங்களுக்கான ஷூட்டிங் வேலைகளில் இருக்கிறார். இதுபோக, தேவர் மகன் 2 என்கிற தலைவன் இருக்கின்றான் படத்தில் நாசரின் மகன் வேடத்தில் கமலுடன் நடிக்கவிருக்கிறாராம் விசே. அடுத்தபடியாக சிவப்பு மஞ்சள் பச்சை என எல்லா சீசனிலும் ஹிட் படம் கொடுக்கும் `பூ’ சசியின் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கிறதாம். கொரோனா கலாசா அப்புன்னா அப்புனா

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

முன்னாள் மிஸ் இந்தியா மற்றும் நடிகையான ஈஷா குப்தா, ‘லாக்டெளன் நேரத்தில், என் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்தவருக்கு விடுமுறை தந்து அனுப்பிவிட்டேன். வேலைகளை நானே செய்கிறேன்’ என்று இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டிருந்தார். ‘உங்கள் வீட்டு வேலைகளை நீங்கள் செய்கிறீர்கள், உலகம் முழுக்க தற்போது இதுதான் நடந்துகொண்டிருக்கிறது, இதற்கெல்லாம் போஸ்ட்டா?’ என்று நெட்டிசன்கள் சிலர் கமென்ட் செய்தார்கள். டென்ஷனான ஈஷா, ‘நீங்கள் எல்லோரும் உங்கள் குடும்பத்துடன் இருக்கிறீர்கள். நான் கேன்சரால் பாதிக்கப்பட்ட என் அம்மாவையும் என் குடும்பத்தையும் விட்டு லாக்டெளனில் பிரிந்திருக்கிறேன். என் வீட்டில் வேலைபார்த்தவர், எனக்காக அவருடைய குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கக் கூடாது என்பதால் அவரை அனுப்பினேன்’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அவசரப்படாதீங்க மக்களே

மீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதிவிட்ட ட்வீட் ஒன்று தவறாகவும், பொய்ப் பரப்புரையாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டது ட்விட்டர். இதனால் கொதிப்படைந்த ட்ரம்ப் ‘சமூக வலைதள நிறுவனங்கள் தொடர்ந்து கருத்து சுதந்திரத்தைப் பறிக்கின்றன’ எனக் காட்டமாக பதில் ட்வீட் போட்டார். அப்போதும் நிறுத்தவில்லை ட்விட்டர். அடுத்த நாளே ட்ரம்ப்பின் ஒரு பதிவு வன்முறையைத் தூண்டுவதாக இருக்கிறது எனக் குறிப்பிட்டது. பொறுமையிழந்த ட்ரம்ப் சமூக வலைதள நிறுவனங்களின் இந்த நடவடிக்கைகளை நெருக்கும் சட்டம் ஒன்றை இயற்றிக் கையெழுத்திட்டிருக்கிறார். ட்ரம்ப்புக்கும் சமூக வலைதளங்களுக்குமான இந்த மோதல்தான் அமெரிக்காவின் தற்போதைய ஹாட் டாப்பிக். முத்துப்பாண்டியையே குத்திட்டாங்களா?

மிழகத்துக்கு டாஸ்மாக் போல, கேரளாவில் ‘பெவ்கோ.’ கொரோனா காரணமாக, மதுக்கடைகள் மூடப்பட்டதால், வேறு வழியில்லாமல் சேட்டன்கள் அடங்கிப்போய்க் கிடந்தனர். முதல்கட்டமாக ஆன்லைனில் மட்டும் விற்க முடிவு செய்துள்ளது கேரள அரசு. இதற்காக, ‘பெவ்கியூ’ (BevQ) என்ற பெயரில் புதிய ஆஃப் உருவாக்கியது. மதுப்பிரியர்கள் செயலியைத் தரவிறக்கி மதுவை ஆர்டர் செய்து, குறிப்பிட்ட நேரத்தில் சென்று வாங்கிக்கொள்ளலாம். ஒருமுறை 3 லிட்டர் மட்டுமே ஆர்டர் செய்ய முடியும், ஒரு முறை ஆர்டர் செய்தால் அந்தக் கணக்கிலிருந்து அடுத்த ஆர்டர் 5 நாள்கள் கழித்துதான் கொடுக்க முடியும். மே 28-ம் தேதி ப்ளே ஸ்டோரில் வெளியானதும் ஒரே நாளில் 9 லட்சம் பேர் தரவிறக்கம் செய்தனர். டெக்னாலஜி பார்

யக்குநர் கரண் ஜோஹரின் பிறந்தநாள் பாலிவுட்டின் பார்ட்டி டே. பெரும்பாலும் அத்தனை ஸ்டார்களும் ஆஜர் ஆகும் நாள். இந்த வருடம் லாக்டெளன் காரணமாக பார்ட்டி மிஸ்ஸிங். வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்ட தன் இரட்டைப் பிள்ளைகள் மற்றும் தன் அம்மாவுடன் வீட்டிலேயே கேக் வெட்டிக் கொண்டாடினார் கரண். `K’ எழுத்து வடிவில் பெரிய கேக், மேலே க்ரீம், நட்ஸ் என்று பார்க்கும்போதே நாவூறும் கேக்கை கரண் கட் செய்ய, அவருடைய பிள்ளைகள் அப்பாவுக்கு கேக் ஊட்டாமல் தாங்கள் மட்டுமே சாப்பிடுகிறார்கள். `எனக்கு கேக்’ என்று கரண் கெஞ்ச, `கேக் சாப்பிட்டா நீங்க குண்டாகிடுவீங்க டாடி’ என்று கேலி செய்கிறார்கள் பிள்ளைகள். இதை வீடியோ எடுத்துத் தன் இன்ஸ்டாவில் கரண் போஸ்ட் செய்ய, குழந்தைகளின் குறும்பை வைரலாக்கிவிட்டார்கள் நெட்டிசன்கள். குட்டி ஜோஹர்ஸ்!

