
டெல்லியில் சில மாதங்களாகச் செயல்படும் ‘பைக் ஆம்புலன்ஸ் திட்டம்’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அமெரிக்கர்களால் கொண்டாடப்பட்ட, காணொலிச் செய்தியாளர் கோக்கி ராபர்ட்ஸ் (Cokie Roberts) மறைவிற்கு ஆயிரக்கணக்கில் அஞ்சலிகள் குவிகின்றன. ட்ரம்புடனான நேரடி ஒளிபரப்பில் ஒருமுறை, ட்ரம்ப் என்ற பெயர் கொண்ட சிறுவனை அவரின் நண்பர்கள் கேலி செய்வதைக் குறிப்பிட்டு, “நீங்கள் இதைத்தான் உங்கள் சாதனையாகக் கருதுகிறீர்களா? உங்களுக்கு இதுதான் பெருமையா?” எனக் கேட்டார், ``இது மோசமான கேள்வி, இதுகுறித்து நான் அறிந்திருக்கவில்லை’’ என்று பதிலளித்தார் ட்ரம்ப். பின்னர் அந்தச் சிறுவனை ட்ரம்ப் தன்னுடைய விருந்தாளியாக அழைத்து கௌரவித்தது எல்லாம் தனிக்கதை. தற்போது அவர் இறப்பு குறித்துப் பேசியிருக்கும் ட்ரம்ப், ``அவர் என்னை நல்ல விதமாக நடத்தியதேயில்லை, ஆனால் அவரின் நேர்மைமீது எனக்கு மரியாதை இருக்கிறது’’ என இரங்கள் தெரிவித்துள்ளார். நேர்மைக்கு மரியாதை

டெல்லியில் சில மாதங்களாகச் செயல்படும் ‘பைக் ஆம்புலன்ஸ் திட்டம்’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் உடனடி சிகிச்சைகளை, உயிர்காக்கும் முதலுதவிகளை ஆம்புலன்ஸ் நுழைய முடியாத குறுகலான வீதிகளுக்கும் இடங்களுக்கும் சென்று தர முடிகிறது என மக்கள் பாராட்ட, இப்போது இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளார் கெஜ்ரிவால். வெல்கம்

‘பேட்ட’ படத்தில் அறிமுகமான மாளவிகா மோகனன் அடுத்து விஜய் படத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடி மாளவிகாதான்! அம்மணி ஏற்கெனவே இன்ஸ்டாவில் கலக்குவதால் அவரின் அடுத்த படத்திற்கு வெறித்தனமாய்க் காத்திருக்கிறார்கள் ஃபாலோயர்கள். மாளவிகா மேஜிக்!

அன்சு ஃபடி... லா மேசியா அகாடெமியின் புதிய வார்ப்பு! மெஸ்ஸி காயத்திலிருந்தபோது, அவரது இடத்தில் பட்டையைக் கிளப்பினார் இந்த 16 வயது வீரர். ‘அடுத்த மெஸ்ஸி கிடைச்சிட்டான்’ என்று பார்சிலோனா ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்க, மெஸ்ஸியிடம் தவறவிட்டதை இவர் விஷயத்தில் சரிசெய்துவிட்டது ஸ்பெயின் கால்பந்து நிர்வாகம். ஃபடிக்கு ஸ்பெயின் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஜெய் ஜூனியர்!
அமித்ஷா என்ற பெயரைக் கேட்டாலே மம்தாவுக்கு முன்பெல்லாம் கோபம் பொத்துக்கொண்டு வரும். கடந்த வாரத்தில் டெல்லிக்குச் சென்ற மம்தா, பிரதமர் மோடியைச் சந்தித்து அளவளாவினார். தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியுடன் போனில்கூடப் பேச மறுத்த மம்தா, டெல்லியில் பிரதமருக்கு குர்தா, பெங்காலி ஸ்வீட்டுகள் எல்லாம் பரிசளித்து மகிழ்ந்தார். கூடவே உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் மறக்காமல் சந்தித்துவிட்டுச் சென்றதுதான் இதில் ஹைலைட். பாசமலரே....
“2040க்குள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத நிறுவனமாக அமேசானை மாற்றுவேன்’’ என சத்தியம் செய்திருக்கிறார் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசாஸ். இதற்காக ஒரு லட்சம் எலக்ட்ரிக் வேன்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டாராம். அது 2021க்குள் டெலிவரி ஆகிவிடும் என்றும் சொல்லியிருக்கிறார். இங்கேயும் அது நடக்கும்னு நம்புவோம்!
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான `பாகுபலி’ படத்திற்கு அறிமுகம் தேவையில்லை. ஒட்டுமொத்தத் திரைத்துறையையும் திரும்பிப்பார்க்க வைத்த இப்படத்தின் செட், ஆந்திராவில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் போடப்பட்டது. தற்போது, அதை அருங்காட்சியகமாக மாற்ற இருக்கிறதாம் படக்குழு. அதற்கான வேலைகள் தற்போது பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. பலே பாகுபலி