
தியேட்டர்கள் திறந்ததும் முதல் பெரிய படமாக `ஜகமே தந்திரம்' வெளியாகுமாம்!
நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் என இருந்த கோலிவுட் நடிகைகளின் டாப் லிஸ்ட் இப்போது ராஷ்மிகா மந்தனா, மாளவிகா மோகனன் என மாறியிருக்கிறது. மாளவிகாவின் ‘மாஸ்டர்’ விரைவில் ரிலீஸாகவிருக்கும் நிலையில், கார்த்தியுடன் ராஷ்மிகா நடித்திருக்கும் முதல் தமிழ்ப்படமான ‘சுல்தான்’ 2021 ரிலீஸுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது. வெல்கம் கேர்ள்ஸ்!
நிலாவில் ஆயா வடை சுடுகிறார் என நாம் வடை சுட்டுக்கொண்டிருக்க, ஹாலிவுட் முதல்முறையாக உண்மையிலேயே அங்கு ஷூட்டிங் செய்யவிருக்கிறார்கள். ஆம், விண்வெளி ஏலியன் எனப் படம் இயக்கிக்கொண்டிருந்த ஹாலிவுட் இயக்குநர்களுக்கு, இந்த முறை விண்வெளியிலேயே படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அமெரிக்காவின் நாசா, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களும் உதவி செய்யவிருக்கின்றன. ஆரம்பக்கட்ட பட்ஜெட்டாக 1,500 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார்களாம். இயக்குநர் டௌக் லீமேனும், நாயகன் டாம் க்ரூஸும் தயாரிப்புக்குழுவிடம் கதையே சொல்லாமல், இந்த பட்ஜெட்டை ஒரு ஜூம் காலில் பேசி ஓக்கே வாங்கியிருப்பதுதான் தற்போதைய வைரல் . நாமளும் மீட்டிங் நடத்தறோம்..!

மீண்டும் செய்திகளில் வட்டமடிக்கின்றன ரஃபேல் விமானங்கள். சமீபத்தில் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா போர்ப் படைத் தளத்துக்கு முதற்கட்டமாக ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் வந்து இறங்கியுள்ளன. இந்தியாவின் போர்ப்படை பலம் பெறுகிறது என்று ஒரு சாரார் லைக்ஸ் குவித்தாலும், ராகுல் காந்தி சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார். ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடியிலிருந்து ரூ.1,670 கோடிக்குச் சென்றது எப்படி? 126 விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் ஏன் 36 விமானங்கள் மட்டும் வாங்கப்பட்டுள்ளன? HAL நிறுவனத்துக்கு ரஃபேல் ஒப்பந்தம் அளிக்கப்படாமல், திவாலான அனில் அம்பானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது ஏன்? இதனால் பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ‘மன் கி பாத்’ என்ன சொல்லுது மோடிஜி?
டிவி/வெப்சீரிஸின் ஆஸ்காராகக் கருதப்படும் எம்மி விருதுகளின் பரிந்துரைப் பட்டியல் வெளியாகிவிட்டது. கடந்த வருடம் களம் கண்ட டிஸ்னி+, ஆப்பிள் டிவி+ போன்ற புதிய ஸ்ட்ரீமிங் சேவைகளின் நிகழ்ச்சிகள் முதல்முறையாக எம்மி பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதிகப்படியாக HBO-வின் வாட்ச்மென் தொடர் 26 பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. இந்த முறை எம்மியில் என்ன ஸ்பெஷல் என்றால், கொரோனாவின் காரணத்தால் மொத்த நிகழ்வுமே விர்ச்சுவலாகத்தான் நடக்கப்போகிறது. நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் வீட்டிலிருந்தபடியே விருதை ஏற்கப்போகிறார்கள். அண்ட் தி அவார்டு கோஸ் டூ...!
பிறப்பின் அடிப்படையில் ஒரு மனிதக் குழுவை உயர்வாகவும், மற்றொன்றைக் கீழானதாகவும் காட்டச் செயற்கையாக எழுப்பப்பட்ட ஒரு படிநிலைதான் ஜாதி. இந்தியா முழுக்க அலசி ஆராயப்பட்டு இன்னும் வென்றெடுக்க முடியாமல் திணறும் ஜாதியைப் பற்றித் தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஐசபெல் வில்கர்சன். இதழியலுக்காக புலிட்சர் விருது வென்ற முதல் ஆஃப்ரோ அமெரிக்கரான ஐசபெல்லின் Caste: The Origins of Our Discontents என்னும் புத்தகம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தியாவின் தலித்துகளின் நிலை, நாஜி ஜெர்மனியில் யூதர்களின் நிலை, அமெரிக்காவில் ஆஃப்ரோ அமெரிக்கர்களின் நிலை போன்றவற்றை ஒப்பிட்டு, ஜாதியப் பாகுபாட்டின் அவலநிலையைப் பட்டியலிடுகிறது இப்புத்தகம். சோதனைக் காலம்!