இன்பாக்ஸ்

“ என்னால் சுவாசிக்க முடியவில்லை. என்னைக் கொன்றுவிடாதீர்கள்’’ என ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்டு பேசிய காணொலிதான் கொரொனாவைவிட இந்த உலகத்தின் கொடிய முகமான இனவெறியை நமக்கு மீண்டுமொருமுறை காட்சிப்படுத்தியிருக்கிறது. ஆப்பிரிக்க அமெரிக்கரான ஃபிளாய்டைக் கைது செய்யும் டெரெக் சாவின் என்னும் வெள்ளையர், ஃபிளாய்டைக் கழுத்துப்பகுதியில் தன் முழங்காலை வைத்து அதிகாரத்திமிருடன் அழுத்துகிறார். 8 நிமிடங்கள் 46 நொடிகள் நிகழ்ந்த இந்தக் கொடுஞ்செயலில், மூன்று நிமிடங்களுக்குப் பிறகு ஃபிளாய்டிடம் எந்தவொரு அசைவுமில்லை. ஆனாலும், டெரெக்கின் வன்முறை தொடர்ந்தது. மினியபோலீஸ், அட்லாண்டா, கென்னடக்கி, கலிஃபோர்னியா எனப் பல இடங்களில் `நீதி வேண்டும்’ எனக் கறுப்பினத்தவர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். சம்பவம் நடந்து நான்கு நாள்களுக்குப் பிறகு அவரை வேறு வழியின்றிக் கைது செய்திருக்கிறது டொனால்டு ட்ரம்பின் அமெரிக்கா. இங்கே சாதிவெறி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மேடைப் பேச்சு காணொலிகள் மற்றும் நேர்காணல்கள் அவரின் ஆதரவாளர்கள் நடத்துகிற யூட்பூப் சேனல்களில் பகிரப்பட்டுவருகின்றன. இப்போது சீமான் தன் கட்சிக்கென்று அதிகாரபூர்வமான யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி தொடர்பான செய்திகள், நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், வணிக ரீதியிலும் அதை நடத்த வேண்டும் என்பது சீமானின் விருப்பம். டிஜிட்டல் தமிழன்!

டந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பல்லாயிரக் கணக்கான ஹெக்டேர் அளவிலான ஆஸ்திரேலியக் காடுகள் தீயில் கருகின. எண்ணிலடங்கா காட்டுவாழ் உயிரிகள் உயிரிழந்தன. இதனையடுத்து அழிவிலிருந்து மீளும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக புதிதாகப் பிறந்த ஒரு கோலாக் கரடியைக் கொண்டாடி வருகிறது ஆஸ்திரேலியா. குட்டிக் கோலாக் கரடிக்கு ஆஷ் எனப் பெயரிட்டு இந்த நற்செய்தியைப் பகிர்ந்திருக்கிறது சிட்னியில் உள்ள வன உயிரியல் காப்பகம். வம்சம்

தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தார். புதிய கட்சிக்கு ஏற்றவாறு இதுவரை தான் அணிந்துவந்த தி.மு.க கரைவேட்டி, தி.மு.க கொடி போன்றவற்றைத் தூக்கிவிட்டு, காவிக் கரை வேட்டி, தாமரைக் கொடிக்கு மாறியுள்ளார். தி.நகரிலுள்ள அவரது கமலம் இல்லத்தில் இருந்த தி.மு.க தலைவர்களின் படங்களில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. அகற்றப்படாத அந்த ஒன்று கருணாநிதியின் படம். வீட்டின் வரவேற்பரையில் இன்றும் அப்படியே உள்ள அந்தப் படத்தை அவரின் ஆதரவாளர்கள் ஆச்சர்யத்துடன் பார்க்க, “கலைஞர் எனக்கு வாழ்க்கை கொடுத்தவருய்யா. அவர் படத்தை எடுத்தா நான் மனுஷனே இல்லை” என்று உருகியுள்ளார் வி.பி.துரைசாமி. செய்ந்நன்றி

பரிமலை மகர ஜோதியை முன்னிட்டு, இவ்வருடத் தொடக்கத்தில் இருமுடி தரித்து ஐயப்பனை தரிசித்துவிட்டு வந்தார் துணை முதல்வர் ஓ.பி.எஸ். “சபரிமலைக்குப் போய்ட்டு வந்தாலே மனசு அமைதியாகுதுய்யா. இனி வருஷா வருஷம் வந்துடணும்” எனத் தன் ஆதரவாளர்களிடம் கூறியிருந்தார். சமீபத்தில் அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்து இருதயத்தில் இருந்த ஒரு அடைப்பை நீக்கினர். ஒருமாதத்திற்கு பூரண ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இனி மலை ஏறுவது, வேலைப்பளு கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், அடுத்தவருடம் சபரிமலைக்குச் செல்ல வேண்டாம் என ஓ.பி.எஸ்ஸிடம் குடும்பத்தினர் கூறியுள்ளனர். “மகரஜோதிக்கு இன்னும் ஏழு மாசம் இருக்கு. அதுக்குள்ள ஐயப்பன் என்னைய சரிசெஞ்சு மலைக்கு வரவெச்சுருவான் பாருங்க” என ஓ.பி.எஸ். நம்பிக்கை பொங்கச் சொல்லியிருக்கிறார். நல்லதே நடக்கட்டும்