ரஜினியின் ‘அண்ணாத்த’ ஷூட்டிங்கை சென்னையில் நடத்துவதற்கான வேலைகள் ஆரம்பமாகியிருக்கின்றன. ஹைதராபாத்தில் பல லட்சம் செலவில் போடப்பட்ட செட்டை சென்னையில் போடவிருக்கிறார்கள். தடுப்பு மருந்துவந்துவிடும், ரஜினியும் ஷூட்டிங் வருவார், டிசம்பரில் ஷூட்டிங்கைத் தொடங்கிவிடலாம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் ‘சிறுத்தை’ சிவா. அப்போ அரசியலுக்கு வரப்போறேன்னு பிலிம் ஸ்டார்ட் ஆகும்!
செப்டம்பரில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் திரையரங்குகளில் மாற்றங்கள் நடக்கின்றன. ஜோடிகளாக, குடும்பமாக வருபவர்களுக்கு பக்கத்துப் பக்கத்து இருக்கைகள் ஒதுக்கப்படும். நோ பிரிவினை என்கிறார்கள். தியேட்டர்கள் திறந்ததும் முதல் பெரிய படமாக `ஜகமே தந்திரம்' வெளியாகுமாம்! ரகிட ரகிட
கோலிவுட்டில் இது காதல் ஜோடிகளின் சீசன். கிருஷ்ணா - சுனைனா, `ஈரம்' ஆதி - நிக்கி கல்ராணி என இருஜோடிகளும் விரைவில் வெட்லாக்குக்குத் தயாராகின்றன. இவர்களின் சூப்பர் சீனியர்களான நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணத்தை முடிக்கவிருக்கிறார்கள். வாழ்த்துகள் கப்புல்ஸ்!
டெக் உலகின் தனிப்பெரும் நிறுவனங்களாக வளர்ந்து நிற்கின்றன கூகுள், அமேசான், ஆப்பிள் மற்றும் ஃபேஸ்புக். தத்தமது துறைகளில் அளவுக்கதிகமான ஆதிக்கம் செலுத்துவதாகவும், பிற நிறுவனங்களின் வளர்ச்சியைத் திட்டமிட்டுத் தடுப்பதாகவும் இந்த நிறுவனங்கள்மீது தொடர்ந்து புகார்கள் வைக்கப்படுகின்றன. சந்தையில் ஆரோக்கியமான போட்டியை உறுதிசெய்யும் Antitrust சட்டங்களை மீறுகின்றனவா இந்த நிறுவனங்கள் என்ற விசாரணையில் தீவிரமாக இருக்கிறது அமெரிக்க அரசு. கடந்த வாரம் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் முன் தோன்றி கேள்விகளுக்குப் பதிலளித்தனர் இந்த நிறுவனங்களின் CEO-க்களான சுந்தர் பிச்சை, ஜெஃப் பெஸோஸ், டிம் குக் மற்றும் மார்க் சக்கர்பெர்க். இப்படிப் போட்டியை ஒடுக்கியது தொடர்பாகப் பல ஆதாரங்கள் இவர்கள் முன் காங்கிரஸ் வைக்க, விழிபிதுங்கி நின்றனர் இந்த டெக் CEO-க்கள். இது தொடர்பான விரிவான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதன் விளைவாக டெக் உலகில் முக்கிய மாற்றங்கள் எதிர்பார்க்கலாம். நம்புகிறோம் பாத்துக்கோங்க!

இந்த லாக்டௌன் சீசனில் சக்க போடு போட்ட இன்னொரு தொடர் நெட்ஃபிளிக்ஸில் வெளியான ஸ்பானிஷ் தொடரான மணி ஹெய்ஸ்ட். இந்தியில் ஷாருக், தமிழில் விஜய் என இந்தியா முழுக்கவே இதன் இந்திய ரீமேக்கில் யார் நடிக்கலாம் என்னும் போட்டி ரசிகர்களிடையே கடந்த சில மாதங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, நேரடியாகவே அந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிக்க விரும்புகிறேன் எனக் கூறியிருந்தார். வெளியாகவிருக்கும் ஐந்தாவது சீசன் அதன் கடைசி சீசன் என அறிவித்திருக்கிறார், தொடரின் கிரியேட்டரான அலெக்ஸ் பினா. இந்த மாதத்தில் ஐந்தாவது சீசனுக்கான ஷூட்டிங் தொடங்கவிருக்கிறதாம். காத்திருப்போம்..!
அலியா பட், கரண் ஜோஹர், ரன்பீர் கபூர் எனப் பல பாலிவுட் நடிகர்களின் ஃபேவரைட் ஷாருக் கானின் மனைவி கௌரி கான். பிரபலங்களின் வீடுகள், உணவகங்கள் எனப் பலவற்றின் இன்டீரியர் டிசைன் பொறுப்பு தற்போது கௌரியின் வசம்தான். அவரே தனியாக மும்பையில் கௌரி கான் டிசைன்ஸ் என்னும் நிறுவனத்தையும் நடத்திவருகிறார். இந்தக் கொரோனா காலம் கௌரியையும் வீட்டுக்குள்ளேயே முடக்கிவிட்டதாம். இதற்கு மேலும் என்னால் பைஜாமாவில் வெறுமனே சும்மா இருக்க முடியாது என அறிவித்து, இதற்கு முன்பு அவர் அட்டகாசமாக டிசைன் செய்த பல்வேறு கட்டடங்களின் புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார். ஓரளவுக்குத்தான் பொறுமை..!